#கதை: சாவியில் பரிசு பெற்ற சிறுகதை – ‘நியதிகள் மாறலாம்’ (நவம்பர் 1990)

1990 ஆம் ஆண்டு நான் எழுதி சாவி இதழில் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதை.

அந்தந்த காலகட்டத்தை படம்பிடித்துக் காட்டுபவையே கலைகள். அது எந்த வடிவத்தில் இருந்தாலும்.

நியதிகள் மாறலாம்! என்ற இந்த சிறுகதை அந்த காலத்தில் பெண்களின் நிலையை அப்படியே படம் பிடித்து காட்டுவதைப் போல உள்ளது.

பொறுமை இருப்பவர்கள் முழுமையாக படித்துப் பாருங்களேன்.

கதை இதோ….

ராஜத்துக்குப் படபடப்பாய் இருந்தது.

சுமங்கலிப் பிராத்தனை முடிந்து குடும்பத்தில் இறந்துபோன சுமங்கலிப் பெண்களுக்கு செய்ய வேண்டிய சாந்தியெல்லாம் முடிந்தாகிவிட்டது. நடக்க இருப்பது முதல் சுபநிகழ்ச்சியாக இருப்பதால் செலவோடு செலவாய் சுமங்கலிப் பெண்கள் அனைவருக்கும் புடவை ரவிக்கை எடுத்துக்கொடுத்து அவர்கள் மனதையும் சாந்தி செய்தாகிவிட்டது.

இரண்டு பெண்களுக்கும் கல்யாணத்தை முடித்துவிட்டால் நிம்மதியாக இருக்கும். அப்புறம் பரத் மட்டும்தான். அவனுக்கும் பாம்பேயில் வேலையாகிவிட்டது. பெண் கொடுக்க பலர் முன்வந்துள்ளனர். ராஜம்தான் முதலில் பெண்களுக்கு முடியட்டும் என்று ஒத்தி வைத்தாள்.

ஐந்தாவதும் ஆறாவதும் எட்டாவதும் படித்துக்கொண்டிருந்த குழந்தைகளோடு ராமநாதன் தன்னை அனாதையாய் விட்டுச் சென்றபோது விதிர்விதிர்த்துத்தான் போய்விட்டாள் ராஜம்.

சமையலறையை மட்டுமே நிர்வகிக்கத் தெரிந்தவளின் தலையில் வீட்டு நிர்வாகம் மொத்தமும் சுமையாய் இறங்கியதால் என்ன செய்வாள் ஒண்டியாய்?

கணவன் இருந்தவரை கோயிலானாலும் கடைத் தெருவானாலும் சினிமாவானாலும் அவன் பின்னால் நடந்தே பழக்கப்பட்டவளுக்கு தனியாய் முடியுமா?

உறவினர்கள் அனைவரும் கேள்விக்குறியாய் அனுதாபத்தோடு பார்த்துப் பேசினார்களே தவிர அனுசரணையாய் ஆதரிக்க ஒருவரும் முன்வரவில்லை. செத்த வீட்டில் சொல்லிக்கொள்ளாமல் போக வேண்டும் என்று சொல்லி வைத்தார்களே, அதை சாக்கு வைத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டார்கள்.

குமுறி அழுதவள் தன்னை அண்டி மூன்று குழந்தைகள் இருப்பதை உணர்ந்து தைரியமாய் தலை நிமிர்ந்தாள்.

கணவனின் அலுவலகத்திலேயே வேலை கொடுத்தார்கள். தன் குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் நிறுத்தி தன்னைச் சுற்றி ஒரு வட்டம் அமைத்துக்கோண்டு வாழத்தொடங்கினாள் ராஜம்.

முதல் பெண் பூமாவை பி.எஸ்.ஸி படிக்க வைத்தாள். அரசாங்கப் பள்ளி ஒன்றில் வேலையும் கிடைத்தது. நாளை மறுநாள் அவளுக்குத்தான் கல்யாணம்.

இரண்டாவது பெண் வித்யாவை டிப்ளமோ படிக்க வைத்தாள். வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறாள்.

இருவருக்கும் மூத்தவன் பரத். சென்ற வருடம் எம்.ஸி.ஏ பரிட்சை எழுதி முடித்த கையோடு அவன் பிராஜெக்ட் செய்த கம்பெனியின் பாம்பே கிளை இவனது திறமையை மெச்சி நேரடியாக வேலைக்கு அழைத்திருந்தது. வேலைக்குச் சேர்ந்து ஒரு வருடம் முடியப் போகிறது. மாதம் பிறந்ததும் சுளையாய் மூவாயிரத்து ஐநூறு ரூபாய் சம்பளம் வாங்குகிறான்.

பணம் புழங்க ஆரம்பித்ததும் உறவினர்கள் தங்கள் பெண்ணை பரத்துக்கு முடிக்க முண்டியடித்துக்கொண்டு வருகிறார்கள்.

தங்கையின் கல்யாணம் முடிந்த கையோடு வேலையை விட்டுவிட்டு தன்னோடு வந்து தங்கச் சொல்கிறான் பரத். முதலில் பூமாவின் கல்யாணம் நல்லபடியாய் முடியட்டும்.

இன்று மதியம் சத்திரத்துக்குப் போய்விட வேண்டும். மாப்பிள்ளை வீட்டார் நேரடியாக அங்கே வந்து இறங்கி விடுவார்கள்.

நகைகள், துணிமணிகள், பாத்திரம் பண்டங்கள், பட்சண வகைகள் என வகைவாரியாக பிரித்து வைத்துக்கொண்டிருந்தாள் ராஜம்.

ஒரு கைவண்டியையும் ரிக்‌ஷா இரண்டையும் அழைத்து வந்தார் பரத்தின் மாமா – ராஜத்தின் பெரிய அண்ணா. தன் மகளை எப்படியாவது பரத்துக்கு முடிக்க வேண்டும் என துடியாய் துடித்துக்கொண்டிருக்கிறார்.

சீர்வரிசைகள் அமர்க்களமாய் மன்னியின் பாதுகாப்போடு சத்திரத்தில் போய் இறங்கின. ராஜத்தின் மூத்த மைத்துனர் சடகோபன் முன்பே அட்வான்ஸ் கொடுத்திருந்த சமையல் பார்ட்டியை பதவிசாய் அழைத்து வந்தார். நாத்தனார் நாகலஷ்மி சத்திரத்துத் தாழ்வாரம் அலம்பித் துடைத்து இழைக்கோலம் போட்டாள். வாசல் பெருக்கி படிக்கோலம் போட்டு காவி அடித்தாள்.

ராஜத்துக்கு ஆச்சர்யமாக இருந்தது. எங்கிருந்து இத்தனை பொறுப்புணர்ச்சி வந்தது இவர்களுக்கு? கையில் காசில்லாமல் கரை சேர்க்க மூன்று குழந்தைகளுடன் துணையில்லாமல் தனித்து தவித்தபோது ஏன் என்று கேட்க நாதியில்லை. இன்று யாரோ கல்லால் அடித்ததால் கலைந்த காக்காய் கூட்டம்போல் இங்கு வந்து சூழ்ந்துகொண்டு சொல்லாமலேயே வேலைகளை பங்கீடு செய்துகொண்டு நம்ப முடியவில்லை. மனிதர்களுக்கு இல்லாத மதிப்பும் மரியாதையும் அலங்கரித்து அச்சடிக்கப்பட்ட காகிதத்துக்கா?

ஒரு வார வேலை பளுவும் நல்லபடியாக முடிய வேண்டுமே என்கின்ற மன உளைச்சலும் சேர்ந்துகொண்டு கண்களை இருட்டியது. வித்யாவை அழைத்து சூடாக ஒரு டம்ளர் பால் வாங்கிவரச் சொல்லிக் குடித்தாள். பரத் வெளிவேலைகளில் தீவிரமாக இருந்தான்.

இதுவரை ஆன செலவே ஐம்பதாயிரத்தைத் தொடுகிறது. இன்னும் இருக்கிறது. மாப்பிள்ளை அழைப்புக் காருக்குச் சொச்சம் கொடுத்தாக வேண்டும். சத்திரம் வாடகை, சமையல் பார்ட்டிக்கு பாக்கிப் பணம்… தலையைச் சுற்றிக்கொண்டு வந்தது ராஜத்துக்கு.

சம்மந்தி வீட்டார் நல்ல மாதிரிதான். வரதட்சணையாக ஒரு பைசா எதிர்பார்க்கவில்லை. ‘உங்க பெண்ணையும் நீங்க கஷ்டப்பட்டுத்தான் படிக்க வைக்கிறீர்கள். செலவு செய்துதான் வளர்க்கிறீர்கள். அப்புறம் என்னத்துக்கு வரதட்சணை?’ என்று நாசூக்காகச் சொன்னார்கள். ஆகும் செலவில் பாதியை ஏற்றுக்கொள்வதாகக் கூடச் சொல்லி இருக்கிறார்கள்.

ஆயிற்று! மாப்பிள்ளை வீட்டாரும் வந்து இறங்கிவிட்டார்கள். பூமாவை நன்கு அலங்காரம் செய்து மாப்பிள்ளை அழைப்பும் ஜாம்ஜாம் என்று முடிந்தது.

காசியாத்திரை, ஊஞ்சல் முதலிய சம்பிரதாயங்களும் முடிந்தன. முகூர்த்தத்துக்கு இன்னும் பத்து நிமிடங்களே இருந்தன.

பூமா கூரைப்புடவையில் இரண்டு தோழிகளின் அணைப்பில் மெதுவாக நடந்து வந்தாள். மாப்பிள்ளையின் பக்கத்தில் வந்து உட்கார்ந்துகொண்டாள். எத்தனை அழகு என் மகள்? என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கிறதே! ஜோடிப் பொருத்தம் பிரமாதம். பார்த்துப் பார்த்துப் பெருமிதம் கொண்டாள் ராஜம்.

திருமாங்கல்யத்தை தட்டில் வைத்து சபையில் ஒவ்வொருவரிடமும் ஆசி வாங்கிக்கொண்டே வந்தார் சாஸ்திரிகள். ராஜத்தின் முறை வந்தது. எதேச்சையாய் நிமிர்ந்துப் பார்த்தவர் கையை வெடுக்கென பின்னால் இழுத்துக்கொண்டார்.

‘ஏம்மா ஒதுங்கி இருக்கப்படாதோ!’ என்றார். தொடர்ந்து அடுத்தவரிடம் தட்டை நீட்டிக்கொண்டு நகர ஆரம்பித்த சாஸ்திரிகளை ஒரு கை தடுத்தது. நிமிர்ந்துப் பார்த்தார்.

சம்மந்திதான் தோள் துண்டை உதறிக்கொண்டு நின்றிருந்தார்.

‘நேரமாறது… என்ன வேணும் சொல்லுங்கோ…’

‘ஏன் சம்மந்தி வீட்டு அம்மாவிடம் ஆசி வாங்கலை?’

‘அவர் விதவை. சாஸ்திர சம்பிரதாயப்படி விதவையண்ட ஆசி வாங்கிறது அபசாரம்…’

‘அது சரி, மனைவியை இழந்த என்னிடம் மட்டும் ஆசி வாங்கினேளே அது மட்டும் அபச்சாரம் இல்லையா… ஒரு பெண் தன்  கணவனை இழந்துவிட்டால் அபச்சாரத்துக்கு உள்ளாகிவிடுவாளா? இதென்ன சாஸ்திரிகளே நியாயம்? ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதியா?’

‘அப்படித்தான் நம்ம சாஸ்திரம் சொல்றது’

‘ஆணுக்கு சமமா வேலைக்குப் போய் குடும்ப பாரத்தை இத்தனைநாள் தனியா தன் தோளில் சுமந்து வந்த அந்த அம்மாவிடம் ஆசி வாங்கலைன்னா அவங்க மனசு குளிரலைன்னா இந்த கல்யாண ஆர்பாட்டத்தில் அர்த்தமே இல்லை. மணமகளுக்குத் தாயாரான அந்த விதவைதான் அவளை வளர்த்து, படிக்க வைத்து, உத்தியோகமும் வாங்கிக்கொடுத்தார். பெற்ற மனதின் ஆசி இருந்ததால்தானே என் மருமகள் சிறக்க முடிந்தது. முதலில் திருமாங்கல்யத்தை அவரிடம் நீட்டி ஆசி வாங்குங்கோ, அப்பத்தான் இந்த கல்யாணம் நடக்கும்’

சபை மெளனத்தில் சூழ்ந்தது.

சம்மந்தியை நோக்கி இருகரம் கூப்பினாள் ராஜம். கண்களில் ஆனந்தக் கண்ணீர். இதுநாள் வரை தான் பட்டக் கஷ்டங்கள் நொடிப் பொழுதில் மனதைவிட்டு விலகியது போல் உணர்ந்தாள். மகளின் பிரகாசமான எதிர்காலம் கண்களில் நிழலாட கெட்டி மேளம் முழங்கிக்கொண்டிருந்தது.!

அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
செப்டம்பர் 8, 2019

14-11-1990 ம் ஆண்டு சாவி இதழில்
வெளியான  சிறுகதை ‘நியதிகள் மாறலாம்’ 
அக்டோபர் மாத சிறுகதைப் போட்டியில் ரூபாய் 250 பரிசு பெற்றது

 

(Visited 1,375 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon