பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு சேவாலயாவின் சேவை!
பிள்ளையார் சதுர்த்திக்கு சேவாலயா செயல்படுத்தியுள்ள விதைப் பிள்ளையார் தான் இந்த வருடத்திய ஹைலைட்.
நீர் மாசுபடுவதைத் தவிர்த்து பசுமையைப் பெருக்கும் விதமாக சென்னையை அடுத்த பாக்கம் என்ற இடத்துக்கு அருகில் உள்ள கசுவா என்ற கிராமத்தில் விதைகளை வைத்து விநாயகர் சிலைகளை தயாரிக்கிறார்கள்.
சுத்தமான களிமண், காய்கறி விதைகள், துளசி விதைகள் மற்றும் எரு போன்றவற்றைப் பயன்படுத்தி ரசாயனக் கலப்பின்றி தயாரிக்கப்படும் இந்த களிமண் விநாயகர் சிலைகள் பசுமை இந்தியாவிற்கான அரிய முயற்சி.
சேவாலயா அமைப்பின் சார்ப்பில் அவர்கள் நடத்திவரும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களும் ஆசிரியர்களும் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பூஜை முடிந்ததும் இந்த விநாயகரை தொட்டியில் வைத்து கரைத்து விடலாம். நாளடைவில் விதைகள் முளைக்க ஆரம்பிக்கும். விதை விநாயகர் செடியாகி வளர்ந்து நம் வாழ்வையே பூத்து குலுங்க வைப்பார்.
பிள்ளையார் + குடை + அருகம்புல் செட் = 200 ரூபாய்
தொடர்புக்க: 9444620289 or 9444167625
போன் செய்தால் வீட்டுக்கே டெலிவரி செய்கிறார்கள். இதில் இவர்களுக்கு லாபம் இல்லை. முழுக்க முழுக்க சேவை.
ஸ்ரீரங்கத்தில் முதல் ஆர்டராக 5 பிள்ளையார் வாங்கிய திருமிகு. காஞ்சனா என்பவர் ஒவ்வொரு பிள்ளையாருக்கும் இரட்டிப்பு பணம் கொடுத்து சேவாலயாவின் இந்த முயற்சிக்கு சேவை மனப்பான்மையோடு உதவினார்களாம். நம்மால் முடிந்தால் நாமும் பின்பற்றலாம்.
வீட்டுக்கு பிள்ளையார் வரும்போது, அவரைக் கொண்டு வருபவரிடம் பணம் கொடுத்து ரசீது பெற்றுக்கொள்ளலாம்.
சேவாலயா பற்றி மேலும் தெரிந்துகொள்ள…
1988 – ல் தொடங்கப்பட்ட சேவாலயா சென்னையில் பாக்கம் என்ற இடத்துக்கு அருகில் உள்ள கசுவா என்ற கிராமத்தில் இயங்கி வருகிறது.
பெற்றோர் இருவரும் இல்லாமல் நிராதரவாக விடப்பட்ட குழந்தைகளுக்கும், பெற்றோரில் யாரேனும் ஒருவர் இருந்தாலும் ஏழ்மை காரணமாக வளர்க்க முடியாமல் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கும், வயதான காலத்தில் ஆதரவற்ற நிலையில் இருக்கும் முதியோர்களுக்கும் புகலிடம் கொடுத்து வருகிறது.
தவிர, கரவை நின்றுபோன மாடுகளுக்கும் கோசாலா வைத்து பாதுகாக்கிறார்கள்.
சேவாலயா, தங்கள் ஆஸ்ரம குழந்தைகளுக்காக ஒன்றாம் வகுப்பு முதல் +2 வரையிலான பள்ளியையும், தொழில்நுட்ப கல்லூரியையும் நடத்தி வருகிறார்கள்.
மருத்துவமனை அமைத்து அதன் மூலம் சுற்று வட்டார கிராம மக்களுக்கு இலவசமாக மருத்துவ சேவை செய்கிறார்கள்.
இதை நடத்தி வருபவர் திருமிகு. முரளிதரன். இவர் ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துகொண்டிருக்கும்போதே அதைத் துறந்து இந்த சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இவரது மனைவி திருமிகு. புவனேஸ்வரியும் இவருக்கு இணையாக இந்தப் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இவர்கள் சேவையை மனதார வாழ்த்தியும், இவர்களின் சீரிய முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கவும்தான் இந்தப் பதிவு!
அன்புடன்
காம்கேர் கே.புவனேஸ்வரி
செப்டம்பர் 8, 2018