இந்த நாள் இனிய நாள் – 305
சென்ற வாரம் தாம்பரத்திலுள்ள இந்து மிஷன் மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். அங்கு நுழைவாயிலில் எடுத்த புகைப்படம்தான் இது.
என் உறவினருக்கு லங்க்ஸில் பிரச்சனை. வயது 70+. மூச்சு விடமுடியாமல் அவதிப்பட்டுக்கொண்டிருகிறார். லங்க்ஸின் ஒரு பகுதி பாதிப்படைந்துவிட்டது.
அருகிலேயே ஒரு இளைஞர். வயது 30+. அவருக்கும் அதே பிரச்சனை. மூச்சு விட முடியாமல் இன்ஹேலர் மூலம் சுவாசித்துக்கொண்டிருந்தார்.
கிளம்பும்போது டாக்டரை சந்தித்து லங்க்ஸ் பிரச்சனை குறித்து பொதுவாக பேசிக்கொண்டிருந்தேன். அப்போது இரண்டு நாட்களுக்கு முன்னர் குழந்தைகள் மருத்துவமனையில் அட்மிட் ஆன மூன்று வயது பெண் குழந்தைக்கு லங்க்ஸ் பிரச்சனை குறித்து சொன்னார்.
அதற்கு வேறு சில காரணங்கள் இருந்தாலும் முக்கியமாக அவர் சொன்ன காரணம் அதிர்ச்சியளித்தது. அந்த குழந்தையின் அப்பாவுக்கு தீவிர சிகரெட் பிடிக்கும் பழக்கம். மனைவி கர்ப்பமாக இருக்கும்போது வீட்டிலேயே புகைப்பிடித்திருப்பதாக குழந்தையின் தாய் சொன்னாராம்.
குழந்தையின் தந்தைக்கு அட்வைஸ் செய்தபோது எத்தனையோ பேர் சிகரெட் பிடிக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் லங்க்ஸ் பிரச்சனை வருகிறதா என விதண்டாவாதம் செய்கிறாராம்.
நான் கேள்விப்பட்ட மூன்று நபர்களின் லங்க்ஸ் பிரச்சனைக்கும் அடிப்படைக் காரணம் ‘சிகரெட்’.
பஸ்ஸுக்கு, ட்ரெயினுக்கு, கடைகளில் காத்திருக்கும் நேரங்களில் பிறர் ஊதித்தள்ளும் சிகரெட் புகையை சுவாசிப்பதால்கூட லங்க்ஸ் பிரச்சனை மட்டுமல்ல பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் என அவருடைய பிசியான நேரத்திலும் என்னிடம் புலம்பாத குறையாக தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
லங்க்ஸ் பிரச்சனை வராவிட்டால் வேறு பிரச்சனைகள் வரும். நிச்சயமாக உடலில் வலு இழக்கும் நேரத்துக்காக காத்திருந்து பல்வேறு வியாதிகள் அழையா விருந்தாளிகளாய் ஒட்டிக்கொள்ளுமாம்.
பல வருடங்கள் சிகரெட் பிடித்திருப்பபர்கள், சில காலங்களாய் அந்தப் பழக்கத்தில் இருந்து மீண்டிருந்தாலும் ஏற்கெனவே புகைத்திருப்பதன் தாக்கத்தில் கூட பிரச்சனைகள் ஏற்படுமாம்.
இப்போதெல்லாம் யார் பொதுஇடங்களில் புகைக்கிறார்கள் என கேள்வி கேட்பவர்கள் பஸ், ட்ரெயினுக்குக்கு காத்திருக்கத் தேவையில்லாத சூழலில் வாழ்பவர்களாக இருக்கலாம் அல்லது டீக்கடைகளை கடந்து செல்ல வேண்டிய அவசியமற்றவராக இருக்கலாம்.
புகைப்பவர்களுக்கு தங்கள் உயிர் வேண்டுமானால் துச்சமாக இருக்கலாம். ஆனால் சம்மந்தமே இல்லாத அவரைச் சுற்றி இருப்பவர்கள் உயிரோடு விளையாட இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
அக்டோபர் 31, 2019
2019 வருடம் முழுவதும் ‘இந்த நாள் இனிய நாள்’ என்ற தலைப்பில்
தினந்தோறும் நான் எழுதி வந்த
ஃபேஸ்புக் கட்டுரைத் தொடர்
அமுதசுரபி டிசம்பர் 2019 இதழில் வெளியானது.