ஹலோ with காம்கேர் – 285
October 11, 2020
கேள்வி: இவர்கள் செல்ல வேண்டியது கொரோனா வார்டுக்கு அல்ல, மனநல மருத்துவமனைக்கு. ஏன் தெரியுமா?
சமுதாயத்தில் நடக்கின்ற விஷயங்கள் குறித்து எழுதினால் ‘என்னவோ போங்க, இப்போதெல்லாம் காலம் மாறி போச்சு…’, ‘என்னவோ போங்க, இப்போதெல்லாம் இப்படித்தான்…’, ‘என்னவோ போங்க, இப்போதெல்லாம் மனிதாபிமானமே இல்லை…’, ‘என்னவோ போங்க, இந்த அரசியல்வாதிகளே இப்படித்தான்…’ என்று அங்கலாய்ப்பவர்கள் பலரை உற்று நோக்கினால் அவர்களைப் போன்றவர்கள்தான் இந்த மாற்றங்கள் ஏற்படுவதற்கு மிகப்பெரிய அளவில் துணை இருப்பார்கள் என்ற உளவியல் புலப்படும்.
ஒன்வேயில் பைக் ஓட்டுவது, சிக்னல் நமக்கு சிவப்பை காட்டினாலும் டிராஃபிக் கான்ஸ்டபிள் நிற்கவில்லை என்றால் விதியை மீறி காரில் பறப்பது, கார் ஜன்னலை திறந்து ஹைவேயில் சப்பிட்ட இலைகளையும் பிளாஸ்டிக் பாட்டிலையும் விருட்டென பின்னால் வரும் வண்டியின் மீது தெறிக்கும்படி தூக்கி எறிந்து செல்வது, பைக்கில் சென்று கொண்டிருக்கும்போதே வலது அல்லது இடது பக்கமாக திரும்பி எச்சில் துப்பி பக்கத்தில் பைக்கில் பயணம் செய்வோருக்கு தங்கள் எச்சிலால் அபிஷேகம் செய்வது, சாலையை தங்கள் எச்சில் மழையால் நனைப்பது, சாலையோரத்தை தங்கள் வீட்டு டாய்லெட் போலாக்கி சிறுநீர் கழிப்பது, தெரிந்து கொடுக்கும் நன்கொடை, மறைமுகமாகக் கொடுக்கும் நன்கொடை என எப்பாடுபட்டாவது எந்த வழியிலாவது பிரபலமான பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்ப்பது என அத்தனை விஷயங்களையும் செய்பவர்கள்தான் ‘இப்பவெல்லாம் காலம் மாறிப்போச்சு, மனிதாபிமானம் மரத்துப் போச்சு’ என கவிதை நடையில் காலத்தை துவேஷிப்பவர்களாக இருக்கிறார்கள்.
காலம் மாறிக்கொண்டேதான் இருக்கும். உலகையே புரட்டிப் போட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மாபெரும் பங்கு உண்டு. கல்வி, வேலை, திருமணம், குழந்தைகள், அவர்களின் குழந்தைகள், அவர்களின் கல்வி, அவர்களின் வேலை, அவர்களின் திருமணம் என சங்கிலித் தொடராய் அவரவர் வாழ்க்கையும் சென்றுகொண்டேதான் இருக்கும்.
அடிப்படையில் நாம் எல்லோரும் மனிதர்கள் என்பதைத்தான் மறந்துவிடுகிறோம். நம் குடும்பம், நம் வாழ்க்கை, நம் நலன்கள் என்ற சற்றே கூடுதலான சுயநல மனப்பாங்கினால் நம்மைத் தாங்கும் பூமியை, நம்மை வாழவைக்கும் நதிகளை, நம்மை சுவாசிக்க வைக்கும் காற்றை மாசுபடுத்தி சின்னாபின்னப்படுத்தி வருகிறோம். முக்கால்வாசி நாசம் செய்துவிட்டோம். மொத்தத்தில் நம்மை இயக்கும் இயற்கையை சீரடித்துவிட்டோம்.
விளைவு கொரோனா போன்ற கண்களுக்குத் தெரியாத வைரஸ் நம்மை ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறது.
இன்று நம்மை சுதந்திரமாய் வாழ விடாமல் வீட்டுக்குள் முடக்கிப் போட்ட கொரோனாவுக்கு சாபம் விடுகிறோம். இயற்கைக்கு மட்டும் வாய் இருந்தால் என்றோ நமக்கு சாபம் விட்டு எரித்திருக்கும்.
