கனவு மெய்ப்பட[23] – பல்கிப் பெருகும் செயல்பாடுகள்! (minnambalam.com)

இன்று காலையிலேயே உற்சாக டானிக்.

முகநூல் நண்பர்  ஒருவர் ‘என் எழுத்துக்களைப் படிக்கும்போது தானும் அப்படி எழுத வேண்டும்’என்ற உத்வேகம் வருவதாக கமெண்ட் செய்திருந்தார்.

இதுபோல பலரும் சொல்லி இருக்கிறார்கள்.

ஆனாலும் ஒவ்வொரு முறையும் கேட்கும்போதும் சந்தோஷமாகவே உள்ளது. காரணம் நம் செயல்பாடுகள் மற்றவர்களுக்கு உத்வேகத்தைக் கொடுப்பதைவிட நமக்கான அங்கீகாரம் வேறென்ன இருக்க முடியும்?

‘அப்படியா… நல்லது. கடந்த 38 வருடங்களாக நாள் தவறாமல் எழுதிக்கொண்டிருக்கிறேன் என்றால் நம்ப முடிகிறதா?’ என்றேன்.

நம்புகிறேன். ஆனால் நம்ப முடியாத ஆச்சர்யம்’என்றார்.

நாம் செய்கின்ற நல்ல விஷயங்களை விளம்பரப்படுத்தலாமா? நிச்சயமாக. பல விஷயங்கள் ஒருவரைப் பார்த்து மற்றவர்கள் பின்பற்றுவதனாலேயே பரவலாகின்றன. அது லேட்டஸ்ட் மாடல் ஸ்மார்ட்போனாகட்டும் உயர்ரகக் காராகட்டும் உணவருந்தும் ஓட்டலாகட்டும்.

நல்ல செயல்களும் அப்படித்தான். ஒருவர் செய்வதைப் பார்க்கும்போது நாமும் செய்ய வேண்டும் என்ற உந்துதல் ஏற்படும். அந்த உந்துதல் நல்ல விஷயங்கள் பரவவும், அன்பு செழிக்கவும் நிச்சயமாக உதவும்.

பிரசிடென்சி கல்லூரிப் பேராசிரியர் ஒருவரை எங்கள் நிறுவன நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தோம். அவர் சில புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.

பார்வைத்திறன் இழந்த மாற்றுத்திறனாளியான அவர் தன் உரையில், “ஒருமுறை மாற்றுத்திறனாளிகளை சிறப்பிக்கும் விழாவில் என்னையும் கெளரவப்படுத்தினார்கள். அந்த விழாவுக்கு நான் எழுதிய ஒரு புத்தகத்தின் 50 காப்பிகளை அனைவருக்கும் கொடுப்பதற்காக வாங்கிச் சென்றிருந்தேன். அதைப் பார்த்த அந்த விழாவுக்கு பார்வையாளராக வந்திருந்த ஒருவர் வியந்து நான் இந்தப் புத்தகங்களுக்கு பணம் கொடுக்கிறேன் என சொல்லி அத்தனை புத்தகங்களுக்கும் பணம் கொடுத்து உதவினார்.

‘நான் கொடை செய்ய வந்த இடத்தில் நீங்கள் கொடை செய்து விட்டீர்களே… நீங்கள் கொடுத்த இந்தப் பணத்துக்கு அடுத்தமுறை புத்தகங்களை பிரிண்ட் போட்டு உங்களுக்குக் கொடுத்துவிடுகிறேன்…’ என்றேன். இப்படி நல்ல செயல்பாடுகள் என்பது தொடர்ச்சியாக சென்றுகொண்டே இருக்க வேண்டும்…” என்று மிக அருமையாக பேசினார்.

ஒருமுறை ஒரு கல்லூரியின் கருத்தரங்கில் சோலோவாக நான் மட்டுமே 3 நாட்கள் தினமும் காலை இரண்டு மணி நேரம் மதியம் இரண்டு மணிநேரம் என மொத்தம் 12 மணி நேரம் மாணவர்களுக்காக உரை நிகழ்த்தியபோது அந்தக் கல்லூரியின் முதல்வர், ‘என் சர்வீஸில் இதுவரை இப்படி ஒருவரே தொடர்ச்சியாக நிகழ்ச்சி நடத்தி பார்த்ததே இல்லை. என் பணிநிறைவுக்குள் நானும் இதுபோல தொடர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிவிட வேண்டும்…’ என மனதில் உள்ளதை வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டார்.

தனி நபர்களின் சின்ன சின்ன செயல்பாடுகள்கூட மற்றவர்களுக்கு முன்னுதாரணமாய் அமைவதைப் போலவேதான் சமுதாயத்தில் நடைபெறும் விஷயங்களும்.

முரணாகும் முன்னுதாரணங்கள்

முன்னுதாரணங்களாக நல்ல விஷயங்கள் மட்டும்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. தொழில்நுட்ப உச்சத்தில் இருக்கும் சூழலில் நல்லவை அல்லாதவையும் முன்னுதாரணங்களாகிவிடுகின்றன.

சமீபத்தில் ‘பாலியல் வன்கொடுமை’ என்ற வார்த்தையை அடிக்கடி கேள்விப்படுகிறோம். நித்தம் பெயர் தெரியாத ஊர்களில் இருந்தெல்லாம் வயது வித்தியாசமின்றி 60 வயதானவன் 5 வயது குழந்தையை சீரழித்துக் கொன்றான் என்பதைப் போன்ற செய்திகளை முந்தித்தருகின்றன மீடியாக்கள். யார் முதலில் பரபரப்பான செய்தியை, மனதை பதறச் செய்யும் வீடியோக்களுடன், புகைப்படங்களுடன் தருகிறார்கள் என்பதில் கடும்போட்டி வேறு.

‘பாலியல் வன்கொடுமை’ என்ற வார்த்தைக்கான விளம்பரம்போலவே அதுபோன்ற செய்திகள் அமைந்துள்ளன. அதற்கேற்ப அந்த வார்த்தையை  உடலை சிவப்பாக்க உதவும் க்ரீமுக்கான விளம்பரம் என நினைத்து விட்டார்களோ என்னவோ அதுபோன்ற  கொடூரமான தனிமனித ஒழுக்கமில்லாத செயல்பாடுகள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன.

ஒரு செயல் தவறானது, கொடூரமானது, மனிதத்தன்மையில்லாதது என தெரிந்தால் மக்களிடையே அந்த செய்தி பரவும்போது அதுபோன்ற செயல்பாடுகள் குறையத்தானே வேண்டும். மாறாக ஏன் அதிகமாகிறது?

‘இந்த பாவச் செயலுக்கு தண்டனை என்ன தெரியுமா…. இந்தத் தவறை செய்தவன் இந்த தண்டனை பெற்றான்… தவறு செய்தவனுக்கு தண்டனை நிச்சயம் உண்டு… தாமதமானாலும் தண்டனை உறுதி…’ என்பதைப் போன்ற செய்திகள் அதிகம் வருவதில்லை.

தண்டனைகள் குறித்த செய்திகளைவிட குற்றங்கள் குறித்த செய்திகளே அதிகம் பரவுவதால் குற்றங்களே பெருகுகின்றன.

தண்டனை என்ற வார்த்தை பிரயோகம் அதிகமானால்கூட  குற்றங்கள் குறைய வாய்ப்புண்டு.

மிகவும் துடுக்குத்தனமாக விஷமம் செய்யும் குழந்தைகளை கையாள்வது சற்று கடினம்தான். ஒருசில குழந்தைகள் கண்களால் மிரட்டினாலே சமர்த்தாகிவிடும். ஒருசில வாயால் அதட்டினால் அமைதியாகும். இன்னும் ஒருசில கைகளால் லேசாக அடித்தால்தான் அடங்கும்.

இப்படி எதுவுமே செய்யாமல் குழந்தைகளுக்கு தாங்கள் செய்வது  ‘விஷமம்’ என்பது எப்படி புரியவைக்க முடியும். ஏதேனும் ஒரு எதிர்வினை காட்டினால்தானே குழந்தைக்குக்கூட புரிய வைக்க முடிகிறது. அப்படி எடுத்துச் சொல்லாமல் அவர்களை கடந்து சென்றுகொண்டே இருந்தால் எதிர்காலத்தில் ‘தான்தோன்றியாக’ அல்லவா அந்தவகைக் குழந்தைகள் வளர்ந்து நிற்பார்கள்.

சமுதாயத்தில் நடைபெறும் குற்றங்களை ‘ஃபோக்கஸ்’ செய்யும் அளவுக்கு அதற்கான தண்டனைகள் குறித்து இரண்டு மடங்கு ‘ஃபோக்கஸ்’ செய்தால் குற்றம் செய்ய பயம் ஏற்படும்.

‘குற்றம் செய்தால் கடுமையான தண்டனை நிச்சயம்’என்ற மிரட்டலிலேயே பெருவாரியான குற்றங்கள் குறைய வாய்ப்புண்டு.

சூழல் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்

ஓர் உண்மை நிகழ்வு.

பதினைந்து வருடங்களுக்கு முன்பு என்னிடம் பணிபுரிந்த ஒருவர் சில நாட்களுக்கு முன் போன் செய்து தன்னை நினைவிருக்கிறதா என கேட்டு உறுதி செய்துகொண்டார். தற்போது சவுதியில் பணிபுரிவதாகச் சொன்னார். பரஸ்பர சம்பிரதாய நலம் விசாரித்தலுக்குப் பிறகு என்னிடம் உடைந்த குரலில் மன்னிப்புக் கேட்டார். ஒரு நிமிடம் என்ன, ஏது என்று ஒன்றுமே புரியவில்லை. பிறகு சுதாரித்துக்கொண்டு என்ன விஷயம் என்று கேட்டதற்கு, அவர் சொன்ன விவரத்தை எந்த சலனமும் இல்லாமல் கேட்டுக்கொண்டேன்.

அவர் என்னிடம் பணி புரிந்த காலத்தில் ஆஃபீஸுக்காக வாங்கிய ஸ்டேஷனரி ஐட்டம் முதல் ஸ்டாஃப்களுக்கு வாங்கிய மதிய உணவுவரை அத்தனையிலும் அவர் கமிஷன் அடித்ததாகவும், அதை நினைத்தால் இப்போது அவருக்கே அவமானமாக இருப்பதாகச் சொன்னார்.

எப்போதோ நடந்த விஷயத்துக்கு இப்போது அவர் மன்னிப்புக் கேட்டது  ஒருபுறம் ஆச்சர்யமாக இருந்தாலும் உளவியல் ரீதியாக ஆராய்ந்ததில் ஒரு விஷயம் புரிந்தது.

அவர் சவுதியில் பணி புரிகிறார். அங்குள்ள மனிதர்கள், சமுதாய அமைப்பு, சட்ட திட்டங்கள், குற்றங்களுக்கான தண்டனைகள் போன்றவை அவருக்குள் இருந்த மனிதனைப் பட்டை தீட்டி இருக்க வேண்டும்.

அதனால்தான் என்றோ நடந்த நிகழ்ச்சிக்கு இன்று மனம் வருந்தி மன்னிப்புக் கேட்க வைத்துள்ளது.

ஒருவேளை இங்கேயே பணிபுரிந்து கொண்டிருந்தால் இந்த அளவுக்கு செய்த தவறை உணர்ந்திருப்பாரா என்பது சந்தேகம்தான். அவர் தற்போது வசிக்கும் நாடு அவருக்குக் கற்றுக்கொடுத்த பாடமாகவே இதை உணர வேண்டும்.

முன்மாதிரிகளே முன்னுதாரணங்களாக!

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கும், பணிபுரியும் இடங்களில் தலைமையில் இருப்பவர்கள் தங்களிடம் பணிபுரிபவர்களுக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

‘மாதா பிதா குரு தெய்வம்’ என்பதை ஏதோ குழந்தைகளுக்கு சொல்லப்படும் அறிவுரையாக எடுத்துக்கொள்ள வேண்டாம். பெரியோர்களும் அவரவர்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்கும் சேர்த்தேதான்.

யோசிப்போம்!

ஆன்லைனில் மின்னம்பலத்தில் https://minnambalam.com/k/2019/04/13/19

எழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி
@ மின்னம்பலம் டாட் காம்
வெள்ளிதோறும் வெளியாகும் தொடரின் பகுதி – 23

(Visited 88 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon