இங்கிதம் பழகுவோம்[28] யார் பிரபலம்? (https://dhinasari.com)

‘பிரபலங்களுக்கு’  ‘பிரபலம்’ என்ற  பட்டம் கொடுத்தது யார்?

நேற்று என்னுடன் போனில் பேசிய ஒரு பிரபலம் ஃபேஸ்புக்கில் இருந்து வெளியே வந்துவிட்டதாகக் கூறினார்.

அவர் சொன்ன காரணம்…

ஃபேஸ்புக்கில் ஏதேனும் அவர் எழுதி ஒரு பதிவு போட்டால் அதன் பிறகு அதற்கு வரும் லைக் மற்றும் கமெண்ட்டுகளிலேயே கவனம் சென்றுவிடுவதாகவும்…

அவருக்கு தெரிந்தவரோ அல்லது நண்பர்களோ லைக் போடவில்லை எனில் அது குறித்தே மனம் யோசனையில் ஆழ்வதாகவும்…

அவர் ஏன் என் பதிவுக்கு லைக் போடாமல் மற்றவர்கள் பதிவுகளுக்கு லைக் போட்டிருக்கிறார்… கமெண்ட் செய்திருக்கிறார் என…

ஒரு பதிவுக்கு பிறகு தொடர்ச்சியாக நான்கைந்து நாட்கள் மனம் அமைதி இழப்பதாகவும் சொன்னார்.

இதைச் சொன்னவரது வயது 65+.

ஃபேஸ்புக்கில் நாம் பதிவிடும் பதிவுகளுக்கு எத்தனையோ பேர் கமெண்ட் செய்திருப்பார்கள். பலர்  பேர் லைக் செய்திருப்பார்கள். ஒருசிலர் படித்து ரசிப்பார்கள். ஆனால் லைக்கும் கமெண்டும் போடுவதற்கு தயங்கி கடந்து செல்வார்கள்.

ஃபேஸ்புக் ‘லைக்’ பிரச்சனை எல்லா வயதினருக்குமான ஃபேஸ்புக் சிக் (Facebook Sick). இதற்கான தீர்வு லைக், கமெண்ட்டை எதிர்பார்க்காமல் பதிவு போடுவது நம் கடமை என்ற கர்மயோக மனநிலை.

இந்த மன நிலையை பெற முடியாவிட்டால் ஃபேஸ்புக்கை விட்டு வெளியேறுவது ஒன்றே சரியான தீர்வு என எனக்குத் தோன்றியது.

இதைப் பற்றி நான் பதிவிட்டிருந்தேன். அதற்கு நண்பர் ஒருவர்  ‘சில நிஜ பிரபலங்கள் கூட லைக் கமெண்ட் போட்டுவிடுவார்கள்.இந்த பேஸ்புக் பிரபலங்கள் தங்களது ப்ரொமோஷன் தவிர்த்து வேறெங்கும் லைக் போட மாட்டார்கள். இது என்னோட அனுபவம்!’ என தன் அனுபவத்தைப் பகிர்ந்திருந்தார்.

யார் பிரபலம்? என நான் யோசித்ததில்…

மனிதர்கள் எல்லோருமே மனிதர்களாக நடந்துகொண்டாலே பிரபலம்தான்.

பிரபலங்கள் அந்தப் பட்டத்தைப் பெற வீட்டில் ஆண் தேவதைகளும் (அப்பா, கணவன், சகோதரன்), பெண் காவல் தெய்வங்களும் (அம்மா, மனைவி, சகோதரிகள்) முட்டுக்கொடுக்க காத்திருந்தால் மட்டுமே சாத்தியம்.

எழுத்து, பேச்சு, ஓவியம், பாட்டு…  இதெல்லாம் தெரிந்தவர்கள் ‘பிரபலங்கள்’ அல்ல…  இவற்றில் திறமைகள் பெற்றவர்கள். அவ்வளவுதான்.

நம் வாழ்வாதாரத்துக்காக ஒவ்வொருவரும் ஒவ்வொரு பணி செய்கிறோம். அந்த வகையில் அந்தந்தத் துறைசார்ந்த திறமை பெற்றவர்கள்  தங்கள் திறமையை பயன்படுத்துகிறார்கள். அவ்வளவுதான்.

கம்ப்யூட்டர் புரோகிராமர், அக்கவுண்டண்ட், இன்ஜினியர் இவர்கள் எப்படி தங்கள் புரோகிராமிங் அறிவையும், அக்கவுண்ட்ஸ் திறமையையும், இன்ஜினியரிங் நுணுக்கத்தையும் பயன்படுத்துகிறார்களோ

அதுபோலதான் எழுத்தாளர்கள் எழுத்துத் திறமை, பேச்சாளர்கள் பேசும் திறமை, ஓவியர்கள் வரையும் திறமையை பயன்படுத்துகிறார்கள்.

இந்த அடிப்படையை உணர்ந்துகொண்டால் நாம் ஒவ்வொருவருமே அவரவர் துறையில் பிரபலமே என்ற பேருண்மை புரியத் தொடங்கும்.

நம் அம்மா, அப்பா, தாத்தா பாட்டி இவர்கள் நம்மை இந்த அளவுக்கு நல்லபடியாக வளர்த்து உருவாக்கி இருக்கிறார்களே அவர்கள் தான் என்னைப் பொருத்தவரை மிக மிக உயர்வானவர்கள். நம் குடும்பத்து பிரபலங்கள்!

நாம் அசட்டுத்தனமாக ‘பிரபலங்களுக்கு’ (?!) பிரபலப் பட்டங்களை தலையில் சுமத்தி அவர்களுக்கு கிரீடம் வைக்காமல், கண்டுகொள்ளாமல் இருந்தாலே போதும்…. அவர்கள் நார்மலாகி விடுவார்கள்  என நான் நினைக்கிறேன்.

அன்புடன்
காம்கேர் கே.புவனேஸ்வரி
ஏப்ரல் 16, 2019

ஆன்லைனில் தினசரி டாட் காமில் படிக்க… https://wp.me/p5PAiq-kMF

எழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி
தினசரி டாட் காம் ஏப்ரல் 16, 2019

(Visited 56 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon