நட்சத்திர பிறந்த நாள்!
நேற்று என் அப்பாவின் பிறந்த நாளை நட்சத்திரப் பிறந்த நாள் என குறிப்பிட்டு பதிவிட்டிருந்தேன். ஒருசிலர் அது என்ன நட்சத்திரப் பிறந்தநாள் என கேட்டிருந்தார்கள். அவர்களுக்காக இந்தப் பதிவு.
ஒவ்வொருவருக்கும் வருடா வருடம் இரண்டு பிறந்த தினங்கள் வரும். ஒன்று, பிறந்த தேதியின் அடிப்படையில் வரும் பிறந்த நாள். மற்றொன்று அவர்கள் எந்த நட்சத்திரத்தில் பிறந்தார்களோ அதனடிப்படையில் ஆன பிறந்த தினம். அதை ஜென்ம நட்சத்திர தினம் என்றும் சொல்வார்கள்.
மிக மிக அரிதாக பிறந்த நாளும் (ஆங்கில தேதி), ஜென்ம நட்சத்திர தினமும் ஒன்றாக சேர்ந்து வரும்.
ஒவ்வொரு வருடமும் நட்சத்திர பிறந்த நாள் வேறுபடும். அதாவது இந்த வருடம் ஆனி மாதம் மூலம் நட்சத்திரம் ஜூலை 9, 2025 – ல் வந்தது என்றால், சென்ற வருடம் இதே ஆங்கில தேதியில் வந்திருக்காது. அதுபோல அடுத்த வருடமும் இதே ஆங்கில தேதியில் வராது.
ஒரு முறை எங்கள் வீட்டு சுட்டி ஒன்று ‘ஏம்மா பிறந்த நாள் வருடா வருடம் மட்டும் வருகிறது… மாதா மாதம் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?’ என்று அவள் அம்மாவிடம் கேட்க, நான் கொடுத்த பதிலை பகிர்கிறேன். தெளிவு கிடைக்கும்.
சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி என ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் அவரவர்கள் பிறந்த நட்சத்திரம் வரும். அந்த தினத்தை பிறந்த நட்சத்திர தினமாகக் கருதலாம். அன்று கோயிலுக்குச் சென்று அவர்கள் பெயரில் அர்ச்சனை செய்துகொள்ளலாம். ஒருசிலர் தங்கள் குழந்தைகளின் நலன் கருதி இப்படியும் செய்கிறார்கள்.
ஆனால் அது பிறந்த நாள் நட்சத்திரம் அல்ல. அவர்கள் எந்த தமிழ் மாதத்தில் பிறந்தார்களோ அந்த மாதத்தில் வருகின்ற அவர்கள் நட்சத்திர நாள் தான் அவர்களின் ஜென்ம நட்சத்திர பிறந்த தினம். பிறந்த நாள் நட்சத்திரம்.
என்ன குழப்பமாக இருக்கிறதா?
நட்சத்திர பிறந்த நாள் என்ற பதம் வேறு,
பிறந்த நட்சத்திரம் என்பது வேறு.
நட்சத்திர பிறந்த நாள்: (வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே வரும்)
உதாரணத்துக்கு ஆனிமாத மூலம் நட்சத்திரத்தில் ஒருவர் பிறந்திருந்தால் ஒவ்வொரு வருடமும் ஆனி மாத மூலம் நட்சத்திரம் எந்த தேதியில் வருகிறதோ அதுவே அவர்கள் நட்சத்திர பிறந்த நாள். பிறந்த நாளாக இதைத்தான் கொண்டாடுவார்கள்.
பிறந்த நட்சத்திர தினம்: (மாதா மாதம் வரும்)
ஆனால் ஒவ்வொரு தமிழ் மாதமும் (சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி) அவர்கள் பிறந்த நட்சத்திரம் வரும். அது அவர்கள் பிறந்த நட்சத்திர தினம். அதில் கோயிலுக்கு சென்று பிரார்த்தனை செய்து அவரவர் பெயரில் அர்ச்சனை செய்து கொள்ளலாம்.
குறிப்பு: (முன்பெல்லாம்) ஒருசிலர் பள்ளியில் சேரும்போது அவர்கள் பெற்றோர் கொடுத்திருக்கும் பிறந்த தினம் வேறாக இருக்கும். அது எந்த கணக்கிலும் வராது. அஃபிஷியலாக மட்டுமே பயன்படுத்த முடியும். எனவே ஒருசிலர் தங்களுக்கு மூன்று பிறந்த தினங்கள் வருகிறது என்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் பிறப்பு சான்றிதழ் அவசியம் என்பதால் அதற்கு வாய்ப்பில்லை.
காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர்
Compcare K Bhuvaneswari
காம்கேர் சாஃப்ட்வேர்
Compcare Software
ஜூலை 10, 2025