ரொம்ப வருடங்களாக என்னை சந்திக்க வேண்டும் என் தொழில்நுட்ப அனுபவங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டே இருந்தவர் நேற்று திரும்பவும் எனக்கு வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பி இருந்தார்.
‘தொந்திரவுக்கு மன்னிக்கவும்… உங்களை சந்திக்க வேண்டும்…’ என்றவருக்கு ’என்ன விஷயம்… ஏதேனும் தொழில்நுட்ப உதவி வேண்டுமா… போனிலேயே பேசலாமே…’ என்று குறிப்பிட்ட நேரம் கொடுத்துப் பேசச் சொல்லி இருந்தேன்.
போனில் அறிமுகம் செய்துகொண்டவர், ஃபேஸ்புக்கில் நான் தொடர்ந்து எழுதுவது தனக்கு மோடிவேஷனாக இருப்பதாகச் சொன்னபோது எனக்கு சந்தோஷம் ஒருபுறம்… ஃபேஸ்புக்கூட மோட்டிவேஷனுக்கெல்லாம் உதவுகிறதே என்ற வியப்பு மறுபுறம்.
அதன் பிறகு அவர் சொன்ன விஷயங்கள் என்னை ஆச்சர்யமூட்டின.
1988-ஆம் ஆண்டு லைட் பாயாக தன் கேரியரைத் துவக்கியவர், அதன்பிறகு அந்தத் துறையில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறத் தொடங்கினார். Premier Pro என்ற சாஃப்ட்வேரை வீடியோ எடிட்டிங்குக்குப் பயன்படுத்தி வந்த காலகட்டத்தில் எடிடிங்கில் நுழைந்து அதிலும் தன் அறிவை மேம்படுத்திக்கொண்டார்.
அடுத்ததாக Final Cut Pro Editing சாஃப்ட்வேரின் அறிமுகம் கிடைக்க, அதுதான் எடிடிங்குக்கு உகந்த சாஃப்ட்வேர் என உணர்ந்து Apple Certified Pro பயிற்சியை எடுத்துக்கொண்டு தான் மட்டும் அந்தத் துறையில் உயராமல், மற்றவர்களுக்கும் பயன்படும் வகையில் எடிட்டிங் வகுப்புகளை எடுக்க ஆரம்பித்து இப்போது எடிட்டிங்கில் உச்சத்தில் இருக்கிறார். ‘பெஸ்ட் போட்டோகிராஃபி டுடே’ விருதையும் பெற்றிருக்கிறார்.
மேலும் இந்தத் துறையில் சாதிப்பதற்கு மொபைல் APP தயாரிப்பதற்காக என்னை சந்திக்க வேண்டும் என கேட்டபோது பிரமிப்பாக இருந்தது. முன்பே போட்டோகாரன் டாட் காம் என்ற வெப்சைட் வைத்திருக்கிறார்.
எந்தத் துறையாக இருந்தாலும் என்ன படித்திருந்தாலும் சமகாலத்துடன் தன் ஆர்வத்தையும், திறமையையும் வளர்த்துக்கொண்டால் மட்டுமே நிலைத்து நிற்க முடியும். நம் திறமை…. திறமை சார்ந்த உழைப்பு… கூடவே தொழில்நுட்பத்தையும் இணைத்துக்கொண்டால் வானம் கூட எல்லை இல்லை என்பதற்கு இவரைப் போன்ற உழைப்பாளிப்பகள் ஓர் எடுத்துக்காட்டு.
நாம் செய்கின்ற பணியோடு, நமக்குப் பிடித்த ஒரு விஷயத்திலும் கவனம் செலுத்திவரும்போது வாழ்க்கையே சுவாரஸ்யம்தான். அவர்களிடம் மற்றவர்களைவிட தன்னம்பிக்கை கொஞ்சம் தூக்கலாகவே இருப்பதாக எனக்குப்படுகிறது.
எனக்கு இப்போதெல்லாம் இப்படிப்பட்ட தன்னம்பிக்கை மனிதர்களின் அறிமுகம் நிறைய கிடைக்கிறது.
இவர் வாழ்க்கையில் உழைப்பாலும் அறிவாலும் தன்னை உயர்த்திக்கொண்டார் என்பது ஒருபுறம் இருக்க, பட்டப்படிப்பு இல்லாமலேயே தன் தன்னம்பிக்கை ஒன்றையே மூலதனமாக்கி உயர்ந்துள்ளார் என்பதுதான் High‘LIGHT’. இவ்வளவு சொல்லிவிட்டு பெயரை சொல்லாவிட்டால்… இவர் தாஸ் தனிகாசலம்.
தனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதாகவும், அவர்கள் இருவரும் கல்லூரியில் முதுகலையிலும், பள்ளியில் இறுதி வருடமும் படித்து வருவதாகவும் சொன்னபோது…. ‘ஆஹா… இரண்டு பெண் குழந்தைகள்… தேவதைகள் வாழும் வீடு!’ என்று மனதார வாழ்த்தினேன்.
அன்பு சூழ் உலகு…
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
செப்டம்பர் 26, 2018