ஹலோ With காம்கேர் -286 : மனமிருந்தால் திருநங்கைகளிடமும் கற்றுக்கொள்ளலாம் தெரியுமா?

ஹலோ with காம்கேர் – 286
October 12, 2020

கேள்வி: மனமிருந்தால் திருநங்கைகளிடமும் கற்றுக்கொள்ளலாம் தெரியுமா?

படவிளக்கம்: சிவபெருமானும் பார்வதியும் அர்த்தநாரீஸ்வரர் ரூபத்தில் வந்து என்னை மன உளைச்சலில் இருந்து விடுவித்தார் என்ற என் உள்மன சிந்தனையின் தாக்கமே இன்றைய பதிவுக்கான படம்.

—***—

நான் சென்னை வந்த புதிதில் மின்சார ரயிலில் பிரயாணம் செய்வதற்கு கொஞ்சம் டென்ஷன். ரயில் தூரத்தில் வரும் சப்தத்தைக் கேட்டுவிட்டாலே ஒரு அவஸ்தையும் பரபரப்பும் ஒட்டிக்கொள்ளும்.

அந்த உணர்வை ‘நாம் ஏறுவதற்கும் ரயில் கிளம்பிவிடுமோ’ என்ற சங்கடம் என்றும் சொல்லலாம். ரயிலில் ஏறிய பிறகு இறங்கும் நேரத்துக்கான சங்கடம் ஒட்டிக்கொள்ளும். இறங்குவதற்குள் ரயில் கிளம்பி விடுமோ என்ற சங்கடம்.

இப்படி ஏறுவதற்கும் இறங்குவதற்குமான இடைவெளியில் பயணிக்கும் சக மனிதர்களை சகஜமாக கவனிப்பதற்கான வாய்ப்பு குறைவு. பார்வை வெளியே ஸ்டேஷன் பெயர் பலகை மீதே குவிந்திருக்கும்.

ஒருமுறை ரயில் கிளம்பும் நேரத்தில் அவசரம் அவசரமாக முதல் வகுப்பு பெட்டியில் தெரியாமல் ஏறிவிட்டேன். என்னுடம் சேர்ந்து திருநங்கைகள் இருவரும் ஏறினர். அவர்கள் என் அருகில் வந்து நின்று கொண்டு அவர்களுக்குள் சப்தமாக சிரித்து பேசியபடி இருக்க எனக்கோ அன்றைய சங்கடம் ‘ஜிவ்வென’ உயர்ந்தது.

காரணம் அவர்கள் எப்படி நம்மிடம் நடந்துகொள்வார்கள், நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்கின்ற பயம். மற்றபடி வேறெந்த சிந்தனையும் இல்லை. இது முதல் டென்ஷன்.

கூட்டம் குறைவாக இருந்ததால் அப்போதுதான் கவனித்தேன் அது முதல் வகுப்பு பெட்டி என்று. இது இரண்டாவது டென்ஷன்.

அப்போது பார்த்து டிக்கெட் பரிசோதகர் அந்த கம்பார்ட்மெண்ட்டில் ஏறிவிட்டார். இது மூன்றாவது டென்ஷன்.

இப்படி பல விதமான குழப்பங்களுடன் ஓடும் ரயிலில் இருந்து கீழே இறங்கிவிடலாமா என்றுகூட தவித்துக்கொண்டிருந்தேன்.

அந்த சமயம் பார்த்து அந்த திருநங்கைகள் என்னிடம் கைகளை தட்டி காசு கேட்டுக்கொண்டே நெருங்கி வர நான் இன்னும் நெருக்கமாக ரயில் கம்பிகளுடன் ஒட்டிக்கொண்டு இறுக்கமாக மேலே உள்ள கைப்பிடியை பற்றினேன்.

என் தவிப்பைப் பார்த்த அவர்கள் ‘என்னம்மா… ஊருக்கு புதுசா’ என கேட்டார்கள்.

நான் எப்படி பதில் சொல்வது என பயந்துகொண்டே ‘ஆமாம்’ என்று தலை அசைக்க, ‘தெரியாமல் முதல் வகுப்பில் ஏறிட்டியா…’ என ரகசியமாய் கேட்டனர்.

அதற்கும் நான் ‘ஆமாம்’ என தலையசைப்பில் பதில் சொல்ல அதற்குள் டிக்கெட் பரிசோதகரும் நெருங்கி வந்துவிட்டார். அடுத்த ஸ்டேஷனில் ரயில் நிற்க, அந்த திருநங்கைகள் என்னிடம் ‘நாங்க இந்த ஸ்டேஷனில் இறங்குகிறோம்… நீயும் சீக்கிரமா எங்களுடன் இறங்கிவிடு’ என சொல்லிவிட்டு என் இருபுறமும் பாதுகாப்பாய் நின்றுகொண்டு நான் இறங்கிய பிறகு அவர்களும் இறங்கினார்கள்.

அவர்களைப் பார்த்து புன்னகைத்தேன். புன்னகையில் பயமும் தோய்ந்திருந்தது.

அவர்களைப் பார்த்தும் நான் பயந்திருக்கிறேன் என்பதை அவர்கள் புரிந்துகொண்டிருப்பார்கள் என நினைக்கிறேன்.

நான் பர்சில் இருந்து பணம் எடுத்துக்கொடுக்க குனிந்த போது அவர்கள் என்னிடம், ‘நாங்களும் உங்களைப் போல தான்… எங்களிடம் பயப்பட வேண்டாம்…’ என சொன்னார்கள்.

நிமிர்ந்தபோது அவர்களைக் காணவில்லை.

அந்த நிகழ்வுக்குப் பிறகு திருநங்கைகளைப் பார்த்தால் அவர்கள் மீது பயம் தோன்றுவதில்லை. பரிதாபமும் ஏற்படுவதில்லை. மதிப்பும் மரியாதையும் மட்டுமே தோன்றுகிறது.

பிறகு டிக்கெட் பரிசோதகரை சந்தித்து நான் தவறுதலாக முதல் வகுப்பில் ஏறியதை சொல்லி மன்னிப்புக் கேட்கக்  காத்திருந்தேன். அடுத்து  என்ன நடந்தது என்பதை தெரிந்துகொள்ள இந்த லிங்கை  படியுங்களேன். http://compcarebhuvaneswari.com/?p=7192

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 37 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon