தகவல் கசிவு! ஃபேஸ்புக்கில் நடப்பது என்ன?
கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் 50 மில்லியன் ஃபேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருந்து தகவல்களை எடுத்துள்ள குற்றச்சாட்டு வைரலாகப் பரவி வருகிறது.
உண்மையில் நடந்தது என்ன?
‘If anything is FREE, You are the product’ – என்பது பொதுவிதி.
பொதுவாக கடைகளில் ‘ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்’ என்று விளம்பரத்தைப் பார்க்கும்போது நம் மனசு திறந்திருக்கும். அறிவு மூடியிருக்கும். அதனால்தான் நமக்குள் அந்தப் பொருளை வாங்குவதற்கான உந்துதல்.
அதுபோலவே ஆடித் தள்ளுபடியும்.
ஆடி மாதம் சுப முகூர்த்தம் இல்லாததால் பொதுவாக திருமணம், வளைகாப்பு போன்ற சுப நிகழ்ச்சிகள் இருக்காது. அதனால் ஜவுளி வியாபாரம் குறைவாக இருக்கும். அதையே மார்க்கெட்டிங் ஆக்கி ‘ஆடி தள்ளுபடி’ என்று விற்பனை செய்கிறார்கள் சிறிய கடைகளில்கூட. இதனால் தள்ளுபடி கொடுத்து லாபத்தில் குறைந்தாலும் கூடுதல் வியாபாரத்தினால் சுப முகூர்த்த மாதங்களை விட ஆடியில் ஜவுளிக் கடைகளில் கூட்டம் அலைமோதுகின்றன. வாடிக்கையாளர்களை அதிகரித்து விற்பனையை பலமடங்காக்கி ஒட்டு மொத்த இலாபத்தை பெறுகிறார்கள்.
இதே நுணுக்கம்தான் சமூக வலைதளங்களிலும்.
ஒருமுறை தேர்தலில் தான் நிற்கப் போவதாகவும், அதற்கு ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் அவரைப் பற்றி பாசிடிவாக எழுதி ப்ரமோட் செய்ய முடியுமா… என்று ஒரு நண்பர் என்னிடம் கேட்டபோது நான் கொஞ்சம் தயங்கினேன். உங்கள் முகமோ, பெயரோ, நிறுவனத்தின் பெயரோ வெளியில் தெரியாது என்று உத்திரவாதம் கொடுத்தார். என் நிறுவனக் கொள்கைகளுக்கு இந்த பிராஜெக்ட் ஒத்துவராததால் அதை ஏற்கவில்லை என்பது வேறு விஷயம்.
இதுவும் ஒருவகை மார்கெட்டிங்.
இதே நுணுக்கத்தைத்தான் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் பயன்படுத்தியுள்ளது. இந்த நிறுவனம் தேர்தல் ஆலோசனை மையம் என்ற பெயரின் கீழ் இயங்கி, உலகம் முழுதும் தேர்தல் தொடர்பான குழப்பங்களை தீர்க்க ஆலோசனை வழங்கி வெற்றி பெறவும் வழிகாட்டி வருகிறது.
இந்த நிறுவனம் எப்படி ஃபேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை பயன்படுத்தியுள்ளது?
தேர்தலில் நிற்கும் இரண்டு தரப்புகளில் யார் அதிகம் பணம் கொடுக்கிறார்களோ அவர்களைப் பற்றிய நல்ல தகவல்களை கட்டுரை, செய்தி, புகைப்படம், வீடியோ, மீம்ஸ் என பல்வேறு வழிகளில் ஃபேஸ்புக்கில் வெளிப்படுத்துவார்கள். அவை பெரும்பாலும் நம் கருத்துக்களுடன் உடன்படுவதைப் போல இருக்கும். இவை தேர்ந்தெடுத்த பயனாளர்களின் ஃபேஸ்புக் பக்கங்களில் மட்டும் வெளிப்படும். அதாவது, எவர்களுடைய அக்கவுண்ட் விவரங்கள் அவர்களுக்கு கிடைக்கிறதோ அவர்களின் பக்கங்களில் மட்டும். இந்த வகையில் மக்களின் மனதை மூளைச் சலவை செய்து அமெரிக்க தேர்தல் வெற்றி தோல்வியை நிர்ணயித்ததுதான் குற்றச்சாட்டு.
