#கதை: பிரார்த்தனை – விஜயபாரதத்தில் வெளியான சிறுகதை (2016)

என்னைச் சுற்றித்தான் எத்தனை கம்பி வெலிகள். கூட்டம் கூட்டமாய் மனிதர்கள்? கைக் குழந்தைகளோடும், ஒரு இடத்தில் கால் பாவாமல் ஓடும் விளையாட்டுப் பிள்ளைகளோடும், வயதான காலத்தில் கைத்தடிகளை ஊன்றிக் கொண்டும் தவமாய் தவம் கிடக்கும் மனிதர்களைப் பார்க்கவே பாவமாக இருக்கிறது.

கூட்டம், வரைமுறை இல்லாத நெரிசல், வியர்வை, நாற்றம், இருமல், கைக் குழந்தைகளின் அழுகைகள், விளையாட்டுப் பிள்ளைகளின் சிணுங்கல்கள், மிரட்டும் அப்பாக்கள், பொறுமையாக காத்திருக்க கைகளாலும், கண்களாலும் கெஞ்சும் அம்மாக்கள், அக்கா-தம்பி செல்ல சண்டைகள், அண்ணன்-தங்கை சீண்டல்கள் என விதவிதமான அனுபவங்கள்.

ஆண்கள் வேட்டி சட்டைதான் போட்டு வரவேண்டும், பெண்கள் துப்பட்டாவுடன் சுடிதார் என்று வலியுறுத்திச் சொல்லியும், விதிமீறலாய் சிலர் பார்த்துக்கொள்ளலாம் என்று வந்திருக்க அவர்களை திருப்பி அனுப்புகிறார்கள்.

கூண்டை விட்டு வெளியே குளிர்பானங்களும், உணவுபண்டங்களும் விற்பனை செய்து கொண்டிருக்க, மக்கள் விலை இரண்டு மடங்காக இருந்தாலும் யாருமே பேரம் பேசாமல் கையை வெளியே நீட்டி வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

பக்தி மயமாக வருவோருக்கு இடையே ஜாலியாக பிக்னிக் போல நண்பர்களோடு வருகின்ற இளம் வட்டங்களில் ஒருசிலரின் தரம் கெட்ட செய்கைகளினால் தூய்மை பறிபோய் கொண்டிருந்தது.

கூட்டத்தைச் சாக்காக வைத்து  பத்து, பண்ணிரெண்டே வயதான சிறுமியை, அவள் கூட வந்திருக்கும் பெற்றோருக்குத் தெரியாமல் இரண்டு இளைஞர்கள் தங்களுக்குள் பேசி கிண்டல் செய்து வர, அவளை விட இரண்டு வயது பெரியவனாக இருக்கும் அவள் அண்ணன் புரிந்துகொண்டு முறைத்தான். அதுவரை தங்கையுடன் சண்டை போட்டு வந்தவனுக்கு எங்கிருந்து வந்தது இந்த பாசம். இதைத்தான் தான் ஆடாவிட்டாலும், தன் சதை ஆடும் என்கிறார்களோ?

உடனே இளைஞர்கள் கேலியாக சிரித்துக் கொண்டார்கள். ‘டேய்… மனிதர்களில் மட்டும் தான் பெண்கள் அழகு, மற்ற உயிரினங்களில் ஆண்கள்தான் அழகு… ஆண் மயிலுக்குத்தான் தோகை… ஆண் யானைக்குத்தான் தந்தம்…’ என்ற ரீதியில் ரொம்ப புத்திசாலித்தனமான கண்டுபிடிப்பைச் சொல்லி விட்டதைப்போல கிண்டலும், கேலியுமாக பேசிக் கொண்டே வந்தார்கள். ஆனால் அவை வெளியில் யாருக்கும் தெரியாதவாறு, அவர்கள் குறி வைக்கும் பெண்களுக்கு மட்டும் காதில் விழுமாறு பார்த்துக் கொண்டார்கள்.

தேக்கி வைக்கப்படும் கூட்டத்தினால்தான் இதுபோன்ற முகம்சுளிக்க வைக்கும் செயல்பாடுகள்.

இதற்கிடையில் ஒரு கைகுழந்தை ஒன்று பிடி கொள்ளாமல் அழத் தொடங்கி கதறிக் கொண்டிருந்தது.  கையில் கொண்டு வந்திருந்த பால் பாட்டிலை வாயில் வைத்துத் திணிக்கப் பார்க்கிறார்கள். புழுக்கமாக இருக்கிறதோ என சட்டையை கழற்றினார்கள். ஏதேனும் பூச்சி கடித்திருக்கிறதா என புரட்டிப் புரட்டிப் பார்க்கிறார்கள். ம்ஹும். எதற்குமே அசைந்து கொடுக்கவில்லை அக்குழந்தை. முகம் சிவந்து உதடு துடிக்க வதைந்து கொண்டிருந்தது. குழந்தைக்கு தாய் பால் கொடுத்தால் அழுகை நின்றுவிடும். அது அக்குழந்தையின் தாய்க்கும் தெரியும். எப்படிக் கொடுப்பது?

ஒரு வரிசையில் செல்ல வேண்டிய இடத்தில் மூன்று வரிசையில் மனிதர்கள் செல்ல முயற்சிக்கும் போது டிராஃபிக் ஜாம். முட்டி மோதி அடுத்தவர்களை இடித்துக் கொண்டு தரிசனத்துக்கு தீவிரமாக இருக்கிறார்கள்.

சென்ற மாதம் சஷ்டியப்தபூர்த்தி முடித்துக் கொண்டு ஒரு தம்பதிகள் தரிசனத்துக்கு வந்திருந்தார்கள். கூட்டத்தில் அந்த பெரியவருக்கு உடலை ஏதோ செய்வதைப் போல இருக்கு என்று சொல்ல, என்ன ஏது என்று விசாரித்து கூட்டத்தை விலக்கி காற்றுக்கு இடம் அளித்து முகத்தில் தண்ணீர் தெளிப்பதற்குள் அவர் மூர்ச்சை ஆகி விட்டார். நெருக்கடியில் அவரை வெளியே கொண்டு வந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல அவர் மனைவி பட்ட பாடு… அப்பப்பா சொல்லி மாளாது.

பிசினஸ் செய்பவர்கள் லட்சக் கணக்கில் உண்டியலில் போட்டு காணிக்கை செலுத்த, வறியவர்களோ வேண்டியது நடப்பதற்காக மஞ்சள் துணியில் முடிச்சிட்டு வைத்திருக்கும் நாணயத்தை உண்டியலில் சமர்பணம் செய்கிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்புகூட ஒருகோடி ரூபாயை உண்டியலில் போட்ட தொழிலதிபர் குறித்த செய்தியை ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பளிச்சிட்டுக் காட்டினார்கள்.

மொட்டை அடிக்கும் இடத்திலும் கியூ. அழுது ஆர்பாட்டம் செய்கின்ற  குழந்தைகளுக்கு விளையாட்டு காண்பித்து மொட்டை அடிப்பவர்கள், முரட்டுக் குழந்தைகளை மிரட்டும் கண்களாலும், அழுத்தமான கை பிடிமானத்தாலும் அடக்கி ஒரு வழியாய் தாங்கள் எடுத்துக் கொண்ட பணியை திறம்பட செய்து முடிக்கிறார்கள்.

லட்டு வாங்கவும் கியூ. ஒரு டிக்கட்டுக்கு இரண்டு லட்டுகள். தெரிந்தவர், தெரியாதவர், அக்கம், பக்கத்தினர், நண்பர்கள் என அனைவருக்கும் கொடுப்பதற்காக ஒரு சிலர் கட்டணம் செலுத்தி இன்னும் அதிகமாக வாங்கிச் செல்கிறார்கள்.

எத்தனையோ தொழில்நுட்ப வசதிகள் வந்து விட்டதே…. கூட்டத்தைத் தவிர்க்க ஏதேனும் வழியை கொண்டு வர இயலாதா? ஒருவர் மட்டுமே செல்லும் வகையிலும் அதே சமயம் சுற்றி காற்றோட்டமாகவும் பாதையை அமைக்க முடியாதா?

இப்படித்தான் அடித்துப் பிடித்துக்கொண்டு தரிசனம் செய்ய வருகிறார்களே… சன்னதிக்குள் எத்தனை செகண்டுகள் நிற்க முடிகிறது? ஜரகண்டி, ஜரகண்டி என கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக கைகளைப் பிடித்து இழுத்து வெளியே தள்ளுகிறார்களே?

தள்ளாத வயதில் வரும் பெரியோர்களின் மனதில் ‘அடுத்த முறை வரும் பாக்கியம் இருக்கிறதோ இல்லையோ தெரியவில்லையே? ஒரு செகண்ட் பார்க்க விடமாட்டேன் என்கிறார்களே? என்ற ஆதங்கம் ஓடுகிறதே…

எனக்கு ரொம்ப களைப்பா இருக்கு. வருடம் 365 நாட்களும் 24 மணிநேரமும் இவற்றையே பார்த்துக் கொண்டிருக்கிறேன். வயது வித்தியாசம், பாலின வேறுபாடு, பொருளாதார ஏற்றத்தாழ்வு – இவை ஏதும்  இல்லாமல் என்னைக் காண பக்தியோடு ஓடோடி வரும் மக்களுக்கு உடலை வருத்தாமல் மனம் தளராமல் என்னை தரிசிக்கும் நிலை என்றுதான் வருமோ? இதற்கு யாரிடம் போய் பிராத்திப்பது?

மக்களுக்கு பிரச்சனை என்றால் ஏழுமலையானிடம் பிராத்திக்கலாம். அந்த பெருமாளுக்கே ஒரு கோரிக்கை என்றால் யார் தீர்த்து வைப்பது?

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

செப்டம்பர் 19, 2019

கதையின் Inch By Inch கான்செப்ட்: என் அம்மா பத்மாவதி
எழுத்து: காம்கேர் கே. புவனேஸ்வரி

05-02-2016-ம் ஆண்டு விஜயபாரதம்
இதழில் வெளியான  சிறுகதை ‘பிரார்த்தனை’ 

 
(Visited 194 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon