சமீபத்தில் ஒரு இளம் பத்திரிகையாளர் என்னை நேர்காணல் செய்தபோது ஒரு கேள்வியை முன்வைத்தார்.
‘உங்களால் எப்படி சாஃப்ட்வேர், அனிமேஷன், புத்தகங்கள் என இத்தனை பணிகளையும் மல்டிடாஸ்கிங்காக சிறப்பாக செய்ய முடிகிறது… மேலும் பிசினஸ் சவால்களையும், தோல்விகளையும் எப்படி எதிர்கொள்ள முடிகிறது?’
அதற்கு நான், ‘என் முடிவுகளை நானே எடுக்கிறேன்… வெற்றி தோல்வி எதுவானாலும் அது நான் எடுக்கின்ற முடிவுகளால் வந்தவை என்பதால் அதை சரி செய்துகொள்ளும் பக்குவமும் எனக்கு ஏற்படுகிறது… அதனால் எல்லா சவால்களையும் எதிர்கொள்ளும் மனப்பாங்கும் அந்தந்த சூழலுக்கு ஏற்ப தானாகவே எனக்குள் உண்டாகிறது’ என்ற கோணத்தில் பதில் சொன்னேன்.
இதை யோசித்துக் கொண்டிருந்தபோது சுகிசிவம் அவர்களுன் உரை ஒன்று நினைவுக்கு வந்தது. ‘ஒரு பெண் எப்போது தேவதையாக இருக்கிறாள்?’ என்ற கோணத்தில் பேசியிருப்பார்.
இரண்டு அரசர்கள் சண்டை போட்டார்கள். தோற்றுப்போன அரசனிடம் ஜெயித்த அரசன் சொல்கிறான்.
“உன்னை கொல்லாமல் விடுகிறேன்… அதற்கு நீ ஒரு விஷயம் செய்ய வேண்டும்… நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன். அதற்கு அவள் ‘ஒவ்வொரு பெண்ணும் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள் என்று சொன்னால் திருமணம் செய்துகொள்கிறேன்…’ என நிபந்தனை போட்டிருக்கிறாள். எனவே அந்த உண்மையை நீ கண்டுபிடித்து சொல்லிவிட்டால் நான் உன்னை கொல்லாமல் விட்டுவிடுகிறேன்…”
உடனே, தோற்ற அரசன் பலரிடமும் சென்று கேட்கிறான். அவனுக்கு சரியான விடை கிடைக்கவில்லை. கடைசியாக, சூனியக்காரக் கிழவி ஒருவள் இருக்கிறாள். அவளுக்கு எல்லா விஷயங்களும் தெரியும் என்ற தகவல் அவனுக்குக் கிடைக்கிறது.
அவளைத் தேடிச் சென்று அவளிடம், ‘ஒவ்வொரு பெண்ணும் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்?’ என்ற கேள்வியை கேட்கிறான்.
அதற்கு அந்த சூனியக்கார கிழவி சொல்கிறாள்.
‘நான் பதில் சொல்லி விடுவேன். பதில் கிடைத்தால் உன்னை ஜெயித்த அரசனுக்கு திருமணம் ஆகும்; நீ விடுதலை ஆகிவிடுவாய்; ஆனால் எனக்கு என்ன கிடைக்கும்’
அதற்கு அவன் ஒரு ஆர்வத்தில் சொல்லிவிடுகிறான், ‘நீ என்ன கேட்டாலும் தருகிறேன்’.
சூனியக்கார கிழவி சொல்கிறாள்…
‘ஒவ்வொரு பெண்ணும் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள் என்றால்… தன் சம்மந்தப்பட்ட எல்லா முடிவுகளையும் தானே எடுக்க வேண்டும் என்று விரும்புகிறாள்… தன் முடிவுகளை பிறர் எடுக்க அவள் விரும்புவதில்லை…’
உடனே அந்த அரசன் தன்னை ஜெயித்த அரசனிடம் சென்று சொல்ல அந்த அரசன் தன் காதலியிடம் அந்த பதிலைச் சொல்ல அவர்களுக்குத் திருமணமும் நடந்துமுடிகிறது. தோற்ற அரசனும் தண்டனையில் இருந்து விடுதலை ஆகிறான்.