நம் ஃபேஸ்புக் தகவல்கள் எப்படி அவர்களுக்குக் கிடைக்கிறது?
‘தாங்கள் செய்கின்ற பிசினஸை சொல்லி, அதில் அதிக இலாபம் பெற முடியவில்லை, என்ன செய்தால் இலாபம் அடையலாம்’ – இதுதான் பொதுவாக வாசகர்கள் என்னிடம் கேட்கும் ஆலோசனை.
‘முன்பெல்லாம் ஒரு தையல் மிஷின் வாங்கி வைத்துக்கொண்டு பிசினஸ் செய்யும் ஒருவர் அந்த ஊரில் பிரபலமாகவும், பிரதான டெய்லராகவும் இருப்பார். நன்றாக சம்பாதிக்கவும் செய்வார்.
ஆனால் இன்று திறமை மட்டும் போதாது. நீங்கள் வீட்டில் இருந்தே வியாபாரம் செய்யலாம். ஆனால் உலகளாவிய அளவில் விளம்பரம் தேவை. ஃபேஸ்புக், டிவிட்டர், பிளாக், வெப்சைட், லிங்க்ட் இன் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் உலகுக்கு அறிமுகம் செய்துகொண்டு உங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தி விரிவுபடுத்துவதில்தான் சூட்சுமம் இருக்கிறது….’ இதுதான் என் பதில்.
ஒரு சின்ன விஷயத்துக்கே இத்தனை பிரமாண்டமான வெளிப்பாடும் வெளித்தோற்றமும் அவசியமாக இருக்கும்போது பிரமாண்டமான நெட்வொர்க்கான ஃபேஸ்புக்குக்கு எத்தனை பெரிய விளம்பர நுட்பம் அவசியம்.
ஃபேஸ்புக் முழுக்க முழுக்க இலவசமாக கிடைக்கும் ஒரு நெட்வொர்க் வசதி. அதுபோலவே வாட்ஸ் அப்பும். இவற்றை எத்தனை கோடானுகோடி மக்கள் பயன்படுத்துகிறார்கள். தகவல்களை ஷேர் செய்கிறார்கள். இலவசமாக தங்களையும், தங்கள் வியாபாரத்தையும், தங்கள் தயாரிப்புகளையும் ப்ரமோட் செய்கிறார்கள்?
இதுவே ஷேர் செய்யும் ஒவ்வொன்றுக்கும் கட்டணம் என்றால் எத்தனைபேர் ஜகா வாங்குவார்கள் என்பது இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் அறிந்ததே.
பயனாளர்களுக்கு இலவசமாக வசதிகளை அள்ளிக் கொடுத்து அந்த பிரமாண்ட நெட்வொர்க் நிறுவனம் எப்படி இயங்குகிறது? எப்படி பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்கிறது? என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.
ஃபேஸ்புக்கில் நடுநடுவே Sponsored என்ற வார்த்தையைத் தாங்கிவரும் விளம்பரங்களைப் பார்த்திருப்பீர்கள். அவை கட்டணம் செலுத்தி கொடுக்கப்படும் விளம்பரம். நாமும் கட்டணம் செலுத்தி நம் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் பதிவுகளைக்கூட விளம்பரப்படுத்தலாம். இப்படி விளம்பரப்படுத்தப்படும் ஃபேஸ்புக் பதிவுகள் அவற்றின் கட்டணத்துக்கு ஏற்ப லைக்குகளை பெற்றுத்தரும். அதாவது லைக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணம்.
மிகக் குறைந்த கட்டணத்திலும் இது சாத்தியமாவதால் தங்கள் தயாரிப்புகள், வியாபாரம் என்றில்லாமல் தங்கள் பதிவுகளைக்கூட விளம்பரப்படுத்துவதில் ஆர்வம் காட்டுபவர்கள் அதிகரித்து வருகிறார்கள்.
தவிர, ஃபேஸ்புக் பேஜின் பக்கவாட்டிலும் விளம்பரங்கள் வெளிப்படுவதைக் காணலாம். இவை பத்திரிகைகளில் வெளிவரும் விளம்பரங்கள் போல்தான்.
நம்மைப் போன்றவர்களின் பொதுவான ஆசைகளை அறிந்து வைத்துக்கொண்டு மனோதத்துவ ரீதியில் செயல்படும் ஆப்ஸ்களின் மூலம்தான் பெரும்பாலும் தகவல்கள் வெளியே செல்கின்றன. ஃபேஸ்புக் நிறுவனத்தில் இல்லாமல் வெளி நிறுவனங்கள் தயாரிக்கும் ஆப்ஸ்கள் Third Party Apps. இவை ஃபேஸ்புக்கில் விளம்பரம் கொடுக்கும். அதை நாம் பயன்படுத்த கட்டணம் இல்லை. முற்றிலும் இலவசம். அதற்குக் கூலி நம்மைப் பற்றிய ஃபேஸ்புக் தகவல்கள். ‘If anything is FREE, You are the product’ – எத்தனை வேதனையான உண்மை.
பத்திரிகை / டிவி / வெப்சைட்டுகள் / யு-டியூபில் வெளிவரும் ராசி பலனை கண்டுகொள்ளாமல் கடந்து செல்பவர்கள் நம்மில் எத்தனை பேர்? ஜாதகம், நியூமராலஜி போன்றவற்றில் ஆர்வம் இல்லாதவர்கள்கூட ‘நீங்கள் நேர்மையானவர். ரொம்ப நல்லவர். உத்தமர். அன்பானவர்’ என்று முகத்தைப் பார்த்து பலன் சொல்லும்போது தடுமாறுவதுதான் இயற்கை.
மக்களின் இதுபோன்ற வீக்னெஸை ஆதாரமாக்கி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆப்ஸ்களை தயாரிக்கின்றன. மக்களை ஏமாற்றுவது இவர்கள் குறிக்கோள் அல்ல. அவற்றை நாம் பயன்படுத்தும்போது அது அவர்களுக்கு மறைமுகமான விளம்பரமாகிறது. அவர்கள் ஆப் / வெப்சைட் விளம்பரப்படுத்தப்பட்டு வியாபாரமாகிறது.
நீங்கள் முற்பிறவியில் என்னவாக இருந்தீர்கள், அடுத்த ஜென்மத்தில் என்னவாக பிறக்கப் போகிறீர்கள், உங்களை மறைமுகமாக காதலிப்பவர் யார், உங்களை அதிகம் நேசிக்கும் நண்பர் யார், நீங்கள் பிறக்கும்போது கடவுள் என்ன வாழ்த்துச் சொல்லி அனுப்பி இருப்பார்… இது போன்ற கேள்விகளால் நம் ஆர்வத்தைத் தூண்டில் போட்டு இழுக்கும் ஆப்கள் பரவலாகக் கொட்டிக் கிடக்கின்றன.
கண் இமைக்கும் நேரத்தில் அந்த ஆப்களை கிளிக் செய்து அவற்றில் நுழைந்து நம்மை அறியாமலேயே நம் ஃபேஸ்புக் விவரங்களை அந்த நிறுவனங்களுக்குத் தாரை வார்த்துக்கொடுக்கிறோம். நம்மிடம் அனுமதி வாங்கிய பின்னரே அந்த ஆப்கள் செயல்பட ஆரம்பிக்கும். நாமே அனுமதி கொடுத்துவிட்டு ‘ஆச்சா போச்சா எப்படி என் தகவல்களை நீங்கள் பார்க்கலாம்?’ என பதறுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை.
உதாரணத்துக்கு என் ஃபேஸ்புக் அக்கவுண்ட்டில் ஒரு ஆப்பை கிளிக் செய்தவுடன் ‘Continue as Compcare Bhuavneswari’ என்ற பட்டன் வெளிப்படும். இதில் என் பெயர் இருப்பதைப் போல நீங்கள் அந்த ஆப்பைப் பயன்படுத்தும்போது உங்கள் பெயர் வெளிப்படும். அதை கிளிக் செய்தால் உங்கள் ஃபேஸ்புக் தகவல்களை அந்த ஆப் எடுத்துக்கொள்ளும்.
ஃபேஸ்புக்கில் நாம் பதிவிடும் தகவல்கள், நட்பு வட்டம் மற்றும் நம் பர்சனல் விவரங்களை வைத்துதான் அவை ஆராய்ந்து கவர்ச்சியான பதிலை வெளிப்படுத்தும்.
வானத்து நிலவு நாம் செல்லும் இடமெங்கும் நம்முடன் வருவது போல தோன்றுவதைப் போல, அந்த ஆப்கள் கொடுக்கும் ரிசல்ட் நம் ஒவ்வொருவருக்கும் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டதைப் போல மிகப் பொருத்தமாக இருக்கும். ஆனால் நமக்கு வந்ததைப் போன்ற ரிசல்ட் வேறு சிலருக்கும் வந்திருக்கும். ஏனெனில் அவை பொதுவாக தயாரிக்கப்பட்ட விவரங்கள். நம் ஃபேஸ்புக் தகவல்களுக்கு ஒத்துவரும் விவரங்களை வைத்து ரிசல்டை கொடுக்கும். அவ்வளவுதான்.
இப்படிப்பட்ட Third Party ஆப்ஸ் மூலமும், லைக்குகளுக்காகவும், வியாபாரத்துக்காகவும் நாம் கொடுக்கின்ற விளம்பரம் மூலமாகவும் தகவல்கள் கசிய வாய்ப்புண்டு.
இதுதான் நடந்துள்ளது கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்திலும். இது சரியா தவறா, ஃபேஸ்புக் நிறுவனம் உடந்தையா என்பதை எல்லாம் தூர வைத்து விட்டு நாம் எப்படி பாதுகாப்பாக இருக்கலாம் என்பதில் மட்டும் கவனமாக இருப்போம்.
பொதுவாக மிக மிக பர்சனல் விவரங்களை புகைப்படங்களுடன் பகிர்வதைத் தவிர்ப்போம். தேவையான விவரங்கள் தவிர பிறவற்றை நாம் மட்டுமே பார்க்கும்படி பிரைவசி செட்டிங் செய்து வைத்துக்கொள்ளலாம். கண்களில் படும் விளம்பரங்கள் மற்றும் ஆப்ஸ் லிங்குகளை எல்லாம் கிளிக் செய்வதைத் தவிர்ப்போம். ஃபேஸ்புக்கில் லாகின் செய்து செட்டிங் சென்று App, Website, Plug-in கீழ் உள்ள எடிட் பட்டனை கிளிக் செய்து அவற்றை செயலிழக்கச் செய்துகொண்டால் தேவையற்ற Third Party ஆப்கள், வெப்சைட்டுகள், பிளக்-இன்கள் நம் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளிப்படாது.
வைரஸ்களும் நம் அனுமதியின்றி ஆபாசப் புகைப்படம் மற்றும் வீடியோக்களை நம் அக்கவுண்ட்டில் இருந்து நட்பு வட்டத்தில் இருக்கும் நண்பர்களுக்கு அனுப்பி வைக்கும் சம்பவங்களையும் சந்தித்திருப்போம். இன்பாக்ஸ் சாட்டில் தேவையில்லாததை அவ்வப்பொழுது நீக்கி வைத்துக்கொள்வது சிறந்தது. முக்கியமாக ஃபேஸ்புக் பாஸ்வேர்டை அவ்வப்பொழுது மாற்றிக் கொள்ள வேண்டும்.
தகவல் கசிவு என்பது மனிதர்களால் இருக்கலாம், வைரஸ்களால் இருக்கலாம், தொழில்நுட்பத்தினால் இருக்கலாம். எப்படி இருந்தாலும் நாமே நம்மைப் பற்றி அந்தரங்க தகவல்களை ஃபேஸ்புக்கில் கொட்டிவிடாமல் பாதுகாப்பாக இருப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.
உலகையே நம் உள்ளங்கை செல்போனில் அடக்கி அசைக்கும் சோஷியல் நெட்வொர்க்குகளின் பாசிட்டிவான விஷயங்களை பயன்படுத்துவோம்.
பத்திரிகை, டிவி, வானொலி என நம்மைச் சுற்றி எத்தனையோ மீடியாக்கள். அவற்றில் வருகின்ற விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அவை பொறுப்பல்ல என ‘பொறுப்புத் துறப்பு’ போடுகிறார்கள். அதுபோலதான் ஃபேஸ்புக் உட்பட அனைத்து சோஷியல் மீடியாக்களும்.
நம் பாதுகாப்பு நம் கைகளில். எதை கிளிக் செய்ய வேண்டும். செய்யக் கூடாது என முடிவெடுக்கும்போது மனதை மூடி, அறிவைத் திறப்போம்.
Happy Journey.
Read it in online: http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=13462&id1=4&issue=20180330
-காம்கேர் கே.புவனேஸ்வரி
06-04-2018