ஒரு நாள், ஒரே மாதிரியான இரண்டு நிகழ்வுகள், இரு வேறு சிந்தனைகள்!
ஒரு ஏஐ பிராஜெக்ட் குறித்த விவாதத்துக்கு செல்ல வேண்டி இருந்தது. அடையாறு பகுதிகளில் பாலம் கட்டும் பணிகளினால் சாலை வழி தாறுமாறாக திருப்பி விடப்பட்டுக் கொண்டிருப்பதால், சிரமம் வேண்டாம் என்று எண்ணி நான் காரை எடுக்காமல் டிரைவரை வரச் சொல்லி இருந்தேன்.
வழக்கம்போல் பயணத்தில் கண் மூடி மீட்டிங்கிற்குத் தேவையானதை ஒருமுறை ரிவ்யூ செய்து கொண்டிருந்தேன்.
டிராஃபிக்கில் கார், நடந்து செல்லும் வேகத்தைவிட மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. டிரைவர் ’என் இரண்டு பசங்களும் உங்க அலுவலகத்துக்கு எதிரில் இருக்கும் பள்ளியில்தான் இரண்டாவதும், ஐந்தாவதும் படிக்கிறார்கள்’ என சொன்னார்.
‘ஓ. அப்படியா?’ என கேட்டதோடு விடுவோமா நாம், எவ்வளவு நாட்களாக கார் ஓட்டுகிறார், அதில் வரும் வருமானம் போதுமா என நானும் பேச்சுக் கொடுத்துக் கொண்டே வந்தேன்.
திருமணமாகி தாமதமாக குழந்தை பிறந்ததால் மருத்துவ செலவுக்கு சேமிப்பு எல்லாம் கரைந்து போனதாகவும், மனைவி அக்கம் பக்கம் வீட்டு வேலைக்கு செல்வதாகவும் கூறினார். படிப்பு இல்லை, சரியான வேலை இல்லை, வருமானம் போதாது என்றும் வருத்தப்பட்டுக் கொண்டார்.
‘ஆமாம். இன்னும் காலம் நிறைய இருக்கே, பசங்களும் படிக்கணும்… ஏதாவது பிசினஸ் செய்யலாம் தானே?’ என்றேன்.
‘ஆமாம் மேடம். சின்னதா தள்ளு வண்டில டிபன் போடலாம்னு யோசிக்கிறேன்’ என்றார்.
‘அதைவிட ஒரு யோசனை இருக்கு, சொல்லட்டுமா?’ என்றேன்.
‘தாராளமா சொல்லுங்க மேடம்’ என்று அவரிடம் இருந்து பதில் வந்தவுடன் ‘இரண்டு மூன்று வீடுகளுக்கு காலையில் சென்று சமைத்துக் கொடுத்துவிட்டு வந்தாலே மாதம் 50,000/- தாராளமா சம்பாதிக்கலாம்… இப்போதெல்லாம் வீடுகளில் சமையல் செய்ய நல்ல டிமாண்ட்… ‘ என்றேன்.
மேலும் தள்ளுவண்டியில் டிபன் போன்ற வியாபாரங்கள் காலை முதல் இரவு வரை உங்கள் இருவரின் உழைப்பையும் விழுங்குவதுடன் லாபம் வருமா என்பது சந்தேகம் என்று அதிலுள்ள பாதகங்களை சொன்னேன்.
‘ஆஹா இதுகூட நல்ல யோசனை மேடம்…’ என்றவுடன் ‘ஆனால் சமையல் என்றால் சமையலுடன் வேலைகளை முடித்துக் கொண்டு பேக் செய்துவிட வேண்டும். கிளீனிங், பாத்திரம் தேய்த்தல், பரிமாறுதல் என எந்த கமிட்மெண்ட்டும் வைத்துக் கொள்ளக் கூடாது… அப்போதான் ஒரு வீட்டுக்கு 1 மணி நேரத்தில் சமைக்க முடியும். 3 வீடுகளை முடிக்க முடியும்…’ என்றேன்.
ஏனெனில் என் உறவினர் வீட்டில் சமையல் செய்யும் பெண், காலையில் 7 மணிக்கு வந்து சமையல் மட்டும் செய்து கொடுத்துவிட்டு, ‘டான்’ என்று 8 மணிக்கு கிளம்பி விடுவார். அந்தக் கணக்கில் அவருக்கு பிசினஸ் ஐடியா கொடுத்தேன்.
அதற்கு அவர் சொன்ன பதிலில் அசந்து போனேன்.
‘நீங்கள் சொல்வது மிக நல்ல யோசனை மேடம். அப்போ நானும் அவங்க கூட சமையலுக்கு சென்றால் காய்கறி நறுக்க அப்படி இப்படி என ஒத்தாசையாக இருக்கும். வேலைகளையும் சீக்கிரமா முடிச்சுடலாம்…’
’சபாஷ். தம்பதியாக யாரும் சமையலுக்குச் சென்று நான் பார்த்ததில்லை. நீங்கள் இருவரும் குளித்து நன்றாக உடை அணிந்து பார்ப்பதற்கே பளிச்சென்று சென்றால் அதுவே உங்கள் பிசினஸுக்கு விசிட்டிங் கார்ட் போல்தான். வாய் வழியாக பிசினஸ் சூடு பிடிக்கும்’ என்றேன்.
‘நன்றி மேடம். வீட்டில் மனைவியுடன் பேசிவிட்டு சீக்கிரமா பிசினஸ் தொடங்கிடறேன்.’ என்றார்.
இதற்குள் நான் செல்ல வேண்டிய அலுவலகம் வந்துவிட நான் இறங்கி, ‘காரை ஓரமாக நிறுத்திக் கொள்ளுங்கள். எங்காவது செல்வதாக இருந்தால் ஜன்னல் கதவை மூடிவிட்டு செல்லுங்கள்’ என சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டேன்.
அந்த நிறுவனத்தின் மேலாளர் அறுபது வயதிருக்கும். அவர்கள் டீமுடன் ஏஐ குறித்து அவர்கள் நிறுவனத்துக்குத் தேவையான சாஃப்ட்வேர் தயாரிப்பு பற்றிய விவாதம் முடிந்தது.
பொதுவாக பேசிக் கொண்டிருந்தபோது, ஏஐயில் அவர் எதிர்பார்க்கும் விஷயத்தை கூறினார். அந்த விஷயத்தை எங்கள் நிறுவனத்தில் ஏற்கெனவே செய்து விட்டோம் என்றாலும், வயதில் பெரியவராக இருக்கிறாரே என்பதால் ‘இதெல்லாம் என்ன பெரிய விஷயம், நாங்கள் ஏற்கெனவே செய்துவிட்டோம்’ என அலட்சியமாகவோ / பெருமையாகவோ சொல்லாமல் அவரை பாராட்டும் நோக்கத்துடன் ‘இதுகூட நல்ல ஐடியாவாக இருக்கிறதே’ என மனம் திறந்து பாராட்டினேன்.
உடனே அவர் ‘இதுபோல பல ஐடியாக்கள் என்னிடம் உள்ளது. இந்த ஐடியாவுக்கே நீங்கள் எனக்கு பணம் கொடுக்க வேண்டும்’ என சொன்னார்.
அவர் தமாஷூக்காகத்தான் அப்படி சொன்னார் என்றாலும் அவர் உள்ளூர அப்படியான எண்ணங்கள் இருப்பதால்தானே வார்த்தைகளில் வெளிப்படுகிறது.
ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த இந்த இரண்டு நிகழ்வுகளிலும் ஒரு ஒற்றுமையையும் ஒரு வேற்றுமையையும் உணர்ந்தேன்.
படிக்காத நபருக்கு நான் ஒரு பிசினஸ் ஐடியா கொடுக்க, அதை அவர் தன் பாணியில் இயல்பாக ஒரு Addon வசதியை ஏற்றிச் சொல்ல, நான் ‘சபாஷ்’ என பாராட்டினாலும் அவர் நான் கொடுத்த பிசினஸ் ஐடியாவுக்கு நன்றி சொன்னார்.
நன்கு படித்து நல்ல பதவியில் இருக்கும் நபரோ, நான் அவரை மட்டம் தட்ட வேண்டாம் என எண்ணி பாராட்டியமைக்கு தற்பெருமையாக ‘நான் கொடுக்கும் ஐடியாவுக்கு நீங்கள் பணம் கொடுக்க வேண்டும்’ என தன் ஞானத்தை(?!) தானே பெருமையாக்கிக் கொண்டார்.
ஒரு நாள். ஒரே மாதிரியான இரண்டு நிகழ்வுகள். படிக்காத மனிதரின் பண்பும், படித்த மனிதரின் பக்குவமின்மையும் மனதை என்னவோ செய்து கொண்டே இருந்தது.
படிப்புத்தானே மேன்மையை கற்றுக் கொடுக்க வேண்டும்? அடிப்படையில் அறம் தழைத்தால் எல்லாமே மேம்படும்.
அறம் வளர்ப்போம்!
காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர்
Compcare K Bhuvaneswari
காம்கேர் சாஃப்ட்வேர்
செப்டம்பர் 26, 2025 | வெள்ளிக்கிழமை