OTP – இன்று இந்த வார்த்தையை தெரியாதவர் யாரும் உண்டோ?
வங்கி பணப் பரிவர்த்தனை செய்வது முதல் வாடகை கார் புக்கிங் வரை அனைத்தின் இயக்கமும் இந்த வார்த்தையின் அஸ்திரத்தில்தானே…
நம் வங்கி அக்கவுண்ட்தான், நாம் பணம் செலுத்தி பயணம் செய்யும் கார்தான்… ஆனாலும் அவர்கள் அனுப்பும் OTP பாஸ்வேர்ட் மூலம்தான் அவர்கள் சேவையை அனுபவிக்க முடிகிறது. இதில் நம் பாதுகாப்பும் இருப்பதால் நாமும் உடன்படுகிறோம்.
போலவே நம் பிறப்பு, நம் வாழ்க்கை, நம் குடும்பம் எல்லாமே நமக்கானதுதான், நம்முடையதுதான், நம் விருப்பம்தான். ஆனாலும் நம்மை செம்மைப்படுத்திகொள்ள, சீனா புகழ் ‘ஃபார்ச்சூன் குக்கீஸ்’ பிஸ்கட்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் அதிர்ஷ்ட வாசகங்களைப் போல, வாழ்க்கை நித்தம் நமக்கு யாரோ ஒருவர் மூலம் OTP பாஸ்வேர்டை அனுப்பி வைக்கிறது. அந்த ஒருவர் நம் அம்மா அப்பாவாகவோ, அண்ணன் தம்பியாகவோ, அக்கா தங்கையாகவோ, குழந்தையாகவோ இருக்கலாம். ஏன் ரயில்வே ஸ்டேஷன்களிலும், கோயில்களிலும், ஓட்டல்களிலும், சினிமா தியேட்டர்களிலும் நாம் எதேச்சையாக சந்திக்கின்ற முன்பின் அறியாத மனிதர்களாகக்கூட இருக்கலாம்.
அவர்களின் சின்ன சின்ன செயல்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள், வார்த்தைகள் உருவாக்கும் சூழல்கள் இவைதான் நம் வாழ்க்கைக்கான OTP. இறை நம்பிக்கை உள்ளவர்கள் அதை தெய்வீக உணர்வாகவும், மற்றவர்கள் அதை இயற்கையின் அற்புதமாகவும் உணர்வார்கள். இறைவனோ இயற்கையோ எதிலாவது ஒரு நம்பிக்கை இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் பிடிப்பு.
பாண்டவ நாட்டை தர்மர் தலைமையிலான பாண்டவர்களிடம் இருந்து கைப்பற்ற துரியோதனன் தலைமையிலான கெளரவர்கள் திட்டம் தீட்டியதால் போர் மூண்டது.
வில்வித்தை வீரனான அர்ஜூனனுக்கு கிருஷ்ணன் சாரதியாகி பாண்டவர்கள் சார்பாக போர் களம் இறங்கினார்.
தன் எதிரே நிற்பது தன் உறவினர்கள். அவர்களோடு போரிட்டு அவர்களைக் கொன்று ராஜ்ஜியம் அடைய வேண்டுமா? என்று அர்ஜூனன் மனம் கலங்கி நின்றபோது அவனுக்கு கிருஷ்ணன் வழங்கிய அறிவுரைதான் பகவத்கீதை.
‘எப்போதெல்லாம், எங்கெல்லாம் அநீதி தோன்றுகிறதோ அப்போதெல்லாம் அங்கெல்லாம் நான் அவதரிப்பேன். அநீதியை அழிப்பேன். நான் நான் என்று கூறுகிறாயே அர்ஜுனா? நான் என்பது எது? நான்தான் நீ! நீ தான்நான்! உன்னை இயக்குபவன் நான்…’ என்று தொடங்கி கீதா உபதேசம் செய்ய அர்ஜூனன் போருக்குத் தயார் ஆனான்.
இங்கு அர்ஜூனனுக்கு கிருஷ்ணரே சாரதியானதுடன் அவன் வெற்றி பெறவும் அறிவுரை கூறி வழி நடத்திச் செல்கிறார். கிருஷ்ணரின் அறிவுரை அர்ஜூனனுக்கான OTP பாஸ்வேர்ட். அதை சரியாகப் பயன்படுத்தி அர்ஜூனன் போரில் வெல்கிறான்.
இப்படி இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் நேரில் வந்து உதவ முடியாததால்தான் நாம் சந்திக்கின்ற மனிதர்கள் மூலம் ‘தெய்வம் மனுஷ ரூபனே’ என ஏதேனும் ஒரு ரூபத்தில் நமக்கான OTP பாஸ்வேர்டை அனுப்பி வைக்கிறார். புரிந்துகொள்பவர்கள் புத்திசாலிகள்.
ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு OTP. ஒருவரது OTP மற்றவருக்கு உதவாது.
ஒரு குடும்ப விழாவுக்காக வீடே கலகலவென்றிருந்தது. வேலை பிசியிலும், உறவுகளின் சங்கமத்தின் உற்சாகத்திலும் என் கண்ணாடியை எங்கோ வைத்துவிட்டுத் தேடிக்கொண்டிருந்தேன். ஒரு குழந்தை என் கண்ணாடி மீது ஏறி அமர்ந்துவிட கண்ணாடி தனியாக, ஃப்ரேம் தனியாக பிரிந்து குழந்தையுடன் சேர்ந்து கண்ணாடியும் என்னைப் பார்த்து சிரிக்க, என் சகோதரியின் 12 வயதேயான மகன் என்னிடம் சொன்ன ஒரு சிறு தகவல் எனக்குள் பெரிய வெளிச்சத்தை உண்டு செய்தது.
எந்த ஒரு விஷயம் நமக்குள் ஒரு சிறு அசைவையாவது ஏற்படுத்துகிறதோ, அதுவே நமக்கு அளிக்கப்பட்ட OTP. அதை நாம் ‘கப்’ என பிடித்துக்கொண்டு வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துகொண்டே இருக்க வேண்டும்.
‘பெரிமா… நீ ஏன் என்னைப் போல பெரிதாக நல்ல தடி ஃப்ரேம் போட்ட கண்ணாடி போட்டுக்கொள்ளக் கூடாது… விஷனுக்கும் நல்லதாக இருக்குமே…’
‘எனக்கு அது சூட் ஆகாது கண்ணா…’
‘முதலில் ஹெல்த்தான் முக்கியம். அப்புறம்தான் அப்பியரன்ஸ்…’
இந்த உரையாடலில் இந்த கடைசிவரிதான் கண்ணாடி தேடல் நிகழ்வு எனக்குக் கொடுத்த OTP பாஸ்வேர்ட். சொன்னது யார், எப்படிச் சொல்லலாம், எதற்காகச் சொன்னார்கள் என காரண காரியங்களை ஆராயாமல் அதிலுள்ள நியாயத்தை மட்டும் எடுத்துக்கொண்டால் நாம் நமக்களிக்கப்பட்ட பாஸ்வேர்டை சரியாக பயன்படுத்துகிறோம் என வைத்துக்கொள்ளலாம். விதண்டாவாத சிந்தனைகளுடன் யோசித்துக்கொண்டிருந்தால் பாஸ்வேர்ட் தவறாகி இயக்கம் தடுமாறுவதோடு சிந்தனைக் குழப்பமும் தெளிவின்மையுமே உண்டாகும்.
வாழ்க்கையில் நம்மை அறியாமல் பல சமயங்களில் நமக்கான பாஸ்வேர்டை தவறவிட்டு கொண்டுதான் இருக்கிறோம்.
எனக்குத் தெரிந்த எழுத்தாளர் ஒருவர் திறமைசாலி. எழுத்து, பேச்சு, ஓவியம், கலை, இலக்கியம் என பன்முக ஆற்றல் கொண்டவர். ஆனால் ஒவ்வொரு படைப்பை உருவாக்குவதற்கு முன்னும், பின்னும் சிகரெட் பிடித்தால்தான் அவரால் அந்தப் படைப்பை முழுமையாக முடிக்க முடியும் என்ற தவறான மனநிலையில் செயின் ஸ்மோக்கராகி புகையையும் அவரையும் பிரிக்கவே முடியாத நிலையில் வாழ்ந்து வந்தார். வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் சர்க்கரை நோய் தொடர்ச்சியாய் ஹார்ட் அட்டாக் கூடவே இலவச இணைப்பாய் நுரையீரல் புற்றுநோய்.
அம்மா, அப்பா, மனைவி, நண்பர்கள் என எத்தனை பேர் அவருக்கு அறிவுரை வழங்கி இருப்பார்கள்?
அத்தனையையும் அவர் புறக்கணித்தன் விளைவே இத்தனை துன்பங்களுக்கும் காரணம் என உணர்ந்ததோடு இளைஞர்கள் அனைவருக்கும் ‘புகைக்காதீர்கள்’ என அறிவுரை வழங்கிக்கொண்டே இருந்தார்.
இவரது அறிவுரைதான் இளைஞர்களுக்கும் கலைஞர்களுக்குமான OTP. இவர் தவறவிட்ட OTP பாஸ்வேர்டை மற்றவர்களுக்குக் கொடுத்து சரியாகப் பயன்படுத்த அறிவுறுத்திவிட்டுச் சென்றார்.
ஒரு நண்பர் இன்னும் கொஞ்சம் புத்திசாலி. படித்து முடித்து பெங்களூரில் செட்டில் ஆனபோது புகைக்கும் வழக்கத்துக்கு ஆளாகியுள்ளார். அதிகம் படிக்காத கிராமத்தில் வாழ்ந்துவந்த பெற்றோரை பெங்களூருக்கு அழைத்துவந்து தன்னுடன் வைத்துக்கொண்டபோது இருவரையும் அழைத்து ‘தான் புகைக்கும் வழக்கத்துக்கு அடிமையாகி விட்டேன். என்னால் விட முடியாது. யாராவது பார்த்து சொல்வதற்கு முன் நானே உங்களிடம் சொல்லி விடலாம் என சொல்கிறேன்…’ என சொன்னதோடு அவர்களுக்குத் தெரிந்தே வீட்டில் இருக்கும் நாட்களில் தெருவில் நின்று புகைத்துவிட்டு வீடு திரும்புவார். இதை அவர் பெற்றோரும் ‘என் பையன் பொய்யே சொல்ல மாட்டான். தனக்கு புகைக்கும் பழக்கம் இருப்பதை எங்களிடம் வெளிப்படையாக சொல்லி விட்டான்…’ என பெருமையாக பிறரிடம் சொல்லிக் கொள்வதை கேட்டிருக்கிறேன். இதுபோன்ற பெற்றோர்களின் தவறான பெருமை வார்த்தைகளே பிள்ளைகளுக்கு தவறான OTP ஆகிவிடுகின்றன.
திருத்த வேண்டிய இடத்தில் இருக்கும் பெரியோர்களே தவறு செய்யும்போது திருந்த வேண்டியவர்கள் எப்படி திருந்துவார்கள்?
கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவர் நண்பர்களின் வற்புறுத்தலினால் அவர்களுடன் திருப்பதி சென்று திரும்பினார்.
‘எனக்கு கடவுள் பக்தி கிடையாது, நண்பர்களுக்காக பிக்னிக் போல சென்றேன், கூட்டத்தில் நிற்கவே இல்லை… ரொம்ப சீக்கிரமா உள்ளே போய்விட்டு வெளியே வந்துட்டேன்… நீங்கள் எல்லாம் பய பக்தியோடு வருடா வருடம் சென்று வருகிறீர்கள்… கூட்டம், வரிசை என பாடுபட்டு உள்ளே சென்று இரண்டு நிமிடம் தரிசனம் செய்ய பல மணி நேரங்கள் காத்திருக்கிறீர்கள்…’ என சர்வ அலட்சியமாகப் பேச, அவரது 13 வயது மகள் கொஞ்சமும் யோசிக்காமல் சொன்னாள், ‘அப்பா, திருப்பதி சாமிக்கு எங்களை ரொம்ப பிடிக்கும். அதனால் எங்களை ரொம்ப நேரம் உள்ளே இருக்க அனுமதிக்கிறார்… உங்களை பிடிக்காததால் சீக்கிரமே வெளியே அனுப்பிவிட்டிருக்கிறார்…’
சிறுமியின் இந்த பேச்சுதான் அவள் அப்பாவுக்கான OTP. மகளின் பேச்சில் இருந்த நியாயம் அவருக்குள் இருந்த அகந்தையை விரட்டியது. அன்றில் இருந்து கடவுள் மீது நம்பிக்கை வைக்காவிட்டாலும் நம்பிக்கை வைத்திருப்பவர்களை நக்கலடிக்காமல் இருக்கப் பழகினார்.
நமக்குக் கிடைக்கும் அனுபவங்கள் அத்தனையையும் பாசிட்டிவாக பார்க்கப் பழகி, அதையே நமக்கான OTP ஆக எடுத்துக்கொண்டு மிகச் சரியாக பயன்படுத்தினால் வெற்றிக்கொடிக் கட்டலாம்.
இதைத்தான் ‘எல்லாம் நன்மைக்கே’ என நம் பெரியோர்கள் சொல்லிச் சென்றுள்ளார்களோ!
இந்தா பிடிங்க… உங்களுக்கான OTP ‘எல்லாம் நன்மைக்கே!’
எழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி
புதிய தலைமுறை – பெண் மாத இதழ்
வாழ்க்கையின் OTP – 1
ஆகஸ்ட் 2018