ஹலோ With காம்கேர் -155:  கலைகளின் சொரூபங்களும் மனிதர்களின் மனநிலையும்! (sanjigai108.com)

ஹலோ with காம்கேர் – 155
June 3, 2020

கேள்வி:  கலைகளின் சொரூபங்களும் மனிதர்களின் மனநிலையும் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பது ஏன்?

அவன் ஒரு பல்முகக் கலைஞன். ஓவியம் முதன்மைத் திறமையாக இருந்தாலும் இசை, மிமிக்கிரி, எழுத்து, பேச்சு என அத்தனையிலும் ஆழமான பார்வை உண்டு. அனைத்திலும் தன் தனித்திறனை முத்திரைப் பதித்துள்ளான். எதுவாக இருந்தாலும் தனித்துவம் வெளிப்படும். மேலோட்டமாக பார்ப்பவர்களுக்கு அது தெரியாது. கலைத்துறையில் இருப்பவர்களின் கண்களுக்குப் புலப்படும். மனதுக்குள் பொறாமையை தளும்ப தளும்ப வைத்துக்கொண்டு வெளியில் ‘ஆஹா, உன்னைப் போல் உண்டா?’ என பாராட்டுவார்கள். எப்பவும் அவனைச் சுற்றி நண்பர்கள் கூட்டம் உண்டு.

அவன் அப்பா முழு நேர ஓவியர். அந்தக் காலத்தில் கோயில்களிலும், பத்திரிகைகளிலும் வரைந்து அதில் வரும் வருமானத்தை வைத்தே மூன்று குழந்தைகளுடன் கஷ்ட ஜீவனம் நடத்தினார். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சதா ஏதேனும் சண்டை வந்துகொண்டே இருக்கும். காரணம் பெரும்பாலும் பணப்பற்றாக்குறையாகவே இருக்கும். அம்மா சாதாரண புடவையில்கூட பளிச்சென இருப்பாள். அள்ளி முடிந்த கொண்டையில் ஒற்றை ரோஜா வைத்துக்கொண்டாலே அத்தனை அழகுடன் மிளிர்வாள். ஆனால் அப்பா எப்பவும் கசங்கிய வேட்டி, உள்ளே போட்டிருக்கும் நைந்து போன பனியனின் பொத்தல்கள் வெளியே தெரியும் அளவுக்கு மெல்லிய சட்டை. அதுவும் அழுக்காக இருக்கும்.

அவனுக்கு அப்பாவைப் போலவே ஓவியத்தில் ஆர்வம். கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும் என ஆசை. அம்மாவுக்கு ஓவியம் என்றாலே வெறுப்பு. வாழ்க்கையில் கஷ்டத்தைத் தவிர வேறெதையும் தராத அந்தத்துறையில் மகன் வந்துவிடவே கூடாது என ஒற்றைக் காலில் நின்றாள். மூத்த அண்ணன் பி.எட் முடித்து பள்ளியில் ஆசிரியர். இரண்டாவது அண்ணனுக்கு ஒரு தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் செக்‌ஷனில் பணி. அக்காவை படிக்க வைக்க வசதி இல்லை. 20 வயதில் உறவிலேயே திருமணம் செய்து கொடுத்துவிட்டனர்.

இப்படி ஆளுக்கொரு திசையில் சென்றுவிட அவனுக்கு மட்டும் அப்பாவின் ஜீன் ஆட்டிப் படைத்துக்கொண்டிருந்தது. அம்மாவின் ஆசைக்காக டிகிரி படித்தான். ஆனாலும் ஓவியம் மட்டுமே கனவாக இருந்தது. அண்ணன்களின் ஒத்துழைப்பில் ஓவியக் கல்லூரியில் சேர்ந்து படித்தான். ‘உங்கள் காலத்தைப் போல் இல்லையம்மா, கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் என எத்தனையோ முன்னேறிவிட்டது. வாய்ப்புகள் ஏராளமாக உள்ளது’ என அம்மாவை சமாதானப்படுத்தி அவனை அவன் விருப்பப்பட்ட துறையில் கால்பதிக்க உதவியதில் அண்ணன்களுக்கு பெரும்பங்குண்டு. அதனாலேயே அண்ணன்கள் மீது தனி மரியாதை உண்டு அவனுக்கு.

இடையில் அப்பாவின் மிரட்டலில் அரசாங்க பணிக்கு பரிட்சை எழுதினான். அவன்  ‘போதாத வேளை’, அவன் ‘வேலைக்கு’ தேர்வாகி விட்டான். வேலைக்கான அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரும் வந்துவிட்டது. ஓவியக் கல்லூரியில் படித்து முடித்து சான்றிதழும் கிடைத்திருந்த சமயம் அது.

இப்போது அண்ணன்களும் அப்பா அம்மாவின் பக்கம் சாய்ந்துவிட்டார்கள்.  ‘நம் குடும்பத்தில் அரசாங்க உத்யோகம் யாருமே சென்றதில்லை. நீ இந்த வாய்ப்பை விட்டுவிடக் கூடாது. பணியில் இருந்துகொண்டே ஓவியத்துறையில் சாதனை செய்’ என இண்டு இடுக்கில் ஒளிந்துகொண்டிருக்கும் அபூர்வ உதாரணங்களை எல்லாம் தூசு தட்டி எடுத்து  ஒப்பிட்டுக் காட்டி அவனை கதறக் கதற அரசுப் பணியில் உட்கார வைத்துவிட்டனர்.

பணி என்னவோ அரசுப் பணிதான். ஆனாலும் அவன் பார்வையில் எல்லாமே ஓவியங்கள்தான்.  பத்திரிகைகளில் அவன் ஓவியங்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனாலும் அவர்கள் சொன்ன கெடுவுக்குள் முடித்துக்கொடுக்க நேரம் இல்லாமலேயே வாய்ப்புகள் தவறிவிடுகின்றன.

பல நேரம் அவன் உடல் மட்டும்தான் அலுவலகத்தில். நினைவுகள் கற்பனையில் இருக்கும். கிடைக்கின்ற காகிதங்களில் எல்லாம் கிறுக்கிக்கொண்டே இருப்பான். ஒருமுறை கவனக் குறைவாக முக்கியமான அலுவலக டாக்குமெண்ட்டில் ஒரு பெண்ணின் ஓவியத்தை வரைந்து அப்படியே செக்ஷன் சீனியருக்கு அனுப்பிவிட அவரிடம் வாங்கிக்கட்டிக்கொண்டு அந்த பிரச்சனையில் இருந்து வெளிவரவே திண்டாடி விட்டான். மெமோ கொடுக்கும் அளவுக்கு பிரச்சனை முற்றியது.

‘போடா’ என வேலையை உதறிவிட்டு வர முடியாதல்லாவா? வீட்டில் மனைவியும் மகளும் இருக்கிறார்களே. அவர்கள் இவனை நம்பித்தானே இருக்கிறார்கள். மனைவி தனியார் நிறுவனம் ஒன்றில் அக்கவுண்ட்ஸ் பிரிவில் பணியில் இருக்கிறாள். ஆனாலும் அவன் வேலையை விட்டால் குடும்பத்தில் என்ன மரியாதைக் கிடைக்கும்? வேலை நேரம் போக அவன் கலைத்துறையில் இயங்கும் நண்பர்களுடனேயே இருப்பதால் வீட்டில் அவனுக்கு  ‘வெட்டி ஆஃபீஸர்’ என்ற பட்டம். வேலையையும் தூக்கி எறிந்துவிட்டு வந்துவிட்டால் நினைக்கவே பகீர் என்றது.

இதோ அவனுக்கும் ஐம்பது வயதாகிவிட்டது. அவனும் ‘வேலை எனும் ஜெயிலில் இருந்து எப்போதடா விடுதலை கிடைக்கும்’ என பார்த்துக்கொண்டே இருந்தான். மகளும் ஐடி துறையில் வேலையில் சேர்ந்துவிட்டாள்.

மனைவியிடம் பேசிப் பேசி, சண்டையிட்டு, கத்தி கூப்பாடு போட்டு, அழுது ஆகாத்தியம் செய்து  அவளை சமாதானப்படுத்தி விருப்ப ஓய்வுக்கு எழுதிக்கொடுத்து விட்டான்.

நடை உடை பாவனை என எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டான். பளிச்சென வெள்ளை, சந்தனம், வெளிர் நீலம் என மூன்று கலர்களில் நீண்ட குர்த்தா. நெற்றியில் சந்தனம். எப்போதும் உடலில் ஜவ்வாது வாசனை. தன் முகம் லட்சணமாக மாறி விட்டதாக அவன் அதிசயித்தான். இத்தனை நாட்கள் இந்த ஒளி வட்டம் எங்கே மறைந்திருந்தது என தனக்குத்தானே கேட்டுக்கொண்டான்.

ஓவியப் பட்டறை ஒன்றை தொடங்குவதற்காக நண்பர்களுடன் ஆலோசனை செய்து நகரின் பிரதான இடத்தில் ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்தான்.

ஓவியக் கண்காட்சிகள் நடத்துவது, ஓவியங்களை விற்பனை செய்வது போன்றவற்றை செய்யலாம் என்றும் மீதி நேரத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்துபவர்களுக்கு இடத்தை வாடகைக்கு கொடுத்து சம்பாதிக்கலாம் என முடிவெடுத்து நண்பர்களை ஒருங்கிணைக்க முயன்றான்.

அப்போதுதான் அவர்களின் உண்மை முகம் வெளிவரத் தொடங்கியது. இதுவரை அவனை ‘ஆஹா, ஓஹோ’ என புகழ்ந்துகொண்டிருந்தவர்கள் பொறாமையில் கருகினார்கள். அவர்கள் வயிற்றுப் புகைச்சலின் நாற்றம் குமட்டிக்கொண்டு வந்தது அவனுக்கு.

நிகழ்ச்சிகள் நடத்தும்போது நண்பர்கள் ஒருவருக்கொருவர் தனக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை, என்னை ஒதுக்குகிறாய், அவனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாய் அப்படி இப்படி என ஏகப்பட்ட பாலிடிக்ஸ். அவன் சம்பாதித்துவிடக் கூடாது என்பதில் எல்லோருமே ஒரே குறியாக இருந்தார்கள். நண்பர்களாக கூடவே இருந்துகொண்டு முதுகுக்குப் பின்னால் அவதூறு பேசி அவன் இமேஜை கெடுக்கத் தொடங்கினார்கள்.

ஆரம்பத்தில் பரபரப்பாக இருந்த அவனது ஓவியப் பட்டறை நாள் செல்லச் செல்ல வெறிசோட ஆரம்பித்தது. பணம் சம்பாதிப்பது அத்தனை எளிதல்ல என்பது புரிந்தது. நண்பர்கள் விலகினார்கள்.

ஒரு கட்டத்தில் பட்டறையை மூட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டான்.

அவன் குர்த்தா, ஜவ்வாது வாசனை, சந்தனம் இவற்றை எல்லாம் துறந்தான். வீட்டிலேயே அடைந்துக் கிடக்க ஆரம்பித்தான்.

இப்போது திரும்பவும் நண்பர்கள் நெருங்க ஆரம்பித்தார்கள். போனில் பேசுகிறார்கள். அழைக்காமலேயே நேரில் வருகிறார்கள். டீ சாப்பிடவும் டிபன் சாப்பிடவும் அழைக்கிறார்கள். கலைகள் பற்றி நீட்டி முழக்குகிறார்கள். கலைத்துறை சார்ந்தவர்கள் கஷ்டங்கள் பற்றியெல்லாம் பேசுகிறார்கள்.

அத்தனையும் அவனுக்கு விநோதமாக இருந்தது. ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது.

கலைத்துறை சார்ந்தவர்கள் அழுக்காக உடை அணிந்துகொள்ள வேண்டும், ஒருவித பரிதாபமான முகத்தை வைத்திருக்க வேண்டும், சதா சோகமாக ஏதோ சிந்தனையில் இருக்க வேண்டும். ஏழையாக இருந்துவிட்டால் கூடுதல் சிறப்பு. எல்லாவற்றையும் விட மிக முக்கியமாக தன் கலையை வைத்து சம்பாதித்துவிட நினைக்கக் கூடாது.

வெறும் வாயை மென்றுகொண்டிருப்பதைப் போல கலைகள் பற்றி பேசிக்கொண்டும், கிடைக்கும் மேடையை விட்டுவிடாமல் பயன்படுத்திக்கொண்டும், மேடையில் முழங்கிக்கொண்டும், மேடை கொடுக்கும் சால்வையை பத்திரப்படுத்திக்கொண்டும், அந்த புகழ் போதையில் கிறங்கிக்கொண்டும் இருந்துவிட்டு செத்துப் போய்விட வேண்டும்.

இடையில் பத்திரிகைகளுக்கு முழு மூச்சாக வரையலாம் என நினைத்தான். ஆனால் அங்கு ஏற்கெனவே கால் பதித்தவர்கள் கோலோச்சிக் கொண்டிருக்கும்போது புதிதாக வரும் இவனுக்கு வழி விடாமல் மறைத்துக்கொண்டு நின்றார்கள். எதுவுமே செட் ஆகவில்லை.

அவனுக்கு அழுகை வந்தது. வாழ்நாளில் இதுவரை அனுபவித்திருக்காத வேதனை. என்ன செய்வது என புரியாத நிலை.

பக்கத்துவீட்டு சிறுவன் ‘அங்கிள்’ என அழைத்துக்கொண்டே உள்ளே நுழைந்தான். பள்ளியில் ஓவியப் போட்டி இருப்பதாகவும். ஒரு கான்செப்ட் வைத்திருப்பதாகவும் வரைய சொல்லிக்கொடுக்க முடியுமா என கேட்டான்.

தன் லேப்டாப்பை ஆன் செய்தான். போட்டோஷாப் சாஃப்ட்வேரை இயக்கி அவனுக்கான கான்செப்ட்டை ஓவியமாக்கத் தொடங்கினான்.

கற்றதை கற்றுக்கொடுக்கும் ஒரு வழியும் இருப்பது இப்போதுதான் தெரிந்தது.

அவன் தோற்க மாட்டான். ஜெயித்துவிடுவான்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

சஞ்சிகை108 இணையதளத்தில்!

ஆகஸ்ட்  27,  2020  வியாழன்: சஞ்சிகை108 என்ற இணையதளத்தில் இந்தக் கட்டுரை வெளியாகியுள்ளது
https://sanjigai108.com/

(Visited 37 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon