சாஃப்ட்வேர் தயாரிப்பு என்றால் என்ன?

சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘சாஃப்ட்வேர் தயாரிப்பு என்கிறீர்களே? கொஞ்சம் விளக்குங்களேன்…’ என்ற கேள்விக்கு இப்படித்தான் விளக்கினேன். ஆனால் இந்தக் கேள்வியும் பதிலும் வெளிவரவில்லை.

பொதுவாக ஐடி நிறுவனங்கள் இன்வாய்ஸ் சாஃப்ட்வேர், அக்கவுண்ட்டிங் சாஃப்ட்வேர், பேங்கிங் சாஃப்ட்வேர் போன்று அப்ளிகேஷன் சாஃப்ட்வேர்களை தயாரிக்கிறார்கள் என்றால், எங்கள் நிறுவனம் ஒரு சாஃப்ட்வேரை தயாரிப்பதற்கான அடிப்படை சாஃப்ட்வேர்களை உருவாக்குகிறோம். அது மிகவும் நுணுக்கமான தொடர்ச்சியான ஆராய்ச்சிகள் செய்யும் துறை / பணி.

இங்கு நான் உதாரணத்துக்காகக் குறிப்பிட்டுள்ள அப்ளிகேஷன் சாஃப்ட்வேர்களான இன்வாய்ஸ் சாஃப்ட்வேர், அக்கவுண்டிங் சாஃப்ட்வேர் போன்றவற்றை தயாரிக்கவில்லை, ஆனால் அவற்றைத் தயாரிக்கத் தேவையான சாஃப்ட்வேரை உருவாக்குகிறோம். அது கொஞ்சம் கடினமான பணி. அதனால்தான் எங்கள் நிறுவனத்தில் R & D நடந்துகொண்டே இருக்கும் என சொல்லி இருக்கிறேன்.

எப்படி மைக்ரோசாஃப்ட் வேர்ட், எக்ஸல், அடோப் போட்டோஷாப், ஆரக்கிள் நிறுவனத்தில் ஆரக்கிள் டேட்டாபேஸ் போன்றவையோ அப்படித்தான் எங்கள் காம்கேரின் ஹோமியோபதி சாஃப்ட்வேர், காம்கேர் அஸ்ட்ரோ சாஃப்ட்வேர், காம்கேர் டிராயிங் சாஃப்ட்வேர், காம்கேரின் விசியோ எக்ஸாம் சாஃப்ட்வேர் (பார்வைத்திறன் அற்றவர்களுக்கானது) போன்றவை.

அடோப் போட்டோஷாப்பில் மற்றவர்கள் படம் வரைகிறார்கள், புகைப்படத் தேவைகளுக்காக பயன்படுத்துகிறார்கள்…. ஆனால் அடோப் நிறுவனம் போட்டோஷாப்பை தயாரிக்க எத்தனை உழைத்திருக்க வேண்டும். எத்தனை R & D செய்திருக்க வேண்டும். இன்னமும் அப்கிரேட் செய்துகொண்டே தான் இருக்கிறார்கள்.

அதுபோலவே ஆரக்கிள் நிறுவனம் ஆரக்கிள் சாஃப்ட்வேரை உருவாக்குகிறார்கள். மற்ற நிறுவனங்கள் அதை பயன்படுத்துகிறார்கள்.

மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் வேர்ட், எக்ஸல், பவர்பாயிண்ட் போன்றவற்றை உருவாக்குகிறார்கள். மற்றவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

அதுபோல எங்கள் காம்கேரின் ஹோமியோபதி சாஃப்ட்வேர், ஹோமியோபதி மருத்துவர்களுக்கான அப்ளிகேஷன்களை உருவாக்க உதவுகிறது. காம்கேர் அஸ்ட்ரோ சாஃப்ட்வேர் ஜாதகம் கணிக்கத் தேவையான அப்ளிகேஷன்களை தயாரிக்க உதவுகிறது. அதுபோலதான் காம்கேர் டிராயிங் சாஃப்ட்வேரும் , காம்கேரின் விசியோ எக்ஸாம் சாஃப்ட்வேரும் (பார்வைத்திறன் அற்றவர்களுக்கானது).

இதுபோல எண்ணிலடங்கா சாஃப்ட்வேர்களை தயாரித்துள்ளோம். முதன் முதலில் நாங்கள் தயாரித்தது எங்கள் நிறுவனத்துக்கே நாங்கள் பயன்படுத்தும் ஃபாண்ட் (Font), காம்கேர் ஃபாண்ட் (Compcare Font) என பெயரிட்டோம்.

ஏற்கெனவே உள்ளதில் இருந்து அப்ளிகேஷன்களை தயாரிப்பது சுலபம். ஆனால் அந்த அப்ளிகேஷனை எதை வைத்து உருவாக்குகிறார்களோ அந்த அடிப்படை சாஃப்ட்வேரை உருவாக்குவதுதான் கடினம். அதுதான் புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஒப்பானது. அதைத்தான் நாங்கள் செய்கிறோம்.

எல்லோருக்கும் புரிகின்ற மாதிரி சொல்ல வேண்டுமானால் ஒரு உதாரணம் சொல்கிறேன். மற்ற நிறுவனங்கள் ரெடிமேட் தோசை மாவை வாங்கி பயன்படுத்துகிறார்கள் என்றால் நாங்கள் அந்த தோசை மாவுக்கான அரிசி, உளுந்து போன்றவற்றை விளைவிக்கிறோம்…

ஒரு பேட்டியில் எங்கள் துறை சார்ந்த விஷயத்தை, நித்தம் எங்கள் நிறுவனத்தில் நடைபெறும் பணியை இப்படித்தான் விளக்கினேன்…

– காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
ComPcare Software
மார்ச் 10, 2023 | வெள்ளி

(Visited 896 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon