#காம்கேர்_34
இந்த நேரத்தில் மிக முக்கியமான விஷயத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். நிச்சயம் தற்பெருமை அல்ல. ஒரு கருத்தை சொல்லி உள்ளேன். என் எழுத்துக்களைப் பின் தொடர்பவர்களுக்கு சொல்லாத ஒரு செய்தியாக இருக்கும். எனவே, முழுமையாக படிக்கவும்.
எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனத்தில், 1992 ஆம் ஆண்டில் இருந்தே சாஃப்ட்வேர் தயாரிப்பு தான் எங்கள் முதன்மைப் பணியாக இருந்தாலும் காலை 6 மணி முதல் 9 மணி வரை தொழில்நுட்ப ஒர்க்ஷாப்புகளையும் நடத்துவேன்.
காரணம் அப்போது கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தைப் பாடமாக எடுத்து படிப்பவர்கள் குறைவு என்பது ஒருபக்கம் இருந்தாலும், பெண்களுக்கு அந்த வாய்ப்பு பெரும்பாலும் கிடைக்கவே இல்லை என்பது தான் மிக முக்கியக் காரணம். ஆக, கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை பெண்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்பதால், நான் தொழில்நுட்ப ஒர்க்ஷாப்புகளை நடத்தி வந்தேன். பெண்களுக்காக என நான் முன்னுரிமை கொடுத்தாலும் ஆண்கள் தான் அதில் பெரும்பாலும் கலந்து கொண்டார்கள். நான் தான் அவர்களிடம் பேசிப் பேசி அவர்கள் வீட்டு பெண்களை கலந்து கொள்ள வைப்பேன்.
இப்படியாக அந்தந்த காலகட்டத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப தொழில்நுட்பத்தை மக்களிடம் கொண்டு செல்ல என்னால் ஆன அத்தனை முயற்சிகளையும் செய்து வந்தேன். இன்று வரை செய்தும் வருகிறேன்.
இந்தக் கதை இப்போது எதற்கு? சொல்கிறேன்.
இப்படி நான் நடத்தும் தொழில்நுட்ப ஒர்க்ஷாப்புகளில் கலந்து கொள்பவர்களிடம் தொழில்நுட்பம் மட்டுமில்லாமல், பெண்கள் சுயமாக சிந்திக்க வேண்டும், தனித்துவமாக செயல்பட வேண்டும், யாரையும் சார்ந்து நிற்க வேண்டாம், அதற்காக எல்லோரையும் ஒதுக்கிவிட்டு தனியாகவும் செயல்படக் கூடாது, எல்லோருடனும் இணைந்து செயல்பட வேண்டும், அதே சமயம் தனித்துவமாகவும் இருக்க வேண்டும் என்றெல்லாம் இயல்பாக பேசுவேன். அப்படி நான் பேசுவது பிராச்சாரமாகவோ, அறிவுரையாகவோ நிச்சயம் இருக்காது. இயல்பாக நம் வீட்டில் நாம் ஒருவருக்கொருவர் பேசுவதைப் போல் இருக்கும். அப்போது எனக்கு வயது 21, 22 தான் இருக்கும்.
அதனால்தானோ என்னவோ, ஒர்க்ஷாப்பைவிட நான் பேசும் வாழ்வியல் அவர்களுக்குப் பிடித்துப் போகும். அதன் நீட்சியாக தொழில்நுட்பம் மிக எளிமையாக அவர்கள் மனதுக்குள் செல்லும்.
இதையெல்லாம் பலரும் பல்வேறு விதமாக அவரவர்கள் பாணியில் சொல்லி உள்ளார்கள்.
ஒருமுறை, ஒரு இளம் பெண் வெளிப்படையாகவே சொன்னாள். அது எனக்கே கொஞ்சம் வியப்பாக இருந்தது.
தொடர்ச்சியாக ஒரு மாத காலம் என்னிடம் ஒர்க்ஷாப்புக்கு வந்த ஒரு கல்லூரி மாணவி அவள் ஒரே ஒரு நாள் உடம்பு சரியில்லை என விடுப்பு எடுத்தபோது, அடுத்த நாள் வந்து ‘மேடம், என்னால் ஒருநாள் கூட உங்களைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை… உங்கள் பேச்சை கேட்காமல் இருக்க முடியவில்லை, ஒர்க்ஷாப்புக்கு வரும் நேரம் வந்துவிட்டால் இங்கே ஓடி வந்துவிட தோன்றுகிறது’ என்று அழாத குறையாக சொன்னாள்.
