ஹலோ With காம்கேர் -283 :  மூன்று விதமாக பேசும் / எழுதும் பாணி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

ஹலோ with காம்கேர் – 283
October 9, 2020

கேள்வி: மூன்று விதமாக பேசும் / எழுதும் பாணி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

இரண்டு தினங்களுக்கு முன்னர் யு-டியூபில் நான் வெளியிட்டிருந்த ஒரு வீடியோவில் எங்கள் காம்கேர் டிவி சேனலை எப்படி சப்ஸ்க்ரைப் செய்துகொள்வது என்றும் கொஞ்சம் விளக்கமாகவே சொல்லி இருந்தேன்.

நான் என்ன சொல்லி இருந்தேன் தெரியுமா என்பதைவிட எப்படி சொல்லி இருந்தேன் என கவனியுங்களேன்.

எங்கள் காம்கேர் டிவியின் யு-டியூப் சேனலை சப்ஸ்க்ரைப் செய்துகொள்ள எந்தவிதமான கட்டணமும் கிடையாது.

நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் வீடியோவின் கீழே சப்ஸ்க்ரைப் என்ற பட்டன் இருக்கும். அதை கிளிக் செய்து உங்கள் ஜிமெயில் முகவரி மற்றும் பாஸ்வேர்ட் மூலம் சைன் செய்து கொண்டு சப்ஸ்க்ரைப் பட்டனை க்ளிக் செய்ய வேண்டியதுதான். மிக சுலபமான வழிமுறை. அத்துடன் முற்றிலும் இலவசமும்கூட.

ஃபேஸ்புக்கில் நமக்குப் பிடித்த பேஸ்புக் பக்கங்களை லைக் செய்து சப்ஸ்க்ரைப் செய்துகொள்வதைப் போலதான் யு-டியூபில் சேனல்களை சப்ஸ்க்ரைப் செய்துகொள்வதும். எப்போதெல்லாம் புது வீடியோக்களை அந்த சேனலில் அப்லோட் செய்கிறார்களோ அப்போதெல்லாம் ஃபேஸ்புக்கில் நோட்டிஃபிகேஷன் வருவதைப் போல நோட்டிஃபிகேஷன் வரும். எந்த வீடியோவையும் தவற விடாமல் பார்க்கலாம் என்று விளக்கம் கொடுத்திருந்தேன்.

இதில் உள்ள மூன்று பத்திகளையும் நன்றாக உள்வாங்கிக்கொள்ளுங்கள். ஒரு விளக்கம். அதை மூன்று பகுதிகளாக சொல்லி இருப்பது புரிகிறதா?

யு-டியூப் சேனல்களைக் கூட சப்ஸ்க்ரைப் செய்துகொள்ளத் தெரியாதவர்களா இருக்கிறார்கள் என ஒருசிலர் என் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் ஒருசிலர் கேட்டிருந்தார்கள். ஒருசிலர் யு-டியூப் பின்னூட்டத்திலும் கருத்து சொல்லி இருந்தார்கள்.

அவர்களுக்காக சிறு விளக்கம்.

பொதுவாகவே நான் தொழில்நுட்பம் குறித்து எழுதும்போதும் சரி, மேடையில் பேசும்போதும் சரி வாசகர்களையும் பார்வையாளர்களையும் மனதில் கொண்டே செயல்படுவேன்.

எதிரே அமர்ந்திருப்பவர்களில் மூன்றுவிதமான பிரிவினர் இருப்பார்கள்.

முதல் பிரிவினர் சொன்னவுடன் புரிந்துகொண்டு விடுவார்கள்.

இரண்டாவது பிரிவினருக்கு கொஞ்சம் விரிவாக சொன்னால்தான் புரியும்.

மூன்றாவது பிரிவினருக்கு உதாரணங்கள் மூலம் ஒப்பிட்டு எடுத்துச் சொல்ல வேண்டி இருக்கும்.

எனவே என் உரையை மூன்றுவிதமாக வெளிப்படுத்துவேன். முதலில் சொல்ல வந்ததை அப்படியே சொல்லிவிடுவேன். பிறகு கொஞ்சம் விரிவாக சொல்வேன். இறுதியில் உதாரணத்துடன் சொல்லி முடிக்கும்போது பார்வையாளர்கள் அத்தனை பேருக்கும் நான் சொல்ல வந்த கருத்து சென்று சேர்ந்திருக்கும்.

உதாரணத்துக்கு அந்த வீடியோவில் நான் சொல்லி இருந்த யு-டியூப் சேனலை சப்ஸ்க்ரைப் செய்துகொள்வதற்கான வழிமுறையையே எடுத்துக்கொள்ளலாமே.

யு-டியூப் சேனலை சப்ஸ்க்ரைப் செய்துகொள்ளுங்கள் என சொல்லிவிட்டு கடந்து சென்றால் யு-டியூபில் வீடியோக்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் பலருக்கு அதை சப்ஸ்க்ரைப் செய்துகொள்வதன் அவசியம் தெரியாமல் இருக்கும். அவர்களுக்காக எப்படி சப்ஸ்க்ரைப் செய்வது என விளக்கி இருப்பேன். அடுத்து ஏன் சப்ஸ்க்ரைப் செய்துகொள்ள வேண்டும் என தெரியாதவர்களுக்காக அதற்கு ஓர் உதாரணம் சொல்லி விளக்கி இருப்பேன்.

இப்படி எந்த ஒரு விஷயத்தையும் மூன்று பிரிவினருக்கும் புரியும்படி மூன்றுவிதமாக எடுத்தாள்வதே நான் கடைபிடிக்கும் லாஜிக்.

பொதுவாக வீடுகளிலேயே தன் மனைவி / கணவன், தன் அப்பா அம்மா / மாமியார் மாமனார், தன் குழந்தைகள் என மூன்று தலைமுறையினருக்கும் புரியும்படி ஒரு விஷயத்தை சொல்வதே ஒரு கலை. ஒரு விஷயத்தை தன் இணைக்கு சொல்வதைப் போல வீட்டில் உள்ள பெரியோர்களுக்கு சொல்ல முடியாது. அதுபோல தன் பிள்ளைகளுக்கும் சொல்ல முடியாது. அவரவர்களின் வயதையும் புரிதலையும் மனதில்கொண்டு சொன்னால்தான் சொல்ல வந்த கருத்து சரியாக சென்று சேரும். இதே நுணுக்கத்தைத்தான் நான் தொழில்நுட்பத்தைக் கையாளும்போதும் கடைபிடிக்கிறேன்.

இப்போதெல்லாம் எங்கே மூன்றுதலைமுறையினர் இருக்கிறார்கள். அப்பா, அம்மா, ஒரு குழந்தை இப்படி குடும்பங்கள் சுருங்கிவிட்டதே என மனதில் நினைத்தாலும் அதை பின்னூட்டத்தில் பதிவிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.  எனக்குத் தெரிந்து இன்னமும் தன் அப்பா அம்மாவுடம் சேர்ந்து வசிக்கும் எத்தனையோ பேரை சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறேன். இன்னும் சில இடங்களில் அப்பா அம்மாவின் தாயோ தந்தையோ கூட அவர்களுடனேயே இருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

முதியோர் இல்லங்கள் பெருகுவது ஒருபக்கம் இருந்தாலும் நான் சொல்லி உள்ளபடி ஒரே குடும்பமாக வசிப்பவர்களையும் சென்னை போன்ற மாநகரங்களிலேயே பார்க்க முடிகிறது என்பது சற்று ஆறுதலான விஷயமே.

இந்தப் பதிவில் எடுத்துக்கொண்ட கேள்விக்கான விளக்கத்தையும் கவனியுங்களேன். ஒரே விஷயம் மூன்று கோணங்களில் மூன்றுவிதமாக விளக்கம் கொடுக்கும் என் பாணியை உணர முடியும்.

ஃபேஸ்புக்கில் தொடர்ந்து வாசியுங்கள்! யு-டியூப் சேனலை சப்ஸ்க்ரைப் செய்துகொண்டு பின்தொடருங்கள்.

வாழ்த்துகள். நன்றி!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 37 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon