நம் ஒவ்வொருவருக்குமான உயரம்-குள்ளம், கருப்பு-சிவப்பு, குண்டு-ஒல்லி போன்ற புற அங்க அடையாளங்கள் பெரும்பாலும் பொதுவானவை. நம் பெயர், படிப்பு, திறமை, வேலை, குணநலன்கள், பழக்கவழக்கங்கள், செயல்பாடுகள் போன்றவை ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை வாய்ந்தவை. அவையே நம்மை மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்துகிறது. நம் அடையாளமாகிறது.
இதுபோல ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு அடையாளம்.
பாரத நாடு அன்பிலும், கருணையிலும், அறிவிலும், வீரத்திலும், மானத்திலும், கற்பிலும், இரக்கத்திலும், ஆன்மீகத்திலும் சிறந்த நாடு. எல்லா மொழி பேசுபவர்களும், எல்லா மதத்தினரும் வாழ்கின்ற அற்புதமான நாடு.
இவைதான் நம் நாட்டின் அடையாளம். இதைத்தான் இந்தியக் கலாச்சாரம், பாரதப் பண்பாடு என்கிறோம்.
சுருங்கச் சொன்னால் ஒரு நாட்டின் அடையாளமே அதன் கலாச்சரமும், பண்பாடும்தான்.
அமெரிக்காவில் நம் அடையாளம்
அமெரிக்காவில் 12-ம் வகுப்பு முடிந்ததும் கான்வகேஷன் நடக்கும். அந்த நிகழ்ச்சியின்போதுதான் பட்டம் அளித்து சிறப்பிப்பார்கள். அந்த விழாவிற்கு நடை, உடை, பாவனைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு மாதகாலம் பயிற்சி அளிப்பார்கள். உடை உடல் முழுவதையும் கவர் செய்திருக்க வேண்டும். உடலின் மேல்பகுதியில் முன்போ, பின்போ தெரியும்படி இருக்கக் கூடாது. வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும். காலில் எந்தவிதமான காலணி அணிந்திருக்க வேண்டும், எப்படி சபைக்கு நடந்து வரவேண்டும். என்றெல்லாம் பயிற்சி கொடுப்பார்கள்.
மூன்று வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் செயிண்ட் லூயிஸ் என்ற பகுதியில் உள்ள பிரபலமான பெண்கள் கிருஸ்துவ பள்ளியில் நடைபெற்ற கான்வகேஷனில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. என்ன ஒரு நேர்த்தி அந்த விழாவில்… விழாவில் கலந்துகொள்ளும் பெற்றோர் மற்றும் உறவினர்கள், நண்பர்களுக்கும் உடை கட்டுப்பாடு உண்டு. அவர்களும் என்ன உடை அணிந்துவர வேண்டும் என்று சொல்லி விடுகிறார்கள். ஒரு மாணவிக்கு எத்தனை நபர்கள் பார்வையாளராக வர இருக்கிறார்கள் என்ற விவரத்தையும் முன்பே சொல்லிவிட வேண்டும். அவர்களுக்கு இருக்கைகளை அவரவர்கள் பெயருடனேயே முன் ஏற்பாடு செய்துவிடுவார்கள்.
பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட மாணவிகள் அனைவரும் 17 வயது நிரம்பியவர்கள். 12-ஆம் வகுப்பு முடித்து கல்லூரிக்குச் செல்லக் காத்திருப்பவர்கள். இன்னிசைத் தவழ விழா இனிதே ஆரம்பித்து. ஒவ்வொரு மாணவியாக நம்மூர் கிருஸ்துவ திருமணங்களில் மணப்பெண் நடந்து வருவதைப் போல மெதுவாக அதே சமயம் கம்பீரமாக நடந்துச் சென்று மேடையில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்கிறார்கள். ஒவ்வொருவரும் காலில் அணிந்திருக்கும் செருப்பு மட்டுமே தெரியும் வகையில் முழுநீள வெள்ளை உடை. வெள்ளை நிற செருப்பு. கைகளில் பூங்கொத்து. முகத்தில் பெருமித சிரிப்பு என அசத்தலான கம்பீரமான ஏற்பாடு. பார்ப்பதற்கே பூரிப்பாக இருந்தது. அமெரிக்கர்கள் தங்கள் நாகரிகத்தை அற்புதமாக வெளிப்படுத்தி இருந்தார்கள்.
ஒவ்வொரு மாணவியாக வர, சட்டென ஒரு மாணவி சபையினரின் முழு கவனத்தையும் ஈர்த்தாள். ஆம். வெள்ளை நிறத்தில் அதே வெள்ளை நிற கற்கள் வைத்த புடவை. அதே பேட்டனில் பிளவுஸ். நெற்றியில் நெற்றிச் சுட்டி. காதிலும், கழுத்திலும், கையிலும் வெள்ளைநிற ஆபரணங்கள். கைகளில் சிவப்பு நிற பூங்கொத்து. நம் பாரத மாதாவே நேரில் வந்ததைப்போல ஜொலித்தாள். கம்பீரமாக நடந்து சென்று மேடையில் அமர்ந்ததைப் பார்ப்பதற்கு நம் இந்திரா காந்தி அவர்களே கம்பிரமாக நடந்து வருவதைப் போல இருந்தது.
