கனவு மெய்ப்பட[14] – அட்வைஸும் ஒரு கலையே! (minnambalam.com)

ஒருவருக்கு ஆறுதல் சொல்வதும், அட்வைஸ் செய்வதும் அத்தனை எளிதான செயலாக எனக்குத் தோன்றவில்லை. அது ஒரு கலை.

சில பத்திரிகைகளில் பெண்களின் உளவியல் பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து பெண்களுக்காக எழுதச் சொல்லிக் கேட்பார்கள்.

ஆண், பெண் இருபாலரும் சேர்ந்து வாழும் அமைப்புதான் சமுதாயம். அதில் பெண்களின் உளவியல் பிரச்சனைகளுக்கு ஏதோ ஒருவிதத்தில் காரணமாக இருக்கும் ஆண்களைப் பற்றிப் பேசாமல் பெண்களைப் பற்றியோ அல்லது அவர்களுக்காக மட்டுமோ பேசுவது எந்தவகையில் பொருத்தமாக இருக்கும் என்ற குழப்பம் எப்போதும் எனக்குண்டு.

பெண்கள் பிரச்சனைகளை ஆண்களும் புரிந்துகொள்ளும்போதுதானே பிரச்சனைகளுக்கான தீர்வு கிடைக்கும்.

இருபாலருக்கும் பொருந்துகின்ற வகையில் எழுதுவதே சரியாக இருக்கும் என்பதும் பெண்கள் பத்திரிகைகளை நிறைய ஆண்களும் படிக்கிறார்கள் என்பதும் என் அனுபவம்.

அட்வைஸ் வேண்டாமே… பகிர்தல் போதுமே…

ஒருமுறை பெண் குழந்தைகள் நலனுக்கான அமைப்பில் இருந்து அவர்களுக்கு நம் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை போதிக்கும் வகையில் பேசுவதற்காக அழைத்திருந்தார்கள்.

என்னுடன் வந்திருந்த இரண்டு சிறப்பு விருந்தினர்களுக்கும் 60 வயதுக்கும் மேலிருக்கும். எங்களுக்கு முன் 200 க்கும் மேற்பட்ட 13 வயதில் இருந்து 17 வயது வரையிலான டீன் ஏஜ் மாணவிகள்.

அவர்கள் இருவரும் முதலில் பேசினார்கள். ஒரே அட்வைஸ் மழை. மாணவிகள் சலிப்படைந்தார்கள்.

காலையில் சீக்கிரம் எழுவது, மார்கழி பனியில் கோலம் போடுவது, நெற்றியில் பொட்டு இட்டுக்கொள்வது, துப்பட்டாவை இழுத்துப் போர்த்திக்கொள்வது என காலம் காலமாய் பெண்குழந்தைகளுக்கு சொல்லப்படும் அறிவுரைகளை அள்ளி வீசிக்கொண்டிருந்தார்கள்.

அதில் ஒருவர் அமெரிக்காவில் பெண் வீட்டுக்குச் சென்றால்கூட காக்காய்க்கு சாதம் போட்டு விட்டுத்தான் தான் சாப்பிடுவதாக ‘காக்காய் கதை’ சொல்லிக்கொண்டிருந்தார். அமெரிக்காவில் அவர் குறிப்பிடும் ஊரில் எங்குமே காக்காயை பொது இடத்தில் பார்க்க முடியாது என்பது அமெரிக்கா பற்றி அறிந்தவர்களுக்கு தெரிந்த அப்பட்டமான உண்மை.

அவர்கள் இருவரும் பேசி அமர்ந்த பிறகு நான் பேசுவதற்காக அழைக்கப்பட்டேன்.

மாணவிகள் முகத்தில் சோர்வும், களைப்பும். ‘நான் உங்களுக்கு அறிவுரை சொல்வதற்காக இங்கு வரவில்லை. என் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே வந்துள்ளேன்… நாம் பேசலாமா…’ என சொன்னபோது மாணவிகள் கொஞ்சம் மலர்ச்சியானார்கள்.

நான் மாணவியாக இருந்தபோது எப்படி இருந்தேன், எப்படி படித்தேன், எப்படி விளையாடினேன்… எத்தனை மதிப்பெண் பெற்றேன்… குறைந்த மதிப்பெண் பெற்றபோது அதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் இருந்து எப்படி வெளியே வந்தேன், எப்படி வேலைக்குச் செல்லாமல் நிறுவனம் ஆரம்பித்தேன், எப்படி அதில் வரும் பிரச்சனைகளை எதிர்கொண்டேன் என்றெல்லாம் என் அனுபவங்களை மட்டுமே சுவாரஸ்யமாக கதைபோல சொன்னேன்.

எந்த ஒரு இடத்திலும் மாணவிகளுக்கு அறிவுரை என்ற பெயரில் ஒரு வார்த்தையைகூட உச்சரிக்கவே இல்லை.

பேசி முடித்ததும் கிடைத்த பலத்தக் கைத்தட்டல்.

அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒரு மாணவியின் அம்மா அடுத்த நாள் போனில் தொடர்பு கொண்டார்.

‘என் மகளுக்கு மத்தவங்களை விட உங்களை ரொம்ப பிடிச்சு போச்சு மேடம்…’

‘அப்படியா… எப்படி சொல்றீங்க… அவளாக சொன்னாளா…’

‘இல்லை மேடம், நான் தான் அவளிடம் சும்மா மறைமுகமா கேட்டேன்… அந்த மேடம் தன் சுயபுராணத்தைப் பேசி போரடிச்சுட்டார் இல்ல… அப்படின்னு…’

‘ஓ… அதற்கு அவள் என்ன சொன்னாள்…’

‘இல்லைம்மா… தன் சுயபுராணத்தைச் சொன்ன மாதிரி எனக்குத் தோணலைம்மா… அவங்க வாழ்க்கையை அழகா கதைபோல சொன்னாங்க… அவங்க சின்ன வயசு கதை ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது… அதுமாதிரி பிசினஸ் எப்படி ஆரம்பிச்சாங்க அதில் என்னென்ன பிரச்சனை வந்தது இதுமாதிரி விஷயங்களை சொன்னது எங்களுக்கெல்லாம் ரொம்ப ஆச்சர்யமா இருந்தது…’ – இப்படி அந்த மாணவி சொன்னதாக அவள் அம்மா என்னிடம் பகிர்ந்துகொண்டபோது ஒரு விஷயம் மட்டும் தெளிவாகப் புரிந்தது.

சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள், முதியவர்கள் என யாராக இருந்தாலும் அவர்களுக்குச் சொல்லப்படும் விஷயங்கள் அறிவுரையாக இல்லாமல் ஆலோசனைகளாகவும் இல்லாமல் பகிர்தலாக இருந்தால் மட்டுமே அவர்களின் காதுகளோடு சேர்ந்து இதயமும், மனமும் திறந்திருக்கும்.

பிரச்சனைகள் உணர்வு சம்மந்தப்பட்ட விஷயம்

மற்றவர்கள் மேல் பரிதாபம் கொண்டு அவர்களுக்குச் சொல்லப்படும் அறிவுரைகள் அவர்களுக்கு எந்த விதத்திலும் உதவாது.

நம்மிடம் தன் பிரச்சனைகளைக் கொட்டும் நபர்கள் பெரும்பாலும் நாம் நம்பிக்கைக்கு உரியவர் என்ற எண்ணத்தில்தான் வருகிறார்கள். அவர்களுக்கும் எல்லாம் தெரியும். படித்திருப்பார்கள், பட்டம்  பெற்றிருப்பார்கள், திறமைசாலியாக இருப்பார்கள், நிறைய சம்பாதிப்பவர்களாக கூட இருக்கலாம்… ஆனாலும் சூழல் கொடுக்கும் அழுத்தத்தை யாரேனும் ஒரு நம்பிக்கையானவரிடம் கொட்டினால் நிம்மதியாக இருக்கும் என்ற எண்ணத்தில்தான் 99 சதவிகிதம் நம்மிடம் வருவார்கள்.

இதுதான் ‘சாக்கென்று’ நாம் படித்ததை எல்லாம் அவருக்கு எடுத்துச் சொல்லி  ‘அட்வைஸ்’ என்ற பெயரிலும், நம் பிற நண்பர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை அள்ளிவீசி  ‘ஆலோசனை’ என்ற பெயரிலும் அவர்களை திக்குமுக்காடச் செய்வது நாகரிகமான செயல் அல்ல.

ஒருவர் தன்னுடைய பிரச்சனையை நம்மிடம் பகிரும்போது அந்தப் பிரச்சனை நமக்கு சிறிய விஷயமாக இருக்கலாம், ஆனால் பாதிக்கப்பட்டவருக்கு அது இமாலய விஷயமே. எனவே ‘இது என்ன சின்ன பிரச்சனை… இதுக்குப் போய் இப்படி அலட்டிக் கொள்கிறாய்’ என்பது போன்ற அலட்சிய வார்த்தைகளை தவிர்க்கலாம். யாரும் ‘வேண்டும்’ என்றே பிரச்சனைகளை தன்னுடன் வைத்துக்கொண்டு நட்பு பாராட்டமாட்டார்கள். பிரச்சனைகள் என்பது அவரவர்கள் அனுபவம். அவை உணர்வு சம்மந்தப்பட்ட விஷயம்.

ஒருமுறை என் நெருங்கிய உறவினர் ஒருவருக்கு ஹார்ட் அட்டாக். நல்ல மனிதர். எந்த கெட்ட பழக்க வழக்கங்களும் இல்லாதவர். 40 வயதைத் தாண்டவில்லை. இந்த விஷயத்தை என் கிளையிண்ட் ஒருவரிடம் பகிர்ந்துகொண்டேன்.  அப்போது அவர், ‘இதெல்லாம் இப்போது சகஜம்… எல்லோருக்கும்தான் ஹார்ட் அட்டாக் வருகிறது… இதுக்குப் போய் என்னவோ ரொம்ப பயப்படறீங்க’ என்றாரே பார்க்கலாம். அப்போது என் மனதில் ‘உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்தினருக்கோ ஹார்ட் அட்டாக் வந்து ஐசியூவில் இருக்கும்போதும் இதே டயலாக் சொல்வீர்களா?’ என கேட்கத் தோன்றியது.

பிரச்சனைகளை நம்மிடம் சொல்லும்போது அதை நம் Comfort Zone –ல் இருந்து மட்டும் பார்க்கக் கூடாது. அதை அவர்கள் Comfort Zone –ல் இருந்து நுணுக்கமாக பார்க்க வேண்டும். அப்படி பார்க்கத் தெரியாவிட்டால் வாயையாவது திறக்காமல் இருக்கலாம். அதுதான் நாகரிகம்.

சிலர் நம் பிரச்சனைகளை கேட்டு அது தொடர்பாக அவர்கள் குடும்பத்தில் நடந்த அசம்பாவித நிகழ்வுகளை பட்டியலிடுவார்கள்.

இன்னும் ஒருசிலர், இதையெல்லாம் தாண்டி, நம் பிரச்சனைகள் போலவே தாங்கள் படித்த தங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள் எழுதிய கதையை விரிவாகச் சொல்வார்கள்.

பிரச்சனைகளை மனதுக்குள் சுமந்துகொண்டிருக்கும்போது கதைகளையோ, உண்மை நிகழ்வுகளையோ, அதுதொடர்பான பொதுவான செய்திகளையோ கேட்கும் சக்தியை சம்மந்தப்பட்டவர்களின் காதுகள் இழந்துவிடும்.

பிரச்சனைகளுடன் இருப்பவர்களுக்கு அவர்கள் சொல்வதை காது கொடுத்துக் கேட்பது ஒன்றே தீர்வாக இருக்கும்.

தனிமையில் வாடும் முதியோர்கள் தங்கள் வீட்டுக்கு யார் வந்தாலும் அவர்களிடம் ஏதேனும் பேசிக்கொண்டே இருப்பதை கவனித்திருப்போம். அவர்களுக்குத் தேவை அவர்கள் சொல்வதை கேட்கும் ‘காதுகள்’. அவர்கள் பேசுவதை இடைமறித்துப் பேசாமல் அவர்கள் கண்களைப் பார்த்து கவனிப்பது ஒன்றே அவர்களுக்கான வடிகால்.

 ஒரு தனியார் நிறுவனத்தில் சேல்ஸ் பிரிவில் பணிபுரிபவர் அவர். குறைந்த சம்பளம். பெரிய குடும்பம்.

மூப்பின் காரணமாக அவர் தாய் இறந்தபோது அவர் அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சென்றிருந்தார்கள். அவர் கேட்காமலேயே அவர் நிலைமை அறிந்து கையில் இருந்த பணத்தை அவருக்குக் கொடுத்துவிட்டு வந்திருந்தார்கள்.

நான் அவரிடம் துக்கம் விசாரித்தபோது இந்தத் தகவலைச் சொன்னார்.

நான் பிரமித்து, ‘அடடே… பரவாயில்லையே… உங்கள் அலுவலகத்தில் உங்களைச் சுற்றி நல்லவர்கள் இருக்கிறார்களே…’ என்று சொன்னபோது அவர் அவசரமாக இடைமறித்தார்.

‘மேடம், நான் ரொம்ப நல்லவன்… என்னை எல்லோருக்கும் பிடிக்கும்… எனக்கு எல்லோரும் உதவி செய்வார்கள்…’

உதவி செய்பவர்களை ‘நல்லவர்கள்’ என்று சொல்லும் நிலை மாறி யார் உதவியைப் பெற்றார்களோ அவர்கள் தங்களைத் தாங்களே நல்லவர்கள் என்று சொல்லிக்கொள்வது எப்போதில் இருந்து ஆரம்பமானது…

யோசிப்போம்!

ஆன்லைனில் மின்னம்பலத்தில் படிக்க… https://minnambalam.com/k/2019/02/09/4

எழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி
@ மின்னம்பலம் டாட் காம்
வெள்ளிதோறும் வெளியாகும் தொடரின் பகுதி – 14

(Visited 143 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon