ஹலோ With காம்கேர் -224: எனக்கு அதிர்ஷ்டமே கிடையாது என புலம்பும் நபரா நீங்கள்? (Sanjigai108.com)

ஹலோ with காம்கேர் – 224
August 11, 2020

கேள்வி: எனக்கு அதிர்ஷ்டமே கிடையாது என புலம்பும் நபரா நீங்கள்?

உண்மை நிகழ்வு.

ஓர் ஏழையின் வீடு. அழுக்காக ஆங்காங்கே சிலந்தி வலைகளும், கரப்பான் பூச்சிகளும், எலிகளும் நடமாடிக்கொண்டு உள்ளே நுழைந்தாலே நாற்றம் எடுக்கும். யாருமே அந்த வீட்டுக்குள் வரத்தயங்குவார்கள்.

அந்த வீட்டில் முப்பது வயதுமிக்க ஒரு தம்பதி வாழ்ந்து வந்தனர். கணவன் வேலைக்குச் செல்லாமல் எப்போது பார்த்தாலும் பீடி பிடித்துக்கொண்டு சுருண்டுபடுத்திருப்பான். மனைவி இரண்டு வீடுகளில் பத்து பாத்திரம் தேய்த்துக்கொடுக்கும் வேலைக்குச் சென்று சம்பாதிக்கிறாள். அதில் வரும் சொற்ப வருமானத்தில்தான் போஜனம். குழந்தையும் பிறக்கவில்லை.

அவர்கள் இருவரும் தாங்கள் துரஷ்டமானவர்கள் என்றும்  கடவுள் தங்களுக்கு மட்டும் ஏன் இத்தனை சோகங்களைக் கொடுத்துள்ளார் என்றும் கடவுளை சதா திட்டிக்கொண்டே இருப்பார்கள்.

ஒருநாள் அந்த ஊருக்கு மகான் ஒருவர் வந்தார். அவர் எல்லோர் பிரச்சனைகளையும் கேட்டு ஆசி வழங்குவதாக கேள்விப்பட்டதால் அந்த தம்பதியும் அவரை பார்க்கச் சென்றனர்.

அவர் பொறுமையாக அந்த தம்பதியின்  பிரச்சனையை   கேட்டுவிட்டு ஒரு மண் தொட்டியைக் கொடுத்தார். இது மிகவும் சக்தி வாய்ந்த தொட்டி. இதனை மூன்று மாதங்கள் வீட்டில் பத்திரமாக வைத்திருங்கள். ஏதேனும் ஒரு செடியை நடுங்கள். அது வளர வளர நல்லது நடக்கும். பூ பூக்க ஆரம்பித்ததும் யோகம்தான் என்றார்.

அந்தத் தொட்டி என்னவோ சாதாரண மண் தொட்டிதான். ஆனால் பார்த்துக்கொண்டே இருக்கலாம்போல் அத்தனை அழகு. வீட்டுக்குள் எந்த இடத்தில் வைப்பது என இருவருக்கும் ஒரே குழப்பம். ஏனெனில் எங்கு பார்த்தாலும் அழுக்கு, தூசி, பூச்சிகள்.

ஓர் மூலையை தேர்ந்தெடுத்து அந்த இடத்தை மட்டும் சுத்தம் செய்தாள் மனைவி. தொட்டியை அங்கு வைத்தார்கள். அந்த இடமே அழகாகிப் போனதைப் போல உணர்ந்தார்கள்.

உடனே அந்தக் தொட்டியில் மணலைக் கொட்டி தண்ணீர் தெளித்து ஒரு ரோஜா செடியை வாங்கி வந்து நட்டான் கணவன்.

தொட்டி இன்னும் அழகாகிப் போனது. இருவருக்கும் அத்தனை சந்தோஷம். செடியை நட்டுவிட்டோம். சூரிய ஒளி வேண்டுமே. இத்தனைநாட்கள் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவை சுத்தம் செய்து திறந்து வைத்தார்கள். வெளிச்சமும், சூரிய ஒளியும், காற்றும் அந்த அறைக்கு புத்துணர்வைக் கொண்டு வந்தது.

தினமும் தண்ணீர் ஊற்றி அந்த செடி வளர்வதை அழகு பார்த்தார்கள். அந்தத் தொட்டி அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப் போகிறது என்பதால் இத்தனை கவனிப்பு.

ஆனாலும் ஆங்காங்கே ஓடும் கரப்பான் பூச்சிகளும் சிலந்தி வலைகளும் அந்த அறையின் அழகைக் கெடுக்கவே, அந்த அறை முழுவதையும் நன்கு பெருக்கி ஒட்டடை அடித்து சுத்தம் செய்தார்கள். தண்ணீர் விட்டு துடைக்கவும் செய்தார்கள். அறை மணம் வீசத் தொடங்கியது.

இருந்தாலும் வீட்டில் மற்ற இடங்களுக்கும் அந்த அறைக்கும் சற்றும் பொருந்தவே இல்லை. காரணம் அந்த அறையைத் தவிர மற்ற இடங்கள் அத்தனை அழுக்கு.

வீடு முழுவதும் சுத்தம் செய்து சுண்ணாம்பு அடித்து புதிதாக்கினார்கள். தங்கள் வீடு இத்தனை அழகா என இருவருக்கும் வியப்பு.

நாளொரு பொழுதும் செடியை கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொண்டார்கள். வளர்கிறதா வளர்கிறதா என சிறு குழந்தைகள் போல உன்னிப்பாக பார்த்துக்கொண்டே இருந்தார்கள்.

தினமும் வீட்டை சுத்தம் செய்வது, ஜன்னல்களை சூரிய ஒளிக்காக திறந்து வைப்பது, செடிக்கு தண்ணீர் ஊற்றுவது என கணவனும் மனைவியும் பார்த்துப் பார்த்து செடியை வளர்த்தார்கள்.

இருவருக்குள்ளும் என்னவோ சொல்லணா சந்தோஷம். எல்லாம் அந்தத் தொட்டி வந்த நேரம் என அதைக் கொடுத்த மகானை மனதுக்குள் கொண்டாடினார்கள்.

சாதாரணமாக பேச்சு வார்த்தையே இல்லாமல் எலியும் பூனையுமாக இருந்தவர்கள் இனம்புரியாத குதூகலத்துடன் பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள். ஏதோ சொந்தக் குழந்தையை வளர்ப்பதைப் போல செடியை கவனித்துக்கொண்டார்கள்.

செடியும் வஞ்சனை இல்லாமல் வளர்ந்தது. ஒருநாள் அந்த செடிக்கு உரம் வாங்கிவந்து போட்டான் கணவன். செடி இன்னும் செழிப்பாக நன்கு வளர ஆரம்பித்தது.

ஆனாலும் பூ பூக்கவில்லை. அந்தத் தொட்டியை வீட்டின் பின்புறம் கொல்லையில் வைத்தால் இன்னும் நன்கு வளருமே என இருவருமே ஒருசேர நினைத்தார்கள். அந்த இடம் கொசுக்களால் நிரம்பியிருக்கும். அந்த இடத்தை பெருக்கி சுத்தம் செய்தாள் மனைவி. தண்ணீர் தெளித்து கோலமும் போட்டாள். அந்த இடமே லஷ்மிகரமாய் மாறிவிட்டதைப் போல இருந்தது. தொட்டியை அங்கு கொண்டு வைத்தார்கள்.

என்ன ஆச்சர்யம். நினைத்ததுக்கு மாறாய் அந்தச் செடி இன்னும் வேகமாக வளர்ந்தது. சின்ன மொட்டு வைத்தது. பார்த்துப் பார்த்து அதிசயப்பட்டார்கள் இருவரும். அதிர்ஷ்டம் நெருங்கி விட்டது என பேசிக்கொண்டார்கள்.

கணவனுக்குப் பிடித்த சமையலை செய்துகொடுத்தாள் மனைவி. கணவனும் அடுத்த தெருவில் நடந்துகொண்டிருந்த கட்டிடப் பணிக்குச் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தான். மனைவிக்குப் பிடிக்குமே என தினமும் பூ வாங்கி வர ஆரம்பித்தான். வீட்டுக்கு வந்ததும் சுவாமி படத்துக்கு கொஞ்சம் பூவை சாற்றிவிட்டு மீதியை மனைவியிடம் கொடுப்பான். அவர்களுக்குள் நல்ல இணக்கம் வர ஆரம்பித்தது.

