அமெரிக்காவில் நடந்த உண்மை சம்பவம். அங்கு வசிக்கும் ஒரு தம்பதியினருக்கு திடீரென அங்கு புகழ்பெற்று விளங்கும் டார்கெட் என்ற பல்பொருள் அங்காடியில் இருந்து பிறந்த குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள், ஆடைகள், சோப்பு, சீப்பு, கண்ணாடி என அலங்காரப் பொருட்களுக்கான தள்ளுபடி கூப்பன்கள் அவர்கள் மகளுடைய இமெயிலிலும், தபாலிலும் வர ஆரம்பித்தது. அந்த தம்பதியினருக்கு ஆச்சர்யம் கலந்த கோபம். படிக்கும் வயதில் உள்ள டீன் ஏஜ் பெண் இருக்கின்ற வீட்டிற்கு இப்படி கூப்பன்கள் வந்தால் கோபம் வரதா பின்னே?
கோபமாக டார்கெட் சென்று ‘எங்கள் வீட்டில் கர்பிணிப் பெண்கள் யாருமில்லை… டீன் ஏஜில் ஒரு பெண் படித்துக்கொண்டிருக்கிறாள். எதற்காக இதுபோன்ற கூப்பன்களை எங்களுக்கு அனுப்பி வைத்துக்கொண்டிருக்கிறீர்கள்?’ என்று சத்தம் போட டார்கெட் முதலில் மன்னிப்புக் கேட்டது.
பின்னர் இமெயில், வந்து சென்ற தம்பதியினரின் வீட்டு முகவரி போன்றவற்றை வைத்து அவர்கள் வீட்டில் உள்ள டீன் ஏஜ் பெண்தான் சில நாட்களுக்கு முன் கிரெடிட் கார்ட் மூலம் ‘கர்பமாக இருப்பதை பரிசோதிக்கும் உபகரணத்தை’ வாங்கிச் சென்றுள்ளாள் என கண்டறிந்தனர். அவர்களிடம் உள்ள அனலடிக் சாஃப்ட்வேர் மூலம் தங்கள் வாடிக்கையாளர்கள் வாங்குகின்ற பொருட்களை வைத்து அவர்களின் விருப்பம், தேவை போன்றவற்றை அலசி ஆராய்ந்து அதற்கேற்ப தள்ளுபடி கூப்பன்களை அனுப்பி வைப்பது அவர்கள் வழக்கம். கர்ப்பம் என்றால் அடுத்து என்ன குழந்தை, அதற்கான உடை, விளையாட்டு சாமான்கள், அழகுப் பொருட்கள் இப்படி வாங்க வேண்டியத் தேவை இருக்கும்தானே. அந்த ஆராய்ச்சியின் அடிப்படையில்தான் அவர்கள் வீட்டுக்கு குழந்தைகள் சம்பந்தப்பட்ட பொருட்களுக்கான தள்ளுபடி கூப்பன்களை அனுப்பி இருந்தார்கள். இதை அந்தப் பெற்றோருக்கு தெரிவிக்க அவர்கள் டார்கெட்டிடம் மன்னிப்புக் கேட்டனர்.
இப்படி ஒருவரிடமிருந்தோ அல்லது பலரிடம் இருந்தோ தொகுக்கப்பட்ட பல்வேறு தகவல்களை அலசி ஆராய்ந்து, அதிலிருந்து ஒரு நூல் பிடித்து, இது நடந்தால் அடுத்தது இதுதான் நடக்கும் என கணிப்பதோடு அதை பிசினஸாக்குவதற்கும் உதவுகிறது பிக் டேட்டா.
இனி வருங்காலத்தை பிக் டேட்டாவே கணிக்கும்…
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software private Limited
மார்ச் 23, 2019
(குங்குமம் – வார இதழில் 2017-ம் ஆண்டு நான் எழுதிய கட்டுரைத் தொடரில் இருந்து…)