அழகப்பா பல்கலைக்கழகம் – காரைக்குடி – மொழி செய்யும் மாய வித்தை!

மொழி செய்யும் மாய வித்தை!

காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகத்தில் சென்ற வருடம் Ai கருத்தரங்கத்துக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தேன். சுமார் 1-1/2 மணி நேரம் உரையாற்றினேன். செயல்முறை விளக்கத்துடன் கூடிய உரை என்பதால் சுவாரஸ்யமாகத்தான் இருந்திருக்கும். அதில் எனக்கு சந்தேகம் இல்லை. அவையில் இருந்த 500 க்கும் குறையாத மாணவ மாணவிகளும், பேராசிரியர்களும் அமைதியாக உன்னிப்பாக கவனித்தார்கள்.

ஆனாலும் என் கண் எதிரே இரண்டாவது வரிசையில் அமர்ந்திருந்த 4 மாணவர்கள் சற்றே கிண்டல் கலந்த தொனியில் தங்களுக்குள் பேசி, சிரித்து கொண்டிருந்தார்கள். சர்வ நிச்சயமாக அவர்களின் கேலியும் கிண்டலும் என் உரையை பற்றியதே.

அவர்களின் உடல் மொழி, பார்வை என அத்தனையும் என்னை கொஞ்சம் எரிச்சல் ஊட்டினாலும், எல்லா மாணவர்களும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள், ஏதேனும் அவர்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டுமானால் உரை முடிந்ததும் சொல்லிக் கொள்ளலாம் என எண்ணி எதையும் கண்டு கொள்ளாமல் பேசி, செயல் முறை விளக்கங்கள் செய்து காண்பித்துக் கொண்டே வந்தேன்.

அப்போது ஒரு Ai ல் உருவாக்கிய ஒரு வீடியோவை போட்டுக் காண்பித்தேன். அது எப்படி உருவானது அதில் என்னென்ன Ai விவரங்கள் இணைக்கப்பட்டுள்ளன என்பதை எல்லாம் சொல்லிக் கொண்டே வந்தேன்.

அப்போது என் பார்வை அந்த 4 மாணவர்கள் மீது விழுந்தது. என்ன ஆச்சர்யம். அவர்கள் நால்வரும் அமைதியாக, அடக்கமாக என் உரையை கவனிக்க ஆரம்பித்திருந்தார்கள். 1 மணி நேரம் அலட்சிய பார்வையுடன் இருந்த அவர்களின் கண்களில் லேசாக ஒரு குற்ற உணர்வு. நான் அவர்களைப் பார்ப்பது தெரிந்ததும் தலையை குனிந்து கொண்டார்கள். பதற்றத்தில் முகத்தை கைகளால் துடைத்துக் கொண்டார்கள். அவர்கள் பார்வையில் மரியாதை கூடி இருந்தது.

நிகழ்ச்சி முடியும் வரை சமர்த்துப் பிள்ளைகளாய் அமைதியாக இருந்தார்கள்.

நான் அவர்களுக்காக அந்த வீடியோவை போடவில்லை. உரையின் ஓட்டத்தில் ஏற்கெனவே தயாரித்து வந்த வீடியோதான் அது.

அது சரி நான் என்ன Ai வீடியோ போட்டுக் காண்பித்திருப்பேன் என உங்களால் யூகிக்க முடிகிறதா?

நிச்சயமாக அறிவுரை / கருத்து சொல்லும் வீடியோ அல்ல.

என் உரை மை பிடித்து பேசும் உரை அல்ல. என் உரை முழுக்க முழுக்க Ai செயல்முறை விளக்க படங்களும், வீடியோக்களும், எங்கள் காம்கேர் நிறுவன தயாரிப்புகளும்தான்.

எங்கள் நிறுவன தயாரிப்புகள் எப்படி தொழில்நுட்பத்தால் உருவாகிறது, எப்படி தயாரிக்கிறோம் என்று செயல்முறை விளக்கத்துடன் பேசுவதுதான் என் ஸ்டைல்.

இன்று Ai தொழில்நுட்பம். முன்பெல்லாம் அனிமேஷன், மல்டிமீடியா, சாஃப்ட்வேர் தயாரிப்புகள் என எங்கள் தயாரிப்புகள் சார்ந்தே என் உரை அமையும்.

இப்படி சுவாரஸ்யமான உரையாக நான் கொடுத்தாலும், அந்த 4 மாணவர்களின் சேட்டைகள் மட்டும் குறையவில்லை. மற்றவர்களை பாதிக்காதவண்ணம் எனக்கு மட்டும் தெரியுமாறு இருந்தது அவர்களின் செய்கைகள்.

சரி விஷயத்துக்கு வருகிறேன். அவர்கள் ஒரு வீடியோவை பார்த்ததும் சேட்டைகளை குறைத்துக் கொண்டு அடங்கினார்கள் என்று சொல்லி இருந்தேன் அல்லவா?

ஆம். நான் அழகான தமிழில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தேன். அதனால் அவர்கள் தன் இயல்பில் சேட்டைகள் செய்து வந்தனர்.

என் Ai அவதார் ஆங்கிலத்தில் பேசும் ஒரு வீடியோவை டெமோ காண்பித்தேன். அந்த Ai திரையில் பேச பேச நான் மைக்கில் லைவாக டப்பிங் கொடுக்க ஆரம்பித்தேன். அரங்கம் நிறைந்த கைத்தட்டல்.

தமிழ் நிறைந்திருந்த அரங்கில் ஆங்கிலம் புகுந்து விளையாட ஆரம்பித்ததும் அந்த 4 மாணவர்களுக்கு சற்றே கூச்சமாகி போயிருக்க வேண்டும்.

ஆங்கிலத்தில் பேசும் என் Ai அவதார், கூடவே மேடையில் டப்பிங் பேசி இரண்டையும் Sync செய்தபோது ஒரு ஆளுமைத்திறன் வெளிப்பட்டிருக்க வேண்டும்.

ஆக, தமிழ் மொழி பேசும்போது தன் இயல்பில் இருந்த மாணவர்கள் (சேட்டைகள் செய்து), ஆங்கிலம் புகுந்து விளையாட ஆரம்பித்ததும் தங்கள் சேட்டை செய்யும் இயல்பில் இருந்து மேம்படுத்திக் கொண்டு கண்ணியமானார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த உளவியல்தான் அவர்களின் மனமாற்றத்துக்குக் காரணம்.

அதற்காக அவர்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை என நான் சொல்லவில்லை. திரையில் Ai தொழில்நுட்பத்துடன் நேரடியாக (Live) என் ஆளுமையும் இணைந்தபோது தன் நிலை உணர்ந்தார்கள் என்றுதான் கூறுகிறேன்.

அந்த வீடியோவிற்கு பிறகான அரை மணி நேரமும் கப்சிப்தான். சிறு அசைவுகூட இல்லை அந்த 4 மாணவர்களிடமும்.

மொழிக்குத்தான் எத்தனை சக்தி இருக்கிறது?

காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர்
Compcare K Bhuvaneswari
காம்கேர் சாஃப்ட்வேர்
Compcare Software
ஜூலை 12, 2025

(Visited 15,682 times, 5 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon