நாயும் காரும்!

நாயும் காரும்!

சமீபத்தில் ஒரு குடும்ப நிகழ்ச்சி. அப்பா அம்மாவுடன் சென்றிருந்தேன். அப்பாவும் அம்மாவும் மண்டபத்தின் உள்ளே முன்னே சென்றுவிட நான் எதிர்பட்ட ஒரு உறவினரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.

அதற்குள் அப்பா அம்மாவிடம் குசலம் விசாரித்துக் கொண்டிருந்த ஒரு பெரியவர் என்னைப் பற்றி கேட்டுக் கொண்டிருந்தார்.

‘உங்கள் மகள் நிறைய எழுதுவாளே, பத்திரிகையில் எல்லாம் வந்திருக்கிறதே… அவளுடைய பேட்டியை எல்லாம் படிச்சிருக்கேனே… அவள் வரவில்லையா?’

அதற்குள் நான் சென்றுவிட அவர் முகத்தில் அத்தனை சந்தோஷம்.

‘வாம்மா, எப்படி இருக்கிறாய்? கம்ப்யூட்டர் கம்பெனி எல்லாம் எப்படி இருக்கு… அப்பவே நீ நிறைய எழுதுவாயே…. புஸ்தகம் எல்லாம் போடுவாயே…’ என விசாரித்தார். இவரை சந்தித்து சில வருடங்கள் ஆகின்றன.

நானும் மனமும் முகமும் மலர பதில் சொல்லிவிட்டு அவர் அருகிலேயே அமர்ந்து ‘எப்படி இதை எல்லாம் நினைவில் வைத்திருக்கிறீர்கள்?’ என ஆச்சர்யமாக கேட்டேன்.

‘பின்னே, மறந்து போயிடுமா என்ன, நான் உன் எழுத்தையும், உன்னைப் பற்றியும் நிறைய படிச்சிருக்கேனே…’  என சொல்லி சிலபல பத்திரிகைகளின் பெயரை குறிப்பிட்டார். மேலும் என் காம்கேரில் நாங்கள் செய்கின்ற சில ப்ராஜெக்ட்டுகளை குறிப்பிட்டார். குறிப்பாக என் அப்பா அம்மாவின் பயோகிராஃபி படம் ‘அன்புள்ள அப்பா அம்மா…’ குறித்தும் குறிப்பிட்டார். அப்போது அவர்  ‘மைக்கை எல்லாம் எடுத்துக் கொண்டு பேட்டி எல்லாம் எடுப்பாயே… சரியா நான் சொல்றது’ என குழந்தை போல கேட்டு தன் நினைவு திறனை சரிபார்த்து கொண்டார்.

எனக்கு வியப்பின் உச்சம். என் பெற்றோரிடம் அவருடைய வயதை கேட்டறிந்தேன். அப்போது வியப்பின் அளவு எல்லை இல்லாமல் உச்சம் தொட்டது.

காரணம். அவர் வயது 90.

தலைமுறை கடந்தும்  என் செயல்பாடுகள் இன்றும் பேசப்படுவதும், என் எழுத்தின் வாசனை இன்றும் நீடித்திருப்பதும் பெருமகிழ்ச்சி.

இன்னும் ஊக்கமாக செயல்பட  இது போன்ற சந்திப்புகள் ஒன்றிரண்டு அவ்வப்பொழுது நிகழ்ந்தால் போதுமே!

இப்படிக்கு

காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர்
Compcare K Bhuvaneswari
காம்கேர் சாஃப்ட்வேர்
Compcare Software
பிப்ரவரி 10, 2026 | செவ்வாய்

 

 

(Visited 2,126 times, 5 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon