ஹலோ with காம்கேர் – 42
February 11, 2020
கேள்வி: மிக இளம் வயதிலேயே நிறுவனம் தொடங்கிய உங்களுக்கு சவாலாக இருந்த விஷயம் எது?
கம்ப்யூட்டர் சயின்ஸில் இரட்டைப் பட்டம் பெற்று மிக இளம் வயதிலேயே சாஃப்ட்வேர் நிறுவனம் தொடங்கியதால் அப்போது என் நிறுவனத்தில் பணியில் இருந்தவர்களும் பெரும்பாலும் என் வயதினராகவே இருந்தனர்.
நான் தலைமைப் பொறுப்பில் இருக்க என் வயதில் உள்ளவர்கள் என்னிடம் பணிபுரிவது அவர்களின் ஈகோவை தட்டிப் பார்க்கத்தான் செய்தது.
‘டிரஸ் கோட்’ சொன்னால்கூட பின்பற்ற மறுக்கும் பிடிவாத மனோபாவத்துடனேயே இருந்தார்கள். தொழில்நுட்பம் தெரியாததால் பல முறை சொல்லிக்கொடுத்த பிறகும் புரியாத சூழல் உண்டாகும்போது சற்று குரலை உயர்த்தினாலே அழுதுவிடுவார்கள். பஞ்சாயத்துக்கு வீட்டில் இருந்து அப்பாவையோ அம்மாவையோ அழைத்து வந்துவிடுவார்கள். அவர்களும் பிள்ளைகள் மீதுள்ள பாசத்தில் புரிந்துகொள்ளாமல் பேசுவார்கள்.
இதில் ஆண் பெண் என்ற வித்தியாசம் எல்லாம் இல்லை. ஆண்களும் அழுதிருக்கிறார்கள். இன்று பெண்கள் தலைமையில் ஆண்கள் வேலை செய்வது சகஜமாகியிருக்கலாம். ஆனால் அன்று அதெல்லாம் நம் சமூகத்துக்குப் புதிதல்லவா.
பெண்களைப் பொறுத்தவரை, நம்மைப் போலவே ஒரு பெண் அதுவும் நம் சகவயதுள்ள ஒரு பெண் நிறுவன தலைவராக இருப்பதில் உளவியல் சிக்கல். ஆண்களைப் பொறுத்தவரை ஒரு பெண் தலைமையில் பணிபுரிய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதே என்ற தாழ்வுமனப்பான்மை.
இரண்டையும் ஜெயிப்பதுதான் எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது.
அப்போதுதான் நம் நாட்டில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பமும் மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்திருந்த காலகட்டம். ஆகவே கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் படித்தவர்களும் குறைவு.
என்ன ப்ராஜெக்ட் செய்வது என்பதில் இருந்து தொடங்கி, வேலைக்கு ஆட்கள் எடுப்பது அவர்களுக்கு சாஃப்ட்வேர் சார்ந்த பயிற்சி அளிப்பது என்னைச் சுற்றி இயங்கிக்கொண்டிருந்த உலகில் தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது என எனக்கான பாதையை நானேதான் போட்டுக்கொண்டே முன்னேற வேண்டியிருந்தது.
இத்துடன் நித்தமும் நானும்கூட தொழில்நுட்பம் சார்ந்து என்னை அப்டேட் செய்துகொண்டே இருக்க வேண்டியிருந்தது. நானும் கற்றுக்கொண்டு மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுத்துக் கொண்டு எனக்கான உலகை செதுக்கிக்கொண்டே வந்தேன்.
கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், மளிகை கடைகள், ஓட்டல்கள், சிறு வியாபாரிகள் என அனைவரையும் கம்ப்யூட்டரை வாங்கச் செய்வது நாங்கள் அவர்களுக்காக தயாரிக்கும் சாஃப்ட்வேர்களை இலவசமாக இன்ஸ்டால் செய்வது அவர்களுக்கு அதைப் பயன்படுத்த பயிற்சி கொடுப்பது அந்த சாஃப்ட்வேர் அவர்களுக்குப் பிடித்திருந்தால் வாங்கச் செய்வது என மெல்ல மெல்ல எனக்கான பாதையை செப்பனிட்டுக்கொண்டே வந்தேன்.
இன்று அது ‘காம்கேர் சாப்ஃட்வேர்’ என்ற பிரமாண்டமான சாம்ராஜ்ஜியமாக உருவாகியுள்ளது.
இன்று சவால்களை எல்லாம் தாண்டி வந்துவிட்டேனா என கேட்கிறீர்களா? சவால்கள் காலகட்டங்களுக்கு ஏற்ப மாறியுள்ளது அவ்வளவுதான்.
அதே உலகம். அன்று தொழில்நுட்பத்துக்கு பழகவில்லை. இன்று தொழில்நுட்பத்துக்கு பழகியுள்ளது. இது ஒன்றில்தான் மாற்றம். மற்றபடி மனிதர்கள் அப்படியேத்தான் இருக்கிறார்கள்.
இன்றைய இளம் தலைமுறையினரிடம் மிகவும் கவனமாக பேச வேண்டியுள்ளது. வீட்டில் பொத்தி பொத்தி வளர்க்கப்படுவதால் ‘எங்கள் அப்பா அம்மா கூட எங்களை இப்படி கடிந்துகொண்டதில்லை’ என சிறுபிள்ளைபோல கண்ணீர்விடுபவர்களாகவே இருக்கிறார்கள். நாம் கொஞ்சம் கடுமையாக பேசினாலோ அல்லது நடந்துகொண்டாலோ தவறான முடிவுகளைக்கூட எடுக்கும் பலவீனமான மனோபாவத்தில்தான் வளர்கிறார்கள்.
நான் படித்தது கம்ப்யூட்டர் சயின்ஸ். இன்று உளவியலில் டாக்டரேட் பட்டம் பெற்றதை ஒத்த அறிவைப் பெற்றது நான் வளர்த்தெடுத்துள்ள என் ஐ.டி நிறுவனத்தினால் என்று ஆணித்தரமாகச் சொல்லலாம்.
தலைமைப் பொறுப்பு என்பது சுற்றுயுள்ளவர்களுக்கு கிரீடமாகத் தோன்றலாம். ஆனால், தூங்கும்போதும் அதை தலையில் சுமந்துகொண்டே தூங்க வேண்டும் என்பது எத்தனை பேருக்கு புரியும்.
சாம்ராஜ்ஜியம் உருவாக்கும் கனவிருந்தால் சுமைகள் அத்தனையும் சுகமானதே. குறிப்பாக எனக்கு!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
என் 22 வயதில் இருந்து இன்றுவரை…
அத்தனை பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, இணையம், யு-டியூப் நேர்காணல்களிலும்
என்னிடம் கேட்கப்படும் கேள்வி இது.