கனவு மெய்ப்பட[20] – மேஜிக் செய்யும் வார்த்தைகள்! (minnambalam.com)

Words Change everything… என்ற ஒருநிமிட வீடியோ. ஒரு பார்வையற்ற மாற்றுத்திறனாளி தன் கண் முன்னே ‘I am Blind. Please help’ என்று எழுதி வைத்துக்கொண்டு உதவி கேட்டுக்கொண்டிருப்பார். அந்த வழியாகச் செல்வோர் அதை கண்டுகொள்ளாமல் சென்றுகொண்டிருப்பார்கள். ஒரு கல்லூரி மாணவி அந்த போர்டை எடுத்துவிட்டு ‘It is a Beautiful Day. I cannot see it’ என்று எழுதி வைத்தார். இப்போது அந்த பார்வையற்றவருக்கு நிறையபேர் தங்களால் முடிந்த பணத்தை கொடுத்துவிட்டுச் சென்றார்கள்.

‘எனக்குக் கண் தெரியாது உதவுங்கள்’ என்று சொல்லும்போது உதவாத மக்கள் ‘இன்று ஓர் அழகான நாள். என்னால் அதைப் பார்க்க முடியாது’ என்று சொல்லும்போது உதவ முன்வருவதற்குக் காரணம் அந்த வரியில் உள்ள வார்த்தைகள் கொடுக்கும் நெகிழ்ச்சியே.

சமீபத்தில் காலிங் பெல் கொடுத்த மன உளைச்சலை என்னிடம் பகிர்ந்துகொண்டார் நண்பர் ஒருவர்.

ஒரு வீட்டில் காலிங் பெல்லை அழுத்த அது ‘தயவு செய்து கதவைத் திறக்கவும்’ என உள்ளே ஒலிக்கிறது. வெளியில் இருந்து காலிங் பெல் ஸ்விட்சை அழுத்துபவருக்கும் கேட்கிறது.

தொட்டால் சிணுங்கியாய் சட்டென அவர் முகம் சுருங்குகிறது. மனதும்தான்.

அந்த ஒலி, என்னவோ கதவைத் திறக்க அவர் கெஞ்சுவதைப்போல இருப்பதாக என்னிடம் சொல்லி வருத்தப்பட்டுக்கொண்டார்.

அவரவர்களுக்குக் கவலைப்பட எத்தனையோ விஷயங்கள் இருக்க காலிங்பெல்லின் வாய்ஸ் மெசேஜ் ஏற்படுத்தும் சங்கடத்தை என்னவென்பது?

இதுவே ஆங்கிலத்தில் ‘Please Open the Door’ என்றிருக்கும்போது வராத மன உளைச்சல் தமிழில் மொழிபெயர்க்கப்படும்போது உறுத்துகிறது.

உண்மைதான். ஒருவரின் தவறை சுட்டிக்காட்டும்போதோ அல்லது திட்டும்போதோ ஆங்கிலத்தில் எத்தனை கடுமையாகச் சொன்னாலும் அது அந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஆனால் அதுவே தமிழில் சொல்லும்போது மனதை புண்படுத்தவே செய்யும் என்பதை நாம் அறிவோம்.

அண்ணா, தங்கை உறவுகள்

‘எழுத்தாளர் சு. சமுத்திரம் கதை என்று நினைவு. ஒத்தையடிப் பாதையில் தன்னந்தனியாக செல்கிறாள் ஒரு பெண். அவளை கெட்ட நோக்கத்தோடு பின்தொடர்கிறான் ஒரு காமுகன். வெறியோடு நெருங்கிச் சென்றவனைப் பார்த்ததுமே ‘பயந்துகிட்டே நடந்தேன். துணைக்கு வந்துட்டீக அண்ணாச்சி ’ என்பாள் நிம்மதிச் சிரிப்புடன். ‘அண்ணாச்சி’என்ற வார்த்தையைக் கேட்டதுமே காமவெறி சிதறி, அடிமனசு பதறிப்போன அந்த நபர் ‘வீடு வரைக்கும் வந்து விட்டுட்டு வரேன் தங்கச்சி’ என்பான் உருகிப்போய்.

ஒரு பெண்ணின் அழுகைக்கும் ‘அண்ணே அண்ணே’ என்ற கதறலுக்கும்கூட அந்த பொள்ளாச்சி கொடூரன்கள் மனம் இரங்கவில்லை எனில் _______________ கோடிட்ட இடங்களை நிரப்பிக் கொள்ளவும்!’

என்று சமீபத்தில் பத்திரிகையாளர் திரு. எம்.பி.உதயசூரியன் அவர்கள் தன் ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

முன்பெல்லாம் ‘அண்ணா’ என்றழைப்பதை பெண்கள் தங்களுக்கானப் பாதுகாப்பாகக் கருதினார்கள். ஆண்களும் அந்த வார்த்தைக்கு மரியாதை கொடுத்தார்கள்.

இப்போதெல்லாம் வார்த்தைக்கு வார்த்தை சகோதரி சகோதரி என்ற வார்த்தையைப் போட்டு பேசுபவர்கள் பெண்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கும் அவர்களுடன் நட்பாவதற்கும் பயன்படுத்தும் ஆயுதமாகிவிட்டதென்னவோ கொடுமைதான்.

இதனால் அண்ணா (அண்ணே, அண்ணாச்சி), சகோதரி (தங்கச்சி, சிஸ்டர்) போன்ற வார்த்தைகள் கூட வலுவிழந்து போலித்தனமான நயவஞ்சகத்தன்மைக்கு உதாரணமாகியதும் வருத்தத்தின் உச்சமே.

அன்று நான்கு நண்பர்கள் இருக்கும் ஒரு குழுவில் ஒரு பெண்ணை அந்தக் குழுவில் உள்ள ஒருவன் காதலிக்கிறான் எனத் தெரிந்தால் மற்றவர்கள் அந்தப் பெண்ணை சகோதரியாக, அண்ணியாகக் கருதி அதே உறவுமுறையில் அழைத்து அந்தப் பெண்ணை மரியாதைக்கு உரிய இடத்தில் வைப்பார்கள்.

இன்று உடன்பிறந்த சகோதரனின் நண்பர்களே நயவஞ்சகர்களாக உலாவரும் கொடூர யுகத்தில் அண்ணன், தங்கை போன்ற போற்றுதலுக்குரிய வார்த்தைகள்கூட போலித்தனமான வார்த்தைகளாகிவிட்டன.

இப்போதெல்லாம் நம்மை யாராவது பாராட்டினால்கூட அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அதன் பின்னணியில் என்ன இருக்குமோ என்ற உறுத்தலுடனேயே அந்த பாராட்டு வார்த்தைகளை  உள்வாங்க வேண்டிய சஞ்சலமான சூழல் ஏற்பட்டுள்ளது.

நேர்மறை வார்த்தைகளும், எதிர்மறை வார்த்தைகளும்!

இரண்டு சிறுவர்கள் ஒரு மரத்தின் கிளையில் ஏறி இறங்கி விளையாடிக்கொண்டிருந்தனர். அவர்கள் அப்பா அம்மா அவர்களை கவனித்தபடி இருந்தார்கள்.

திடீரென பலத்த காற்று. மரம் வேகமாக ஆடியது. அப்பொது ஒரு சிறுவனின் அப்பா ‘பயப்பட வேண்டாம். கெட்டியாகப் பிடித்துக்கொள்…’ என சொல்கிறார்.

மற்றொரு சிறுவனின் அம்மா ‘கீழே விழுந்துடாதேடா… பலத்த காற்று அடிக்கிறது… அதற்குத்தான் நான் அப்பவே சொன்னேன்…’ என சொல்கிறார்.

சொன்ன அடுத்த நொடி அந்தச் சிறுவன் கீழே விழுந்து விடுகிறான். மற்றொரு சிறுவன் கீழே விழாமல் கிளையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறான்.

அதற்குள் காற்றும் நின்றுவிட வீட்டுக்குக் கிளம்புகிறார்கள்.

‘உங்கள் மகன் என் மகனைவிட சிறியவன். ஆனாலும் கீழே விழாமல் எப்படி சமாளித்தான்?’ என அந்த அம்மா கேட்கிறார்.

அதற்கு அந்த அப்பா, “குழந்தைகளுடன் நாம் பேசும் வார்த்தைகள் முதலில் அவர்கள் கற்பனையில் நிகழ்வுகளாகப் பதிவாகும். பிறகு அதன்படி செயல்படுவார்கள்.

நான் என் பிள்ளைக்கு  ‘பயப்படாதே…. கெட்டியாகப் பிடித்துக்கொள்’ என நேர்மறையாகச் சொன்னதால் அவன் மனதுக்குள் அந்தக் காட்சி பதிவாகி கெட்டியாகப் பிடித்துக்கொண்டான்.

நீங்கள் உங்கள் மகனிடம்  ‘கீழே விழுந்துவிடாதே… பலத்த காற்று அடிக்கிறது… அதற்குத்தான் நான் அப்பவே சொன்னேன்…’ என சற்றே பயம் கலந்த வார்த்தைகளைச் சொன்னீர்கள். அந்தக் காட்சி உங்கள் பிள்ளையின் மனதில் எதிர்மறையாகப் பதிவாகி காட்சியின்படி செயல்பட்டு கீழே விழுந்துவிட்டான்…’ என சொல்கிறார்.

இவர் சொன்னபடி வார்த்தைகள் முதலில் காட்சி வழி மனதில் பதிந்து பின்னர் அதன்படி செயலபட வைக்கும் வித்தை குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியோர்களுக்கும் பொருந்தும்.

என் உறவினரின் 12 வயது மகன் கை தவறுதலாக எதையோ போட்டு உடைத்துவிட அவன் அம்மா அவனை கடிந்துகொள்ளவோ, சிடுசிடுக்கும் முகம் காட்டவோ இல்லை. மாறாக ‘பார்த்து கை காலில் குத்திக்காம நகர்ந்துகொள். அடுத்த முறை கவனமா பார்த்து செய்…’ என பொறுமையாக சொல்லிவிட்டு அந்த இடத்தைச் சுத்தம் செய்யத் தொடங்க அந்த சிறுவன் ‘சாரிம்மா…’ என கெஞ்சும் தொனியில் பேச அந்தக் காட்சியே கவிதையாக இருந்தது.

அதுபோல என் சகோதரியின் பிள்ளைகள் சாப்பாடும்போது எதையாவது மீதம் வைத்தால் அவள் தன் பிள்ளைகளிடம் ‘நான் இதை தூக்கி குப்பையில் எறிந்து அந்த பாவத்தை சுமக்க மாட்டேன்… நீங்களே குப்பையில் போடுங்கள்…’ என சொல்வாள்.

இதன் காரணமாய் அவருடைய பிள்ளைகள் சாப்பாட்டை மீதம் வைத்தாலோ அல்லது குப்பையில் போட்டாலோ அது தவறான செயல் என்று புரிந்து கொண்டு அடுத்த முறை அவர்கள் தேவையான அளவு மட்டுமே தட்டில் போட்டுக்கொள்வதாகச் சொன்னாள்.

அப்படியில்லாமல் நேரடியாக ‘உலகில் எத்தனை பேர் சாப்பாடுக்கே கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் தெரியுமா… உங்களுக்கு கஷ்டம் புரிகிறதா… கொஞ்சமாவது பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள்’ என்று அறிவுரை சொல்லிக்கொண்டிருந்தால் நிச்சயம் இந்த காலத்துப் பிள்ளைகள் ‘அம்மா சுத்த போர்’ என்று சொல்லிக் கொண்டு நகர்ந்து விடுவார்கள் அல்லது அம்மாவுக்குத் தெரியாமல் குப்பையில் போட்டுவிட்டு சாப்பிட்டேன் என பொய் சொல்லுவார்கள்.

பிள்ளைகளை உடனே செயல்பட வைப்பதைவிட உணரச் செய்வதுதான் முக்கியம். உணரச் செய்துவிட்டால் அவை காட்சியாக மனதில் பதிந்து பின்வரும் காலங்களில் சரியாக செயல்பட வைக்கும்.

முன்பெல்லாம் வீட்டில் வயதான தாத்தா பாட்டிகள் இருப்பார்கள். பேரக்குழந்தைகள் அப்பா அம்மாவிடம் திட்டும் அடியும் வாங்கும்போது அவர்களை வாரி அணைத்து ‘இவள் யார் பேத்தியாக்கும்… இவள் சமர்த்துப் பெண்…’ என்று பேரப் பிள்ளைகளுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் தைரியத்தையும் ஊட்டுவார்கள். இவர்களின் ‘இவள் யார் பேத்தியாக்கும் / பேரனாக்கும்’ என்ற வரிகள் கொடுக்கும் பாதுக்காப்பில் வளர்க்கப்பட்டவர்கள் சென்ற தலைமுறை பிள்ளைகள்.

இன்றுகூட என் பெற்றோர் நான் சோர்ந்திருக்கும் சில நேரங்களில் ‘யானையின்  பலம் யானைக்குத் தெரியாது. உன் பலம் உனக்குத் தெரியவில்லை’ என்று ஊக்கமளிக்கிறார்கள்.

நாம் பயன்படுத்தும் வார்த்தைகளில்தான் உள்ளது வெற்றியின் ரகசியம்.

யோசிப்போம்!

ஆன்லைனில் மின்னம்பலத்தில் https://minnambalam.com/k/2019/03/23/10

எழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி
@ மின்னம்பலம் டாட் காம்
வெள்ளிதோறும் வெளியாகும் தொடரின் பகுதி – 20

 

(Visited 283 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon