ஹலோ with காம்கேர் – 148
May 27, 2020
கேள்வி: ஆன் லைன் ஜாப் வேண்டுமா?
கோவிட்-19 வைரஸினால் பொருளாதார ரீதியாக தனிமனிதர்கள் அவரவர்கள் நிலைக்கு ஏற்ப பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
நிறுவனங்களில் வேலையில் இருப்பவர்கள் பலருக்கு வேலை இழப்பு. இன்னும் சிலருக்கு சம்பளம் குறைப்பு.
பணியில் இருப்பவர்களுக்கு பிரச்சனை இதுவென்றால், நிறுவனங்களின் தலைமைக்கோ ப்ராஜெக்ட்டுகள் எடுக்க வேண்டும், அவற்றை முடிக்க வேண்டும், விற்பனையும் விரிவாக்கமும் நடக்க வேண்டும் என்ற அதிதீவிர கவலை. அப்போதுதான் சம்பளக் குறைப்போ அல்லது ஆள் குறைப்போ இல்லாமல் சம்பளம் கொடுக்க முடியும். நிறுவனத்தை தொய்வில்லாமல் கொண்டு செல்ல முடியும். நிர்வாகத்தை சிறப்பாக நடத்த முடியும்.
அதனால்தான் ஆரம்பத்திலேயே சொன்னேன். பிரச்சனை ஒன்றுதான். அவரவர் நிலைக்கு ஏற்ப அதன் தீவிரம் என்று.
இந்தச் சூழலை பயன்படுத்திக்கொண்டு ஒருசில பொய்யர்கள் ‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்’ என தங்கள் கை வரிசையை காண்பிக்கத் தொடங்கி விட்டனர்.
‘உங்களுக்கு வேலை போய் விட்டதா, கவலை வேண்டாம். எங்களை தொடர்பு கொள்ளுங்கள். வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம்’ ஈர்க்கும் வாசகங்களுடன் கூடிய இதுபோன்ற விளம்பரங்கள் மனதளவிலும் பொருளாதார ரீதியாகவும் சோர்ந்து போயிருக்கும் பலரை விட்டில் பூச்சியாய் மாற்றி கொண்டிருக்கின்றன.
விளம்பரங்களில் கொடுத்திருக்கும் எண்ணுக்கு போன் செய்தால் ‘இவ்வளவு முன்பணம் செலுத்துங்கள். உங்களுக்கு டேட்டா எண்ட்ரி அல்லது எடிட்டிங் போல வேலைகளை மாதா மாதம் அனுப்பி வைப்போம். முடித்துக் கொடுக்கக் கொடுக்க உங்கள் வங்கியில் சம்பளம் போட்டுவிடுவோம்’ என்று மிக அன்பாக பேசுவார்கள்.
அவர்களை நம்பி பணத்தை செலுத்திவிட்டுக் காத்திருந்தால் ஒருசிலருக்கு போலியாக ஒருசில வேலைகளை இமெயிலில் அனுப்பி வைப்பார்கள். அதை உண்மை என நம்பி மாங்கு மாங்கென்று வேலை செய்து அனுப்பிவிட்டு போன் செய்தால் போன் இயக்கத்திலேயே இருக்காது. ‘This number is not in use’ என்ற பதில் கர்ண கொடூரமாக இதயத்தில் இறங்கும்.
சில தினங்களுக்கு முன்பு என்னிடம் உதவி கேட்டு சில மீடியா நண்பர்கள் ‘உடனடி உதவி தேவை’ என்ற தலைப்பில் தகவல் அனுப்பி இருந்தார்கள்.
ஐடி நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடந்து மூன்று வருடங்களாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்துகொண்டிருந்த பி.ஈ, பி.டெக் படித்த பல இளைஞர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். உங்களுக்குத் தெரிந்து டேட்டா எண்ட்ரி வேலை தரும் நிறுவனங்கள் இருந்தால் பரிந்துரையுங்கள் என்றும் வீட்டிலிருந்தே செய்யும் ‘டேட்டா எண்ட்ரி’வேலையோ அல்லது ஆன்லைனின் நம்பகமான வேலையோ அல்லது நேர்மையான வேலை எதுவானாலும் சஎரி இவர்களுக்கு பரிந்துரைத்து உங்களால் உதவ முடியுமா என்றும் கேட்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் 27, 28 வயதினர். அவர்களிடம் லேப்டாப் உள்ளது. இவை கூடுதல் தகவல்.
இன்னும் ஒரு விஷயத்தையும் அடிக்கோடிட்டு சொல்லி இருந்தார்கள். அதாவது, அவர்கள் அனைவருமே ஏற்கெனவே சில இடங்களில் கட்டணம் செலுத்தி ஆன்லைன் பணிகளைப் பெற முயற்சித்ததாகவும் அவை பெரும்பாலும் போலி எனவும் குறிப்பிட்டிருந்தார்கள்.
இவர்களைப் போன்ற பலருக்கும் என்னுடைய ஆலோசனை இதுதான்:
‘யாராவது ஆன்லைனில் பிசினஸ் / வேலை கொடுப்பார்கள். அதை பெறுவதற்கு கட்டணம் செலுத்தியாவது முயற்சித்து அதைப் பெற்று அதன் மூலம் நிரந்தரமாக பணம் சம்பாதிக்கலாம்’என்ற எண்ணம் இருந்தால் உடனடியாக அதையும் கைவிடுங்கள்.
‘நீங்கள் உங்கள் நேரத்தையும், உழைப்பையும்போட்டு செய்துகொடுக்கின்ற வேலைக்கு நீங்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்?’ என்ற ஒரு கேள்வியை மட்டும் நீங்களே உங்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.
மாறாக, உங்களிடம் உள்ள திறமைக்கு கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன் மற்றும் இன்டர்நெட்டை எப்படிப் பயன்படுத்தலாம் என்று சிந்தியுங்கள். அதை நேரடியாக செய்கின்ற பிசினஸாக்கி, அந்த பிசினஸுக்கு ஆன்லைன் வசதிகளை எப்படிப் பயன்படுத்தலாம் என்று யோசியுங்கள்.
உதாரணத்துக்கு, உங்களுக்கு கற்றுக்கொடுக்கும் திறமை இருந்தால், அந்தத் திறமையை முதலீடாக்குங்கள். ஆன்லைனில் வகுப்புகள் எடுத்து சம்பாதிக்க ஆரம்பியுங்கள். இன்று இதற்குத்தான் மிக நல்ல வரவேற்பு. நீங்கள் கற்றுக்கொடுப்பது பள்ளி அல்லது கல்லூரிப் பாடங்களாக இருக்கலாம், இசை ஓவியம், எழுத்து, பேச்சு இப்படி கலை சார்ந்திருக்கலாம். உங்களுக்கு என்ன நன்றாக தெரியுமோ, உங்கள் திறமை என்னவோ அதை வைத்தே ஆன்லைனில் பிசினஸ் தொடங்குங்கள்.
வாட்ஸ் அப்பிலேயே புடவை பிசினஸ் செய்து மாதம் பத்தாயிரம் இருபதனாயிரம் சம்பாதிக்கும் பெண்கள் பெருகி வருகிறார்கள். இத்தனைக்கும் அவர்கள் அதிகம் படித்திருப்பதில்லை. ஆர்வம் மட்டுமே அவர்களின் முதலீடு.
எந்த வேலை செய்தாலும் முழு மனதுடனும், ஈடுபாட்டுட உங்கள் திறமையை வெளிக்காட்டும்படி இருந்தால் வெற்றி உங்களைத் தேடிவரும். பணமும் கொட்டும். புகழும் கிடைக்கும். இரண்டுமே உங்கள் உழைப்பு. கிடைக்கின்ற வெற்றி உங்கள் சொத்து. தோல்வி கிடைத்தால் சோர்ந்துவிடாமல் எப்படி சரி செய்வது என்பதை நிதானமாக யோசித்து, தவறை சரி செய்துகொண்டு முன்னேறுங்கள். வெற்றி உங்கள் கையில்தான். எனவே, முதலில் உங்கள் திறமையை கண்டறியுங்கள். அதை வளர்த்தெடுங்கள். பிறகு பிசினஸ் ஆக்குங்கள். கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன், இன்டர்நெட் மூலம் பிரபலப்படுத்துங்கள். இதுதான் உண்மையான ‘ஆன்லைன் ஜாப்’.
தி இந்து நாளிதழில் ‘வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்’ என்ற தலைப்பில் நான் எழுதி வந்தத் தொடர் நியூ சென்சுரி புக் ஹவுஸ் மூலமாக புத்தகமாக வெளிவந்துள்ளது. அந்தப் புத்தகத்தில் என்னெவெல்லாம் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள இங்கே செல்லவும்… http://compcarebhuvaneswari.com/?p=3366
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software