ஹலோ with காம்கேர் – 140
May 19, 2020
கேள்வி: கூட்டுப் பிரார்த்தனையும் நூறாவது குரங்கின் விளைவும் தெரியுமா?
நம் நாட்டில் அவ்வப்பொழுது கூட்டுப் பிரார்த்தனைகள் செய்வது நாம் அனைவரும் அறிந்ததே.
பிரார்த்தனைகள் மழை வேண்டி, இயற்கை சீற்றம் அடங்க, அச்சுறுத்தும் நோய்கள் அழிய இப்படியாக பொதுவான காரணங்களுக்காகவும் இருக்கலாம் அல்லது மக்கள் கொண்டாடும் அரசியல் தலைவர்கள், சினிமாத் துறையினர், விளையாட்டு வீரர்கள் என தனி மனிதர்கள் உடல்நலம் சார்ந்தும் இருக்கலாம். வீடுகளில் குழந்தைகளோ அல்லது இளம் வயதினரோ நோயினால் பாதிக்கப்படும்போது மந்திரங்கள் ஒலிக்க ஹோமங்களும், கூட்டாக அமர்ந்து பாராயாணங்களும் செய்வதுண்டு.
காரணங்கள் என்னவாக இருந்தாலும் கூட்டுப் பிரார்த்தனைக்கு மாபெரும் சக்தி இருக்கிறது. மனித மனங்கள் ஒருங்கிணைந்து ஒரு நல்ல விஷயத்தைக் கூட்டாக பிரார்த்திக்கும் போது அது நேர்மறை உணர்வலைகளை ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு கடத்தும். அது மிகப்பெரிய அளவில் நேர்மறை அதிர்வலைகளை உண்டாக்கும். அந்த சக்தியினால் பிரார்த்தனைகள் பலிப்பதுண்டு.
ஆக, கூட்டாக ஒருங்கிணைந்து செய்யப்படும் ஒரு செயலுக்கு பலன் உண்டு.
குரங்குகளின் இயல்பே ஒருவர் செய்வதைப் பார்த்து அப்படியே செய்வதுதான். தொப்பி விற்கும் வியாபாரி ஒருவர் மரத்தடியில் தொப்பிகள் அடங்கிய கூடையை வைத்துவிட்டுத் தூங்கிக்கொண்டிருக்க, அந்த மரத்தில் இருந்த குரங்குகள் அத்தனையும் தொப்பிகளை எடுத்து தங்கள் தலையில் போட்டுக்கொள்கின்றன. கண் விழித்த வியாபாரி அதிர்கிறார். பின்னர் தன் தலையில் இருந்த தொப்பியை கழற்றி வீச, அதை கவனித்த குரங்குகள் தங்கள் தலையில் இருந்த தொப்பிகளை எடுத்து தரையில் வீசத் தொடங்கின. வியாபாரி அவற்றை எடுத்துக்கொண்டு நகர்ந்தான். இந்தக் கதையைத் தெரியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்.
ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் கோஷிமா தீவுகளில் வாழும் குரங்குகளை வைத்து ஆய்வுசெய்யத் தொடங்கினர். குரங்குகள் சாப்பிடுவதற்காக சர்க்கரைவள்ளிக் கிழங்குகளை வைத்தார்கள். ஒரு குட்டிக் குரங்கு தான் சாப்பிடுவதற்காக எடுத்த கிழங்கில் மண் ஒட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்து, அதை அருகில் இருந்த கடல் நீரில் கழுவி சாப்பிட்டது. அதைப் பார்த்த மற்ற குரங்குகளும் கிழங்குகளை எடுத்து அப்படியே சாப்பிடாமல் கடல் தண்ணீரில் கழுவி சாப்பிட்டன.
குரங்குகளுக்கு ஒன்றைப் பார்த்து அப்படியே செய்யும் குணம் இருப்பதால் அவை அப்படி செய்தது ஆச்சர்யமான விஷயம் அல்ல.
அந்த தீவில் நூறாவது குரங்கு இப்படி கிழங்கை கழுவி சாப்பிட்டவுடன் ஆராய்ச்சியாளர்கள் மற்றொரு அதிசயத்தையும் கவனித்தனர். இந்த பழக்கம் அருகில் இருந்த மற்ற தீவுகளுக்கும் பரவத் தொடங்கியது. ஏன் கடல் தாண்டி பல மைல் தொலைவுகளில் உள்ள தீவுகளுக்கும் இந்தப் பழக்கம் பரவியது. அங்கிருக்கும் குரங்குகளுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்குகளை சாப்பிடக் கொடுத்தாலும் அவையும் தண்ணீரில் கழுவியே சாப்பிடத் தொடங்கின.
ஒவ்வொரு தீவிலும் 100-வது குரங்கு கிழங்கை கழுவி சாப்பிட்ட பின்னர், அந்தப் பழக்கம் மற்ற தீவுகளுக்கும் பரவுகிறது என்ற உண்மையை கண்டறிந்தனர்.
இதற்கு ‘நூறாவது குரங்கின் விளைவு (Hundredth monkey effect)’ என்று பெயர் சூட்டினர்.
இந்த குணம் குரங்குகளுக்கு மட்டும் அல்ல மனிதர்களிடமும் அடிப்படையிலேயே இருப்பதாக ஆராய்ச்சியில் கண்டுணர்ந்தார்கள்.
ஒருவர் செயல்படுத்தத் தொடங்கும் ஒரு புது முயற்சி வலுவாக இருக்கும்போது அதன் தாக்கம் அடுத்தடுத்த நபர்களிடமும் ஒட்டிக்கொள்கிறது. ஒரு மனதுக்கும் மற்றொரு மனதுக்கும் இடையே தொடர்பு ஏற்படத் தொடங்குகிறது. தனிமனிதர்களிடம் மெதுவாக நடைபெறும் இந்தத் தாக்கமும் தொடர்பும், ஒரு கட்டத்தை எட்டியவுடன் அதாவது பெரும்பான்மையினரிடம் அந்தப் பழக்கம் வேரூன்றிவிடும்போது அதன் தாக்கம் வேகமாக பரவத் தொடங்கும். அதுவே பொதுவான பழக்கமாகவும் நிலைத்துவிடும்.
கூட்டுப் பிரார்த்தனைகள், வெகுஜன உணர்வுகள், பெரும்பான்மையான நம்பிக்கைகள் இவை அனைத்திலும் அடிப்படையில் ஒரு விஷயம் பொதுவாக உள்ளதை கவனிக்கவும்.
ஜீவ ராசிகளின் எண்ணங்கள் சக்தி வாய்ந்தது. நேர்மறையை மனதில் வேரூன்றினால் அது நேர்மறை எண்ணங்களை பரப்பும். எதிர்மறையை வேரூன்றினால் எதிர்மறையை பரப்பும்.
எதைச் செய்ய வேண்டும் என முடிவெடுப்பது நம் கைகளில்தான்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
சஞ்சிகை108 இணையதளத்தில்!
ஆகஸ்ட் 20, 2020 வியாழன்: சஞ்சிகை108 என்ற இணையதளத்தில் இந்தக் கட்டுரை வெளியாகியுள்ளது
https://sanjigai108.com/