மயிலவேலன் – வனிதா பதிப்பகத்தின் உரிமையாளரும், பாபாசியின் Vice President என்பதும் அனைவருக்கும் தெரியும்.
ஆனால், இவரது தாய் ஒரு பெண் சாதனையாளர், தன்னம்பிக்கைப் பெண்மணி என்ற விஷயம் தெரியுமா?
இவரது தாய் திருமிகு. அம்சவேணி பெரியண்ணன் அவர்கள் பதிப்பகத் துறையில் முதல் பெண்மணி என்னும் மகுடம் தரித்தவர். அது மட்டுமில்லாமல் 1000 புத்தகங்களை வெளியிட்டுள்ளார் என்பதும் வியக்கத்தக்க ஒன்றாகும்.
அடுத்த இளம் தலைமுறையினரை வழிநடத்துகின்ற நூல்களை மட்டுமே வெளியிட வேண்டும் என்ற லட்சிய நோக்குடன் தன் கணவர் திருமிகு. பெரியண்ணன் அவர்களின் முழு ஆதரவுடன், 1978 ஆம் ஆண்டு தன் மகள் வனிதாமணி பெயரில் வனிதா பதிப்பகத்தைத் தொடங்கி, பள்ளி மாணவர்களுக்காக ஒரு ரூபாயில் இலக்கண நூல்களை வெளியிட ஆரம்பித்தார். 40 ஆண்டுகள் தொடர்ந்து பதிப்பகப் பணியில் ஈடுபட்டவர். அதன் உச்சம்தான் 1000 புத்தகங்கள் வெளியீடு.
இவரது அம்மாவின் மறைவுக்குப் பிறகு அவரை பற்றி ‘சாதனைப் பெண்மணி அம்சவேணி பெரியண்ணன் – தமிழகத்தின் முதல் பெண் பதிப்பாளர்’ என்ற புத்தகம் வெளியிட்டிருப்பதை கேள்விப்பட்டு அம்மாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும், அம்மா குறித்து புத்தகம் வெளியிட்டிருப்பது குறித்துப் பாராட்டியும் தகவல் கொடுத்திருந்தேன்.
போனில் என்னை அறிமுகம் செய்துகொண்டபோது,
‘மேடம் எனக்கு உங்கள் அறிமுகம் தேவையில்லை… உங்களை நாங்கள் 20 வருடங்களுக்கு மேல் கவனித்து வருகிறோம்’ என்று சொன்னபோது ஆச்சர்யமாக இருந்தது.
‘ஆமாம் மேடம் நீங்கள் காம்கேர் ஆரம்பித்ததில் இருந்து தெரியும். உங்கள் அலுவலகத்துக்கு நான் வந்திருக்கிறேன். சில சாஃப்ட்வேர் பிராஜெக்ட்டுகளை உங்களிடம் இருந்து பெற்று நாங்கள் அப்போது நடத்தி வந்த நிறுவனத்தில் செய்திருக்கிறோம்… உங்கள் சகோதரி, சகோதரன் மற்றும் உங்கள் அப்பா அம்மா அனைவரையும் தெரியும். எல்லோருமே நன்றாக பேசுவார்கள்.
நீங்கள் தான் ரொம்ப அமைதியான டைப். பேசவே மாட்டீர்கள்… உங்கள் நிறுவனம் ‘Comp’care நிறுவனமா அல்லது ‘Calm’care நிறுவனமா என்று நாங்கள் ஆச்சர்யப்படுவோம்’ என்றார்.
2004 – ல் நெய்வேலி புத்தகக்கண்காட்சியில் நான் விருது வாங்கிய நிகழ்வு, என் புத்தகங்கள் அனைத்தும் திறனாய்வுப் புத்தகங்கள் போல இருக்கும் என்றெல்லாம் சொல்லிக்கொண்டே போக எனக்குள் சந்தோஷம். காரணம் புகழ்ச்சிக்காக அல்ல. இந்த அளவுக்கு நம்மை கவனிக்கிறார்கள்… அதுவும் சரியாக புரிந்துகொண்டு கவனிக்கிறார்கள் என்பதே மிகப்பெரிய விஷயமாயிற்றே.
அன்றில் இருந்து இன்றுவரை அனைவரிடமும் மரியாதையுடனும், டிஸ்டன்ஸ் மெயிண்டெயின் செய்தும் பழகி வருகிறீர்கள். அதுதான் உங்கள் வெற்றிக்குக் காரணம். அந்த சிறு வயதிலேயே பிசினஸில் நீங்கள் காட்டிய டெடிகேஷன், நேர்மை இவற்றினால் நீங்கள் அன்றே எங்களுக்கெல்லாம் ரோல்மாடல்… என்றும் சொன்னபோது நேர்மையாக வாழ்ந்து வருவதன் பலனை முழுமையாக உணர்ந்தேன்.
இவரது சகோதரியின் கணவர் சிலகாலம் எங்கள் காம்கேரின் அனிமேஷன் பிரிவில் பணிபுரிந்திருக்கிறார் என்ற செய்தி மற்றொரு ஆச்சர்யம்.
இப்படி ஆச்சர்யங்களாலும், மகிழ்ச்சியாலும், பாஸிட்டிவ் வைப்ரேஷனாலும் அன்று அந்தத் தொலைபேசி உரையாடல் நிறைந்திருந்தது.
நேற்று இவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு. 20 வருடங்களுக்குப் பிறகேயான சந்திப்பு.
எனக்கு மிகவும் பிடித்த திருக்குறள் புத்தகத்துடன், அவரது அம்மா பற்றிய நூலையும் அன்பளிப்பாகக் கொடுத்தார்.
நாங்கள் போனில் பேசியதை அப்பாவிடமும் சொன்னார். ‘மேடம் பேசவே மாட்டாங்க…’ என்று சொன்னபோது அப்பா ‘ஆமாம் அடிப்படையில் அமைதியான சுபாவம். தேவை என்றால் சூழலுக்கு ஏற்ப பேசுவாள்’ என்று சொன்னபோது அப்பாவின் முகத்தில் பெருமிதம்.
பெற்றோரைப் பெருமைப்படுத்த இதைவிட வேறென்ன வேண்டும்?
மனதில் பட்டதை வார்த்தை அலங்காரம் இன்றி பேசியதோடு, என்னுடைய நேர்மையையும், தன்னம்பிக்கையையும், உழைப்பையும் மனதாரப் பாராட்டிய இவர் மீது மட்டுமல்ல இவரது அம்மாமீதுதான் (அப்பாவின் மீதும்தான்) எனக்கு மரியாதை கூடியது.
தன்னம்பிக்கைப் பெண்மணியால் வளர்க்கப்பட்டவர் ஆயிற்றே… வேறெப்படி இருப்பார்?
தன்னம்பிக்கைப் பெற்றோரால் வளர்க்கப்பட்டவர்களால் மட்டுமே பிறரிடம் உள்ள ஆற்றல்களையும் பண்புகளையும் கண்டுகொள்ளவும் அதை அங்கீகரிக்கவும் முடியும்.
அதற்கு இவர் ஒரு சான்று!
அன்பு சூழ் உலகு!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
செப்டம்பர் 28, 2018