அடுத்து தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற நேராக அந்த சூனியக்கார கிழவியிடம் சென்று நடந்ததைச் சொல்லி மகிழ்ந்து, ‘நீ என்ன வேண்டும் என கேள்… தருகிறேன்…’ என சொன்னான்.
உடனே அந்த கிழவி ‘என்னை திருமணம் செய்துகொள்…’ என்கிறாள்.
அந்த அரசன் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தாலும் மறுநொடி சுதாகரித்துக்கொண்டு ‘சரி நான் கொடுத்த வாக்கை மீற மாட்டேன்… உன்னை நான் திருமணம் செய்துகொள்கிறேன்… எப்போது திருமணம்…’ என கேட்கிறான்.
‘நாளை காலை 10 மணிக்கு மாலையோடு வா…’ என்கிறாள் கிழவி.
மறுநாள் சரியாக 10 மணிக்கு மாலையோடு அந்த அரசன் அந்த இடத்துக்கு வர அங்கு அழகான தேவதைபோன்ற ஒரு இளம்பெண் அமர்ந்திருக்கிறாள்.
அவளிடம் அவன் கேட்கிறான்… ‘இங்கே இருக்கும் சூனியக்கார கிழவி எங்கே?’
அதற்கு அவள், ‘நான் தான் அவள்..’ என்று சொன்னாள்.
அவன் அதிர்ச்சியாகி ‘நேற்று சூனியக்கார கிழவியாக இருந்தாயே…’ என கேட்க, அதற்கு அவள், ‘என்னால் எப்படி வேண்டுமானாலும் இருக்க முடியும்…’ என்கிறாள். மேலும் ஒரு போட்டி வைக்கிறாள்.
‘உன்னோடு நான் வெளியே வரும்போதெல்லாம் இப்படி அழகு தேவதையாக வர வேண்டும் என்றால், உன்னோடு தனியாக இருக்கும் நேரங்களில் சூனியக்காரக் கிழவியாக இருப்பேன்… வெளியே உன்னோடு வரும்போது சூனியக்கார கிழவியாக வர அனுமதித்தால் உன்னோடு அந்தரங்கமாக இருக்கும் நேரங்களில் அழகு தேவதையாக இருப்பேன்… நீதான் முடிவெடுத்து பதில் சொல்ல வேண்டும்… நான் எப்படி இருக்க வேண்டும்’ என்கிறாள்.
ஒரு விநாடிகூட யோசிக்காமல் அந்த அரசன் சொல்கிறான்.
‘இது உன் பிரச்சனை. முடிவெடுக்க வேண்டியது உன் வேலை. நீ என்ன முடிவெடுக்கிறாயோ அதை நான் அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்…’
அதற்கு அந்த தேவதை சொல்கிறாள்… ‘எப்போது முடிவெடுக்கும் உரிமையை என்னிடத்தில் விட்டு விட்டாயோ… இனி எல்லா நேரங்களிலும் நான் அழகு தேவதையாகவே உன்னோடு இருப்பேன்…’ என்கிறாள்.
ஒரு பெண் தானே முடிவெடுக்கும் அதிகாரத்தைப் பெரும்போது தேவதையாக இருக்கிறாள். முடிவுகள் அவள் மீது திணிக்கப்படும்போது சூனியக்கார கிழவியாகி விடுகிறாள்.
ஒரு பெண் கேட்டதை கொடுக்கும் சர்வ வல்லமை படைத்தவளாக, நினைத்தவற்றை செயல்படுத்தும் ஆற்றல் உள்ளவளாக இருக்க வேண்டுமேயானால் அவள் சுயமாக இயங்க வேண்டும்; தன்னிச்சையாக செயல்படும் உரிமையை பெற்றிருக்க வேண்டும் என்பதை இந்தக் கதை மிக அழகாக விளக்குகிறது.
சமீபத்தில் வெளியான ‘காற்றின் மொழி’ என்ற திரைப்படத்தின் கதாநாயகி +2-வில் தோல்வி. வேலைக்குச் செல்லவில்லை. கணவன், ஒரே மகன் என அழகான நடுத்தரக் குடும்பம்.
நிறைய பேசும் தன்மையும் விளையாட்டாக கொஞ்சம் மிமிக்கிரி செய்யும் திறமையும் மட்டுமே கொண்ட நாயகி எதேச்சையாக ரேடியோ ஸ்டேஷனில் RJ ஆக பணியில் சேர்கிறாள்.
இரவு நேர பணி. போனில் அந்தரங்கப் பிரச்சனைகளை கேட்பவர்களுக்கு பதில் சொல்லும் நிகழ்ச்சி. ஆண்கள் பலர் ஏடாகூடமான கேள்விகளைக் கேட்க கதாநாயகி சமயோஜிதமாகவும் சாதுர்யமாகவும் பதில் சொல்லி அவர்கள் மனமாற்றத்துக்கு உதவுவதாக கதை செல்கிறது.
இந்த நிகழ்ச்சி குறுகிய நாட்களிலேயே பெரும் வரவேற்பைப் பெற்று விருதுக்கும் தயாராகிறது.
+2 தோல்வி. வேலைக்குச் சென்ற அனுபவமே இல்லை. சமயோஜிதமாக பேசும் திறமை மட்டுமே கதாநாயகியின் ஒரே திறமை. அவளால் எப்படி இதை சாத்தியமாக்க முடிந்தது?
நாயகி அவள் மனதுக்குப் பிடித்த வேலையை செய்வதால் கிடைத்த வெற்றி அது. இதுவே இந்தத் திரைப்படம் மக்களுக்குக் கொடுத்த OTP.
சென்னை நந்தனத்தில் நடைபெற்றுவரும் புத்தகக் கண்காட்சியில் ஒரு ஞாயிற்றுக் கிழமை எழுத்தாளர் ஷெண்பா எழுதிய ‘நின்னைச் சரணடைந்தேன்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் இயக்குநர் திரு. எஸ்.பி.முத்துராமன் அவர்கள் வெளியிட அந்தப் புத்தகத்தின் முதல் பிரதியை நான் பெற்றுக்கொள்வதற்காக சிறப்பு விருந்தினராக என்னை அழைத்திருந்தார்கள். இரண்டு பாகங்கள் கொண்ட நாவல். ஒவ்வொன்றும் 450 பக்கங்கள் கொண்டது.
நிகழ்ச்சியில் இவரது கணவரிடம் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. இவர் பணிபுரிவதோ வேறொரு துறை. எழுத்தாளராக நாவல்கள் எழுதிவரும் தன் மனைவி ஷெண்பாவை ஊக்கப்படுத்தி இவருக்காகவே ஒரு பதிப்பகத்தையும் ஏற்படுத்திக் கொடுத்து பிற நூலாசிரியர்களின் புத்தகங்களையும் வெளியிட்டு தானும் வளர்ந்து பிறரையும் வளர்த்துவிடும் நிலைக்கு உயர்த்தியுள்ளார். இதுவரை 15 புத்தகங்களையும், 35 நாவல்களையும் எழுதியுள்ள ஷெண்பா தன் பதிப்பகம் மூலம் பிற நூலாசிரியர்கள் எழுதிய 90 புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த வளர்ச்சிக்குக் காரணம் ஷெண்பா தன் மனதுக்குப் பிடித்த வேலையைச் சரியான பாதையில் செவ்வனே செய்கிறார்.
‘பெண்கள் மனதுக்குப் பிடித்த வேலையை செய்யும்போது அவளிடம் இருக்கும் சக்தி பலமடங்காகி தனக்கு மட்டுமில்லாமல் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் பயன் தரும்’ என்பதே நமக்குக் கிடைக்கும் OTP.
இன்று ஒரு தொலைக்காட்சி சேனலில் இருந்து நேர்காணலுக்கு வந்திருந்தார்கள். பேட்டி எடுத்தவர் ஒரு இளம் பெண். அந்த நிகழ்ச்சியின் புரொடியூசரும் கூட. அந்தப் பணியில் சேர்ந்து 1 வருடம்தான் ஆகிறது. சில வருடங்கள் ஐடி துறையில் பணிபுரிந்து வந்தவர் மனதுக்குப் பிடிக்காததால் அந்த வேலையைத் துறந்து சிறிய வயதில் இருந்தே தான் கனவு கண்ட மீடியா பணியை தன் விருப்பப் பணியாக ஏற்றுக்கொண்டுள்ளார். இவருக்கு 3 வயதில் ஒரு குழந்தையும் உண்டு. கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஒத்துழைப்புடன் தனக்குப் பிடித்தத்துறையில் நுழைந்திருப்பவர் மிக நேர்த்தியாக அந்தப் பணியை செய்துவருகிறார். முன் அனுபவம் ஏதும் இல்லாத இவர் தயாரிக்கும் நிகழ்ச்சிக்கு மக்களிடம் ஏகோபித்த வரவேற்பு. காரணம் இவர் தன் மனதுக்குப் பிடித்த வேலையை தேர்ந்தெடுத்து அதில் தன் முழு திறனையும் செலுத்தி மனநிறைவோடு பணிபுரிவதால் கிடைத்த வெற்றி.
‘படித்த வேலையா பிடித்த வேலையா?’ என்ற பஞ்சாயத்தில் தன் மனதுக்கும் திறமைக்கும் பொருத்தமான வேலையைத் தேர்ந்தெடுக்கும்போது வெற்றி நிச்சயம் என்பதே நம் அனைவருக்குமான OTP.
பொதுவாகவே பெண்கள் தங்களிடம் கொடுக்கப்படும் எதையுமே அப்படியே வைத்திருப்பதில்லை என்பதையும், பெண்கள் ஆரோக்கியமான சூழலில் மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தால் மட்டுமே அவர்களால் தங்கள் முழு திறனுடன் செயல்பட முடியும் என்பதையும் பிரிட்டீஷ் நாவலாசிரியரும், கவிஞருமான ‘வில்லியம் கோல்டிங்’ மிக அழகாகச் சொல்லி உள்ளார்.
‘பெண்கள் ஆணுக்கு இணை என்று சொல்லிக்கொள்வதுகூட தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்வதைப் போன்ற உவமானம்தான். பெண்கள் ஆண்களைவிடப் பல மடங்கு உயர்வானர்கள். அவளிடம் கொடுக்கப்படும் எதையும் உயர்வானதாக்கி உருவாக்கிக்கொடுக்கும் சக்தி வாய்ந்தவள்.
நீங்கள் மளிகை சாமான்கள் வாங்கிக்கொடுத்தால் அருமையான விருந்து சமைத்துக் கொடுப்பாள்.
நீங்கள் கற்களால் ஆன வீட்டை அமைத்துக் கொடுத்தால் அன்பும், குதூகலமும் தவழும் இல்லமாக மாற்றி அமைத்துக் கொடுப்பாள்.
உங்கள் புன்னகையைக் கொடுத்தால், அவள் தன் இதயத்தைக் கொடுப்பாள்.
உங்கள் விந்தணுக்களைக் கொடுத்தால் கருவாக்கி பொக்கிஷமாகக் காப்பாற்றிக் குழந்தையாக்கித் தருவாள்.
இப்படி அவளிடம் கொடுக்கப்படும் எதையும் அவள் அப்படியே வைத்திருப்பதில்லை. அதைப் பல மடங்காகப் பெருக்கித் திருப்பித்தரும் வல்லமை வாய்ந்தவள்.
ஆகவே, அவளிடம் குப்பையைக் கொடுத்தால் அவளிடம் இருந்து டன் டன்னாகக் கழிவைப் பெற்றுக்கொள்ளத் தயாராக இருங்கள்…’
பெண்களிடம் காண்பிக்கும் வெறுப்பும், காழ்ப்புணர்ச்சியும், வன்மமும் அவளிடமிருந்து திரும்ப எப்படிப் பெரிதாக வளர்ந்து வெளிப்படும் என்பதை விவரிக்க இதைவிட அருமையான சிந்தனையை இதுவரை நான் படித்திருக்கவில்லை.
இத்தகு சர்வ வல்லமைபெற்ற பெண்களிடம் ‘வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு’என்ற திருக்குறளுக்கு ஏற்ப அவர்கள் தானும் வளர்ந்து பிறரையும் வளர்த்துவிடும் உன்னத சக்தி உள்ளது.
இந்தா பிடிங்க உங்களுக்கான OTP ‘மனதுக்குப் பிடித்த வேலையைச் செய்வோம்… அப்புறம் என்ன வேலையை ஹாபியாகிவிடும்!’.
எழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி
புதிய தலைமுறை – பெண் மாத இதழ்
வாழ்க்கையின் OTP – 7
பிப்ரவரி 2019