தமிழ்நூல் வெளியீடு மற்றும் விற்பனை மேம்பாட்டுக் குழுமம் வழங்கும் 2017-18ல் வந்த சிறந்த நூல்களுக்கான பிரிவில், யெஸ். பாலபாரதி அவர்கள் எழுதிய ‘புதையல் டைரி’ – யை சிறந்த சிறுவர் நூலுலாக பரிசுக்கு தேர்வு செய்துள்ளது. முதற்கண் அவருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
தன் மகன் குறித்தும் ஆட்டிசம் பாதித்த சிறப்புக் குழந்தைகள் குறித்தும் அவ்வப்பொழுது வெப்சைட்/ஃபேஸ்புக்/பத்திரிகைகளில் இவர் எழுதி வரும் விழிப்புணர்வு கட்டுரைகள் மூலமும் இவரது மேடை பேச்சுகள் மூலமும் அறிமுகம். இவர் எழுதிய புத்தகங்களில் ஆட்டிசம் குறித்த புத்தகம் முக்கியமானது.
இவரது பதிவுகள் என்னை ஈர்த்தமைக்குக் காரணம் இல்லாமல் இல்லை.
எங்கள் காம்கேர் நிறுவனத்தில் நாங்கள் தயாரிக்கும் பிராஜெக்ட்டுகளின் தன்மைக்கு ஏற்ப, அவற்றுக்குத் தகுதியான (பொருத்தமான) மாற்றுத்திறனாளி பட்டதாரிகளுக்கு அவரவர்களுக்கு ஏற்ற வகையில் வேலைவாய்ப்பு அளித்து வருகிறோம். ஆட்டிசம் பாதித்த சிலரும் பணியாற்றி இருக்கிறார்கள்.
மேலும் எங்கள் ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை வாயிலாக, பார்வைத் திறன் இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக கல்வி, கம்ப்யூட்டர், தொழில்நுட்பம், வேலைவாய்ப்பு என உதவி வருகிறோம். பார்வைத்திறன் இழந்தோர் ஸ்க்ரைப்களின் உதவியின்றி தாங்களாகவே தேர்வெழுத உதவும் ‘விசியோ எக்ஸாம்’ (Visio Exams) என்ற சாஃப்ட்வேரை தாயாரித்துள்ளோம்.
கடந்த இரண்டு மூன்று வருடங்களில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு பயிற்சி கொடுத்துவரும் சில நிறுவனங்களுக்கு அவர்கள் அழைப்பின் பேரில் நேரில் சென்று சில மணி நேரங்கள் அவர்களுடன் பழகியும் இருக்கிறேன்.
இந்த சூழலில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு தொழில்நுட்ப ரீதியாக சாஃப்ட்வேர், மல்டிமீடியா பிரசன்டேஷன், அனிமேஷன், ஆப் மூலம் ஏதேனும் உதவ முடியுமா என யோசனை சிலவருடங்களாகவே என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
இந்த காலகட்டத்தில் யெஸ். பாலபாரதி அவர்கள் பதிவுகள் என் கண்களில் படவே, அவரை தொடர்பு கொண்டேன்.
மிக அழகாக தைரியமாக அதே சமயம் உற்சாகம் சிறிதும் குறையாமல் யதார்த்தத்தைப் பகிர்ந்துகொண்டார்.
‘ஆட்டிசம் பாதிப்பில் மைல்ட், மாட ரேட், சிவியர் என மூன்று நிலைகள் உள்ளன. மைல்ட், மாடரேட் நிலையில் உள்ள குழந்தைகளுக்கு ஓரளவுக்கு நாம் பயிற்சி கொடுத்து அவர்களை ரெகுலேட் செய்யமுடியும். ஒரே வேலையை திரும்பத் திரும்ப செய்கின்ற பணிகளை அவர்களால் இலகுவாக, திறமையாக செய்ய முடியும். உதாரணத்துக்கு பேப்பர்களை அடுக்கி வைக்கும் பணி,காய்கறி வெட்டுவது, பேக் செய்வது, போஸ்டல் / கொரியர் கவர்கள் தயாரிக்கும் பணி என ஒரே மாதிரி செயல்பாடுகளை அவர்களால் தொடர்ச்சியாக செய்ய முடியும். மேலும் அவரவர்களுக்கு விருப்பமான வேலைகளை அவர்களாகவே தொடர்ச்சியாக செய்வார்கள். சென்னையில் பல கிளைகளுக்கும் மேல் உள்ள ஒரு ஹோட்டலில் ஆட்டிசம் பாதித்தவர்களையே சர்வராகவும், டேபிள் கிளீனராகவும் பணியில் அமர்த்துகிறார்கள்.
கம்ப்யூட்டரில் ஒரே மாதிரியான செயல்பாடுள்ள டேட்டா எண்ட்ரி பணிகளையும் அவர்களால் செய்ய முடியும். சில ஐடி. நிறுவனங்கள் அந்த பணிகளுக்கு ஆட்டிசம் பாதித்தவர்களை எடுக்கிறார்கள்.