ஒருநாள் செடியில் மிக அழகான ரோஜா பூ பூத்திருந்தது. அதிர்ஷ்டம் வந்து விட்டதை இருவரும் உணர்ந்தார்கள்.

சில தினங்களில் நல்ல செய்தியைச் சொன்னாள் மனைவி. தங்களுக்கு குழந்தைப் பிறக்கப் போவதை அறிந்த அவர்களுக்கு வாழ்க்கையில் இதைவிட அதிர்ஷ்டம் வேறில்லை எனும் அளவுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

குழந்தை பிறக்க இருப்பதால் கணவன் இன்னும் பொறுப்பனவனாக மாறினான். நாள் தவறாமல் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தான்.

மேலும் சில தொட்டிகள் வாங்கிவந்து ரோஜா மல்லி முல்லை என செடிகளை நட்டு வளர்க்க ஆரம்பித்தார்கள். வருவோர் போவோர் எல்லாம் அது நர்சரி என நினைத்து செடிகள் என்ன விலை என கேட்க ஆரம்பிக்க அவர்களுக்குள் ஓர் எண்ணம். பூச்செடிகளை விற்பனை செய்தால் என்ன என்ற அருமையான யோசனை தோன்றியது.

நல்ல நாளில் பெண் குழந்தை பிறக்க அதற்கு சாதனா என பெயரிட்டார்கள். சாதனா என்ற பெயரையே நர்சரிக்கும் வைத்து அதை நல்லபடியாக விரிவுபடுத்தினார்கள். வைத்திருப்பது என்னவோ பதினைந்து தொட்டிகள்தான். ஆனால் தினமும் 10 செடிகளாவது விற்பனை ஆகும்.

சோம்பேறியாக முடங்கிக்கிடந்த அந்த தம்பதி இன்று அழகான நர்சரிக்கு உரிமையாளராயினர்.

அதிர்ஷ்டம் என்பது பூத்தொட்டியில் இல்லை. பூத்தொட்டி மீது வைத்திருந்த நம்பிக்கையில் என்பது நமக்கெல்லாம் தெரியும். ஆனால் அந்த தம்பதிக்கு அந்த பூத்தொட்டிதான் அவர்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்ததாக நம்பிக்கை.

மகான் கொடுத்த பூத்தொட்டியை கடவுளாக பாவித்து தினமும் பூஜை செய்து பணிகளை ஆரம்பிப்பார்கள். அந்தத் தொட்டியில் உள்ள செடி பூப்பதை நிறுத்திவிட்டால் வேறு செடி மாற்றி தொட்டி வெற்றிடமாக இல்லாமல் பொக்கிஷமாக பார்த்துக்கொண்டார்கள்.

அவர்கள் வாழ்க்கை ஓஹோவென அமோஹமாக சென்றுகொண்டிருக்கிறது.

வாழ்க்கையில் ஏதேனும் ஒரு குறிக்கோளை வைத்துக்கொண்டு நம்பிக்கையுடன் வாழத் தொடங்கினால் அதிர்ஷ்டம் தானாக வீட்டுக் கதவை தட்டும். வெற்றிப் பாதைகள் தானாகவே வழிகாட்டும். கஷ்டங்களை விரட்டி அடிக்கும் மனப்பக்குவம் பிரவாகமாக ஊற்றெடுக்கும்.

வாருங்கள்… சோர்வை விரட்டி வாழ்ந்து காட்டுங்கள்… நீங்கள்தான் ஆகச் சிறந்த அதிர்ஷ்டசாலி.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

சஞ்சிகை108 இணையதளத்தில்!

செப்டம்பர்  3,  2020  வியாழன்: சஞ்சிகை108 என்ற இணையதளத்தில் இந்தக் கட்டுரை வெளியாகியுள்ளது
https://sanjigai108.com/

(Visited 51 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon