#கதை: ஹலோ With காம்கேர் -157:  விட்டு விடுதலை ஆவது அத்தனை சுலபமா என்ன?

ஹலோ with காம்கேர் – 157
June 5, 2020

கேள்வி:  விட்டு விடுதலை ஆவது அத்தனை சுலபமா என்ன?

வீடே கலகலவென்றிருக்கிறது. மீனாட்சி, நீ என்னை விட்டுப்போய் நாளையுடன் ஒரு வருடம் முடியப் போகிறது. முதல் வருட திவசம்.

ஊரில் இருந்து பெரியவன் வந்திருக்கிறான். அவனுடன் நம் மருமகளும் பேரன்களும் வந்திருக்கிறார்கள். காரிலேயே வந்துவிட்டார்கள். நீ இருந்தவரை  ‘தொலைதூரப் பயணங்களுக்கு டிரைவர் வைத்துக்கொள், நீ டிரைவ் செய்ய வேண்டாம்’ என்று சொல்வாய். ஆனால் அவன் செய்வதைத்தான் செய்வான். ஆனாலும் உன் கடமை சொல்வது. கேட்பதும் கேட்காததும் அவர்கள் இஷ்டம் என்பாய். அத்தனை பெருந்தன்மை எனக்கு வருவதில்லை. கேட்காவிட்டால் சொல்வதே அவமானம் என கருதுவேன். இப்பவும்.

அவன் ஊர் திரும்பும்போது என்னையும் அழைத்துக்கொண்டு போய்விடுவான் என நினைக்கிறேன். ஏன் என்றால் அப்படித்தான் ஏற்பாடு. ஆறு மாதம் பெரியவனுடன், ஆறு மாதம் சின்னவனுடன். நம் மகள் வெளிநாட்டில் இருப்பதால் இந்தப் போட்டியில் அவள் இல்லை.

மீனாட்சி, நீ போன பிறகு பெரியவனுடன்தான் முதல் ஆறு மாதங்கள் இருந்தேன். ஏன் என்றால் அதே ஊரில்தானே நம் வீடும் இருந்தது. அதை விற்று காசாக்கி மூவரும் பங்கிட்டுக்கொண்டு எனக்கும் ஒரு பங்கை வங்கியில் போட்டு வைத்திருக்கிறார்கள். என் மருத்துவ செலவு, வருடாந்திர காரியங்கள் போன்றவற்றுக்கு அதில் வரும் வட்டியை எடுத்துக்கொள்ளலாம் என ஏற்பாடு.

அடுத்த ஆறு மாதம் இதோ இங்கு சின்னவனுடன் இருக்கிறேன். இந்த வீட்டில் ஆறு மாதக் கணக்கு முடியப் போகிறது.

மீனாட்சி, இரு மருமகள்களும் என்னை தாங்கு தாங்கென்று தாங்குகிறார்கள். ஆமாம்.  ‘ஓடி ஆடி வேலை செய்தால்தான் உடம்புக்கு நல்லதாம். டாக்டர் சொல்லி இருக்கிறார்’ என சொல்லி என்னை வேலை செய்யச் சொல்கிறார்கள்.

எனக்கு மூட்டு வலி. உட்கார்ந்தால் ஒருவர் கைத்தாங்கலாக தூக்கி விட்டால்தான் எழுந்திருக்கவே முடியும். ஆனால் இப்போதெல்லாம் வீடு பெருக்குவது, துடைப்பது, வாஷிங் மெஷின் துவைத்த துணிகளை உணர்த்துவது, மடித்து வைப்பது என வேலை சரியாக இருக்கிறது. எனக்கு உடல் நன்றாக இருந்த போதே வீடு பெருக்குவதும், துடைப்பதும் என் வேலை என நீதான் செய்வாய். மூட்டு வலிக்குப் பிறகு துடைப்பத்தை தொடக்கூட விட்டதில்லை. என் மீது அத்தனை கரிசனம்.

மீனாட்சி, நீ இருந்தவரை என்னை உட்கார வைத்து அழகு பார்த்தாய். மருந்து மாத்திரை, காபி, டீ, சாப்பாடு எதுவானாலும் ஹாலில் நாம் அமரும் ஊஞ்சலுக்கு அருகே உள்ள டைனிங் டேபிளுக்குக் கொண்டு வந்து வைத்துவிடுவாய். என்னை அதிகம் நடக்கவிடாமல் பார்த்துக்கொண்டாய். டிவி பார்த்துக்கொண்டோ அல்லது ஏதேனும் பேசிக்கொண்டோ சாப்பிட்டு முடிக்க முக்கால் மணி நேரம் ஆகும். நீதான் முதலில் சாப்பிடுவாய். நான் கொஞ்சம் அசமஞ்சம்தான். மெதுவாகத்தான் சாப்பிடுவேன். நான் சாப்பிடும் வரை நீயும் எனக்கு கம்பெனி கொடுக்க வேண்டும் என்பதற்காக தயிர் சாதத்தின் கடைசி கவளத்தை நான் தட்டை காலி செய்யும்போதுதான் விழுங்குவாய். இரண்டு பேரின் தட்டையும் எடுத்துச் சென்று தேய்த்துவிடுவாய். என்மீது அத்தனை வாஞ்சை.

மீனாட்சி, இப்போதும் மூட்டு வலி விண்விண் என தெறிக்கத்தான் செய்கிறது. ஆனால் வாயைத் திறக்க முடிவதில்லை. இரவு படுக்கும்போதுதான் மூட்டு வலி பிராணன் போகிறது. நானே மருந்தை தடவிக்கொண்டு அழுதுகொண்டே தலையணையை நனைத்துக்கொண்டிருக்கிறேன். நீ இருந்திருந்தால் வலி இருக்கிறதா என கேட்டு இதமாக மருந்தை தடவி விடுவாய்.

மீனாட்சி, சின்னவன் பெரியவன் பேரன்கள் பேத்திகள் என வீடே கலகலவென இருக்கிறது. குழந்தைகள் ஆளுக்கொரு போனை வைத்துக்கொண்டு வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். என் அருகே வருவதில்லை. கூப்பிட்டாலும் தூரத்தில் இருந்தே என்ன என கேட்கிறார்கள். அருகே அழைத்து அணைத்துக்கொள்ள வேண்டும்போல் இருக்கிறது. அருகே வந்தால்தானே. அணைத்துக்கொள்ள.

நீ இருந்தவரை குழந்தைகள் உன் மடியிலும், முதுகிலும் ஏறி அமர்க்களம் செய்யுமே. வயதான காலத்தில் எங்காவது சுளுக்கிக்கொள்ளப் போகிறது என நான்தான் பதறுவேன். குழந்தைகள் எப்போதுமே என்னிடம் அத்தனை ஒட்டியதில்லை. என்னால் உன் அளவுக்கு பாசத்தையும் அன்பையும் வெளிக்காட்டத் தெரிவதில்லை மீனாட்சி.

மீனாட்சி, என்னுடன் நீ வாழ்ந்த காலகட்டத்தில் கடைசி பத்து வருடங்கள் சமையல், பாத்திரம் தேய்த்தல், வீடு சுத்தம் செய்தல், கடைக்குச் சென்று வருதல் என அத்தனையையும் நீ மட்டுமே பார்த்து வந்தாய்.

வெயில் அதிகமாக இருந்ததால் இரவு மறுபடி குளித்தேன். குங்குமத்தை இட்டுக்கொண்டு அதற்கு சற்று மேல் வழக்கமாக வைத்துக்கொள்ளும் விபூதியையும் இட்டுக்கொண்டேன்.

அந்தக் குங்குமம் நீ எனவும், விபூதி நான் எனவும் சொல்லுவாய். இதுபோல சின்ன சின்ன விஷயங்களில் புதுமையைக் கொண்டாடி மகிழ உனக்கு நிகர் நீயேதான் மீனாட்சி.

நமக்குள் நாம் விளையாட்டாக போட்டுக்கொண்ட மூன்று ஒப்பந்தங்களை சத்தியவாக்காக எடுத்து செயல்படுத்தினாய். என்னையும் சம்மதிக்க வைத்தாய்.

முதல் ஒப்பந்தம் – திருமணம் ஆன புதிதில் போட்டுக்கொண்டது. உன்னை ஒருமையில்தான் அழைக்க வேண்டும். அதுவும் பெயர் சொல்லித்தான் கூப்பிட வேண்டும். உன் பெயர் மீனாட்சி சுந்தரம். மீனாட்சி என்று அழை என்றாய்.

இரண்டாவது ஒப்பந்தம் – உன் பணி ஓய்வுக்குப் பிறகு நீதான் வீட்டை பராமரிப்பாய், நான் எந்த வேலையும் செய்யக் கூடாது. அதையும் நடத்திக் காட்டினாய்.

மூன்றாவது ஒப்பந்தம் – ஒருவேளை நீ முன்னால் இறந்துவிட்டால் என் இறுதிக்காலம் வரை குங்குமம் வைத்துக்கொள்வதை தவிர்க்கக் கூடாது. இதோ அதையும் செய்கிறேன்.

மீனாட்சி, நீ விரும்பியபடி எல்லா ஒப்பந்தங்களையும் ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டி விட்னஸ் வைத்துக்கொண்டு கையெழுத்திடாத குறையாக நிறைவேற்றி விட்டாய். நானும் நிறைவேற்றிக்கொண்டே வருகிறேன்.

சீக்கிரம் என்னை உன்னுடன் அழைத்துக்கொண்டு போயேன் மீனாட்சி!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

(இன்று ஜுலை 5, 2020 காலை  உண்மை நிகழ்வின் அடிப்படையில் எழுதிய சிறுகதை)

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 2,300 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon