படைப்பாளியாகும் செயற்கை நுண்ணறிவு (Generative AI)
எழுத்தும், ஆக்கமும்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
‘இதுதான் செயற்கை நுண்ணறிவு’ என்றெல்லாம் தெரியாத, தொழில்நுட்பம் அறியாத நம்மில் பலரும் அதன் பயனை அனுபவித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
நம் மொபைல் திரையில் நம் முகத்தைக் காட்டினால் அன்லாக் ஆகி உள்ளே செல்வது, ஓடிடி தளங்களில் நாம் ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதற்காகத் தேடும்போது அதுவே தானாக நம் ரசனையின் அடிப்படையில் சில படங்களை பட்டியலிட்டுக் காண்பிப்பது, யு-டியூப் வீடியோக்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கும்போது அது தொடர்பான வீடியோக்களை அடுத்தடுத்து வெளிப்படுத்துவது, ஒரு பொருளை வாங்குவதற்காக கூகுள் செய்து கொண்டிருக்கும்போது ஃபேஸ்புக்கில் அது தொடர்பான விளம்பரங்கள் வெளிப்படுவது என நாம் அறிந்தோ அறியாமலோ அன்றாடம் செயற்கை நுண்ணறிவுடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
ஆனால் என்ன, பலருக்கு அதுதான் செயற்கை நுண்ணறிவு என்று தெரியாது. போன் ஒட்டு கேட்கிறது, கம்ப்யூட்டர் நம்மை வேவு பார்க்கிறது, கூகுள் நம்மை பின் தொடர்கிறது என்று அவரவர்களுக்குத் தெரிந்த மொழியில் சொல்லிக்கொண்டு செயற்கை நுண்ணறிவைப் பின் தொடர்கிறோம். அவ்வளவுதான்.
Generative AI–ன் சிறப்பம்சம் என்ன?
Generative AI என்பது செயற்கை நுண்ணறிவின் ஒரு பிரிவுதான். இது தான் பயிற்சி எடுத்துள்ள தரவுகளை (Data) பயன்படுத்தி புது விதமான அவுட்புட்டைக் கொடுக்கும் திறன் வாய்ந்தது. பொதுவாகப் பயன்பாட்டில் உள்ள செயற்கை நுண்ணறிவு நுட்பம் தன்னிடம் உள்ள தரவுகளை வைத்து என்ன நடக்கும் என்பதை கணிக்கும் என்றால் Generative AI என்பது தன்னிடம் உள்ள தரவுகளை வைத்து எழுத்து வடிவிலும், படங்களாகவும், இசையாகவும், காணொலியாகவும் புதுமைகளைப் படைத்து நமக்குக் கொடுத்து நம்மை வியப்பில் ஆழ்த்தும் என்பதுதான் நிஜம்.
நமக்குப் போட்டியாகும் செயற்கை நுண்ணறிவு
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ஆய்வுகள் நடந்தபடியே இருக்கின்றன. அவற்றின் அடிப்படையில் கொஞ்சம் கொஞ்சமாக மெருகேறி இப்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் படைப்பாளியாகவும் அவதாரம் எடுத்துள்ளது. அதுவே, இன்றைய பேசுபொருள். இந்த மெகா வளர்ச்சி பலதரப்பட்ட துறைகளைச் சார்ந்தவர்களையும் வியக்க வைத்ததுடன் லேசாக பயப்படவும் வைத்துள்ளது.
அதாவது தன்னிடம் ஏற்கெனவே வைத்திருக்கும் விஷயங்களை வைத்து புதிதாக ஒன்றை உருவாக்கும் திறன் கொண்ட நுண்ணறிவுக்கு Generative AI என பெயர் சூட்டியுள்ளார்கள்.
திரைப்படங்களில் காதல் காட்சிகளில்…
Generative AI செயற்கை நுண்ணறிவு பெற்ற சாதனத்திடம் காதல் கவிதையையோ, ரம்யமான குடும்பக் கதையையோ அல்லது வாழ்வியல் கட்டுரையையோ மாடலுக்காகக் கொடுத்து அவற்றைப் போல புதிதாக ஒன்றை எழுதிக்கொடுக்கச் சொன்னால் அதுவும் சிரமேற்கொண்டு செய்து கொடுக்கும். இந்த வகை செயற்கை நுண்ணறிவு நுட்பம் தன்னிடம் கொடுக்கப்படும் தரவை உள்வாங்கிக் கொண்டு, அலசி ஆராய்ந்து, பகுப்பாய்வு செய்து தாமாக ஒரு புதிய படைப்பை உருவாக்கும். இப்படித்தான் செயற்கை நுண்ணறிவை படைப்பாளியாகவும் அவதாரம் எடுக்க வைத்திருக்கிறார்கள்.
பள்ளி கல்லூரி மாணவர்கள் தங்கள் அசைன்மென்ட்டுகளையும், ப்ராஜெக்ட்டுகளையும் தயாரிக்க தங்கள் மூளையை கசக்க அவசியமில்லாமல் Generative AI செயற்கை நுண்ணறிவிடம் வேலையைக் கொடுத்துவிட்டு ‘ஹாயாக’ தங்களுக்குப் பிடித்ததை செய்யப் போய்விட வாய்ப்புள்ளதால் மாணவர்களின் சிந்திக்கும் ஆற்றல் குறைய பெருமளவு வாய்ப்பிருப்பதால் ஆசிரியர்களும், கல்வி நிறுவனங்களும் அந்த வருத்தத்தில் இருப்பதுடன், தங்கள் வேலைக்குக் கூட பாதிப்பு வருமோ எனவும் அஞ்சுகிறார்கள் என்கிறது ஒரு சர்வே. ஆனால், பொதுவாகக் கற்கும் ஆர்வம் இருப்பவர்களுக்கு Generative AI ஆகச் சிறந்த வரப்பிரசாதம்.
முன்பெல்லாம் காதலிக்கத் தெரிந்து, கவிதை எழுதத் தெரியாதவர்கள் கவிதை எழுதத் தெரிந்த தங்கள் நண்பர்களிடம் தாங்கள் என்ன நினைக்கிறார்களோ அதைச் சொல்லி கவிதையாக எழுத வைத்து தங்கள் காதலியிடம் கொடுத்து தாங்களே எழுதியதைப் போல் பெருமை பீற்றிக்கொள்வார்கள். இன்று அந்த வேலையை செயற்கை நுண்ணறிவு செய்கிறது. ‘கவிதையை நீ எழுதினாயா அல்லது அந்த ஏஐ எழுதியதா…’ என்று காதலியே சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் அளவுக்கு தொழில்நுட்பம் உணர்வுப்பூர்வமான விஷயங்களிலும் மூக்கை நுழைக்க ஆரம்பித்துவிட்டது. இதுபோன்ற காட்சிகளை இனிவரும் திரைப்படங்களிலும் எதிர்பார்க்கலாம்.
படம், பாட்டு, வீடியோ என கலக்கும் செயற்கை நுண்ணறிவு!
Generative AI கதை, கவிதை, கட்டுரை மட்டும்தான் எழுதுமா, படங்கள் எல்லாம் வரையாதா, பாட்டுப் பாடாதா, வீடியோ தயாரிக்காதா என நினைக்கிறீர்களா? செய்யுமே. கொடுப்பதைக் கொடுத்தால் எல்லாவற்றையும் செய்யக் காத்திருக்கிறது படைப்பாளியாக உருவெடுத்திருக்கும் செயற்கை நுண்ணறிவு.
ஆம். அதற்குத் தேவையான அளவுக்கு தரவுகள் கொடுக்க (உள்ளீடு) வேண்டும். அப்போதுதான் செயற்கை நுண்ணறிவு நுட்பம் வேகமாகவும் துல்லியமாகவும் கற்றுக்கொள்ளும். கற்றுக் கொண்டதன் அடிப்படையில் புதிதாக ஒன்றை உருவாக்கிக் கொடுத்து அசத்தவும் செய்யும். அதாவது, செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் இயந்திரங்களும் / சேவைகளும் தாங்களாகவே கற்றுக்கொள்ள உதவும் தரவுகளுக்கு Training Data என்று பெயர். தங்களிடம் உள்ள தரவுகளின் அடிப்படையில் தாங்களாகவே கற்றுக்கொள்ளும் முறையே Machine Learning எனப்படுகிறது.
இயந்திரம் என்பது கம்ப்யூட்டராக இருக்கலாம், மொபைலாக இருக்கலாம், ரோபோவாக இருக்கலாம் அல்லது வெப்சைட்டாகவோ, மொபைல் ஆப்பாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அவை Generative AI செயற்கை நுண்ணறிவு நுட்பத்தைப் பெற்றிருத்தல் அவசியம். எந்த அளவுக்கு தரவுகள் அவற்றுள் இருக்கிறதோ அந்த அளவுக்கு அவை சிறப்பாக இயங்கப் பெறும்.
மனிதர்களையே எடுத்துக்கொள்வோமே. நல்ல கற்பனை வளம் உள்ள ஒரு நபர் சிறந்த படைப்புகளைக் கொடுக்க வேண்டுமானால் நான்கு சுவருக்குள் அமர்ந்து கொண்டிருந்தால் அது சாத்தியப்படாது. வெளி உலகில் நடப்பதை நுணுக்கமாகப் பார்க்க வேண்டும், தாய்மொழியில் நிறைய புத்தகங்கள் வாசிக்க வேண்டும், மொழிபெயர்ப்பு நூல்களையும் தவறவிடக் கூடாது, எல்லா மொழித் திரைப்படங்களையும் பார்க்க வேண்டும், இசையை ரசிக்க வேண்டும் இப்படி தன்னை இயற்கையுடனும் வெளி உலக நடப்புடனும் பின்னிப் பிணைத்துக் கொண்டு செயல்படும்போதுதான் ஒரு படைப்பாளியிடம் இருந்து ஆகச் சிறந்த படைப்புகள் வெளிவரும். உள்ளுக்குள் செல்லும் தரவுகள் தரமானதாக இருந்தால்தானே சிறந்த படைப்புகள் உருவாகும்.
இதே லாஜிக்தான் செயற்கை நுண்ணறிவின் நுட்பத்திலும். எத்தனைக்கு எத்தனை அதனிடம் பயிற்சிக்காகக் கொடுக்கப்படும் தரவுகள் அதிகரிக்கின்றனவோ அத்தனைக்கு அத்தனை செயற்கை நுண்ணறிவு அதிவேகமாக செயல்படும். துல்லியமான அவுட்புட்டைக் கொடுக்கும்.
Generative AI – பயன்பாடுகள்!
Generative AI – ன் பயன்பாடுகள் ஆங்கிங்கெனாதபடி பரந்து விரிந்து வியாபிக்கத் தொடங்கி உள்ளது.
படங்கள் (iMage): Generative AI தன்னிடம் உள்ள மாதிரி படங்களின் அடிப்படையில் ஒரு புகைப்படத்தை வேறொரு கோணத்தில் வரைந்து உருவாக்குவது. புகைப்படத்தில் இருப்பது மனிதனாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. புகைப்படத்தில் எது இருந்தாலும் அதை தன்னிடம் உள்ள மாதிரி புகைப்படத்துக்கு ஏற்ப வடிவமைத்துக் கொடுக்கும். உதாரணத்துக்கு ஒருவரின் முகத்தை மகாராஜா போலவோ, மணமகன் போலவோ மாற்றி புதுப்புது அவதாரங்களை எடுக்க வைக்கலாம். விமானநிலையத்தில் நின்று கொண்டிருக்கும் விமானத்தை அழகிய பூஞ்சோலையின் நடுவே நின்று கொண்டிருப்பதைப் போல மாற்றி அமைக்கலாம்.
ஓவியர்களும், வடிவமைப்பாளர்களும், கலைஞர்களும் புதிய படைப்புகளை படைக்கத் தேவையான புதுப்புது யோசனைகளையும், கான்செப்ட்டுகளையும் உருவாக்கிக் கொடுக்கும் திறன் பெற்றதாக உள்ளது Generative AI.
எழுத்து (Text): Generative AI கதை, கவிதை, கட்டுரைகளை எழுதிக்கொடுக்கும். எழுதுபவற்றை ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழிக்கு மாற்றிக்கொடுக்கவும் செய்யும்.
Generative AI ஏற்கெனவே இருக்கும் விளம்பரங்களில் இருந்து புதுவிதமான விளம்பரங்களை உருவாக்கிக் கொடுக்கும் திறன் பெற்றிருப்பதால் நிறுவனங்கள் குறைந்த நேரத்தில் அதிக செலவில்லாமல் புதுமையாக விதவிதமாக விளம்பரங்களை உருவாக்கி வாடிக்கையாளர்களை கவர்ந்து வியாபாரத்தைப் பெருக்க முடியும்.
ஒலி (Audio): Generative AI புது விதமான இசையை உருவாக்கிக் கொடுக்கும். சிறப்பு சப்தங்கள், மிமிக்கிரி போன்றவற்றைக் கூட உருவாக்கும் திறன் வாய்ந்ததாக இருக்கும்.
காணொலி (Video): Generative AI ஏற்கெனவே உள்ள மாதிரி காணொலிகளில் இருந்து புதிய காணொலிகளை உருவாக்கும் வல்லமை பெற்றது. தவிர, வீடியோ கேம்கள், திரைப்படக் காட்சிகள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளைக் கூட உருவாக்கும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?
புகைப்படங்களை அவதாரமெடுக்கச் செய்யும் Generative AI
புகைப்படங்களை ஓவியங்களாக்கி, ஓவியங்களை நாம் விருப்பப்படும் பின்னணியில் வெளிப்படுத்தி நிமிட நேரத்தில் மேஜிக் செய்வதைப் போல அதிசயங்களை நிகழ்த்தவல்லது Generative AI.
புகைப்படத்தில் இருப்பது மனித உருவங்களாக இருந்தால், அவற்றை ராஜா ராணி போலவும், கடவுள்களின் திரு உருவங்களைப் போலவும், மாடலிங்குகளைப் போலவும், நடிகர் நடிகைகளைப் போலவும் நம் விருப்பப்படி கண் இமைக்கும் நேரத்தில் அலங்கரித்து உருமாற்றம் செய்ய ‘படங்களின் அடிப்படையில் இயங்கும் Generative AI’ உதவுகின்றன. மனித உருவங்களை மட்டும் அல்ல, புகைப்படங்களில் உள்ள எந்த ஒரு விஷயத்தையும் நாம் நினைப்பதைப் போல அழகிய ஓவியமாக்கிக் கொடுக்கும்.
முன்பெல்லாம் நிஜத்தில் ‘மேக்அப்’ போட்டு பின்னர் புகைப்படம் எடுப்பார்கள். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வரவுக்குப் பிறகு, இப்போதெல்லாம் போட்டோ எடுத்துவிட்டு டிஜிட்டலில் மேக்அப் போடுகிறோம். அது ஒன்றுதான் வித்தியாசம்.
படங்களின் அடிப்படையில் இயங்கும் Generative AI தொழில்நுட்பத்துக்கு ஏற்கெனவே உருவாக்கப்பட்ட படங்கள்தான் தரவுகள். அவற்றை அடிப்படையாக வைத்துத்தான் புதிதாக படங்களையும், ஓவியங்களையும் உருவாக்குகின்றன.
உதாரணத்துக்கு ஒரு நபரை அச்சு அசலாக வரைய வேண்டும் என்றால் அவரை மாடலாக உட்கார வைத்து, ஓவியர்கள் ஓவியம் தீட்டுவார்கள். அமெரிக்காவில் சில பரபரப்பான சுற்றுலாத் தளங்களில் சாலையோர ஓவியர்கள் ஒரு சிறிய ஸ்டூலில் அமர்ந்து கையில் பேடும், பிரஷும் வைத்துக்கொண்டு சுறுசுறுப்பாக ஓவியம் வரைந்த வண்ணம் இருப்பதைக் காணலாம். நம் சென்னை மாநகரில் தி.நகர், பனங்கல்பார்க் போன்ற இடங்களில் சாலையோரத்தில் அமர்ந்து கையில் மருதாணியும், மெகந்தியும் போட்டுவிட்டு சம்பாதிப்பதைப் போல் அங்கு ஓவியர்கள் பரவலாக தென்படுவார்கள். நம்மை அமர வைத்து நம்மை அப்படியே கார்ட்டூனாக வரைந்து கொடுத்து சம்பாதிக்கிறார்கள்.
இப்படி நம்மை மாடலாக வைத்து ஓவியம் தீட்ட எப்பேற்பட்ட ஓவியருக்கும் சில மணிநேரங்கள் எடுக்கும்தானே. ஆக ஓவியர்கள் தங்கள் நேரம், உழைப்பு, திறமை இவற்றை அடித்தளமாகப் போட்டு ஒரு யாகம் செய்வதைப் போல் செதுக்கும் ஓவியங்களை செயற்கை நுண்ணறிவு சாதனங்களும், அப்ளிகேஷன்களும் நிமிடங்களில் செய்து முடிக்கின்றன. இந்த வேகமும், துல்லியத் தன்மையும் கலைஞர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்துவதுடன் அச்சுறுத்தலையும் சேர்த்தே அழைத்துக்கொண்டு வருகின்றன.
ஏற்கெனவே போட்டோஷாப் போன்ற சாஃப்ட்வேர்கள் மூலம் புகைப்படங்களை டிஜிட்டல் ஓவியங்களாக்கி தங்களை ஓவியர்கள் என பிரகடனப்படுத்திக் கொள்ளுபவர்கள் பெருகி வரும் சூழலில், தொழில்நுட்பத்தில் புது அவதாரமெடுத்திருக்கும் செயற்கை நுண்ணறிவு நுட்பமானது ஓவியங்கள் வரைவதையே தொழிலாகவும் தங்கள் வாழ்வாதாரமாகவும் வைத்திருக்கும் ஓவியர்களை கொஞ்சம் ஆட்டிப் பார்க்கத்தான் செய்கிறது.
நன்றாக எழுதுபவர்களைப் பார்த்து ‘எந்த பேனாவால் எழுதுகிறீர்கள், எந்த பேப்பரில் எழுதுகிறீர்கள்… உங்கள் எழுத்து நடை அருமையாக இருக்கிறதே…’ என யாரும் கேட்பதில்லை. அதுபோல எந்த சாஃப்ட்வேரில் டைப் செய்கிறீர்கள், எதில் லே அவுட் செய்கிறீர்கள் என்றும் கேட்பதில்லை. நன்றாக எழுதுபவர்களுக்கு எழுத்து என்பது அவர்களின் திறமை. அவர்கள் எந்த பேனாவால் எழுதினாலும் சரி, எந்த சாஃப்ட்வேரில் டைப் செய்தாலும் சரி. ‘எழுத்து நடை அருமை’ என்ற பாராட்டு மட்டுமே கிடைக்கும்.
ஆனால், நன்றாக புகைப்படம் எடுப்பவர்களைப் பார்த்தால் ‘ஆஹா போட்டோ சூப்பரா வந்திருக்கிறதே… என்ன மாடல் கேமிரா?’ என்றோ ‘என்ன மாடல் ஸ்மார்ட் போன்’ என்றோதான் கேட்கிறார்களே தவிர ‘ஆஹா என்ன ஒரு கிரியேட்டிவிட்டி…’ என்று பெரும்பாலானோர் வியப்பதில்லை.
இதே கதைதான் ஓவியர்களிடத்தும். அருமையான ஓவியங்களை வரைந்த ஓவியர்களிடம் ‘அடடா, அருமை, அருமை எந்த சாஃப்ட்வேர் மூலம் உருவாக்கினீர்கள்?’ என்றோ, ‘சூப்பர், எந்த ஆப்பில் வரைந்தீர்கள்?’ என்றோ கேட்பவர்கள் பெருகி வருகிறார்கள். பல மணி நேரங்கள் தங்கள் பேருழைப்பினாலும் தங்கள் அதீதத் திறமையினாலும் உருவாக்கிய ஓவியங்களுக்கான மதிப்பீடு இப்படி கீழிறங்குவதால் ஓவியர்களும் அதிருப்தி அடைந்து வருகிறார்கள்.
Generative AI செயற்கை நுண்ணறிவின் அடிப்படையில் செயல்படும் அப்ளிகேஷன்களில் கணக்கிலடங்கா புகைப்படங்கள் தரவுகளாக சேகரித்து வைக்கப்பட்டிருக்கும். அவைதான் மாடல்களாக செயல்படுகின்றன. அதை வைத்துத்தான் Generative AI புதிதாக ஒரு ஓவியத்தை வரைந்து கொடுக்கிறது. அப்படி மாடல்களாகக் கொடுக்கப்படும் ஓவியங்களை வரைந்த ஓவியர்களிடம் முறையாக அனுமதி பெறுவதில்லை என்ற புகார்களும் ஒரு பக்கம் இருந்து கொண்டுதான் உள்ளன.
பல்வேறு கலைஞர்களின் ஓவியங்களை அடிப்படையாகக் கொண்டே புதிய AI ஓவியங்கள் உருவாகின்றன எனும்போது அந்த புதிய AI ஓவியங்களுக்கான காப்பிரைட் யாரைச் சாரும் என்ற சர்ச்சைகளும் உள்ளன.
என்னதான் நடக்கிறது AI ஓவியங்களில்?
ஒரு புகைப்படத்தை இன்புட் செய்து, அதை எதுபோல வரைய வேண்டும், எந்த மாதிரியான ஆடை அலங்காரங்களுடன், ஒப்பனைகளுடன் வெளிப்படுத்த வேண்டும் என்பதுபோன்ற விவரங்களை எல்லாம் தேர்ந்தெடுத்துக்கொண்டால், அதற்கேற்ப நாம் கொடுத்த புகைப்படம் ஓவியமாக அட்டகாசமாக வெளிப்படும்.
உதாரணத்துக்கு, நம் புகைப்படம் போர்வீரனைப் போல் வெளிப்பட வேண்டும் என்றால் நாம் ஒரு போர்வீரனின் புகைப்படத்தை மாடலாக தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான். சில நொடிகளில் நாம் ஒரு போர்வீரனாக மாறி விடுவோம். நிஜம்தான். நம் புகைப்படம் போர் வீரனைப் போல ஓவியமாகவோ அல்லது மற்றொரு புகைப்படமாகவோ மாறி வெளிப்படும்.
Dawn AI, Lensa போன்ற அப்ளிகேஷன்கள் Generative AI செயற்கை நுண்ணறிவின் அடிப்படையில் இயங்கி, புகைப்படங்களை புதுப்புது அவதாரங்கள் எடுக்க வைக்க உதவுகின்றன.
புகைப்படங்களை மட்டும்தான் ஓவியங்களாக மாற்றித் தரும் என்றில்லை. நாம் எழுத்தினால் எழுதினாலே போதும், என்ன எழுதுகிறோமோ அது நமக்கு ஓவியமாகக் கிடைத்துவிடும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து அதற்கான செயற்கை நுண்ணறிவு பொருத்தப்பட்ட அப்ளிகேஷன்கள் எல்லாம் வந்துவிட்டன. எத்தனைக்கு எத்தனை விரிவாகவும் தெளிவாகவும் எழுதுகிறோமோ (டைப் செய்கிறோமோ) அத்தனைக்கு அத்தனை துல்லியமாக நாம் என்ன நினைத்து கேட்கிறோமோ அதற்கான ஓவியம் கிடைத்துவிடும்.
DaLL.E 2, Midjourney, deepai, fotor, nightcafe, craiyon போன்ற அப்ளிகேஷன்கள் Generative AI செயற்கை நுண்ணறிவின் அடிப்படையில் இயங்கி, நம் தேவையை நாம் எழுத்தால் எழுதினாலே புரிந்துகொண்டு அதற்கேற்ப புகைப்படங்களையும் ஓவியங்களையும் உருவாக்கி வெளிப்படுத்துகின்றன.
செயற்கை நுண்ணறிவு அப்ளிகேஷன்கள் மூலம் கிடைக்கும் ஓவியங்களுக்கு AI ஓவியங்கள் என்று பெயர்.
Generative AI-க்குள் செயல்படும் தொழில்நுட்பம்!
Generative AI என்ற செயற்கை நுண்ணறிவு Generative Adversarial Network (GAN) என்ற நுண்ணறிவு கற்றல் வகைக்குப் பயிற்சி பெறுகிறது. இதில் இரண்டு நியூரல் நெட்வொர்க்குகள் (Neural) இருக்கும். ஒன்று உருவாக்கும் (Generator), மற்றொன்று மதிப்பிடும் (Discriminator).
எழுத்தோ, படமோ, பாடலோ, காணொலியோ எதுவாக இருந்தாலும் Generator அதை உருவாக்கி Discriminator வசம் ஒப்படைக்கும். Discriminator அதை நிஜத் தரவுடன் ஒப்பீடு செய்து மதிப்பிட்டு தன்னிடம் வந்து சேர்ந்தது என்ன என்பதை Generator-க்கு பதிலாக அனுப்பும். Generator மீண்டும் தான் அனுப்பும் தரவை மேம்படுத்தி Discriminator வசம் ஒப்படைக்கும். இப்படியாக Generator, Discriminator இரண்டும் இணைந்து செயல்பட்டுக் கொண்டே இருக்கும். எப்போது Generator அனுப்புவதை Discriminator நிஜத் தரவுடன் ஒப்பீடு செய்து சரியாக உள்ளது என சொல்கிறதோ அப்போது ஒப்பீடு நிறுத்தப்படும். அந்த செயல்பாடு முழுமைபெறும். இப்படித்தான் Generative AI –க்கு பயிற்சி கொடுக்கப்படுகிறது.
எழுத்தை காவியமாக்கும் Generative AI
Has to write and complete this concept…
ஒலியையும், ஒளியையும் Generative AI
Has to write and complete this concept…
எதிர்காலம் எப்படி இருக்கும்?
இப்படி நம் கற்பனைகளை எல்லாம் கடந்து கட்டற்ற சுதந்திரத்துடன் செயல்பட ஆரம்பித்துள்ள Generative AI-ன் எதிர்காலம் எப்படி இருக்கும் என ஆராய்ந்தால் ஒரு பேருண்மை புலப்படும். எந்த வகை புதுமையான கண்டுபிடிப்பாகட்டும், புதிய அறிமுகங்களாகட்டும் அவை தொடக்கத்தில் எதிர்ப்புகளை சந்தித்தாலும் விரைவிலேயே அதன் பயன்பாடுகளின் சிறப்பம்சங்களால் கவரப்பட்டு மக்களிடையே நீக்கமற நிறைந்துவிடும். அதுபோலதான் செயற்கை நுண்ணறிவும் அதன் மற்ற பிரிவுகளும்.
ஒரு சாரார் செயற்கை நுண்ணறிவின் ஒரு பிரிவான Generative AI மனிதர்களின் வேலை வாய்ப்புக்கு உலை வைக்கும் எனக் கருதினாலும், இந்த வகை செயற்கை நுண்ணறிவு திரும்பத் திரும்ப செய்கின்ற பணிகளுக்கும், அதிக நேரத்தை விழுங்கும் செயல்பாடுகளுக்கும் மாற்றாக உள்ளது என்றும், தகவல்தளத்தில் உள்ள கணக்கிலடங்கா தகவல்களை மிகக் குறைந்த நேரத்தில் அலசி ஆராய்ந்து முடிவெடுத்துக் கொடுத்து உதவுவதால் மனிதர்களின் உழைப்பை அத்தியாவசியத் தேவைகளுக்கும், கிரியேட்டிவ் பணிகளுக்கும் பயன்படுத்த முடிகிறது என்ற பேருண்மையை பலரும் ஏற்றுக்கொண்டு செயற்கை நுண்ணறிவின் செயல்பாடுகளுக்கு பச்சைக்கொடி காட்டி வருகிறார்கள்.
நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் செய்துகொடுக்கும் Generative AI –ன் தொழில்நுட்பத்துக்காக உழைப்பவர்களின் ஆற்றலையும் அறிவையும் இந்த நேரத்தில் நாம் மரியாதை செய்திட வேண்டும். நாம் தொழில்நுட்ப ரீதியாக சொகுசாக அனுபவிக்கும் வசதிகள் அனைத்தும் எத்தனையோ தொழில்நுட்ப வல்லுநர்கள் இரவு பகலாக ஆய்வுகள் செய்து அறிவார்ந்து உழைத்ததின் பலன்தான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
என் கணிப்பு!
செயற்கை நுண்ணறிவு மனிதனைப்போல செயல்படும், மனிதனுக்கு உதவியாக இருக்கும், மனிதனைவிட சிறப்பாக செயல்படும் என்றெல்லாம் படிப்படியாக அதன் வளர்ச்சி உருமாறிக்கொண்டே வந்து இன்று செயற்கை நுண்ணறிவு மனித குலத்துக்கே அழிவை ஏற்படுத்தி விடும் என்று புலம்பும் அளவுக்கு வந்துவிட்டார்கள்.
ஆனால், என்றுமே செயற்கை நுண்ணறிவு ஊட்டப்பட்ட இயந்திரங்கள் மனிதகுலத்தை அழித்துவிடாது. மனிதன்தான் இயக்குபவனாக இருப்பான். கம்ப்யூட்டர்கள் அறிமுகமானபோது மனிதர்கள் எப்படி எல்லாம் பயந்தார்கள், புலம்பினார்கள், எதிர்த்தார்கள். ஆனால் நடந்தது என்ன? மனித வாழ்க்கையை இலகுவாக்கின, மனிதர்களின் உழைப்புக்கு உதவி செய்தன, புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தின. சுருங்கச் சொன்னால் மனிதனுக்கு ஓய்வு நேரம் அதிகம் கிடைக்க வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தன. அதனால், இன்னும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் கவனம் செலுத்த முடிந்தது.
இதேதான், செயற்கை நுண்ணறிவின் அறிமுகத்திலும் நடந்து கொண்டிருக்கின்றன. என்ன ஒரு வித்தியாசம் என்றால், கம்ப்யூட்டர் மனிதனுக்கான வேலைவாய்ப்புகளை பறித்துவிடும் என பயந்தார்கள். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதகுலத்தையே அழித்துவிடும் என பயப்படுகிறார்கள். இந்த பயம் கொஞ்சம் அதிகப்படிதான் என்றாலும் பொதுவாக மேம்போக்காகப் பார்த்தால் அப்படித்தான் தோன்றும்.
ஆனால் மனிதனின் மூளையினால் அவனது அறிவாற்றலினால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தொழில்நுட்பமோ அல்லது வேறு எந்த ஒரு கண்டுபிடிப்போ மனிதனை மிஞ்ச வாய்ப்பே இல்லை. காரணம் ‘லகான்’ நம் கைகளில்தானே உள்ளது.
செயற்கை நுண்ணறிவு நுட்பங்களும் அதன் தொடர்பான வசதிகளும் மனித வாழ்க்கையை இன்னும் கொஞ்சம் இலகுவாக்கவே செய்கின்றன. எனவே, எந்த விதமான தயக்கமும், சஞ்சலமும் இன்றி செயற்கை நுண்ணறிவுடன் சேர்ந்து பயணிப்போம். வாருங்கள் மகிழ்ச்சியுடன்!
—***—