ஹலோ with காம்கேர் – 80
March 20, 2020
கேள்வி: புகழ்ச்சிக்கும் பாராட்டுக்கும் என்ன வித்தியாசம்?
நேர்மையற்றவர்களாக இருப்பதைவிட தான் மிகவும் நேர்மையனவன்(ள்) என்று அடிக்கடி சொல்லிக்கொள்ளும் நபர்கள்தான் கொரோனோ வைரஸைவிட ஆபத்தானவர்கள்.
நான் நேர்மையானவன்(ள்) என்று சொல்லி சொல்லி பிறர் மனதில் நம்மைப் பற்றிய ஒரு பிம்பத்தை உண்டாக்கிவிட்டால் ஓரிரு தவறுகள் செய்யும்போது தப்பித்துக்கொள்ளலாமே. இது ஒரு ஆபத்தான யுக்தி. ‘அவரா ரொம்ப நேர்மையானவராயிற்றே… அவர் செய்திருக்க வாய்ப்பில்லையே’ என மற்றவர்கள் சொல்லும் அளவுக்கு பிறர் மனதில் தன் பிம்பத்தை பதிய வைப்பதில் சமர்த்தர்கள் இவர்கள்.
ஒருசிலர் நேரில் பார்க்கும்போது நம்மை ‘ஆஹா ஓஹோ இந்திரனே சந்திரனே உங்களைப் போல் உண்டா’ என புகழ்வார்கள். பொதுஇடங்களில் நம்மைப் பற்றிய தவறான தகவல்களைப் பகிர்வார்கள்.
சமூக வலைதளங்களில் இந்த குணம் அதிகம். காரணம் புகழும்போதும் முகம் பார்த்து கண்களை நோக்கிப் பேச வேண்டியதில்லை, அவதூறு பேசும்போதும் முகம் பார்க்க வேண்டியதில்லை. அதனால் யார் வேண்டுமானாலும் யாரைப் பற்றி வேண்டுமானாலும் புகழலாம் அல்லது இகழலாம்.
கண்களைப் பார்த்துப் பேசும்போதுதான் நம் மனதில் ஒட்டிக்கொண்டிருக்கும் கொஞ்ச நஞ்ச நேர்மையையும் மனிதாபிமானத்தையும் வெளிப்படுத்த வேண்டியிருக்கும்.
தன்னைத்தானே புகழ்ந்துகொள்பவர்களாகட்டும் பிறரை புகழ்பவர்களாகட்டும் இரு சாராரிடத்திலும் 100 சதவிகித உண்மை இருப்பதில்லை என்பதே உண்மை. ஏனெனில் புகழ்ச்சி என்பதே ஒருவித போதைதானே.
ஆக, ஒருவரை பாராட்டுதல் வேறு. புகழ்தல் வேறு.
பாராட்டு என்பது மனதின் ஆழத்தில் இருந்து வருவது. இதில் ஆதாயம் தேடும் குணத்துக்கான வாய்ப்புகள் குறைவு. பிறரை நேர்மையாகப் பாராட்டுவதன் மூலம் நம் பெருந்தன்மையும் வெளிப்படும்.
பாராட்டு என்பது பாராட்டுபவருக்கும் பாராட்டை ஏற்பவருக்கும் ஒருசேர மகிழ்ச்சியைத் தரும்.
புகழ்ச்சி என்பது பெரும்பாலும் நம் மனதின் ஓரத்தில் நம்மையும் அறியாமல் ஒட்டிக்கொண்டிருக்கும் பொறாமையினாலும் இயலாமையினாலும் வெளிப்படுவது. புகழ்ச்சியை ஏற்பவருக்கு வேண்டுமானால் ஒருவித போதையை உண்டாகலாம். ஆனால் புகழ்பவர் மனதில் ஒரு ஏக்கம் இருந்துகொண்டேதான் இருக்கும். இதில் ஆதாயம் தேடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
புகழ்ச்சி புகழ்பவர்களையும் வலுவிழக்கச் செய்யும், புகழப்படுபவர்களையும் பலவீனமாக்கும்.
புகழ்ச்சிக்குத்தான் ‘வஞ்சப் புகழ்ச்சி’ என்று எதிர்வார்த்தை இருக்கிறது. பாராட்டுக்கு ‘வஞ்சப் பாராட்டு’ என்று எதிர்வார்த்தை இல்லையே. இதில் இருந்தே தெரிந்துகொள்ளலாமே பாராட்டுக்கும் புகழ்ச்சிக்கும் உள்ள வித்தியாசத்தை.
பாராட்டை சந்தேகிக்க தேவையில்லை. புகழ்ச்சியை வஞ்சகமாக இருக்குமோ என்ற சந்தேகக் கண்கொண்டு பார்த்துத்தான் ஆக வேண்டும்.
பாராட்டாகட்டும் புகழ்ச்சியாகட்டும் இரண்டையும் தள்ளி வைத்து நம் பாதையில் பயணிப்போம். நிம்மதியான மனநிலை பெறுவதற்கு அதுஒன்றே வழி!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software