ஹலோ with காம்கேர் – 158
June 6, 2020
கேள்வி: அனுபவங்கள் எல்லாவற்றையும் நாமே நேரடியாக அனுபவித்திருக்க வேண்டும் என்பதில்லை தெரியுமா?
பொதுவாகவே பெண்கள் கதை எழுதினாலோ அல்லது கவிதை எழுதினாலோ அவற்றை அவர்கள் சொந்த அனுபவமாக கற்பனை செய்துகொள்பவர்களே இங்கு அதிகம். அந்த வகையில் நேற்று நான் எழுதி இருந்த ஆதர்ச தம்பதி குறித்த பதிவுக்கு என் நட்பு வட்டத்தில் புதிதாக சேர்ந்திருந்த ஒருவர், என்னைப் பற்றி தெரியாதவர், நான் இயங்கிக் கொண்டிருக்கும் துறை பற்றி அறியாதவர் பதிவின் கடைசியில், இது ஓர் உண்மை சம்பவம்’ என குறிப்பிட்டிருந்ததைப் பார்த்துவிட்டு மெசஞ்சரில் ‘இந்தப் பதிவு உங்கள் வாழ்க்கையில் நடந்ததா, நீங்கள்தானா அந்தப் பதிவில் வரும் பெண்மணி?’ எனக் கேட்டிருந்தார். நான் பதில் சொல்வதற்குள் ‘என் வாழ்க்கையும் அப்படித்தான்…’ என ஆரம்பித்து அவருடைய சொந்தக் கதை சோகக் கதையை புலம்பி இருந்தார்.
எப்போதும் எக்குத் தப்பாகக் கேள்வி கேட்பவர்கள் மீதும், விதண்டாவாதம் செய்பவர்கள் மீதும், பொறாமையினாலும் வயிற்றெரிச்சலினாலும் எதிர்வினை செய்பவர்கள் மீதும் முதலில் கோபம் வரும்.
ஆனால் அந்தக் கோபத்தைக்கூட பக்குவமாக்கி நிதானமாக பொறுமையாகவே பதில் அளிப்பேன். அடுத்த முறை அவர்கள் கேள்வி கேட்கும் நோக்கத்துடன் தன் மன வக்கிரங்களை தீர்த்துக்கொள்ள யோசிக்கவும் மாட்டார்கள். அந்த அளவுக்குப் போதும் போதும் என்கின்ற அளவில் புரிய (!) வைத்துவிடுவேன்.
நேற்று எனக்கு கோபம் வரவில்லை. அதிர்ச்சியாக இருந்தது.
என் அதிர்ச்சி என்னவென்றால், நேற்றையப் பதிவில் நான் சொல்லி இருந்தது 70+ வயதுடைய தம்பதி குறித்து. அது எப்படி என்னுடைய நேரடி அனுபவமாக எப்படி இருக்க முடியும்.
எனக்கு இதில் ஆச்சர்யம் என்னவென்றால் ‘நான் பக்குவமாக (!) எழுதுவதை வைத்து நான் நிச்சயம் 60 வயதைக் கடந்த நபராகத்தான் இருக்க முடியும் என நினைத்திருக்கிறாரே…’ அதை நினைத்துத்தான் வியந்தேன். வியந்தேன். வியந்துகொண்டே இருந்தேன்.
பொதுவாக ஃபேஸ்புக் பார்க்கும் நேரம் குறைவு. ஆனால் நேற்று இதற்காகவே மதியம் ஒரு மணிவாக்கில் ‘அனுபவம்’ என்பதற்கான விளக்கத்தை தனிப் பதிவாக எழுதி இருந்தேன்.
‘பதினைந்தாவது மாடியில் இருந்து குதித்தால் உடல் சிதைந்து சாக வேண்டி வரும் என்று எழுத எதற்காக சொந்த அனுபவம் வேண்டும்… எல்லாவற்றையும் என் நேரடி அனுபவம் என நினைக்காதீர்கள். என் அனுபவம், பிறர் அனுபவம், கல்வி, கேள்வி, பெற்றோர், உடன் பிறந்தோர், என் நிறுவனம், என்னுடன் பணிபுரியும் வல்லுநர்கள், என்னைச் சுற்றி இயங்கும் உலகம் என ஒவ்வொன்றும் ஓராயிரம் செய்திகளைச் சொல்லிச் செல்கின்றன. காது கொடுத்து கேட்கவும், கண் எடுத்துப் பார்க்கவும் நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். அதுதான் வாழ்க்கை. அதுவே அனுபவம். அனுபவம் என்பதற்கு தனி டெஃபனஷன் ஏதுமில்லை’
இதைப் படித்த ஃபேஸ்புக் தோழி ஒருவர் ‘சிலருக்கு புரியாதவற்றை சொல்லலாம் மேம். பொது தன்மையாக சிலர் இருக்க வாய்ப்புண்டு’ என் பின்னூட்டமிட்டிருந்தார். அது அவர் பார்வை. குறை சொல்லவில்லை.
அவருக்கும் விரிவாகவே பதில் சொல்லி இருந்தேன். ‘சமூக வலைதளங்களில் பயணிப்பவர்களில் பெரும்பாலானோர் எதுவும் புரியாதவர்கள் அல்ல. அப்பாவிகளும் அல்ல. எல்லாம் தெரிந்தவர்கள்தான் இங்கு பயணிக்கிறார்கள். உண்மையிலேயே அப்பாவிகளும், விவரம் புரியாதவர்களும் கேள்விகளே கேட்பதில்லை. புரிந்தாலும் புரியாவிட்டாலும் நட்பு இணைப்பில் உள்ள அனைவரது பதிவுகளையும் படிக்கிறார்கள். விருப்பம் இருந்தால் லைக் போடுகிறார்கள். அதற்கும் மேல் பிடித்திருந்தால் கமெண்ட் செய்கிறார்கள். கடந்து செல்கிறார்கள்… தகவல்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கின்ற அவா மட்டுமே அவர்களுக்குள் இருக்கும். ஆனால் எல்லாம் தெரிந்தவர்கள் (?) தங்களுக்குத் தெரிந்ததை தாங்கள் அறிந்ததை பிறர் பதிவுகளில் தேடித்தேடி அது கிடைக்காதபோது எல்லாவற்றையும் எழுதியவரின் பர்சனல் கதைகளைப் போல கற்பனை செய்துகொள்கிறார்கள்’ என்று அந்தத் தோழிக்கும் புரிய வைத்தேன்.
ஒரு விஷயம் தெரியுமா?
என்னை வயதான பெண்மணி என நினைத்து நேற்று ‘இந்தப் பதிவு உங்கள் வாழ்க்கையில் நடந்ததா? நீங்கள்தானா அந்தப் பதிவில் வரும் பெண்மணி’ என கேட்டிருந்தவர் தன் வாழ்க்கை சம்பவங்களை உருக்கமாக (கற்பனையில்) எழுதிவிட்டு கடைசியில் மிகவும் புத்திசாலியாக ஒரு கேள்வி கேட்டிருந்தார் பாருங்கள்.
‘உங்களுக்கு 60 வயதிருக்குமா அம்மா?’
அங்குதான் அவர் தானாகவே வந்து வலையில் மாட்டிக்கொண்டார். இப்படி வயதைக் கூட்டிக் கேட்டால் நான் பதறிப்போய் என் வயதை சொல்லிவிடுவேன் அல்லவா. அந்த எண்ணத்தில் கேட்ட கேள்வி அது.
இத்தனைக்கும் அவர் தன் புகைப்படத்தைக்கூட ஃபேஸ்புக்கில் புரொஃபைல் பிச்சராக வைத்திருக்கவில்லை. தன் முகத்தைக் கூடக் காட்ட விரும்பாதவர்கள் பிறர் விவரங்களை அறிவதில்தான் எத்தனை முனைப்புக் காட்டுகிறார்கள். ஆச்சர்யமான முரண்.
உண்மையில் என் வயதை தெரிந்துகொள்ளவே தன் வாழ்க்கையில் நடந்த கதைகளை கற்பனையில் சொல்லி தன்னை வயதானவர்போல காட்டிக்கொண்டு என் வயதை அறிய முற்பட்டிருக்கிறார் என்பதை சின்ன R & D செய்து நான் உணர்ந்ததை என் உள்ளுணர்வு எச்சரித்ததை ஆதாரப்பூர்வமாகக் கண்டுபிடித்தேன். ஆம். அவர் வயதில் பெரியவரும் அல்ல.
நான் என்ன பதில் சொல்லி இருப்பேன் என யூகிக்க முடிகிறதா?
‘இல்லை சார். அதற்கும் மேல். ஒரு பத்து வயதைக் கூட்டிக்கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிட்டு அலுவலக ஆன்லைன் மீட்டிங்கிற்குத் தயாரானேன்.
எப்படி எல்லாம் மனிதர்களை சமாளிக்க வேண்டியுள்ளது. ஸ்…அப்பா!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software