அவர்கள் எத்தனை நாட்கள் அங்கே அந்தப் பணியில் தொடர்கிறார்கள் என நானும் அறிந்துகொள்ள முயற்சி செய்துவருகிறேன்.
அவர்களால் செய்ய முடிந்ததைச் செய்வார்கள். அதற்கு முறையான பயிற்சிகளை வழங்கவேண்டும். அதுபோல உள்ளதை ஏற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் என்னதான் முயற்சி செய்தாலும் அவர்களால் நம்மைப் போல் ஓரிடத்தில் நிலையாக உட்கார்ந்து 9-6 என்ற வேலையைச் செய்வது கடினம். இதனை பெற்றோரும் உணர்ந்துகொள்ளவேண்டும்.
சாதாரணமாகவே எல்லா பெற்றோருக்கும் தங்கள் காலத்துக்குள் தங்கள் பிள்ளைகளை காலூன்றச் செய்துவிட வேண்டும் என்பதாகத் தானே இருக்கும். அதுவும் தங்களையே சார்ந்து வாழும் ஆட்டிசம் பாதித்துள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு அந்த உணர்வு அதிகம் இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை…’ என்று பேசத் தொடங்கியபோதிருந்த உற்சாகம் சற்றும் குறையாமல் சொல்லி முடித்தார்.
‘அப்போ இவர்களால் என்ன வேலைதான் செய்ய முடியும்… இப்படியே இருந்துவிட வேண்டியதுதானா?’ என்று ஆதங்கமாக நான் கேட்டதற்கும் பதில் வைத்திருந்தார்.
‘ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் ஏதேனும் தனிப்பட்ட விருப்பங்கள் இருக்கலாம் என்றும் அதைக் கண்டு பிடித்து அதில் அவர்களை ஈடுபடுத்தலாம் என்றும் சொல்கிறார். தங்கள் குழந்தையின் விருப்பதைக் கண்டறிய, கூர்ந்து கவனிப்பதுடன், சிறப்பு ஆசிரியர்களின் உதவியை நாடலாம்’ என்றும் கூறுகிறார்.
‘ஒகேஷனல் ட்ரெயினிங்’ எனப்படும் தொழில் பயிற்சி அவர்களுக்கு கொடுத்து அது சார்ந்த பணிகளில் ஈடுபடுத்தலாம். (உதா: காகிதக் கூடை பின்னுதல், மெழுகுவர்த்தி செய்தல், கைவினைப் பொருட்கள் தயாரித்தல், ஊதுவத்தி தயாரித்தல்…)
மேலைநாடுகளில் அவர்களுக்கு அப்படித்தான் பயிற்சி கொடுத்து தயார்படுத்துகிறார்கள். அவர்களால் நிசர்சனத்தை உள்ளது உள்ளபடி ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இருக்கிறது…
என்றவரை இடைமறித்து ‘ஆமாம்… அமெரிக்காவில் ஆட்டிசம் பாதித்தவர்களை கடை, பீச், பார்க் என எல்லா இடங்களிலும் பார்க்க முடியும்… அவர்கள் வீட்டில் யாரேனும் ஒருவர் கேர் டேக்கராக கூடவே வருவார்கள்… யாரும் வேடிக்கையாகவோ வினோதமாகவோ பார்க்க மாட்டார்கள்… நம்மைப் போலவே ஒருவர் என்ற சிந்தனையுடன் கடந்து செல்வார்கள்…’ என என் அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டேன்.
இதற்கும் அழுத்தமான பதிலை வைத்திருந்தார்… ‘ஆமாம் மேடம்… அந்த ஊர் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் அப்படி. கடுமையான சட்ட திட்டங்கள்… இவர்கள் மீது தூசி விழுந்தால்கூட தண்டனைதான்… ஆனால் நம் நாட்டில்…. அதனால்தான் இவர்களை வேடிக்கையாகப் பார்ப்பதும், நாம் கவனிக்காத நேரத்தில் சீண்டுவதும் என தொந்திரவுகளை சந்திக்க வேண்டியுள்ளது…’
எதிர்காலத்தில் ஆட்டிசம் பாதித்தவர்களுக்கு தொழில்நுட்ப ரீதியாக ஏதேனும் செய்ய முடியும் என தோன்றினால் என்னைத் தொடர்புகொள்ளச் சொல்லி போனை துண்டித்து பல மணி நேரம் ஆகியும் இவரது குரலில் தெறித்த வைராக்கியம் என்னை வியக்க வைத்தது.
யதார்த்தத்தையும் நிசர்சனத்தையும் புரிந்துகொண்ட இதுபோன்ற கொண்டாட்ட மனநிலையில் என்றும் எப்போதும் எல்லா வளமும் பெற்று சிறக்க இவருக்கும், இவரது மனைவிக்கும், இவர்களது மகனுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
அன்புடன்
காம்கேர் கே.புவனேஸ்வரி
ஆகஸ்ட் 24, 2018
டிசம்பர் 13, 2018 ஆன்லைனில் பஞ்சு மிட்டாய் டாட் காமில் படிக்க…