நியுஸ் 18 சானலில்! டெக் உலகின் ’டான்’ ஆக வலம்வரும் காம்கேர் புவனேஸ்வரி! (May 9, 2019)


சாதனைப் பெண்கள் என்ற பகுதிக்காக

நியுஸ் 18 சானலுக்கு மே 9, 2019 நான் கொடுத்த நேர்காணல்….

அவர்கள்  இணையதள லிங்க்:

https://tamil.news18.com/news/women/the-success-story-of-a-tech-icon-compcare-bhuvaneshwari-152975.html

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

மே 9, 2019

நியூஸ் 18  இணையதளத்தில்  வெளியான நேர்காணல் 

அ முதல் ஃ வரை… டெக் உலகின் ’டான்’ ஆக வலம்வரும் புவனேஸ்வரி!

தொழில்நுட்பம் தொடர்பான சாஃப்ட்வேர் கண்டுபிடிப்புகளுக்கு மட்டுமல்லாமல் தனது பேச்சுக்காகவும் எழுத்துக்காகவும் சாதனைகளுக்காகவும் நூற்றுக்கணக்கான விருதுகளைக் குவித்துள்ளார்.

காம்கேர் என்னும் சாஃப்ட்வேர் ஐடி நிறுவனத்தின் சிஇஓ மற்றும் நிறுவனர் ஆக உள்ள புவனேஸ்வரி தன் தொழில் மீதான ஈடுபாட்டால் தன் பெயரையே ‘காம்கேர்’ புவனேஸ்வரி ஆக மாற்றிக்கொண்டார். தொழில்நுட்பத்தின் அரிச்சுவடி கூட எழுதப்படாத நாட்களில் தமிழகத்தில் தமிழில் சாஃப்ட்வேர் தொழில்நுட்பங்களை உருவாக்கி இன்று வரை தனது கற்றலையும் படைப்பாற்றலையும் வற்றாமல் வளர்த்து வருகிறார்.

1992-ம் ஆண்டு தமிழகத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான எந்தவொரு முகாந்திரமும் இல்லாத நாட்களில் தனி ஒரு பெண் ஆக சாஃப்ட்வேர் ஐடி நிறுவனமான ‘காம்கேர்’ தொடங்கினார் புவனேஸ்வரி. ஆங்கிலம் மட்டும் கணினிகளில் விளையாடிக் கொண்டிருந்த நாட்களில் தமிழில் சாஃப்ட்வேர்களை உருவாக்கி ஆச்சர்யப்படுத்தியுள்ளார் புவனேஸ்வரி. ஒரு பெண் ஆக தொழில்நுட்ப உலகில் இவர் செய்த சாதனையை உலகம் கண்டுகொள்ளாமல் இல்லை.

அனிமேஷன் என்ற ஒரு துறையே அறிமுகம் ஆகாத காலகட்டத்தில் C மற்றும் C++ என்னும் கணினி மொழிகளில் ஓவியங்கள், கார்ட்டூன்கள் வரைந்து அசத்திய புவனேஸ்வரிக்கு தம்பி, தங்கையின் ஓவியத் திறமை கைகொடுத்துள்ளது. கணினியில் தமிழ் எழுத்துருவை அறிமுகப்படுத்தி புதுவித தொழில்நுட்பம் மூலம் ஓவியம் வரைகிறார் என விருதுகள் பல 20-ம் நூற்றாண்டிலேயே புவனேஸ்வரியைத் தேடி வந்துள்ளது.

தொடர்ச்சியான புதிய கண்டுபிடிப்புகள், படைப்பாற்றல்களுக்குப் பரிசாக ‘காம்கேர்’ நிறுவனம் அதிரடியான வளர்ச்சியைப் பெறத் தொடங்கியுள்ளது. யுனிகோட், மாயா, ஃப்ளாஷ் போன்ற சாஃப்ட்வேர்களின் அறிமுகங்களுக்கு முன்னரே இத்துறையில் சாதனை படைத்துள்ளார் புவனேஸ்வரி. பெண்ணுக்கு படிப்பு என்பதே எட்டாக் கணியாக இருந்த காலத்தில் பெற்றோர்களின் உதவியால் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் பி.எஸ்.சி மற்றும் எம்.எஸ்.சி கல்வியை நிறைவு செய்தவர், பின்னர் எம்.பி.ஏ படிப்பையும் நிறைவு செய்துள்ளார்.

தனது தொழில்நுட்பத் திறனை வெளிப்படுத்தும் வகையில் பெற்றோரின் ஐடியாவால் தொடங்கப்பட்டதே ‘காம்கேர்’ நிறுவனம். திருக்குறள் முதல் திருவாசம் வரையில் பல இலக்கியத் தொகுப்புகள், கதைகள், குழந்தைகளுக்கான கதைகள் என அனிமேஷன் மூலம் முதன்முதலாக தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தி அதன் விற்பனையிலும் அதிரடி சாதனையைச் செய்துள்ளார் புவனேஸ்வரி.

கடந்த 2000-ம் ஆண்டுகளில் ஒரு சிடி 300 ரூபாய் விற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் வெறும் 99 ரூபாய்க்கு அனிமேஷன் கதை, பாடல் சிடிக்களை விற்று மீண்டும் ஒரு பிசினஸ் பெண்ணாகவும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளார். வானொலி மற்றும் தொலைக்காட்சிகளுக்கான நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கியுள்ளார். 120-க்கும் மேற்பட்ட டெக் புத்தகங்கள், 100-க்கும் மேற்பட்ட தன்னம்பிக்கைப் புத்தகங்கள் என எழுத்தாளர் உலகிலும் தனக்கான மைல்கல்லை தானே அமைத்துக்கொண்டார்.

தொழில்நுட்பம் தொடர்பான சாஃப்ட்வேர் கண்டுபிடிப்புகளுக்கு மட்டுமல்லாமல் தனது பேச்சுக்காகவும் எழுத்துக்காகவும் சாதனைகளுக்காகவும் நூற்றுக்கணக்கான விருதுகளைக் குவித்துள்ளார்.

தனது சாதனைகள் குறித்து நம்மிடம் பேசியவர், “சிறு வயதிலிருந்தே பெற்றோர்களின் ஊக்கத்தால் வாசிக்கும் பழக்கம் தொடங்கிவிட்டது. இந்தப் பழக்கம் தான் என்னைப் புதிதாகப் பல விஷயங்கள் குறித்தும் கற்றுக்கொள்ளத் தூண்டியது. இதுநாள் வரையில் கற்றலை நிறுத்தவில்லை. 12 வயதில் என் முதல் சிறு கதையை எழுதத் தொடங்கினேன். அப்போதெல்லாம் வார இதழ்கள், நாளிதழ்கள் என என் கதைகள் தொடர்ந்து பிரசுரமாகிக்கொண்டே இருந்தன.

இன்று நூற்றுக்கணக்கில் புத்தகங்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். பார்வையற்ற மாணவர்களுக்கு தொழில்நுட்பம் மூலம் தேர்வு எழுத உதவும் வகையில் ‘ஸ்க்ரைப் சாஃப்ட்வேர்’ உருவாக்கியதை என் மிகப்பெரும் சாதனையாகக் கருதுகிறேன்.

என் படைப்புகள் பல இன்று கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பல பாடப்பிரிவுகளில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

தற்போது என் சாஃப்ட்வேர் நிறுவனத்துடன் ‘ஸ்ரீ பத்மகிருஷ்’ என்றதொரு தன்னார்வ அறக்கட்டளையையும் நடத்தி வருகிறேன். துறைவாரியாக ஆண்டுதோறும் வளர்ந்து வரும் சாதனையாளர்களைக் கவுரவப்படுத்தும் பணியை இந்த அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது” எனப் பெருமையுடன் விவரித்தார் ‘காம்கேர்’ புவனேஸ்வரி.

நியூஸ் 18 இணைய தளத்தில் படிக்க… https://tamil.news18.com/news/women/the-success-story-of-a-tech-icon-compcare-bhuvaneshwari-152975.html

 —****—-

(Visited 68 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon