ஹலோ with காம்கேர் – 223
August 10, 2020
கேள்வி: டிஜிட்டல் திருட்டு எங்கிருந்து ஆரம்பிக்கிறது?
சமூக வலைதளங்களில் பிறரது படைப்புகளை காப்பி செய்து தன் பெயரில் பேஸ்ட் செய்பவர்கள் ஒருரகம்.
விற்பனையில் இருக்கும் இ-புத்தகங்களின் அட்டையை மட்டும் மாற்றிவிட்டு அதை தாங்கள் எழுதியதாகவே புத்தக வெளியீட்டு விழா எடுத்து விளம்பரப்படுத்தி ஆன்லைனில் விற்பனை செய்துகொண்டிருப்பவர்கள் மற்றொரு ரகம்.
பிறரது புத்தகங்களையும், பத்திரிகைகளையும் PDF ஆக தங்கள் வாட்ஸ் அப் குழுமத்திலும், ஃபேஸ்புக் குழுக்களிலும் அவர்களின் கவனத்துக்கே வராமல் விற்பனை செய்து பணம் சம்பாதிப்பவர்கள் வேறொரு ரகம்.
டிஜிட்டல் உலகம் இதுபோல சொந்தமாக யோசிக்காமல் எப்படி பிறர் உழைப்பில் குளிர் காயலாம் என்கின்ற வித்தையை நன்றாகவே கற்றுக்கொடுத்திருக்கிறது.
இதுபோல தவறுகள் செய்பவர்கள் ஒருசிலரிடம் நான் பேசியிருக்கிறேன்.
‘இதுபோல செய்வது தவறில்லையா?’
‘இதில் என்ன தவறு மேடம். புத்தகத்தில் என்ன பெரிதாக சம்பாதித்துவிட முடியும். ஜஸ்ட் ஒரு பொழுதுபோக்குக்காகவே இப்படி விற்பனை செய்கிறோம்’
‘அதைத்தான் நானும் சொல்கிறேன். புத்தகத்தில் என்ன சம்பாதித்துவிட முடியும். பல நூல் ஆசிரியர்கள் இதில் வரும் வருமானத்தை நம்பித்தானே வாழ்கிறார்கள். இதுபோல சட்டத்துக்குப் புறம்பாக விற்பனை செய்வது அவர்கள் வயிற்றில் அடிப்பதைப் போல உங்களுக்கு உறுத்தவில்லையா?’
இப்படி நான் கேள்வி கேட்ட பிறகு என் ஐடியை ப்ளாக் செய்துவிட்டு சென்றிருக்கிறார்கள். மொபைல் எண்ணையும் சேர்த்துத்தான்.
ஒரு புத்தகம் என்பது வெறும் பக்கங்களில் மட்டும் கட்டுண்டதில்லை. எழுத்தாளர், லே அவுட் டிஸைனர், புத்தக அட்டை வடிவமைப்பாளர், பிழைத் திருத்துனர் என பலரின் கடின உழைப்பில் உருவாவது. அச்சுப் புத்தகம் என்றால் அச்சகத்தில் பணிபுரிவோர், பேப்பர் சப்ளை செய்வோர் என இன்னும் சிலரின் கூடுதல் உழைப்பும் சேர்ந்துவிடும்.
இப்படி பலரின் வாழ்வாதரத்தை நாசப்படுத்திவிட்டு திருட்டுப் புத்தகம் போட்டு விற்பனை செய்பவர்கள் எப்படி நிம்மதியாக சாப்பிட முடிகிறது என தெரியவில்லை.
டிஜிட்டல் திருட்டின் தொடக்கம் புத்தகத்தில் இருந்து ஆரம்பிக்கவில்லை. விண்டோஸ், மைக்ரோ சாஃப்ட் போன்ற அடிப்படை சாஃப்ட்வேர்களின் ஒரிஜினர் வெர்ஷனை கூட பணம் கொடுத்து வாங்காமல் பைரட்டட் சாஃப்ட்வேர்களை பயன்படுத்துவதில் ஆரம்பிக்கிறது.
அது மெல்ல மெல்ல பரவி டிஜிட்டல் உலகின் இண்டு இடுக்கெல்லாம் நுழைந்து விட்டது.
அடோப் போட்டோஷாப்பின் கிரியேட்டிவ் கிளவுட் (Adobe Photoshop – Creative Cloud) என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டபோது அடோப் நிறுவனத்தில் இருந்து போன் செய்திருந்தார்கள்.
உங்களிடம் அடோப் கிரியேட்டிவ் கிளவுட் ஒரிஜினல் இருக்கிறதா என்று கேட்டார்கள். அடோப் நிறுவனம் அடோப் போட்டோஷாப்பின் கிரியேட்டிவ் கிளவுட் ட்ரையல் வெர்ஷன் வெளியிட்டிருந்த சமயம் அது. அதைப் பயன்படுத்திப் பார்த்தே அந்த நூலை எழுதி இருந்தேன். அதற்கு முந்தைய அடோப் போட்டோஷாப் வெர்ஷன்களுக்கு புத்தகம் எழுதிய போது அவற்றின் ஒரிஜினல் வெர்ஷன் சாஃப்ட்வேர்கள் என்னிடம் இருந்ததால் அதை தெளிவாக சொல்லி புரிய வைத்தேன்.
தமிழகத்தில் அடோப் சாஃப்ட்வேரை தமிழில் புத்தகமாக அறிமுகப்படுத்தி அந்த சாஃப்ட்வேரை பரவலாக்கி வருவதற்கு பாராட்டினார்கள். சான்றிதழ் அனுப்புவதாக சொன்னார்கள்.
தொழில்நுட்பப் புத்தகம் எழுதி வெளியிடுவது என்பது அத்தனை எளிதல்ல. தொழில்நுட்பத்தை எளிமையாக சொல்ல வேண்டும். வழி வழியாக ஸ்கீரீன் ஷாட் எடுத்து சுலபமாக அவர்களே செய்து பார்க்கும்படி எழுத வேண்டும். புகைப்படங்களை கலரில் இருந்து கருப்பு வெள்ளைக்கு மாற்ற வேண்டும். புகைப்படங்களையும் அதற்கு இணையான வழிமுறைகளையும் அதிக சிரத்தை எடுத்து லே அவுட் செய்ய வேண்டும். லே அவுட் செய்து முடித்ததும் பொதுவான தமிழ் ப்ரூஃப், தொழில்நுட்ப வார்த்தைகளுக்கான ஸ்பெஷல் ப்ரூஃப், லே அவுட்டில் உள்ள படங்களுக்கு இணையாக வழிமுறைகள் உள்ளனவா என்ற லே அவுட் ப்ரூஃப் என தொழில் நுட்ப புத்தகங்களை பிழைத்திருத்தம் செய்வதும், குவாலிடி செக் செய்வதும் அத்தனை சுலபமல்ல.
எழுதுவதைவிட ப்ரூஃப் பார்ப்பதும், பிழைகள் திருத்தப்பட்ட புத்தகத்தை மீண்டும் சரிபார்ப்பதும் எத்தனை மன உளைச்சலை உருவாக்கும் என்பதை எழுத்தில் சொல்ல முடியாது.
இப்படி பெருவாரியாக படங்களால் நிரப்பப்பட்ட தொழில்நுட்பப் புத்தகம் 500 முதல் 600 பக்கங்கள் வரை எடுத்துக்கொள்ளும். அச்சுப் புத்தகம் எனில் விலையும் அதற்கேற்றாற்போலவே அதிகம் இருக்கும்.
தொழில்நுட்பப் புத்தகத்தின் அவசியம், விலை இவற்றை எல்லாம் மீறி அந்தப் புத்தகம் விற்பனையிலுன் சாதிக்க வேண்டும் என்றால் அந்த எழுத்தாளர் அந்தத் துறையை நிபந்தனையின்றி காதலிப்பவராகவும், நீண்ட நெடும் பயணத்தில் மிகுந்த அனுபவம் கொண்டிருப்பவராகவும், கடுமையான உழைப்பாளியாகவும் இருந்தால் மட்டுமே சாத்தியம்.
அந்த வகையில் என்னுடைய தொழில்நுட்பப் புத்தகங்கள் இன்றளவும் விற்பனையிலும் சோடை போகவில்லை.
ஆனாலும் நம் உழைப்பை ‘ஜஸ்ட் லைக் தட்’ ஒரு PDF ஃபைலில் தட்டிச் செல்வது வேதனைதான்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software