8 வசந்தலு!
அழகான கவிதை போன்று அண்மையில் வெளியான ஒரு தெலுங்கு திரைப்படம்.
வண்ணமயமான ஓவியம் போன்ற காட்சி அமைப்புகள்.
அந்த காலத்து சினிமா பாடல்கள் போல் நாயகனும் நாயகியும் மட்டும் பாடும் தனிப் பாடல்கள்.
நாயகனும் நாயகியும் ஒருவரை ஒருவர் தொடாத அத்தனை நாசூக்கான காட்சி அமைப்புகள். மொத்த படத்தில் இரண்டே இரண்டு இடங்களில் மட்டுமே தொட்டு நடிக்கும் காட்சி. அதுவும் அவசியம் என்பதால் மட்டுமே.
அந்த காலத்து திரைப்படம் போல நீண்ட நீண்ட வசனங்கள். பேசும்போது குளோசப் ஷாட்டில் வாய் உதட்டு அசைவுகள். ஆஹா, அட்டகாசம். அருமை.
எனக்கு ஏன் இந்தப் படம் மிகவும் பிடித்திருந்தது என்பதற்கு மிக முக்கியமான இரண்டு காரணங்களை கடைசியில் சொல்லி உள்ளேன்.
நாயகி தன் தந்தையின் மறைவுக்குப் பிறகு எழுத்தில் துக்கத்தை கரைக்க நுணுக்கமான மன உணர்வுகளை எழுத்தில் வடிக்கும் எழுத்தாளர் ஆகிறார். புத்தகம் போடுகிறாள். மிக அதிகம் புத்தகம் விற்பனை ஆகும் பிரபலமான எழுத்தாளர். வயதோ 19. மிக அழகு. ஆனால் தன்னை தன் அழகால் மற்றவர்கள் புகழக் கூடாது, அறிவால், ஆற்றலால், திறனால், திறமையால் புகழப்பட வேண்டும் என்பதில் உறுதியாய் இருக்கிறாள்.
கதை ஆசிரியர் மட்டுமல்ல கராத்தேவிலும் மிக திறன் வாய்ந்தவளாக இருக்கிறாள். நாயகியை தனக்கு கராத்தே கற்றுக் கொடுத்த குருவிற்கு மிகவும் மரியாதைக் கொடுக்கும் பெண்ணாக காண்பித்திருக்கிறார்கள். குரு நோயால் இறப்பதற்கு முன் இவள் கராத்தேவில் ப்ளாக் பெல்ட் வாங்கும் அளவுக்கு பயிற்சி கொடுக்கிறார். தனக்கு நம் நாயகியையே கொள்ளிப் போடவும் சொல்கிறார். தன் அஸ்தியை காசி கங்கையில் கரைக்கச் சொல்கிறார்.
ஆனால், சுடுகாட்டில் பெண்கள் கொள்ளிப் போடக் கூடாது, கொள்ளி போட வேண்டும் என அடம்பிடித்தால் மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும் என அவர்கள் கோபமாக சொல்லி மறுக்கும்போது அவள் தைரியமாக மொட்டை அடிக்கும் நபர் முன் ஆக்ரோஷமாக உறுதியாக சென்று அமர்கிறாள். அவர்கள் வியந்து ‘இறந்து போனவர் யார்? உன் அப்பாவா, அண்ணாவா, மாமாவா?’ என விசாரிக்க ‘அவர் என் குரு’ என சொல்ல இந்த காலத்தில் குருவுக்கு மரியாதைக் கொடுக்கும் பெண்ணா என வியந்து அவளை கொள்ளி போட அனுமதிக்கிறார்கள்.
அவளும் அஸ்தியை எடுத்துக் கொண்டு காசி செல்கிறாள். அங்கு சில காமப் பிசாசுகளிடம் மாட்டிக் கொள்கிறாள். தான் கற்ற கராத்தே மூலம் அவர்களை விலாசித் தள்ளுகிறாள். பத்ரகாளி அம்மனே நேரில் வந்து தாண்டவமாடியதாக அவர்களில் ஒருவன் சொல்கிறான்.
இப்படியாக ஒரு பெண்ணின் குணாதிசயங்களை மாறுபட்ட கோணத்தில் காட்டி உள்ளார்கள்.
நாயகியின் முதல் காதல் தோல்வியில் முடிகிறது. அவன் சுயலாபத்துக்காக விட்டுப் பிரிந்து அமெரிக்கா சென்றுவிடுகிறான். பிரிந்து செல்லும் நாயகனிடம் நாயகி பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அருமையான கருத்துக்கள். பெண்கள் எப்படி சிந்திக்க வேண்டும் என்பதற்கு உதாரண முத்துகள்.
இரண்டாவது காதல் அருமையிலும் அருமை. அந்த நாயகன் காதலுக்கு கொடுக்கும் விளக்கம் ‘அடடா… இப்படி எல்லாம் கூட சிந்திக்க முடியுமா?’ என்று நெகிழ வைக்கிறது.
காதலிக்கும் இருவர் சேர்கிறார்களா அல்லது பிரிகிறார்களா என்பது முக்கியமில்லை. காதலர்கள் சேர்ந்தால்தான் காதல் ஜெயித்ததா அர்த்தம் கிடையாது… ஒருவரின் குணாதிசயத்தினால் உயர்ந்த குணங்களால் மற்றவர் எந்த அளவுக்கு ஈர்க்கப்பட்டு தங்கள் வாழ்க்கையில் நேர்மையான முறையில் முன்னேற்றிச் செல்கிறார்களோ….
காதல் என்பது ஒருவரிடம் இருந்து ஒருவர் நல்ல இலட்சியங்களை வாங்கிக் கொள்வது, ஒருவரால் மற்றொருவர் நல்ல மனிதராய் மாறுவது…
காதல் என்பது சென்று சேர வேண்டிய முடிவான இடம் அல்ல. சேர்ந்து செய்ய வேண்டிய பயணம்….
நல்ல அழகான ஞாபகங்களை சேர்த்து வைத்துக் கொள்வது. காதலர்கள் சேர்ந்தாலும் சேராவிட்டாலும் அனுபவங்களை வைத்தே முன்னேறி சென்றுகொண்டே இருக்க வேண்டும்.
இதுதான் காதல்…
இப்படி காதலுக்கு அருமையான விளக்கங்கள் கொடுத்திருக்கிறார்கள்.
காதலை மட்டுமல்ல ஆண் பெண் நட்புக்கும் இலக்கணமாய் இந்தத் திரைப்படத்தில் நாயகியின் நண்பன் ஒருவனை காட்டி உள்ளார்கள். அவன் ‘ஷூ டிஸைனிங்’ துறையில் ஜெயிக்க போராடுகிறான். நாயகியின் தூண்டுகோல் மற்றும் நட்பினால் அவன் அந்தத் துறையில் ஜெயித்து மேலே வருகிறான்.
எந்த ஒரு காட்சியிலும் விரசம் இல்லை, சாதி என்ற பேச்சில்லை, சண்டை இல்லை, சச்சரவு இல்லை, புரளி இல்லை, புகார் இல்லை.
அழகான வாழ்க்கை. அற்புதமான காதல் கதை.
பி.கு:
1. எனக்கு ஏன் இந்தப் படம் பிடித்திருக்கிறது என்றால், நாயகி அச்சு அசலாக நம் முன்னாள் முதல்வர் ‘ஜெயலலிதா’ போல இருக்கிறார்.
2. Feminist என்பதற்கு மிக சரியான உதாரணமாய் நாயகியின் குணாதிசயங்களை காட்டி உள்ளார்கள்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர்
Compcare K Bhuvaneswari
காம்கேர் சாஃப்ட்வேர்
Compcare Software
ஆகஸ்ட் 4, 2025