நம் அடுத்த சந்ததியினருக்கு நாம் என்ன சேர்த்து வைத்திருக்கிறோம் என்பதை யோசித்தால் பெரும் சோகமே மிஞ்சுகிறது. எல்லா வளங்களையும் நாம் அனுபவித்துவிட்டு சக்கையை கொடுத்துவிட்டு செல்ல இருக்கிறோம்.
இனியாவது விழித்துக்கொள்வோம் என நினைத்து கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தால் நேற்று வந்த போன்கால் அதை சுக்கல் நூறாக்கியது. பேசியவர் என் நிறுவன கிளையிண்ட்.
‘கொரோனாவது ஒண்ணாவது… அதற்குப் பின்னால் பெரும் அரசியல் உள்ளது. ஜூரம், தலைவலி, ஜலதோஷம் போல அதுவும் ஒரு வியாதி. வந்துவிட்டுப் போய்விடும். அதை வைத்து அரசியல்வாதிகள் கார்ப்பரேட் அளவில் சம்பாதிக்க செய்யும் ஜோடனைகளே லாக்டவுன் அது இது எல்லாம்…’ என்று சொன்னவர் நான் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்ததால் தொடர்ந்தார்.
நாம் அமைதியாக கேட்பதே எதிராளியின் மனதை முழுமையாகப் படிப்பதற்குத் தானே.
‘எனக்குக் கூட கொரோனா வந்தது. எப்படி தெரியும் என்றால் வாசனை தெரியலை. சுவை தெரியவில்லை. நான் வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை. தனிமைப்படுத்திக்கொள்ளவுமில்லை. சகஜமாகவே இருந்தேன். என் நண்பனில் அப்பா ஹார்ட் பேஷண்ட். அம்மா தீவிர சர்க்கரை நோயாளி. ஆனால் அவனிடமும் அது குறித்து சொல்லவில்லை. அவனுடன் சேர்ந்தே பைக்கில் செல்கிறேன். வருகிறேன். எனக்கும் ஒன்றும் ஆகவில்லை, அவனுக்கும் ஒன்றும் ஆகவில்லை, அவன் அப்பாவுக்கும் ஒன்றும் ஆகவில்லை… அவன் அம்மாவுக்கும் எதுவும் வரவில்லை. குடும்பமா உட்கார்ந்து மேட்ச்சும், அமேசான் ப்ரைமில் சினிமாவும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது சொல்லுங்கள்… கொரோனா எல்லாம் கார்ப்பரேட் சதிதானே?’
இவர் குடும்பத்தைப் பற்றி அக்கறை இல்லாமல் எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம், அடுத்தவர் வீட்டு பெரியவர்கள் உடல் நலனையும் அவர்கள் குடும்பத்தைப் பற்றியும் அக்கறை இல்லாமல் இப்படி நடந்துகொள்வது உச்சகட்ட கோபத்தைக் கிளறினாலும் அவரிடம் பேசி பிரயோஜனமில்லை என நினைத்துக்கொண்டேன்.
இவரைப் போன்றவர்கள் கொரோனாவுக்கு மட்டுமல்ல எல்லா விஷயங்களிலுமே இப்படித்தான் நடந்துகொள்வார்கள்.
உண்மையில் அவருக்கு கொரோனா அறிகுறியே இருந்திருக்காது என்பது என் கணிப்பு.
‘எனக்கும் கொரோனா இருந்தது. டெஸ்ட் எல்லாம் எடுக்கவில்லை. தனிமைப்படுத்திக்கொள்ளவில்லை. மருத்துவமனை செல்லவில்லை. ஆனால் எனக்கு ஒன்றுமே ஆகவில்லை…’ என்று சொல்லி மற்றவர்களை குழப்புவது ஒருவித சேடிஸ்ட் மனோபாவம்.
சந்தர்ப்பம் பார்த்து திருடுவது, ஏமாற்றிப் பிழைப்பது, அதிக விலைக்கு பொருட்களை விற்பது போன்று சந்தர்ப்பம் பார்த்து மனித மனங்களை சிதைக்கும் மன நோயாளிகள் இவர்கள்.
‘ஆமாம் சார், சரியாக சொன்னீர்கள்… நீங்கள் செல்ல வேண்டியது கொரோனா வார்டுக்கு அல்ல, மனநல மருத்துவமனைக்கு…’ என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டு போனை வைத்தேன்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software