அறம் வளர்ப்போம்
இங்கிதம் பழகுவோம் – 35
மே 18, 2020
வாய்ப்புகளில் இருந்து தேவைகளை உருவாக்கலாமே!
நம் எல்லோருக்குமே ஏராளமான வாய்ப்புகள் நம் முன் விரிந்து கிடக்கின்றன. நாம்தான் நமக்கு என்ன தேவை என்பதை நமக்குள்ளேயே கேட்டுத் தெளிவு பெற வேண்டும்.
தமக்கு முன் உள்ள வாய்ப்புகளில் இருந்து தமக்கு என்ன வேண்டும் என்பதையும், அதனை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதையும் கேட்டுத் தெளிவு பெறும் திறமையை இளம் வயதிலேயே பெறுபவர்கள் எதிர்காலத்தில் அவர்கள் குறிக்கோளில் வெற்றி பெறுவார்கள்.
தேவைகளுக்கு ஏற்ப வாய்ப்புகளைத் தேடாமல், வாய்ப்புகளுக்கு ஏற்ப தேவைகளை வகுப்போமே!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai
அறம் வளர்ப்போம்
இங்கிதம் பழகுவோம் – 36
மே 19, 2020
மனதை நேர்மறையால் நிரப்புவோமே!
ஒருவர் செயல்படுத்தத் தொடங்கும் ஒரு புது முயற்சி வலுவாக இருக்கும்போது அதன் தாக்கம் அடுத்தடுத்த நபர்களிடமும் ஒட்டிக்கொள்ளும். ஒரு மனதுக்கும் மற்றொரு மனதுக்கும் இடையே தொடர்பு ஏற்படத் தொடங்குகிறது.
பெரும்பான்மையினரிடம் அந்தப் பழக்கம் வேரூன்றிவிடும்போது அதன் தாக்கம் வேகமாக பரவத் தொடங்கும். அதுவே பொதுவான பழக்கமாகவும் நிலைத்துவிடும்.
ஜீவ ராசிகளின் எண்ணங்கள் சக்தி வாய்ந்தது. நேர்மறையை மனதில் வேரூன்றினால் அது நேர்மறை எண்ணங்களை பரப்பும். எதிர்மறையை வேரூன்றினால் எதிர்மறையை பரப்பும்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai
அறம் வளர்ப்போம்
இங்கிதம் பழகுவோம் – 37
மே 20, 2020
கூட்டுப் பிரார்த்தனை செய்வோமே!
பிரார்த்தனைகள் மழை வேண்டி, இயற்கை சீற்றம் அடங்க, அச்சுறுத்தும் நோய்கள் அழிய இப்படியாக பொதுவான காரணங்களுக்காகவும் இருக்கலாம் அல்லது மக்கள் கொண்டாடும் அரசியல் தலைவர்கள், சினிமாத் துறையினர், விளையாட்டு வீரர்கள் என தனி மனிதர்கள் உடல்நலம் சார்ந்தும் இருக்கலாம். வீடுகளில் குழந்தைகளோ அல்லது இளம் வயதினரோ நோயினால் பாதிக்கப்படும்போது மந்திரங்கள் ஒலிக்க ஹோமங்களும், கூட்டாக அமர்ந்து பாராயாணங்களும் செய்வதுண்டு.
கூட்டுப் பிரார்த்தனைக்கு மாபெரும் சக்தி இருக்கிறது. மனித மனங்கள் ஒருங்கிணைந்து ஒரு நல்ல விஷயத்தைக் கூட்டாக பிரார்த்திக்கும் போது அது நேர்மறை உணர்வலைகளை ஒருவரிடம் இருந்து மற்றவருக்குக் கடத்தும்.
அது மிகப்பெரிய அளவில் நேர்மறை அதிர்வலைகளை உண்டாக்கும். அந்த சக்தியினால் பிரார்த்தனைகள் பலிப்பதுண்டு.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai
அறம் வளர்ப்போம்
இங்கிதம் பழகுவோம் – 38
மே 21, 2020
நம் வாழ்க்கையே கடல் அலைபோல் தானே!