நானும் இளம் பெண் என்பதால் அவள் சொல்வது எனக்கு மிக ஊக்கமாக இருந்தது. சின்னதாக குட்டியூண்டு புகழ்(ச்சி) தானே இது. என் வயதுக்கு அது பெரிய்ய்ய்ய்ய்ய புகழ்(ச்சி). இயல்பாகவே சுறுசுறுப்பான நான் இன்னும் சுறுசுறுப்பாக உத்வேகத்துடன் செயல்படுவேன்.
இப்படியாக என் பெயர் மக்கள் மனதில் பதிய ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாகவும் ஆரம்பித்தேன். என்னை நேர்காணல் செய்யாத பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி மீடியாக்களே இல்லை எனும் அளவுக்கு மீடியாக்களும் என் திறமையை கொண்டாடி தீர்த்தன. அப்போதெல்லாம் மீடியா தர்மம் நன்றாக இருந்தது.
சரி விஷயத்துக்கு வருகிறேன்… என்னைப் பார்க்காமல் என் பேச்சை கேட்காமல் என் ஒர்ஷாப்புக்கு விடுப்பு எடுக்க முடியாமல் வருத்தப்பட்ட இளம் பெண் என்னிடம் கூறியதை வழக்கம் போல் என் பெற்றோரிடம் பகிர்ந்து கொண்டபோது அவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா?
’அந்த பெண் சொல்வது நன்றாகத்தான் உள்ளது. உனக்கும் அது ஊக்கமாகத்தான் இருக்கும். ஆனால், யார் மீதும், எதன் மீதும் இந்த அளவுக்கு ஒரு பிடிப்பு இருக்கக் கூடாது. அதீத பாசமும் ஆபத்தே. பார்க்காமல் இருக்க முடியவில்லை உன் பேச்சை கேட்காமல் இருக்க முடியவில்லை என்பது அவள் மனதுக்குத்தான் அது சிக்கலாகிப் போகும். எனவே, அவள் சொல்வதை நீ என்கரேஜ் செய்ய வேண்டாம். அப்படி இருக்கக் கூடாது, இயல்பாக இருக்க வேண்டும், மதிப்பும் மரியாதையும் போதும் என்பதை நீ அவர்களுடன் பேசும் வாழ்வியலுடன் சேர்த்து எல்லோருக்குமே பொதுவாக சொல்லவும். அவள் புரிந்து கொள்வாள்’
இந்த நேரத்தில் இது ஏன் நினைவுக்கு வருகிறது என்றால், காரணம் – சமீபத்தைய கரூர் நிகழ்ச்சி.
குறிப்பிட்ட நடிகர் மீதும், நடிகை மீதும் அதீதமான வெறித்தனமான ஈர்ப்புடன் இருக்கும் ரசிகர்கள் மடத்தனமாக செய்யும் செயல்கள் மனதுக்கு வேதனையாக உள்ளது.
அண்மையில் ஒரு கர்ப்பிணிப் பெண் தனுஷின் ஒரு திரைப்பட அறிமுக விழாவில் மைக்கில் பேசிக் கொண்டிருப்பதை கேட்டபோது ஏற்பட்ட தாக்கத்தில் எழுதிய பதிவு இது.
’நான் பிரசவத்தின் போது, தனுஷை நினைத்துக் கொண்டே பிள்ளை பெற்றேன். அவர் போல் அவனும் வருவான்…’ என்றெல்லாம் ஏதேதோ பேசிக் கொண்டே போனார்.
இந்த இடத்தில் நான் ஒன்றை குறிப்பிட்டு சொல்கிறேன். நான் சினிமாவையோ, சினிமா நடிகர் நடிகைகளையோ குறையோ குற்றமோ சொல்லவில்லை. அவர்கள் அவர்களின் பணியை செய்கிறார்கள். நான் வருத்தப்படுவது ரசிகர்களின் மன நிலையை குறித்தே.
நானும் ஒரு கிரியேட்டிவ் டைரக்டர் தான். என் அப்பா அம்மாவின் வாழ்க்கை வரலாற்றை (Biography) என் 35 வயதிலேயே எடுத்துள்ளேன். ஆவணப்படங்கள் எடுப்பதும் என் துறையின் ஓர் அங்கமே.
இன்று எங்கள் காம்கேரின் 34 வது ஆண்டு தொடக்கம். இதனை சாத்தியமாக்கிய அனைவருக்கும் நன்றி. நன்றி. நன்றி.
காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர்
Compcare K Bhuvaneswari
காம்கேர் சாஃப்ட்வேர்
அக்டோபர் 1, 2025 | புதன்