ஹலோ with காம்கேர் – 12
ஜனவரி 12, 2020
கேள்வி: சமீபத்தில் இலக்கியம், சின்னத்திரை, வெப்சீரிஸ் இவற்றில் என் இதயத்தைத் தொட்ட காட்சிகளை சொல்லட்டுமா?
பெண்ணியம் குறித்து வாய் நிறைய பேசுபவர்கள் வீட்டில் தன் மனைவியின் அடிப்படை உணர்வுகளைக்கூட புரிந்து வைத்திருப்பதில்லை. சிகரெட் மதுவால் வாழ்க்கையை தொலைத்த மனிதர்கள் குறித்து ஆய்வு செய்து களப்பணி செய்யும் எழுத்தாளர்கள் நேரம் கிடைக்கும்போதெல்லாம் புகைப்பதையும் பார்க்கலாம்.
தங்கள் வாழ்க்கைக்கும் எழுத்துக்கும் இத்தனை பெரிய இடைவெளியை வைத்துக்கொண்டு எழுதுபவர்களின் எழுத்துக்கு எந்த அளவுக்கு ஜீவன் இருக்கும்.
‘ஜீவனை எல்லாம் ஏன் மேடம் எழுத்தில் தேடுகிறீர்கள்… எழுத்து பிடித்திருந்தால் வாசியுங்கள்… இல்லை என்றால் கடந்து செல்லுங்கள்…’ என்று சொன்ன இலக்கியத்துறை நண்பரின் முகம் இன்றும் நினைவிருக்கிறது.
சரி எழுதுபவர்கள்தான் இப்படி என்றால், வாசிப்பாளர்கள் நிலை அதைவிட பரிதாபமாக உள்ளது.
எனக்குத் தெரிந்து குணத்திலும் பண்பிலும் சீர்கெட்ட ஒருவர் நிறைய வாசிப்பார். வீடுகொள்ளாப் புத்தகங்கள். ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும் சுமார் ஐயாயிரம் ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கிக் குவிப்பார்.
நிறைய புத்தகங்கள் வாசிப்பவர்களுக்கு மனசு விசாலமாக வேண்டுமல்லவா என நான் யோசித்திருக்கிறேன். ஆனால் வாசிப்பாளருக்குள்ளும் அப்படி எல்லாம் எந்த மேஜிக்கும் நிகழ்வதில்லையாம்.
‘படித்து, படித்ததில் உள்ள கருத்துக்களை உள்வாங்கினால் மட்டுமே மனசு விசாலமாகும். படிப்பதையும் அதிலுள்ள கருத்துக்களையும் தான் எழுதும் படைப்புகளுக்கும், மேடையில் பேசுவதற்கும் பயன்படுத்தும் ஒருவரின் மனது எப்படி விசாலமாகும்’ என்றார் மற்றொரு இலக்கியவாதி.
எழுதுபவர்களும் சரி, வாசிப்பவர்களும் சரி எழுத்தை கருவியாக பயன்படுத்துகிறார்களே தவிர சமுதாய சீர்த்திருத்தத்துக்கு எல்லாம் பயன்படுத்தவில்லை என்ற உண்மை புரிந்தபோது எழுத்தின் மீது கொஞ்சம் பரிதாபமே உண்டானது. விதிவிலக்குகள் உண்டு.
கலர்ஸ் தொலைக்காட்சியில் நடிகை ராதிகா நடத்தும் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் நெஞ்சை உருக்கும் ஒரு காட்சி.
பிழைப்பிற்காக முதுகில் சாட்டையால் அடித்து தொழில் செய்யும் குடும்பத்தில் இருந்து ஈஸ்வரி என்ற பெண் கலந்துகொண்டு 12,50,000 ரூபாய் ஜெயித்தார்.
அவரிடம் ராதிகா ஒரு கேள்வி கேட்டார்.
‘முதுகில் சாட்டையால் அடித்துக்கொள்ளும்போது வலிக்காதா?’
அதற்கு அந்த பெண், ‘முதன் முதலில் அடித்துக்கொள்ளும்போதுதான் மேடம் வலிக்கும். தினமும் அதையே செய்து வருவதால் மரத்துப்போய்விடும். வலியே தெரியாது…’ என்று கூறி அனைவரது மனதையும் உருக வைத்தார்.
குயின் – இரும்பு மனுஷி டாக்டர் ஜே.ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கையை விவரிக்கும் வெப்சீரிஸில் அவர் பேட்டி கொடுப்பதைப் போல எடுத்துள்ளார்கள். ரம்யாகிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடித்துள்ளார்.
பேட்டியில் அவர் தன் வாழ்க்கையில் நடந்த ஓர் அற்புதத் தருணத்தைக் குறிப்பிட்டு ‘அது ஓர் அழகிய கனவு. திரும்பவும் அந்த கனவை அதே அழகுடன் காணவே முடியாது’ என ரசனையுடன் சொல்லுவார்.
மற்றொரு காட்சியில் அவரை திருமணம் செய்துகொள்வதாக மிகப்பெரிய நம்பிக்கைக் கொடுத்து ஏமாற்றிய இயக்குநருடன் பழகிய காலங்களை மறக்க முடியாமல் அவை கனவுகளில்கூட வந்து தொந்திரவு கொடுக்க தற்கொலை செய்யும் முயற்சியை எடுத்ததாகச் சொல்வார்.
அப்போது அவரை பேட்டி எடுத்தவர் ‘நீங்கள்தானே சொன்னீர்கள் ஒரு கனவை திரும்ப காணவே முடியாது என’ என்று கேட்பார். அப்போது அவர் ‘நல்ல கனவுகளை திரும்பக் காண இயலாது… ஆனால் கெட்ட கனவுகள் திரும்பத் திரும்ப வந்து தொந்திரவு செய்யும்…’ என்று சொல்வார்.
இந்த காட்சி எப்போது நினைவுக்கு வந்தாலும் நெகிழ்ச்சிதான்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software