ஹலோ with காம்கேர் – 226
August 13, 2020
கேள்வி: விபத்துக்கள் உண்டாக்கும் வேதனைகளில் இருந்து மீள முடியுமா?
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கோழிக்கோடு விமான நிலையம் எனப்படும் கரிப்பூர் விமான நிலையத்தில் 35 அடி ஆழத்தில் விழுந்து சமீபத்தில் விபத்துக்குள்ளான விமானத்தில் 190 பயணிகள் பயணித்ததாகவும் விமானி, துணை விமானி உட்பட 19-க்கும் மேற்பட்டோர் இறந்ததாகவும், 120-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், இன்னும் சிலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன.
190, 2, 19 என்பவை விபத்தை செய்தியின் வாயிலாக பார்க்கும் நமக்கெல்லாம் வெறும் எண்ணிக்கைகள் மட்டுமே. இறந்தவர்களைவிட பிழைத்தவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பது ஆறுதலான விஷயம்தான். சந்தேகமே இல்லை.
விபத்துகளில் இறந்தவர்களைவிட உயிருடன் மீண்டு வருபவர்களின் நிலைதான் பரிதாபம். வாழ்நாள் வேதனை.
ஒரு விபத்து என்பது பிழைத்தார்களா அல்லது இறந்தார்களா என்பதில் மட்டும் முடிவதில்லை. அதற்குப் பின் விபத்தில் சிக்கியவர்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பது அதை விலகி இருந்து உன்னிப்பாக கவனிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.
துணை விமானியின் மனைவி நிறைமாத கர்பிணி. இறந்த தன் கணவனின் உடலைப் பார்த்து ‘யார் இவர்?’, ‘இவர் அகிலேஷ் இல்லை’ என திரும்பத் திரும்பச் சொல்லி அழுதுகொண்டே இருந்ததாக சொல்லும் செய்திகள் வேதனை.
இந்த செய்தியும் அவர் அனுபவிக்கும் வேதனையும் வயிற்றில் இருக்கும் அவரது கருவையும் சேர்த்தல்லவா பாதிக்கும்.
விமான விபத்தில் ஒரு குழந்தை இறந்துவிட உயிர் பிழைத்த கணவன் சிகிச்சைப் பெற்றுவரும் மனைவியிடம் அந்தக் குழந்தை நன்றாக உள்ளதாக சொல்லி தேற்றி வருவதாகச் சொல்லி வருகிறாராம். எத்தனை இக்கட்டான மனநிலை உயிர் பிழைத்த அந்த கணவனுக்கு.
எங்கள் குடும்பத்தில் உறவினர் ஒருவர் தன் இரண்டாவது குழந்தையை கருவுற்றிருந்த சமயம் அவரது கணவர் மாரடைப்பால் திடீரென இறந்துவிட்டார். அப்போது அவருக்கு வயது 28. ஏழு மாத கர்ப்பிணி. அதற்கு முந்தைய மாதம்கூட மருத்துவ பரிசோதனையில் குழந்தை நார்மலாக உள்ளது என உறுதி செய்திருந்தார்கள். ஆனால், எதிர்பாராமல் கணவன் இறந்த அதிர்ச்சியில் அடுத்த மாதமே அவருக்கு 7-வது மாதத்திலேயே குழந்தை பிறந்துவிட்டது. அந்த குழந்தை நார்மலான குழந்தையாக இல்லை. இன்றளவும் நடக்க முடியாமல் வீல் சேரில்தான் வாழ்க்கை. இப்போது அந்தக் குழந்தை இப்போது 30 வயது பெண்மணி.
இப்படி விபத்தில் சிக்கியவர்கள் கை கால் உடைந்து மாற்றுத்திறனாளியாகலாம், அதிர்ச்சியில் மனநிலை பாதிக்கப்பட்டவராகலாம். நாம் நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு உடலாலும், மனதாலும் பாதிக்கப்படலாம். நிரந்தர நோயாளியாகவும் மாறலாம்.
எனக்குத் தெரிந்து ஒரு பஸ் விபத்தில் காயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து உயிர் பிழைத்த ஒரு பெண்ணுக்கு நாக்கில் சுவை உணர்வே போய்விட்டதாம். எதை சாப்பிட்டாலும் சுவை தெரியாது. விபத்து நடந்த போது அவருக்கு வயது 28. இப்போது வயது 38. நன்றாக சாப்பிட்டு வாழ வேண்டிய இளம் வயதில் நாக்கில் சுவை உணர்வே அற்றுப்போய்விடும் அளவுக்கு விபத்து பாதிப்பை உண்டாக்கியுள்ளது.
சாதாரணமாக தண்ணீரில் சற்றே கால் சறுக்கி எலும்பு முறிவு ஏற்பட்டாலே அது முழுமையாக சரியாவதற்கு அவரவர்கள் வயதுக்கேற்ப சில நாட்களோ அல்லது சில மாதங்களோ, ஏன் சில வருடங்களோ ஆகும்.
விபத்தில் அதுவும் எதிர்பாராமல் நடந்த பேரதிர்ச்சியான விபத்தில் சிக்கியவர்கள் உடல் பாகங்கள் எந்த அளவுக்கு அதிர்வுக்குள்ளாகி இருக்கும். உடல் மட்டுமல்ல. மனதும்தான்.
ஒருமுறை சென்னை அண்ணா மேம்பாலத்தில் ஒரு பஸ் தலை குப்புற விழுந்த விபத்தில் நிறைய பேர் பிழைத்தார்கள் என்றன செய்திகள். ஆனால் தலைகுப்புற ஒரு பஸ் விழுந்தால் அதில் பயணிப்பவர்களின் உடல் பாகங்களில் எத்தனை அதிர்வுகள் உண்டாகி இருக்கும். எந்த பாகம் எங்கு சென்று ஒன்றோடொன்று இடித்து பிரச்சனையை உண்டாக்கி இருக்கும். எத்தனை பேர் கை, கால், கண் இழந்திருப்பார்கள். எத்தனை பேருக்கு சிறுநீரகம், கர்ப்பப்பை, கல்லீரல், நுரையீரல், இதயம் என உள் உறுப்புகள் அடி வாங்கி இருக்கும். இதுபோன்ற உள் உறுப்புகளின் பிரச்சனைகள் உடனுக்குடன் வெளியில் தெரியலாம் அல்லது எதிர்காலத்தில் மோசமாக பாதிக்கப்படலாம்.
உதாரணத்துக்கு, தொடர்ச்சியான தலைவலிக்கு மருத்துவரிடம் செல்கிறீர்கள். எல்லா பரிசோதனையும் முடித்த பிறகு அவர், ‘சின்ன வயதில் எப்போதாவது தலையில் அடிபட்டிருக்கிறதா?’ என கேட்பார். ஆக, சின்ன வயதில் நம்மையும் அறியாமல் தலையில் பட்ட அடி பின்னாளில் தீவிர சிக்கைப் பிரிவுக்கு செல்லும் அளவுக்கு பாதிப்பை உண்டு செய்யும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
ஒரு விபத்தை ஒட்டிய ‘ஃபாலோ அப்’ செய்தியை ஆய்வு செய்து செய்தியாக்கும்போது அது விபத்துச் செய்தியைவிட அதி பயங்கரமாக இருக்கும்.
எனக்குத் தெரிந்து இதுபோல கடுமையான விபத்தில் சிக்கி மீண்டவருக்கு வித்தியாசமான நோய். யாரேனும் கடுமையாக நடந்துகொண்டாலோ அல்லது இறுக்கமான மனநிலைக்கு செல்லும் சூழலிலோ அவர் செயலற்று அப்படியே நின்றுவிடுவார். அவர் நார்மல் ஆவதற்கு அரை மணி ஆகும். இதன் காரணத்தாலேயே தொழில்நுட்பம் படித்திருந்தும் நல்ல வேலையில் நிலைத்திருக்க முடியாமல் ஏதோ கிடைத்த வேலையில் இருக்கிறார். அதுவும் தொடர்ச்சியாக ஓரிடத்தில் இருக்காது. விபத்துக்கு முன் அவர் தொழில்நுட்ப நிறுவனத்தில் சீனியர் டீம் லீடர். இன்று அந்தத்துறையில் இல்லை. குறிப்பிட்டுச் சொல்லும்படி எந்தத் துறையிலும் இல்லை.
ஒரு விபத்து ஒரு மனிதனின் கனவுகளை எப்படியெல்லாம் சிதைத்துவிடுகிறது.
கோழிக்கோடு விமான விபத்து கொடுத்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீள முடியவில்லை.
விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலிகள். சிகிச்சைப் பெற்று வருபவர்களுக்கு பிரார்த்தனைகள். தங்கள் சொந்த காரை விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பயன்படுத்தியவர்களுக்கு சல்யூட். கொட்டும் மழையிலும் கொரோனா நோய் பயமுறுத்தலையும் பொருட்படுத்தாது விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவிய பொது மக்களுக்கும், தன்னார்வல தொண்டர்களுக்கும் hats off.
இந்த மனநிலையில் அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும் என வாழ்த்த முடியவில்லை.
புகைப்படம்: bbc.com
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software