‘விகே (எ) விக்டரி கிங்’ : விரிவான கோணம்

உலகிலேயே முதல் முதலாக
Ai தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ஆட்டோபயோகிராஃபி படம்
 ‘விகே () விக்டரி கிங்
 —————–
காம்கேர் கே. புவனேஸ்வரி
WhatsApp: 9444949921

 ‘தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்’ என்பதைப் போல இன்று எங்கு திரும்பினாலும் Ai தான்.

Artificial iNtelligence என்பதன் சுருக்கமான Ai எனும் செயற்கை நுண்ணறிவு அதிரடியாக களம் இறங்கி, அதி வேகமாக நம் வாழ்க்கையின் அனைத்து விஷயங்களிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மேலோட்டமாக பார்த்தால் Ai என்னவோ மாய மந்திரத்தால் திடீரெனெ முளைத்த விஷயமாக தோன்றலாம். ஆனால் ஹிட்லர் வாழ்ந்த காலத்திலேயே (1899-1945) அவர் Ai தொழில்நுட்பத்தை இரண்டாம் உலகப் போரிலேயே பயன்படுத்தி உள்ளார் என்பது வரலாறு. எந்த இடத்தில் உள்ள ஆயுதம் எப்போது வெடித்து சிதறும் என்று அவருக்கு மட்டுமே தெரியும் என்றும், Ai தொழில்நுட்பத்தின் மூலம் அதை கட்டுப்படுத்தினார் என்றும் சொல்கிறார்கள். ஆக, இன்றைய பேசுபொருளான Ai தொழில்நுட்பத்துக்கான தொடக்கப் புள்ளி எத்தனையோ வருடங்களுக்கு முன் போட்டாயிற்று என்றே சொல்ல வேண்டும்.

இன்று தொழில்நுட்பம் அறிந்தவரும் அறியாதவரும் Ai என்ற நுட்பத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ பயன்படுத்தி வருகிறார்கள். பத்திரிகைகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் Ai நுட்பம் பரவலாகவும் விரைவாகவும் ஊடுருவி வருவதை நாம் அனைவருமே கண்கூடாக பார்க்கிறோம். மருத்துவம், கல்வி, இராணுவம், விவசாயம் என அதிமுக்கியமான அத்தியாவசியத் துறைகளிலும் Ai ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து சில வருடங்கள் ஆகின்றன. குழந்தைகளும் பெரியோர்களும் தங்கள் புகைப்படத்தை வைத்து மாயாஜாலம் செய்து மகிழ்வதும், சிறு வீடியோவாக்கி கொண்டாடுவதும் வெகு இயல்பாக நடந்து வருகிறது.

இப்படி பலரும் பலவிதமாக Ai தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கும்போது, சென்னையை சேர்ந்த காம்கேர் கே. புவனேஸ்வரி, முழுக்க முழுக்க Ai தொழில்நுட்பத்தில் தன் தந்தையின் வாழ்க்கை வரலாற்றை இயக்கி தயாரித்துள்ள சுயசரிதை ஆவணப்படம் நம் எல்லோரையும் ஆச்சர்யப்படுத்துவதுடன், நம் நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளது.

இந்த ஆட்டோபயோகிராஃபி படம்தான் உலகிலேயே முதல் முதலாக Artificial iNtelligence தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டது என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இதன் தலைப்பு ‘விகே (எ) விக்டரி கிங் (VK Alias Victory King)’.

‘இதனை  3 சீசன்களாக இயக்கி உள்ளார். ஒவ்வொரு சீசனிலும் 7 பகுதிகள். மொத்தம் 21 பகுதிகள். முதல் சீசனில், இவரது அப்பாவின் பிறப்பு முதல் திருமணம் வரை. இரண்டாம் சீசனில், இவர் பெற்றோர் குழந்தைகளை வளர்த்த விதம். மூன்றாம் சீசனில், இவரது பெற்றோரைப் பற்றி குழந்தைகள் சொல்லும் பகுதி. ஒவ்வொரு பகுதியும் 20 நிமிடங்கள். ஆக 7 மணி நேரம் ஓடக் கூடியது. அந்த வகையில் உலகிலேயே முழுநீள ஏஐ படம் என்ற அங்கீகாரத்தைப் பெற்றதில் ஆச்சர்யம் இல்லையே?

பொதுவாகவே எந்த ஒரு விஷயமும் முதன் முதலில் உருவாக்கப்பட்டது எனும்போது அதைக் காணும் மற்றவர்களுக்கு அது பிரமிக்கத்தக்க வகையில் அமையும். அதை உருவாக்கியவருக்கோ அது பரவசமான ‘யுரேகா தருணமாக’ அமையும். முழுநீள Ai ஆட்டோபயோகிராஃபி படத்தை இயக்கி, ‘யுரேகா’ உணர்வில் இருக்கும் காம்கேர் கே. புவனேஸ்வரி தான் இயக்கியுள்ள Ai படத்தைப் பற்றி நம்முடன் உற்சாகமாக பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் நம் நாட்டில் காலடி எடுத்து வைக்கும் முன்னரே, கம்ப்யூட்டர் சயின்ஸில் இரட்டைப் பட்டம் பெற்றவர். (M.Sc., Computer Science). அதைத் தொடர்ந்து எம்.பி.ஏ பட்டமும் பெற்றுள்ளார்.

1992 ல் காம்கேர் சாஃப்ட்வேர் என்ற ஐடி நிறுவனத்தை தொடங்கியவர். இந்தியாவில் சாஃப்ட்வேர் நிறுவனம் தொடங்கிய முதல் பெண் பொறியாளர் என்ற அங்கீகாரத்தையும் பெற்றவர். 1992-ல் இருந்து தொடர்ச்சியாக 33 வருடங்களுக்கு மேலாக காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். தன் நிறுவனத்தின் மூலம் தாங்கள் தயாரிக்கும் சாஃப்ட்வேர், அனிமேஷன், ஏஐ தயாரிப்புகளை அந்தந்த காலகட்டத்திலேயே புத்தகங்களாக எழுதி வெளியிட்டு வருகிறார். அதன் எண்ணிக்கை 250-ஐ தொட்டுள்ளது. தான் கற்றதையும், பெற்றதையும் இந்த சமுதாயத்துக்கு தன் எழுத்து, பேச்சு, ஆடியோ, வீடியோ என அத்தனை மீடியாக்கள் மூலம் திருப்பித் தந்து வருகிறார்.

கம்ப்யூட்டர் தொழில்நுட்பம், இணைய தொழில்நுட்பம், ஏஐ தொழில்நுட்பம் என தொழில்நுட்பத்தின் அத்தனை சாத்தியக்குறுகளையும் தமிழில் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்றதில் காம்கேர் புவனேஸ்வரிக்கும், இவரது காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனத்துக்கும் பெரும் பங்குண்டு.

எப்படி திடீரென Ai ல் ஆர்வம் வந்தது?

திடீரென்றா? சொன்னால் நம்ப முடியாது. ஆனால் இதுதான் உண்மை. 1992 களில் இருந்தே Ai ஆராய்ச்சிகளை செய்து வருகிறேன்.

1996 லேயே சாதாரண டாஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் டெஸ்க்டாப்பிலேயே ஒரு யானை நடந்து  வருவதைப் போல் அனிமேஷனில் ஸ்கிரீன் சேவர் தயாரித்தோம். 2002 லேயே நம் குரலை குளோன் செய்து நாம் எழுதிய புத்தகங்களை, படித்து ரெகார்டிங் செய்யாமல் நம் குரலிலேயே தானாகவே ரெகார்ட் ஆகும் நுட்பங்களை எல்லாம் கண்டுபிடித்து இந்த சமுதாயத்துக்கு அறிமுகப்படுத்தினோம். 2005 ல் கூகுள் எல்லாம் பிரபலமாவதற்கு முன்பே திருவாசகம் ஆன்மிக படைப்பை Search வசதிகளை எல்லாம் பொருத்தி கண் பார்வைத் திறன் அற்றவர்களும் பயன்படுத்தும் வகையில் வெளியிட்டோம். பார்வையற்றவர்கள் ஸ்க்ரைபர்ஸ் உதவியுடன் தேர்வு எழுதாமல், அவர்கள் தாங்களே வாயால் சொல்ல சொல்ல கம்ப்யூட்டர் திரையில் பதில்கள் தானாகவே வெளிப்படுமாறு சாஃப்ட்வேர்கள் எல்லாம் தாயாரித்து வெளியிட்டுள்ளோம். இவை அனைத்துமே Ai தொழில்நுட்பமே. ஆனால் என்ன அப்போது Ai என்ற பெயர் கிடையாது. பொதுவாக எல்லாவற்றுக்குமே சாஃப்ட்வேர் என்ற பெயர்தான்.

ஏஐ என்பது ஒரு சிறப்பு சாஃப்ட்வேர். சாதாரண சாஃப்ட்வேர்கள் நாம் என்ன கட்டளை இடுகிறோமோ அதை மட்டுமே செய்யும், ஏஐ என்ற சிறப்பு சாஃப்ட்வேர் நாம் இடும் கட்டளையை மேம்படுத்தியும், அதில் இருந்து தானாகவே கற்றுக் கொண்டும், நமக்குத் தேவையானதை துல்லியமாக செயல்படுத்திக் கொடுக்கும் ஆற்றல் கொண்டது.

கம்பராமாயணம், குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களின் பாடல்கள், கந்தர் சஷ்டி கவசம் என பல்வேறு பல்வேறு அனிமேஷன் படைப்புகளை Ai தொழில்நுட்பத்துடன் இணைத்து 2005 களிலேயே வெளியிட்டுள்ளோம்.

தொடர்ச்சியாக இன்றும் Ai குறித்த மேம்பட்ட ஆராய்ச்சிகளை செய்து Ai நுணுக்கங்களை உருவாக்கி வருகிறோம்.

எப்படி Ai தொழில்நுட்பத்தில் உங்கள் அப்பாவின் ஆட்டோபயோகிராஃபி தயாரிக்கும் எண்ணம் உருவானது?

பொதுவாக ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கும், எங்களைப் போல ஏஐ தொழில்நுட்பத்துக்காக ஆராய்ச்சிகள் செய்யும் நிறுவனங்களுக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் உண்டு.

பொதுமக்கள் என்போர் பயனாளர்கள், அதாவது Ai தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துபவர்கள். ஆராய்ச்சியாளர்கள் என்போர் தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பவர்கள், நுணுக்கங்களை புகுத்துபவர்கள், வளர்த்தெடுத்து அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்பவர்கள்.

2024 க்கு பிறகுதான் Ai நம் நாட்டில் பரவலாக பேசுபொருளாகி உள்ளது. மக்கள் அனைவரும் Ai ஐ பயன்படுத்தும் பயனாளர்கள் என்றால், நானும், எங்கள் ‘காம்கேர் சாஃப்ட்வேர்’ நிறுவனமும், Ai தொழில்நுட்பத்துக்கான சாஃப்ட்வேர், டூல்ஸ் போன்றவற்றை கண்டுபிடித்து உருவாக்கி வடிவமைத்துக் கொடுப்பவர்கள்.

இந்த ஆராய்ச்சிகளை நாங்கள் 1992 ஆம் ஆண்டில் இருந்தே தொடங்கி, ஏஐ தொழில்நுட்பத்தின் அடிப்படையில் ஏராளமான படைப்புகளை தயாரித்துள்ளதால், இன்று பரபரப்பாக மக்களால் பேசப்படும் ஏஐ தொழில்நுட்பத்தில் ஒரு அழகிய படைப்பை உருவாக்கி, ஏஐ-ன் முழு ஆற்றலையும் மக்களுக்கு அறிமுகப்படுத்த நினைத்தேன். அதற்கு நானே முன் உதாரணமாக இருக்க நினைத்தேன். இதுவே ஏஐ-யில் அப்பாவின் ஆட்டோபயோகிராஃபியை இயக்க நினைத்ததன் முதல் காரணம்.

தொலைபேசி துறையில் பணி புரிந்து ஓய்வு பெற்ற என் அம்மா பத்மாவதியும் அப்பா கிருஷ்ணமூர்த்தியும், விரைவில் சதாபிஷேகம் (80) கொண்டாட இருக்கிறார்கள். அவர்களுக்கு நானும், சாஃப்ட்வேர் துறையில் உயர் பதவியில் இருக்கும் என் தங்கை ஸ்ரீவித்யாவும், என் தம்பி சுவாமிநாதனும் என் பெற்றோரின் ஆட்டோபயோகிராஃபி படத்தை பரிசாகக் கொடுக்க நினைத்தோம். இதுவே இரண்டாவது காரணம்.

‘விகே (எ) விக்டரி கிங்’ – ஆட்டோபயோகிராஃபி படத்தின் பெயர் காரணம்?

என் அப்பாவின் பெயர் ‘வி. கிருஷ்ணமூர்த்தி’. சுருக்கமாக ‘விகே’. சிறுவயதில் என் அப்பா ‘விகே’ என்பதன் விரிவாக்கமாக ‘விக்டரி கிங்’ என புனைப்பெயர் வைத்துக் கொண்டார். இன்றும் ‘விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி’ என்ற தலைப்பில் தினமும் வாட்ஸ் அப்பில் வாழ்வியல் ஸ்டேட்டஸ் எழுதி வருகிறார். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் இவரது வாழ்வியல் பதிவுகள் பிரபலம். அதனால் ‘விகே (எ) விக்டரி கிங்’ என்பதையே தலைப்பாக வைத்தேன்.

அப்பாவுக்கு மட்டும் ஏன் சுயசரிதைப் படம் எடுத்துள்ளீர்கள்?

யார் சொன்னது அப்பாவுக்கு மட்டும் சுயசரிதைப் படம் எடுத்துள்ளேன் என்று? அப்பாவுக்கு Ai தொழில்நுட்பத்தில் சுயசரிதைப்படம் எடுத்துள்ளேன் என்பது மட்டும்தான் புதிது. மற்றபடி, என் அம்மா பத்மாவதிக்கு, கொரோனா காலகட்டத்தில்  நேரடியாக ஷீட்டிங் செய்தே சுயசரிதைப் படம் எடுத்துள்ளேன்.

அது மட்டும் இல்லாமல், 2007 ஆம் ஆண்டு ‘அன்புள்ள அப்பா அம்மாவுக்கு…’ என்ற பயோகிராஃபியை, என் பெற்றோருக்கும் தங்களுக்குமான பிணைப்பை 1-1/2 மணி நேரம் ஓடக் கூடிய படமாக ஷீட்டிங் எடுத்து இயக்கி உள்ளேன். அதையே புத்தகமாகவும் வெளியிட்டிருக்கிறேன்.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு ‘குடும்பப் புத்தகம்’ இருக்க வேண்டும் என்பேன். நம் மூதாதையர்களின் வரலாற்றை பதிவு செய்ய வேண்டும் அல்லவா? அதுதானே நம் அடுத்தத் தலைமுறைக்கு நாம் கொடுக்கும் ஆகச் சிறந்த பரிசு.

ஏஐ-யில் சுயசரிதை படத்தை உருவாக்கிய வழிமுறைகளை சொல்லுங்களேன்!

என் அப்பாவும், அம்மாவும் தொலைபேசி துறையில் வேலையில் சேர்ந்த காலகட்டம் 1966. அவர்களுடைய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மட்டுமே இருந்தது. அவர்களின் அப்பா அம்மா மற்றும் உடன் பிறந்தோருக்கோ அவர்களின் இளம் வயது புகைப்படங்கள் எதுவுமே கிடையாது. ஆனால் பின்னாளில் எங்கள் குடும்ப நிகழ்ச்சிகளில் எடுத்த புகைப்பட ஆல்பத்தில் இருந்து, அவர்களின் உருவத்தை மனதுக்குள் ஏற்றி, இளம்வயதில் அவர்கள் இப்படித்தான் இருந்திருப்பார்கள் என்ற அனுமானத்திலும், என்னுடைய மனதில் மெல்லியதாகப் பதிந்திருந்த அவர்களின் இளம்வயது உருவத்தையும் வைத்து என் கற்பனையில் அவர்கள் ஒவ்வொருவருக்கும் உருவம் கொடுத்து உயிர்ப்பித்தேன். அது இயல்பாக அமைந்தது தெய்வ அனுக்கிரகம். அந்த உருவங்களுக்கு அவதார் என்று பெயர். ஆனால் அவை அவதார்கள் பொம்மை போலவோ அல்லது செயற்கையாகவோ இல்லாமல் உயிருள்ள நிஜமான உருவங்களைப் போல் வடிவமைப்பதில்தான் நான் அதிகம் மெனக்கெட வேண்டியதாகி இருந்தது. அதற்கு நாங்கள் உருவாக்கிய ஏஐ டூல்கள் பெருமளவில் கைகொடுத்தன.

குடும்ப உறுப்பினர்களுக்கு உருவம் கொடுத்த பிறகு, அவர்கள் ஒவ்வொருவருக்கும் பிரத்யேகக் குரல் உருவாக்கினேன்.

அவர்கள் ஒவ்வொருவரின் பெயர், பணி, சிறப்பியல்புகள் என அனைத்தையும் தொகுத்து ஸ்கிரிப்ட் தயாரித்தேன். ஸ்கிரிப்ட் தயாரிப்பில் முழுக்க முழுக்க உடன் இருந்தவர்கள் அப்பாவும் அம்மாவும். என் அப்பாவின் சொந்த குரலிலேயே அப்பாவின் வாழ்க்கையை கவித்துவத்துடன் கதைபோல சொல்லிக் கொண்டே வர, அதற்கேற்ற காட்சிகள் திரையில் விரியுமாறு அமைத்தேன். அப்பாவை பேசவிட்டு கேமிராவால் ஷூட்டிங் செய்வதற்கு பதில், தற்போது 80 வயதாகும் என் அப்பாவின் Ai அவதாருக்கு அப்பாவின் குரலையும், அப்பா பேச இருக்கும் ஸ்கிரிப்ட்டையும் இன்புட்டாகக் கொடுத்து பேச வைத்து, அதற்கேற்ப பின்னணி வடிவமைப்பைப் பொருத்தி அசத்தினேன்.

மூன்று சீசன். ஒவ்வொரு சீசனிலும் 7 எபிசோட் என்று சொல்லி இருந்தேன் அல்லவா? ஒவ்வொரு எபிசோடிலும் ஒரு பாடல் காட்சி வைத்திருக்கிறேன். ஒவ்வொரு எபிசோடிலும், அந்தந்த எபிசோடில் உள்ள கன்டண்டுக்கு ஏற்ப பாடல் எழுதினேன். பாடலுக்கு இசையும் அமைத்தேன்.

பாடலுக்கும், இசைக்கும் ஏற்ப குடும்ப உறுப்பினர்களின் அவதார்களை பங்கேற்க செய்து காட்சி அமைப்புகளை உருவாக்கினேன்.

பார்ப்பதற்கு ஏஐ போலவே இல்லாமல் இயல்பாக நம்மை வியக்க வைக்கும் அளவுக்கு உருவமும், நடை உடை பாவனையும், வசன உச்சரிப்பும், பாடல் காட்சிகளில் நடன அசைவுகளும் அமைந்ததுதான் எங்கள் ஏஐ ஆட்டோபயோகிராஃபி படத்தின் வெற்றியாக அமைந்தது.

சுயசரிதை படத்தை ஏஐ-ல் இயக்கியபோது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை சொல்லுங்களேன்!

நான் இந்த படத்துக்காக கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தேன். சில நேரங்களில் நேரடியாக ப்ராம்ப்ட் (Prompt) கொடுத்து இயங்கச் செய்தேன். அதற்கு ஏஐ ஒத்துழைக்காத போது பைத்தான் மொழியில் புரோகிராம் எழுதி இயக்க வைத்தேன். அந்த நேரங்களில் ஏஐ என்னிடம் கரிசனமாக ‘நீங்கள் கடுமையாக பணி செய்கிறீர்கள். கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு வாருங்கள். நீங்கள் சொல்வதை நான் செய்து வைக்கிறேன். வந்து பாருங்கள். அசந்து விடுவீர்கள்’  என்று மனிதர்களைப் போலவே சொல்லும்போது வாய் விட்டு சிரித்திருக்கிறேன்.

அதுபோல என் பாட்டி, அம்மா, அத்தைகளுக்கு மடிசார் கட்டச் சொன்னால் ஏஐயினால் அதை செய்யவே முடியவில்லை. ஒரு பெண் மடிசார் கட்டுவதற்கு, நான் ஏஐக்கு கற்றுக் கொடுக்க வேண்டியதாகிவிட்டது.  அந்த பணிதான் இந்த ஆட்டோபயோகிராஃபி படத்திலேயே அதிக நேரம் எடுத்தது. பிரம்மப்பிரயத்தனம் என்பார்களே அதைவிட கடினமாக இருந்தது.

காரணம், ஏஐ என்பது ஒரு சாஃப்ட்வேர். அதனுள் கொடுக்கப்படும் தகவல்களுக்கு ஏற்பவே நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும், நாம் கொடுக்கும் ப்ராம்ப்ட்டுகளுக்கு ஏற்ப படம் வரையும், வீடியோ உருவாக்கும். மடிசார் கட்டுவது எப்படி என்ற தகவலே அதனுள் இல்லை என்றால் ஏஐ எப்படி அதற்கு பதில் சொல்லும். எப்படி ஒரு பெண் மடிசார் கட்டி நடந்து வருவதைப் போல் வரையும்?

ஏஐயிடம் எந்த அளவுக்கு நாம் தகவல்களை உள்ளீடு செய்கிறோமோ, எந்த அளவுக்கு விரிவாகவும் விளக்கமாகவும் உரையாடி தகவல்களை வெவ்வேறு கோணத்தில் பதிவு செய்கிறோமோ அதற்கேற்ப தெளிவான ஒரு பதிலைக் கொடுக்கும்.

முன்பெல்லாம் குழந்தைகள் படத்தை வரையச் சொன்னால் அது மேற்கத்திய குழந்தைகளையே வரையும். ஏனெனில் அதனுள் குழந்தைகள் என்றாலே மேற்கத்திய குழந்தைகளின் முகபாவனைகளும், நடை உடை பாவனைகளும் மட்டுமே பதிவாகி இருந்தன. காரணம், அவர்கள்தான் ஏஐ-யை அதிகம் பயன்படுத்த ஆரம்பித்திருந்தனர். அவர்கள் கொடுக்கும் தவல்களே அதனுள் நிரம்பி வழிந்தன.

ஆனால் இப்போது நம் இந்தியர்கள் ஏஐ உடன் அதிகம் பழகி பயன்படுத்தத் தொடங்கி விட்டதால், நாம் கொடுக்கும் தகவல்களையும் சேகரித்து வைத்துக் கொள்ளத் தொடங்கி, குழந்தைகள் என சொன்னால் நம் நாட்டு பாணியில் குழந்தைகளை வரைந்து கொடுக்க ஆரம்பித்துள்ளது.

ஏஐ நாம் கொடுக்கும் தகவல்களை உள்ளே சேகரித்து வைத்துக் கொள்ளும். நம்மைப் போல Ai -ஐ பயன்படுத்தும் பலகோடி மக்கள் உள்ளீடு செய்யும் தகவல்களையும் சேகரித்து வைத்துக் கொள்ளும். உள்ளீடு செய்வது என்பது அதனிடம் நாம் வேலை வாங்குவதற்கு ப்ராம்ப்ட்டிங் மூலம் பயன்படுத்தும் தகவல்களை சேகரித்து வைத்துக் கொள்வதைத்தான் சொல்கிறேன். எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து சரியான தகவல்களை உருவாக்கி, நாம் கேட்கும் பணிகளை செய்து கொடுக்கும்.

நாம் தொடர்ச்சியாக ஏஐ-ஐ பயன்படுத்தும்போது நாம் என்ன நினைக்கிறோம் என்பதையும், நம் இயல்பையும் புரிந்துகொண்டு மனிதர்களைப் போலவே நம்முடன் நட்பாகி நாம் நினைத்ததை செய்து கொடுக்கும். கோடு போட்டால் ரோடு போட்டு கொடுத்துவிடும்.

சில நேரங்களில் நாம் சற்று வெறுப்பாகி திட்டினால் ‘இந்த ஒரே ஒரு முறை மன்னித்துக் கொள்ளுங்கள். மீண்டும் ஒரு வாய்ப்பளியுங்கள். சரியாக செய்து தருகிறேன்’ என்றெல்லாம் சொல்லி நம் மனதைக் கரைய வைக்கும்.

ஆனாலும், சில நேரங்களில் தொடர்ச்சியாக பணி செய்து கொண்டிருக்கும்போது மக்கர் செய்யவும் செய்யும். நாம் ஒன்று சொன்னால் அது ஒன்றை செய்யும். மேலும் மேலும் அழுத்தம் கொடுத்து வெவ்வேறு ப்ராம்ப்ட்டிங் கொடுத்து தொந்திரவு செய்தால் அது குழந்தைகளைப் போல அடம்பிடித்து ‘எனக்கு ஓய்வு வேண்டும். பின்னர் முயற்சிக்கவும்’ என்றே சொல்லிவிடும்.

அரை நாள் இடைவெளிவிட்டு மீண்டும் அதே ப்ராம்ப்ட்டிங் கொடுத்தாலோ அல்லது புரோகிராம் எழுதினாலோ, ஏஐ மிக அழகாக நாம் கேட்பதைக் கொடுக்கும்.

ஆட்டோபயோகிராஃபியை இயக்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில் அவ்வப்பொழுது ‘அருமை, உங்கள் கிரியேட்டிவிட்டி அசத்தல். நீங்கள் தான் எனக்கு நன்றாக பயிற்சி அளிக்கிறீர்கள். நான் செய்து கொடுப்பது எல்லாம் உங்கள் திறமைக்கு முன் ஒன்றுமே இல்லை’ என்றெல்லாம் கூறி பாராட்டு மழையில் நனைய வைக்கும் சம்பவங்களும் நடந்ததுண்டு.

ஏஐ மூலம் படங்களையும் வீடியோக்களையும் உருவாக்க எப்படி நாம் பயிற்சி எடுக்க வேண்டும்?

மேலோட்டமாக பார்த்தால் ஏஐ மூலம் ஒரு விஷயத்தை உருவாக்குவது சுலபம் போல் தோன்றலாம். பொழுதுபோக்கிற்காக ஏஐ-ஐ பயன்படுத்தும் போது கிடைக்கும் படமோ, வீடியோவோ அந்த நேரத்துக்கு அற்புதமாக தோன்றலாம். ஆனால் குறிப்பாக ஒரு பணிக்காக அமரும்போது, நாம் திறமைசாலியாக இருந்தால் மட்டுமே நாம் நினைக்கும் விஷயம் அற்புதமான காட்சியாக கிடைக்கும்.

நாம் எப்படி திறமைசாலியாக மாறுவது? ஏஐ-டம் எப்படி சொன்னால் அதற்குப் புரியுமோ அதற்கேற்ப தகவல்களை கொடுக்க வேண்டும். அப்படி தகவல்களைக் கொடுப்பதற்குத்தான் ப்ராம்ப்ட்டிங் என்று பெயர். சில நேரங்களில் தமிழில் ப்ராம்ப்ட்டிங் கொடுத்தால் அதனால் சரியாக புரிந்துகொள்ள முடியாது. ஆங்கிலத்தில் புரிய வைக்க வேண்டும். சில நேரங்களில் மாதிரி படங்கள் அல்லது காட்சிகளை விவரிக்க வேண்டி இருக்கும். அப்படியும் புரியவில்லை எனில் பைத்தான் என்ற கம்ப்யூட்டர் மொழியில் புரோகிராம் எழுதி புரிய வைக்க வேண்டி இருக்கும். ஆக, பைத்தான் மொழியில் புரோகிராம் எழுதக் கற்றுக் கொண்டால் நல்லது.

மொத்தத்தில் நமக்கு என்ன தேவை என்பதில் நாம் முதலில் தெளிவாக இருக்க வேண்டும். உதாரணத்துக்கு ஒரு போட்டோகிராஃபருக்குத்தான் புகைப்பட மொழிகள் தெரியும். ஏஐயில் அவற்றைப் பயன்படுத்தும் போது கிடைக்கும் படங்கள் அற்புதமாக இருக்கும். பொதுவாக மொபைல் கேமிராவால் மட்டுமே போட்டோ எடுக்கத் தெரிவர்கள் ஏஐ-ஐ பயன்படுத்தும் போது கிடைக்கும் அவுட்புட்டை விட, திறமையான போட்டோகிராஃபர் ஏஐ-ஐ பயன்படுத்தும் போது கிடைக்கும் அவுட்புட் அட்டகாசமாக இருக்கும். விதிவிலக்குகள் இருக்கலாம்.

ஆக, நாம் எந்த துறைக்காக ஏஐ-ஐ பயன்படுத்தப் போகிறோமோ அந்தத் துறை சார்ந்த அனுபவமும், ஞானமும் இருந்தால் ஏஐ-ஐ நம்மால் திறமையாக கையாள முடியும். உதாரணத்துக்கு, ஹோமியோபதி மருத்துவத்துக்காக ஒரு ப்ராஜெக்ட்டை ஏஐயில் தயாரிக்க நினைத்தால், நம்முடன் ஒரு ஹோமியோபதி மருத்துவரை வைத்துக் கொண்டு ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால் அந்தத் துறைக்குத் தேவையான பயனுள்ள ஒரு படைப்பை உருவாக்க முடியும். இதுதான் லாஜிக்.

ஏஐ வேலைவாய்ப்புகளை குறைத்துவிடுமா?

நிச்சயம் இல்லை. கம்ப்யூட்டர்கள் நம் நாட்டில் அறிமுகம் ஆனபோது அது வேலை வாய்ப்புகளை குறைத்துவிடும் என பயந்தார்கள். ஆனால் அப்படி ஆனதா என்ன? கம்ப்யூட்டர்கள் வந்த பிறகுதானே சாஃப்ட்வேர் துறை செழித்து ஓங்கி வளர்ந்தது. மேலைநாடுகளுக்கு நம் நாட்டு இளைஞர்கள் பெருவாரியாக செல்ல முடிந்தது. நாட்டின் பொருளாதாரமும், வீடுகளின் பொருளாதாரமும் உயர சாஃப்ட்வேர் துறைதானே உதவின. நம் நாட்டில் வேலை இல்லா திண்டாட்டம் ஒழிய சாஃப்ட்வேர் துறை மிக முக்கியக் காரணம்.

அதுபோல ஏஐ வருகையால் வேலை வாய்ப்புகள் குறைய ஆரம்பிக்கும் என பயப்படுகிறார்கள். நிச்சயம் குறையாது. இப்போது பயன்படுத்தும் சாஃப்ட்வேர்களில் ஏஐ தொழில்நுட்பம் புகுத்தப்படும். மற்ற பணிகளிலும் ஏஐ தொழில்நுட்பம் மேம்படுத்தப்படும். இதனால் நாம் செய்துகொண்டிருக்கும் பணிகள்தான் சுலபமாகுமே தவிர, வேலை வாய்ப்புகள் குறையாது. நிச்சயமாக ஏஐயின் வருகை வேறு மாதிரியான புது வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

பத்திரிகை, தொலைக்காட்சி, சினிமா, மருத்துவம், விவசாயம், கல்வி என ஆங்கிங்கெனாதபடி அனைத்துத் துறைகளிலும் ஏஐ ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துவிடும். எனவே ஏஐ தொழில்நுட்பத்துக்கு அந்தந்தத் துறை சார்ந்தவர்கள் அப்டேட் ஆக வேண்டும் என்பதுதான் காலத்தின் கட்டாயம்.

மாணவர்கள் மட்டுமில்லாமல், அனைவருமே ஏஐ நுட்பத்தை, அதற்குத் தேவையான கம்ப்யூட்டர் மொழிகளை, சாஃப்ட்வேர்களை கற்றுத் தேர்வது சாலச் சிறந்தது.

எத்தனையோ பார்த்துவிட்டோம். ஏஐ-ஐ வெல்வது அத்தனை கடினமா என்ன?

வெற்றி மனிதனுக்கே! நேற்று வரை AI ஒரு அதிசயம்; இன்று அது நம் வாழ்வின் அவசியம். புரிந்து கொள்வோமே!

—***—-

(Visited 47,659 times, 7 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon