ஹலோ with காம்கேர் – 18
ஜனவரி 18, 2020
கேள்வி: உங்கள் திறமைக்கும் உழைப்புக்கும் அங்கீகாரமும் விருதுகளும் போதுமான அளவு கிடைக்கிறதா?
அங்கீகாரம், புகழ், பெருமை, விருதுகள் எல்லாமே திகட்டத் திகட்ட கிடைத்து வருகின்றன.
பொதுவாக காலையில் ஃபேஸ்புக்கில் ஹலோ காம்கேர் பதிவு எழுதி முடித்தபின்னர் அந்த பக்கம் எட்டிப் பார்ப்பதில்லை. ஆனால் நேற்று முழுவதும் ஃபேஸ்புக்கில்தான். காரணம் கிரிஜா ராகவன் மேடம் என் சிறப்புகளை எழுதி எனக்கு அரசு விருதுகளும், பிரபலங்கள் புழங்கும் புத்தகக்கண்காட்சி மேடைகளில் நான் பேச்சாளராக அழைக்கப்படாதது குறித்தும் தன் உண்மையான ஆதங்கத்தைப் பதிவிட்டிருந்தார். அதற்கு நான் பதிலளிக்கும் வகையில் ஒரு பதிவை எழுதி இருந்தேன். அதற்கு வந்த பின்னூட்டங்களை படிப்பதற்கும் பதில் கொடுப்பதற்கும் நேற்றைய பொழுது கணிசமான நேரத்தை விழுங்கியது.
ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டும். அரசாங்க விருதுகளாகட்டும் பிற அமைப்பு சார்ந்த விருதுகளாகட்டும் நாம்தான் விண்ணப்பிக்க வேண்டும். சில விருதுகளுக்கு நாம் விண்ணப்பிப்பதுடன் பிறரும் நாமினேட் செய்ய வேண்டியிருக்கும். அதுபோல சிறந்த புத்தகங்களுக்கான விருதுகளுக்கும் நாம்தான் புத்தகங்களை அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
இதையெல்லாம் நான் செய்வதே இல்லை என்ற உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்?
பெரும்பாலான அரசாங்க விருதுகளும் அமைப்பு சார்ந்த கெளரவங்களும் தானாக கூப்பிட்டு கொடுக்கப்படுவதில்லை. விருது வாங்க நமக்கும் ஆசை இருக்க வேண்டும். அதற்கு விண்ணப்பிப்பதில் தொடங்கி தொடர்ச்சியான செயல்பாடுகளை முனைப்புடன் செய்தால் மட்டுமே நாம் கவனிக்கப்படுவோம்.
தனியார் அமைப்புகள்தான் தாங்களாகவே தேர்ந்தெடுத்து விருது கொடுப்பார்கள். அதிலும் பணம் கொடுத்தால் விருதளிக்கும் அமைப்புகளும் பிரபலம்.
இதிலெல்லாம் கவனம் செலுத்துவதற்கே நேரமும் இல்லாமல் ஆர்வமும் இல்லாமல் ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என என் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறேன்.
எந்த மேடையில் நான் பேச வேண்டும், எப்படிப்பட்ட கெளரவம் எனக்குக் கிடைத்தால் நிம்மதியான வாழ்வை வாழ முடியும், எப்படிப்பட்ட அங்கீகாரம் கிடைத்தால் வாழ்நாள் சந்தோஷம் கிடைக்கும் என்பதில் 100 சதவிகித தெளிவு இருப்பதால் நானாக ‘ஒதுக்கும்’ (Note this point) மேடைகளும், அங்கீகாரங்களும் தான் அதிகம் என்பதும் பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை.
சில விஷயங்களை தெளிவுபடுத்தவே இந்த பதிவு.
என்னுடைய துறை தொழில்நுட்பம். அதில் நான் முன்னணியில் இருக்கிறேன். சாஃப்ட்வேர் தயாரிப்புகள், அனிமேஷன் படைப்புகள், ஆவணப்படங்கள் இயக்குதல், மொபைல் ஆப் வடிவமைத்தல், இ-புத்தகங்கள் வெளியிடுதல் என எல்லாவற்றிலுமே எங்கள் நிறுவனம் முதன்மையாக உள்ளது.
அது சார்ந்த புகழையும், அங்கீகாரத்தையும், விருதுகளையும், பிரபலம் என்ற பட்டத்தையும் தாராளமாகவே பெற்று வைத்துள்ளேன். ஆனால் அவை எதையுமே என் தலைக்குக் கொண்டு செல்லாமல் ஆக்க சக்தியாக இதயத்துக்குள் பொத்தி வைத்து பாதுக்காத்து வருவதால் அவை வெளியே தெரிவதில்லை. அவ்வளவுதான்.
நம் மக்கள் கம்ப்யூட்டரை பார்க்கவே பயந்துகொண்டிருந்த காலகட்டத்தில் சாஃப்ட்வேர் நிறுவனம் தொடங்கி தமிழகமெங்கும் தொழில்நுட்பத் தேவை எங்கிருக்கிறதோ அங்கெல்லாம் தொழில்நுட்பத்தை கொண்டு சேர்த்ததில் எனக்கும் எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனத்துக்கும் பெரும்பங்கு உண்டு. என் நிறுவனத்தின் வயது 27.
அந்தந்த காலகட்டத்தில் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, இணையம் உட்பட அத்தனை மீடியாக்களும் என் திறமைகளை வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி கொண்டாடின. இன்றும் அப்படியே தொடர்கிறது.
என் 23 வயதில் என் முதல் பத்திரிகை நேர்காணல் தினமலரில். அதைத்தொடர்ந்து இன்று வரை பத்திரிகை உலகம் கொண்டாடி வருகிறது.
என் 24 வயதில் நான் எழுதிய 3 கம்ப்யூட்டர் புத்தகங்கள் சென்னை பல்கலைக்கழகத்தில் பாடதிட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து இன்றுவரை அவ்வபொழுது நான் எழுதும் தொழில்நுட்பப் புத்தகங்கள் வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் தேர்வாகி வருகின்றன. ஆக, பல்கலைக்கழகங்களும் கல்விக்கூடங்களும் கொண்டாடி வருகின்றன.
என் 26 வயதில் ஜெயா டிவி காலைமலரில் என் முதல் தொலைக்காட்சி நேர்காணல். அதைத்தொடர்ந்து இன்றுவரை பல தொலைக்காட்சிகளில் நேர்காணல் மட்டுமில்லாமல் தொழில்நுட்ப நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகிறேன்.
என் 27 வயதில் வானொலி நேர்காணல். அதைத்தொடர்ந்து அவ்வப்பொழுது தினம் ஒரு குறள், தினம் ஒரு பழம், தினம் ஒரு தொழில்நுட்பம் என தொடர்நிகழ்ச்சிகள் வெளியாகத் தொடங்கின. அத்தனையும் எங்கள் நிறுவனத்திலேயே ரெகார்டிங் செய்யப்பட்டு என் இயக்கத்தில் வெளியாகின்றன.
என் 28 வயதில் முதல் பொது மேடை. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டேன். அதன்பிறகு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஏதேனும் ஒரு நிகழ்ச்சிக்கு பேச்சாளராக சென்று கொண்டிருக்கிறேன்.
என் 30 வயதில் என் புத்தகங்களையும் நாங்கள் தயாரித்த சாஃப்ட்வேர்களையும் வைத்தே ஆய்வு செய்து டாக்டரேட் பட்டம் பெறத் தொடங்கினார்கள்.
என் 32 வயதில் ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளையை தொடங்கினேன். அதன் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி வேலைவாய்ப்புக்கு உதவி வருகிறேன்.
வருடா வருடம் ஏதேனும் ஒரு விருது கிடைத்துவிடும். நானாக செல்லாமல் என் திறமைகளை நோக்கி வந்த விருதுகளை மறுக்காமல் வாங்கிக்கொண்டிருந்தேன். இப்போது அதையும் குறைத்து வருகிறேன்.
2007 முதல் எங்கள் அறக்கட்டளை மூலம் வருடா வருடம் ‘ஸ்ரீபத்மகிருஷ்’ விருது அளிக்க ஆரம்பித்தேன். விருது வாங்கும் காலம் போய் விருது வழங்கும் அளவுக்கு என் வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொண்டுள்ளேன்.
எங்கு சென்றாலும் எனக்கு மட்டுமில்லாமல் என் பெற்றோருக்கும் எழுந்து நின்று மரியாதைகொடுக்கும் அளவுக்கு இந்த சமுதாயத்தில் எனக்கான இடத்தை பெற்று வைத்திருப்பதே மனநிறைவு.
அதுதான் என்னைப் பொருத்தவரை நிரந்தர அங்கீகாரம். பெருமை. விருது எல்லாமே!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software