ஹலோ with காம்கேர் – 19
ஜனவரி 19, 2020
கேள்வி: ‘தொழில்நுட்ப இலக்கியம்’ இலக்கியத்துறையினரால் ஒதுக்கப்படுகிறதா?
சமீபத்தில் நான் எழுதியிருந்த ஒரு ஃபேஸ்புக் பதிவில் தொழில்நுட்ப இலக்கியம் குறித்த போதுமான தெளிவு இலக்கியத்துறையினருக்கு இல்லாததால் தொழில்நுட்ப இலக்கியத்தின் மேல் கவனம் விழவில்லை என குறிப்பிட்டிருந்தேன்.
அந்தப் பதிவின் பின்னூட்டத்தில் ‘தொழில்நுட்ப இலக்கியம் என்றால் என்ன’ என்று நிறைய பேர் கேட்டிருந்தனர்.
என்னைப் பொருத்தவரை தொழில்நுட்ப இலக்கியத்தில் என்னுடைய பங்கு மிக அதிகம் என்றே சொல்ல வேண்டும். காரணம் தொழில்நுட்பத்தை பாடமாக எடுத்தபோது எங்கள் செட்தான் கம்ப்யூட்டர் சயின்ஸின் முதல் செட். அதாவது கல்வித் துறையிலேயே அப்போதுதான் கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ற பிரிவை அறிமுகப்படுத்தியிருந்தார்கள்.
கம்ப்யூட்டர் சயின்ஸில் இரட்டை பட்டம் பெற்றபோதும் சரி, சொந்தமாக காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனத்தை தொடங்கியபோதும் சரி, அதில் நாங்கள் உருவாக்கிய ஃபாண்ட்டுகள், சாஃப்ட்வேர்கள், அனிமேஷன்கள், இ-புத்தகங்கள் என எந்த ஒரு படைப்பானாலும் சரி அனைத்திலும் தொழில்நுட்பத் துறையில் என் முயற்சியே முதன் முயற்சியாக இருந்தது என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். (கர்வத்தில் சொல்லவில்லை. நான் செய்ததை எனது உழைப்பை வலியுறுத்திச் சொல்கிறேன். அவ்வளவே)
நான் இயங்கும் தொழில்நுட்பத்துறையில் புதுமைகளும் கண்டுபிடிப்புகளும் ஆராய்ச்சிகளுமாக இன்றுவரை அதே ஆர்வத்துடன் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறேன்.
சரி சரி விஷயத்துக்கு வருகிறேன்…
முதலில் இலக்கியம் என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்வோம்.
புனைவாகவோ, அபுனைவாகவோ எழுதப்படும் எழுத்துக்கள் இலக்கியம் என்ற பிரிவின்கீழ் வரும். ஆங்கிலத்தில் Literature என்பர்.
கற்பனையில் எழுதப்படுவது புனைவு. உண்மை சம்பவங்கள் நிகழ்வுகளை எழுதுவது அபுனைவு.
இலக்கு + இயம் = இலக்கியம்.
இலக்கு என்றால் நோக்கம், கொள்கை, இலட்சியம்.
இயம் என்றால் இயம்புவது, சொல்வது, வெளிப்படுத்துவது.
நாம் அறிந்த கருத்துக்களையும் நமக்குத் தெரிந்த உண்மைகளையும் ஒரு சம்பவம் அல்லது நிகழ்வு குறித்து நாம் உணர்ந்த உணர்வுகளையும் நம் எண்ண ஓட்டங்களையும் பிறருக்கு புரியும்படி எடுத்துக்கூற உதவுகின்ற ஒரு கருவி மொழி. அந்த மொழியைப் பேசுகின்ற மக்களின் கொள்கைகளையும் அவர்களது குறிக்கோள்களையும் எடுத்துச் சொல்வது இலக்கியம்.
வெவ்வேறு காலகட்டத்தில் வாழுகின்ற மக்களின் வாழ்க்கை முறைகளையும், அவர்கள் வாழ்கின்ற சமுதாயத்தின் கட்டமைப்புகளையும் எடுத்து இயம்புவதால் இலக்கியம் காலத்தின் / சமுதாயத்தின் கண்ணாடியாகிறது.
நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு போன்றவை சங்ககால மக்களின் அக வாழ்வையும், புறவாழ்வையும் பிரதிபலித்ததால் அவை சங்ககால இலக்கியங்கள் எனப்பட்டன.
அதை அடுத்த சங்கமருவிய காலத்து திருக்குறள், நாலடியார், நான்மணிக் கடிகை போன்றவை அறம் சார்ந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளித்ததால் அவை அற இலக்கியங்கள் எனப்பட்டன.
அடுத்து வந்த பல்லவர் காலம் பக்தி சார்ந்த விஷயங்கள் அதிகம் பேசப்பட்டதால் பக்தி இலக்கியங்கள் தோன்றின.
இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்தந்த காலத்தில் வாழ்ந்த மக்களையும் அவர்களது இயல்புகளையும் அவர்கள் வாழுகின்ற சமுதாயத்தையும் படம்பிடித்து காட்டுபவை இலக்கியம்.
அந்த வகையில் தொழில்நுட்பம் நம் நாட்டில் அறிமுகம் ஆன பிறகு தொழில்நுட்பம் குறித்தும், அதைப் பயன்படுத்தும் மக்களின் மனோபாவம் குறித்தும், அவர்கள் வாழுகின்ற சமுதாயம் குறித்தும் உருவாக்கப்படும் எழுத்துக்களும் படைப்புகளும் தொழில்நுட்ப இலக்கியத்துக்குள் வரும்.
தொழில்நுட்பத்தையும் இலக்கியத்தையும் இணைத்து நான் ப்ராஜெக்ட்டுகள் தயாரிக்கத் தொடங்கியபோது அதில் இரண்டு முக்கிய அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதாயிற்று.
ஒன்று என்ன ப்ராஜெக்ட் செய்கிறோமோ அது சார்ந்த விஷயங்களை தெரிந்துகொள்ளுதல். மற்றொன்று எந்த கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் ப்ராஜெக்ட்டுகளை செய்ய இருக்கிறோமோ அந்த தொழில்நுட்பத்தை அறிந்துகொள்ளுதல்.
உதாரணத்துக்கு கந்தர்சஷ்டி கவசத்தை அனிமேஷனில் உருவாக்கியபோது குழந்தைகளுக்கும் புரியும்படி அதற்கான விளக்கத்தை எழுதுவதற்காக அதன் பொருளை முழுமையாக ஆதாரத்துடன் தெரிந்துகொள்ள வேண்டியதாயிற்று. அத்துடன் அதை எந்த சாஃப்ட்வேரில் தயாரித்தால் சிறப்பான படைப்பாக உருவாக்க முடியும் என்றறிந்து அதில் வடிமைக்கும் நுட்பத்தை கற்க வேண்டியதாக இருந்தது.
அதுபோல திருவாசகத்திலுள்ள 51 பதிகங்களையும் 658 பாடல்களையும் பாடி அதன் பாடல் வரிகளையும் பதிக விளக்கத்தையும் இணைத்து பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள்கூட சுலபமாக கையாளக் கூடிய வகையில் சிறப்பான மல்டிமீடியா படைப்பாக உருவாக்கினோம். அப்போது திருவாசகம் குறித்து முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டியிருந்ததுடன், மல்டிமீடியா படைப்பாக கொண்டுவருவதற்கான தொழில்நுட்பம் குறித்தும் ஆய்வு செய்ய வேண்டியதாயிற்று.
அதுபோல நான் அறிந்துகொள்ளும் தொழில்நுட்பங்களை நான் ஆய்வு செய்து கண்டுபிடிக்கும் சாஃப்ட்வேர்களை அனுபவத்தில் கற்று உணர்பவற்றை அந்தந்த காலகட்டத்திலேயே புத்தகமாக நேரடி தமிழில் (மொழிபெயர்ப்பு அல்ல) எழுதிவந்ததால் இதுவரை 125 புத்தகங்களை எழுத முடிந்தது. தமிழில் மட்டுமல்ல ஆங்கிலம், இந்தி, கன்னடம் போன்ற பிற மொழிகளிலும் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதான் தொழில்நுட்ப இலக்கியம்.
தொழில்நுட்ப இலக்கியம் என்பது வெறும் தொழில்நுட்பம் சார்ந்த எழுத்து மட்டுமல்ல. ஆடியோ வீடியோ அனிமேஷன் இன்னபிற விஷயங்களையும் உள்ளடக்கிய அரிய பொக்கிஷம்.
தொழில்நுட்ப இலக்கியம் வளர்ந்தால் மட்டுமே பிற இலக்கியங்களை மக்களுக்குப் புரியும் வண்ணம் வெப்சீரியஸாகவோ, திரைப்படமாகவோ, முழுமையான அனிமேஷன் படைப்பாகவோ கொண்டுவர முடியும்.
இன்றைய தலைமுறையினருக்கு இலக்கியங்களை சுவாரஸ்யமான வடிவில் புரியும்படி எடுத்துச் சொல்வதற்கு தொழில்நுட்ப இலக்கியத்தால் மட்டுமே முடியும்.
தொழில்நுட்ப இலக்கியத்துறையில் இயங்கவும் சாதிக்கவும் நிறைய உழைப்பும் ஆழ்ந்த அறிவும் தேவை.
இத்தகைய சிறப்பு வாய்ந்த தொழில்நுட்ப இலக்கியம் இலக்கியத் துறையினரால் கண்டுகொள்ளப்படாமல் இருப்பது அவர்களின் அறியாமையையே.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
செய்தித்தாள் வடிவிலேயே படிக்கலாம்!
திருச்சி, தஞ்சை, வேலூர் தினமலர் – ஜனவரி 26, 2020 ஞாயிறு இதழில் வெளியாகியுள்ள இந்த கட்டுரையை
செய்தித்தாள் வடிவிலேயே வாசிக்க….JAN 26 2020 Dinamalar