ஹலோ with காம்கேர் – 6
ஜனவரி 6, 2020
கேள்வி: உங்கள் காதல் அனுபவங்களை எந்த வயதில் உங்கள் பிள்ளைகளிடம் சொல்லலாம்?
சென்னையில் பல கிளைகள் உள்ள ஒரு பள்ளியில் எட்டாம் வகுப்புப் படிக்கும் ஒரு மாணவியை அழைத்துக்கொண்டு அவள் அம்மா என்னிடம் ஆலோசனை பெற வந்திருந்தார்.
கவுன்சிலிங் செய்வது என் முழுநேர வேலை இல்லை. முழு நேர சேவையும் இல்லை. ஆனாலும் யாரேனும் ஏதேனும் ஆலோசனை கேட்டால் போனிலேயே எனக்குத் தெரிந்ததை சொல்லிவிடுவது என் வழக்கம்.
இந்த மாணவிக்கு போனில் ஆலோசனை வழங்குவது சாத்தியமில்லாத ஒரு விஷயம். உணர்வு சம்மந்தப்பட்டது என்பதால் அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்து வரச் சொல்லி இருந்தேன்.
மாணவியின் பிரச்சனை காதல்.
முதல் கால் மணி நேரம் அந்த மாணவி வாயைத் திறக்கவே இல்லை. அன்பாக, பாசத்தோடு, காமெடியாக என எப்படி முயற்சித்தும் என்னை ஒரு விரோதி போலவே பார்த்துக்கொண்டிருந்தாள்.
இத்தனைக்கும் அவளுடைய பிரச்சனையை நான் கேட்கவே இல்லை. ஏனெனில் அது குறித்து அவள் அம்மா ஏற்கெனவே சொல்லி இருந்தார்.
அவள் வகுப்பு மாணவன் ஒருவன் இவளுக்கு காதல் கடிதம் கொடுத்தது. இவள் தோழிகள் இவள் காதலை ஊக்கப்படுத்தியது. சினிமாவில் வருவதுபோல அவ்வப்பொழுது இருவரும் எதிர் எதிரே வரும்போது ஏதோ செயற்கரிய செயலை செய்வதைப் போல சிரித்து மகிழ்வது, அந்த மாணவன் தினமும் இவளுக்குப் பிடித்த சாக்லெட் கொடுப்பது, இவள் அவனுக்குப் பிடித்த டிபனை எடுத்து வந்து கொடுப்பது என மெல்ல மெல்ல அவளை அறியாமலேயே அவள் படிப்பில் கவனம் இழந்துவந்தாள்.
அந்த மாணவன் படிப்பில் வெகு சுமார். அந்த பள்ளியில் முக்கியப் பிரமுகரது மகன் வேறு. அவன் எந்த பாதிப்பும் இல்லாமல் வளைய வந்தான்.
இடையூறு கொடுப்பவன் நிம்மதியாக அதே பள்ளியில் படித்துக்கொண்டிருக்க, பள்ளி நிர்வாகம் இவளை அதே பள்ளியின் வேறு கிளைக்கு மாறிச் செல்ல உத்தரவிட்டது.
அது சரி. நான் என்ன அறிவுரை சொல்லி அந்த மாணவியை திசைதிருப்பினேன் தெரியுமா?
அதை நான் சொல்லவில்லை. அந்த மாணவி என்னிடம் வந்துவிட்டுச் சென்ற பிறகு அவள் அம்மா போன் செய்து சொன்ன தகவலில் இருந்து நீங்களே புரிந்துகொள்ளுங்கள்.
‘மேடம், என் மகளுக்கு உங்களை ரொம்ப பிடிச்சு போச்சு மேடம்… அவளிடம் சும்மா மறைமுகமா கேட்டேன்… அந்த மேடம் தன் சுயபுராணத்தைப் பேசி போரடிச்சுட்டார் இல்ல…’ என்று அவர் சொன்னபோது அவரது மகள், ‘இல்லைம்மா… தன் சுயபுராணத்தைச் சொன்ன மாதிரி எனக்குத் தோணலைம்மா… அவங்க தன்னம்பிக்கையைப் பற்றி… அவங்க அப்பா அம்மாவைப் பற்றி… புத்தகம் படிப்பது பற்றி…எழுதுவது பற்றி… என ரொம்ப அழகா கதைபோல சொன்னாங்க… ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது… அதுமாதிரி பிசினஸ் எப்படி ஆரம்பிச்சாங்க அதில் என்னென்ன பிரச்சனை வந்தது இதுமாதிரி விஷயங்களை சொன்னது ரொம்ப ஆச்சர்யமா இருந்தது… எனக்கும் அவங்களைப் போல வரணும்மா…’ என்றாளாம்.
சில விஷயங்களுக்கு பெரிய ஆலோசனை எல்லாம் தேவையில்லை. சின்ன சின்ன செதுக்கல்கள் போதுமானது. அதைத்தான் நான் செய்தேன்.
போனில் அவள் அம்மாவிடம், ‘நீங்கள் திறந்த மனதுடன் இருப்பதாக நினைத்துக்கொண்டு உங்கள் காதல் கதையை உங்கள் மகளின் இரண்டும்கெட்டான் வயதில் அப்படியே சொன்னதால் அம்மாவே இப்படித்தான் இருந்திருக்கிறார், நாமும் அப்படி இருக்கலாமே என அதுவே உங்கள் மகளுக்கு ஒரு தூண்டுகோலாகிவிட்டது’ என அவர் செய்த ஒரே ஒரு தவறை மட்டும் சொன்னேன்.
நாம் நம் பிள்ளைகளிடம் நண்பர்களாக இருக்க வேண்டியதுதான். ஏற்கெனவே மாணவர்களை திசை திருப்ப சமுதாயம், சினிமா, சமூக வலைதளங்கள் என ஆயிரம் காரணிகள் இருக்கும்போது பெற்றோரின் காதல் கதைகள் அவர்களை திசை திருப்ப ஆயிரத்து ஒன்றாவது காரணியாகிவிடுகிறது.
எனவே ஜாக்கிரதை. உங்கள் பிள்ளைகளிடம் சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டிய வயதில் சொல்லுங்கள். நீங்கள் சாதித்த விஷயங்களை அவர்களின் சின்ன வயதில் இருந்தே பெருமை பொங்க பூரிப்புடன் சொல்லத் தொடங்குங்கள்.
காதல் செய்வதும் திருமணம் செய்வதும் சாதனைகள் அல்ல. அவை எல்லோர் வாழ்க்கையிலும் நடக்கின்ற சாதாரண விஷயம்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software