ஹலோ with காம்கேர் – 13
ஜனவரி 13, 2020
கேள்வி: நம் குறித்த பாராட்டுகள் நம்மை என்னவெல்லாம் செய்யும்?
அரிசியில் பூச்சி வராமல் இருப்பதற்காக வசம்பு போட்டு வைப்பது வழக்கம். நாட்டு மருந்து கடையில் வசம்பு வாங்கினோம். அதை ஒரு செய்தித்தாளில் கட்டிக்கொடுத்தார் கடைக்காரர்.
எதைப் பார்த்தாலும் படிக்கும் ஆர்வம் உள்ள நான் அதை மட்டும் விட்டுவிடுவேனா?
‘நீங்கள் தைரியசாலி. அன்பானவர். பண்பானவர். நேர்மையானவர். அதர்மத்தைக் கண்டு பொங்குபவர். எந்த வம்புக்கும் செல்ல மாட்டீர்கள். ஆனால் வந்த வம்பை விடமாட்டீர்கள்… இப்படியாக ராசிபலன் எழுதப்பட்டிருந்தது. ஆனால் அந்த காகிதம் செய்தித்தாளின் ஒரு சிறிய பகுதியாக இருந்ததால் அது எந்த ராசிக்கு எழுதப்பட்டிருந்தது என்ற விவரம் தெரியவில்லை.
ஆனால் வெகு சுவாரஸ்யமாக இருந்தது. இதைப் படிக்கும் யாருக்குமே அது தன் ராசிக்காக எழுதப்பட்டிருக்கிறதோ என்று எண்ணத் தோன்றும். காரணம் பாராட்டி புகழ்ந்து எழுதப்பட்டிருந்த தகவல்கள்.
வார்த்தைகளின் வலிமைக்கு உண்மை சம்பவம் ஒன்றை சொல்கிறேன்.
என் உறவினர் ஒருவர். படித்தவர். நல்ல பதவியில் இருக்கிறார். சொந்த வீடு, கார். ஒரு மகன், ஒரு மகள். மனைவியும் முனைவர் பட்டம் பெற்று கல்லூரி பேராசிரியர்.
எல்லாம் இருந்தும் அவர் தன் பிள்ளைகளிடம் பாசமாக பேச மாட்டார். இயந்திரம்போல செயல்படுவார். குழந்தைகளிடம் ஜாலியாக பேசிப் பார்த்ததே இல்லை. எப்போதுமே மிலிட்டரி கட்டுப்பாடுதான். ஆனால் அவர்களுக்குத் தேவையானதை செய்வதில் எந்த குறையும் வைக்க மாட்டார்.
ஐந்தாம் வகுப்பு படிக்கும் அவரது மகன் பள்ளியில் தந்தையர் தினத்துக்கு அப்பாவை பற்றி எழுதித்தரச் சொல்லி இருக்கிறார்கள்.
அதை மதிப்பீடு செய்து பரிசும் கொடுத்து அவர்கள் எழுதிய கடிதத்தை லேமினேட் செய்து அவரவர்கள் அப்பாவுக்கு பரிசாகக் கொடுக்கச் சொல்லி ஊக்கப்படுத்தியுள்ளார்கள்.
இவரது மகன் என்ன எழுதியிருந்தான் தெரியுமா?
என்னுடைய அப்பா மிகவும் அன்பானவர். பாசத்தைக் கொட்டுவார். தினமும் அலுவலகத்தில் இருந்து வரும்போதே என் பெயரைச் சொல்லி அழைத்துக்கொண்டே வந்து என்னைக் கட்டிக்கொள்வார். தினமும் எனக்குப் பிடித்த இனிப்பை வாங்கி வருவார். தினமும் குதூகலமாக கதைகள் பேசுவார். எனக்கு என்ன பிடிக்குமோ அதை மட்டுமே செய்வார். அம்மா என்னை திட்டும்போது அப்பாதான் எனக்கு சப்போர்ட் செய்வார். தினமும் தூங்கும்போது என்னை தட்டிக்கொடுத்துக்கொண்டே தூங்க வைப்பார். எனக்கு அப்பாவிடம் பிடித்ததே அப்பாவின் சிரித்த முகம்தான். கடுமையாக திட்டி பார்த்தே இல்லை…. இப்படியாக அவன் மனதில் அவன் அப்பா எப்படி இருக்க வேண்டும் என அவன் நினைக்கிறானோ அதை அப்படியே எழுதியிருந்தான்.
அவன் மழலையில் எழுதியிருந்ததை என்னுடைய வார்த்தைகளில் கொடுத்துள்ளேன்.
இதை அவன் அப்பா படித்துவிட்டு வாய்விட்டு அழுதுவிட்டதை அவரே ஒருமுறை எங்களிடம் சொல்லியிருக்கிறார். தன்னிடம் இல்லாத குணங்களை எழுதியதன் மூலம் தன்னுடைய ஏக்கங்களை வார்த்தைகளில் வடித்த தன் மகனின் அன்பில் உருகி கரைந்து மெல்ல மெல்ல மாறி அவன் விரும்பிய அன்புத் தந்தையாகிப் போனார்.
தன்னிடம் இல்லாத நல்ல குணங்களைப் பாராட்டிச் சொல்லும்போதே மனம் இத்தனை குதூகலம் அடைகிறதே. உண்மையிலேயே நாம் நல்ல குணநலன்களுடன் பண்புடன் இருந்துவிட்டால் அந்த உணர்வு எத்தனை புத்துணர்வையும் ஊக்கத்தையும் நம் உடலுக்குள்ளும் மனதுக்குள்ளும் புகுந்து நம்மை நல்வழிப்படுத்திச் செல்லும்.
யோசிப்போமே!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software