நிகழ்ச்சி முழுவதும் அந்தப் பெண் அதே கம்பீரத்தோடு, முகத்தில் அடக்கமான புன்னகையோடு தன்னம்பிக்கையோடு காட்சி அளித்தாள். நிகழ்ச்சி முடிந்ததும் நிறைய அமெரிக்கர்கள் அந்தப் பெண்ணை அவளுடைய அனுமதியோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். ‘ஐ லவ் யுவர் டிரஸ்’, ‘ஐ லவ் யுர் காஸ்ட்யூம்’, ‘ஐ லவ் இந்தியன் கல்சர்’ என்றெல்லாம் கூறிப் புகழ்ந்தார்கள். புகழ்ந்தவர்கள் எல்லாம் இந்தியர்கள் அல்ல. அனைவரும் அமெரிக்கர்கள் என்பதுதான் ஹைலைட்.
என் சகோதரியின் பெண்தான் அவள்.
அவளைப் பெருமையாகப் பார்த்துப் பூரித்துக்கொண்டிருந்த எங்களையும் சேர்த்துப் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். ‘வி லவ் யுவர் ஃபேமிலி’ என்ற புகழாரம் வேறு. அயல்நாட்டினரும் வியக்கும் நம் கலாச்சாரம்தான் நம் அடையாளம்.
அனைத்து அமெரிக்கர்களுக்கு இடையில் அந்தப் பெண்ணின் வீர நடையையும், வெற்றிப் புன்னகையையும், தன்னம்பிக்கையுடன் இந்தியக் கலாச்சாரத்தை வெளிப்படுத்திய மேன்மையை நாம் போற்றியே ஆக வேண்டும்.
அமெரிக்கா சென்றால் அங்கு பெண்கள் மினிடிரஸ்தான் போடுவார்கள். ஆண்களோடு டேட்டிங் செய்வார்கள். இரவு நேர பார்ட்டிகள் இருக்கும். இப்படியெல்லாம் நாமாகவே கற்பனை செய்துகொண்டு உடை மாற்றம், பழக்க வழக்க மாற்றம் என மாற வேண்டிய அவசியமே இல்லை. நம்மை யாருமே அங்கு எதற்கும் வற்புறுத்துவதுமில்லை.
அமெரிக்காவில் நாம் நாமாக இருப்பதற்கு எந்த தடையும் இல்லை என்பதற்கு நம் இந்திய மாணவி புடவை அணிந்து நம் கலாச்சாரத்தை கம்பீரமாக அமெரிக்காவிற்கு எடுத்துக் காட்டியதே ஒரு சாட்சி.
மேலும் அந்தப் பள்ளி ஆசிரியர்கள் எங்களிடம் பேசியதுதான் ஆச்சர்யத்தின் உச்சகட்டம். ‘வெள்ளை உடை என்பது இந்தியர்களைப் பொருத்த வரை கணவனை இழந்தவர்கள் அணியும் கலர். எனவே புடவை கட்ட விரும்பும் இந்திய மாணவிகளுக்கு மட்டும் மெல்லிய சந்தனக் கலரை தேர்ந்தெடுக்கலாம் என பள்ளி நிர்வாகத்திடம் பேசி வருகிறோம்’.
இன்று இந்தியாவில் கணவனை இழந்தவர்களின் அடையாளமான வெள்ளைப் புடவை, பூ, பொட்டு இவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டு அந்த சம்பிரதாயங்களில் மாற்றங்கள் வந்துவிட்டாலும் நமக்காக அமெரிக்கர்கள் பேசும்போது புல்லரிக்கிறது.
நாம் பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடுவதையும், யோகாவையும், ஒருவனுக்கு ஒருத்தி என்ற கான்செப்ட்டையும் அவர்கள் வியந்து பின்பற்ற முயற்சி செய்துகொண்டிருக்கும் அற்புதமான நம் கலாச்சாரத்தை நாம்தான் ஏதேதோ தவறான கற்பனையான புரிதல்களால் நம் அடையாளங்களை துறந்துவிடத் துடிக்கிறோம்.
பாரதியின் அடையாளம்
டிசம்பர் 11-ஆம் தேதி பாரதியாரின் 136-வது பிறந்த நாள். அவர் வாழ்ந்தபோது அவர் ஏற்படுத்திக்கொண்ட ‘கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி’ போன்ற அடையாளங்களினால் அவரது நினைவினைப் போற்றும் வகையில் பாரதியார் நினைவுச் சின்னங்களாக எட்டயபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம், சென்னை திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த இல்லம், புதுச்சேரியில் அவர் வாழ்ந்த இல்லம் போன்றவை நினைவு இல்லங்களாகப் போற்றப்பட்டு வருகிறது.
பாரதியின் தமிழ் மொழி காதலும் பிறமொழிகள் மீதான ஆர்வமும் அவருடைய மிக முக்கிய அடையாளமாக இருந்தாலும், பாரதியாரின் தைரியம்தான் அவருடைய மாபெரும் அடையாளம்.
ஒருமுறை ‘மிஸ்டர் காந்தி! கடற்கரையில் நாளை பேசுகிறேன். நீங்கள் தலைமை வகிக்க வர வேண்டும்’என்று பாரதி கேட்டுகொண்டபோது, ‘கூட்டத்தை மறு நாளுக்கு மாற்ற முடியுமா?’ என்று கேட்டார் காந்தி. ‘அது முடியாது ஆனால், நீங்கள் ஆரம்பிக்கப்போகும் இயக்கத்துக்கு என்னுடைய ஆசி’ என்று சொல்லிவிட்டு வெளியேறிய பாரதியைப் பார்த்துக்கொண்டே இருந்தார் காந்தி. பிறகு, ‘இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்’என்று அருகில் இருந்தவர்களிடம் கவலைப்பட்டார்.
ஒரு பெண்ணை தன் குருவாக ஏற்றுக்கொண்டு மரியாதை அளித்து பெண் விடுதலைக்காக குரல்கொடுக்க ஆரம்பித்த பெருந்தன்மைமிக்க உயரிய குணமும் பாரதிக்கான அடையாளமாயின.
ஒரு முறை, பாரதியார் சகோதரி நிவேதிதாவை சந்தித்தபோது, அவரது மனைவியை அழைத்து வரவில்லையா என பாரதியாரை கேட்டுள்ளார். அதற்கு பாரதியார், எங்கள் சமுதாய வழக்கப்படி மனைவியை வெளியில் எங்கும் அழைத்துச் செல்வதில்லை என குறிப்பிட்டார். மேலும் தனது மனைவிக்கு அரசியல் குறித்து எதுவும் தெரியாது என்றும் கூறினார்.
இதைக் கேட்ட சகோதரி நிவேதிதை வருத்தத்துடன் பாரதியாரிடம், ‘உங்கள் மனைவிக்கே நீங்கள் சம உரிமையும், விடுதலையும் கொடுப்பதில்லை. இந்நிலையில், நீங்கள் நாட்டுக்கு எவ்வாறு விடுதலை பெற்றுத்தர போகிறீர்கள்’, என்று கேட்டார். இந்த உரையாடல் தான் பாரதியாருக்கு பெண்களைப் பற்றிய சிந்தனையை மாற்றி, பெண்ணுரிமைக்காக போராட தூண்டுகோலாக இருந்தது.
கனவு அல்ல அடையாளம்!
பாரதியாரின் பிறந்த நாளான 2018 டிசம்பர் 11-ம் தேதி சேவாலயாவில் பாரதியார் விழா நடைபெற்றது. அதற்கு என்னை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள்.
300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள். அவர்களை ஊக்கப்படுத்துவதற்காக பேச அழைப்பட்ட எனக்கு மிக உற்சாகமான நாளாக அமைந்தது.
சென்னையில் பாக்கம் என்ற இடத்துக்கு அருகில் உள்ள கசுவா என்ற கிராமத்தில் இயங்கி வரும் சேவாலயா 1988-ம் ஆண்டு முதல் ஆதரவற்ற குழந்தைகள், கைவிடப்பட்ட முதியோர்கள் இவற்றுடன் கரவை நின்றுபோன மாடுகளுக்கும் புகலிடம் கொடுத்து வருகிறது.
இதை நடத்தி வருபவர் ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துகொண்டிருக்கும்போதே அதைத் துறந்து இந்த சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் (முரளிதரன்). இவரது மனைவியும் இதற்கு முழு ஆதரவு (புவனேஸ்வரி முரளிதரன்).
அவர்களின் நான் சேவையை பாராட்டியபோது அவர்கள், ‘சேவாலயா எங்கள் கனவு’ என்றார்கள். நான் அதை சற்று மாற்றி ‘சேவாலயா உங்கள் அடையாளம்’ என்றேன்.
ஆம். ஏதோ பிறந்தோம், வளர்ந்தோம் என்றில்லாமல் இந்த மண்ணில் ஆறறிவுள்ள மனிதனாக பிறந்த நாம் ஒவ்வொருவரும் நமக்கான அடையாளத்தை மற்றவர்களுக்கு வழிகாட்டும் வகையில் இந்த உலகுக்கு விட்டுச் செல்ல வேண்டும்.
இப்படி அடையாளத்தை உருவாக்க பணம் வைத்திருக்க வேண்டாம். அறக்கட்டளை நடத்த வேண்டாம். கூட்டம் கூட்ட வேண்டாம். பெருமை பேச வேண்டாம். அடுத்தவரிடம் நன்கொடையும் கேட்க வேண்டாம். சின்ன சின்ன செயல்களில், நெகிழும் அன்பு உள்ளங்களில், பரிவான செயல்பாடுகளில் நமக்கான அடையாளம் தானாக உருவாகும்.
யோசிப்போம்!
மின்னம்பலத்தில் படிக்க… https://minnambalam.com/k/2018/12/14/8
எழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி
@ மின்னம்பலம் டாட் காம்
வெள்ளிதோறும் வெளியாகும் தொடரின் பகுதி – 6