நம் வாழ்க்கையே கடல் அலைபோல் தானே. ஆர்பரித்து உயர்ந்து அடுத்த நொடியில் அடங்கித் தாழ்ந்து கொண்டாட்டமாக கரையை நோக்கி அதிவேகமாக வரும்.
உயர எழும்பும் கடல் அலை என்றாவது தாழ்ந்துப் போக வேண்டிய இறக்கத்துக்கு பயந்து நின்றிருக்கிறதா. கடல் அலைக்கு அழகே உயர ஏறி ஏறித் தாழ இறங்குவதுதான்.
நிரந்தரமாக உச்சத்தில் இருந்தோரும் இல்லை, வீழ்ந்து கிடந்தோரும் இல்லை. எப்போதுமே எல்லோருமே உயரத்திலேயே இருக்க முடியாது. வாழ்க்கையில் இறக்கமும் வரும். அதுவும் எதிர்பாராமல் வரத்தான் செய்யும். கடல் அலைபோல சோர்ந்துவிடாமல் இருக்க பக்குவம் பெற வேண்டும்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai
அறம் வளர்ப்போம்
இங்கிதம் பழகுவோம் – 39
மே 22, 2020
நமக்கான அழகான வாசலும், பேரழகான வழியும்!
இந்த உலகம் மிகப் பெரியது. அது ஏராளமான வாசல்களைக் கொண்டது. ஒரு வாசல் மூடினால் அந்த வாசல் உங்களுக்கானதல்ல என்று உணர்ந்து உங்களுக்கான வாசலைக் கண்டறியுங்கள்.
நிச்சயம் நம் எல்லோருக்கும் உரிய அழகான வாசலும் உண்டு, அதை அடைய பேரழகான வழியும் உண்டு.
மாற்றுப் பாதையும் சரியான வாசலும் எல்லோருக்கும் கிடைத்தாலும் சிலருக்கு அதில் திருப்தி இருப்பதில்லை. காரணம் தாங்கள் நினைப்பதைப் போலவே அந்த மாற்றுவழி இருக்க வேண்டும் என நினைப்பதுதான். இந்த மனோபாவத்தை மாற்றிக்கொண்டால் மகிழ்ச்சி நிலைக்கும்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai
அறம் வளர்ப்போம்
இங்கிதம் பழகுவோம் – 40
மே 23, 2020
சுயத்தை அறிந்து சுயசார்புத் தன்மையுடன் வாழ்வோமே!
நாம் ஒவ்வொருவரும் நம் பலம் பலவீனங்களை அறிந்துகொள்வோம். நம் திறமைகளை அடையாளம் காண்போம்.
நம்முடைய பணிகளை நாமே செய்துகொள்ள கற்றுக்கொள்வோம். நம்முடைய பெரும்பாலானத் தேவைகளை நாமே பூர்த்தி செய்துகொள்ளப் பழகுவோம்.
நம்முடைய மகிழ்ச்சி வெளியில் இல்லை நமக்குள்ளேயேத்தான் இருக்கிறது என்பதையும் உணர்ந்து கொள்வோம்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai
அறம் வளர்ப்போம்
இங்கிதம் பழகுவோம் – 41
மே 24, 2020
நம்மை நாம் புரிந்துகொள்வோமே!
புரிதல் என்பது பிறரை புரிந்துகொள்வது மட்டுமல்ல. நம்மை நாம் புரிந்துகொள்வதும் புரிதல்தான்.
ஆனால் பெரும்பாலானோர் இரண்டையுமே செய்வதுமில்லை. முயற்சிப்பதுமில்லை. அதற்கெல்லாம் அவசியமும் ஏற்படுவதில்லை அவர்களுக்கு. எல்லாவற்றையும் ‘ஜஸ்ட் லைக் தட்’கடந்து சென்றுகொண்டே இருக்கிறார்கள்.
பிறரை புரிந்துகொள்ள முயற்சி செய்வதன் முதல்படியே நம்மை நாம் புரிந்துகொள்ள முயற்சிப்பதுதான். நாம் தெளிவாக இருந்துவிட்டால் பிறரிடம் உள்ள தெளிவு நம் கண்களுக்குப் புலப்படும்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai