ஹலோ with காம்கேர் – 289
October 15, 2020
கேள்வி: பெண் சுதந்திரம் குறித்து உங்கள் பார்வை?
தன்னம்பிக்கை குறித்து நிறைய எழுதுகிறீர்களே, எப்படி தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டீர்கள் என ஒரு சிலர் என்னிடம் கேட்பார்கள்.
நான் தன்னம்பிக்கை குறித்து எழுதுவதற்காக பிரத்யோகமாக எதையும் யோசிப்பதில்லை. தன்னம்பிக்கை என்பது என் சுபாவம். என் எல்லா படைப்புகளிலும் அது தானாக வெளிப்படுகிறது. அவ்வளவே.
நம் சுபாவத்தை யாரேனும் வளர்த்துக்கொள்ள முடியுமா? பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்ளலாம். மேம்படுத்திக்கொள்ளலாம். ஆனால் நம் சுபாவம் என்பது நம் பிறவி குணம். அதை வளர்த்துக்கொள்வதெல்லாம் முடியாது.
சரி பெண் சுதந்திரத்துக்கும் தன்னம்பிக்கைக்கும் என்ன சம்மந்தம் என்று நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது. சம்மந்தம் இருப்பதால்தான் தன்னம்பிக்கையில் இருந்து தொடங்கி உள்ளேன்.
எந்த சூழலிலும் பெண்கள் சுதந்திரமாகவே வாழ்கிறார்கள் என்பது என் கணிப்பு. ஒரு ஆண் அவன் இயங்கும் துறையில் வெற்றி பெற வேண்டுமானால் அவன் மனைவி அவனுக்கு பக்கபலமாக இருந்து வீட்டுப் பிரச்சனையை அவன் பார்வைக்குக்கொண்டு வராமல் சாதுர்யமாக குடும்பம் நடத்தினால் மட்டுமே சாத்தியம். ஆனால் ஒரு பெண் வெற்றி பெற அவள் கணவன் எப்படி இருந்தாலும், அவள் வீடு எப்படி இருந்தாலும் அவளால் எல்லாவற்றையும் மீறி ஜெயிக்க முடியும். ஏனெனில் அவளுக்குத் தெரியும் தன் திறமையை தன் திறனை எப்படி வெளிக்கொண்டு வருவது என.
அப்படி திறமை உள்ள ஒரு பெண் எதையும் செய்யாமல் சும்மா இருக்கிறாள் என்றால் அவள் சுபாவமே அப்படியாக இருக்கும். என் கணவன் ஊக்குவிக்கவில்லை, குடும்பச் சூழல் அப்படி என்று ஏதேனும் ஒரு காரணத்தை வைத்துக்கொண்டு முடங்கி இருப்பது அவளாகவே உருவாக்கிக்கொள்ளும் அவலம் என்றுதான் சொல்ல வேண்டும்.
கட்டாந்தரையில் சிறிய பிளவு கிடைத்தால் கூட அதில் உள்ள மிகக் குறைவான ஈரப்பதத்தை வைத்துக்கொண்டு செடி முளைப்பதை பார்த்திருப்பீர்கள். அதுபோல்தான் பெண்களும். சிறு வாய்ப்பு கிடைத்தாலும் அதை பயன்படுத்தி முன்னேறும் சாமர்த்தியம் கொண்டவர்கள்.
அதுபோல திருமணம் என்பதும் பெண்களுக்கு ஒரு தடை அல்ல. 60, 70 வயதைத் தாண்டிய உயர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பெண்களை கவனியுங்கள். அவர்கள் குடும்பம், கணவன், குழந்தைகள் என வாழ்ந்து வருபவர்கள்தான்.
திருமணம் ஆனாலும் சரி, ஆகாவிட்டாலும் சரி தனித்துவமான பெண்கள் தங்களுக்கான வாய்ப்பை தாங்களாகவே இனம் கண்டுகொள்வார்கள்.
அவர்கள் முடங்கினாலும், முன்னேறினாலும் அதற்கு அடிப்படைக் காரணம் அவர்கள் மனோநிலையே. அவர்கள் நினைத்தால் எல்லா தடைகளையும் உடைத்துக்கொண்டு நேர்மையான முறையிலேயே முன்னேற முடியும். அதுபோல் முடங்க நினைத்தாலும் அது அவளாகவே எடுக்கும் முடிவு.
என் அப்பா வழி கொள்ளுபாட்டி காலத்தில் நடந்த ஒரு நிகழ்வு. சுமார் 100 வருடங்களுக்கு முன்னர் நடந்தது. கொள்ளுதாத்தாவுக்கு ஒரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு எல்லை மீறியிருக்கிறது. அதை கண்டுபிடித்த கொள்ளுபாட்டி அன்றில் இருந்து தாத்தாவுடன் பேசுவதை நிறுத்தினார்.
தன் கைகளால் சாப்பாடு போடுவதை நிறுத்தினார். நல்லது கெட்டதுகளுக்கு உடன் செல்வதை நிறுத்தினார். மொத்தமாக ஒதுக்கி வைத்தார் என்றுதான் சொல்ல வேண்டும். அன்று வீட்டுத் திண்ணையில் ஒதுங்கிய கொள்ளுதாத்தா அதன் பின்னர் சகஜமாக வீட்டுக்குள் நடமாடவில்லை என்று சொல்லி இருக்கிறார்கள். அந்த பெண்ணும் திருமணம் செய்துகொண்டு வேறு ஊருக்குச் சென்றுவிட்டதால் அந்த தொடர்பும் இல்லாமல் போனது.
அப்போது என் கொள்ளுபாட்டிக்கு 40 வயதுதான். மூன்று மகன்கள், மூன்று மகள்கள் என 6 குழந்தைகள்.
தன் கணவன் இப்படி இருக்கிறானே என தன் சந்தோஷத்தை விட்டுக்கொடுக்கவில்லை. தன் பிள்ளைகளை நல்லபடியாக வளர்த்தார். அவர்களுக்கு வேண்டியதை எல்லாம் செய்துகொடுத்தார். தோட்டம், இயற்கை மருத்துவம், சமையல் என எல்லாவற்றிலும் மகிழ்ச்சியாக தன்னிறைவாக செயல்பட்டார்.
கடைசி காலத்தில் தன் 80 வயதில் இறக்கும் தருவாயில் கொள்ளுபாட்டி படுத்தபடுக்கையாய் இருந்த கடைசி ஒரு வருடம் முழுவதும் தாத்தாதான் உடை மாற்றுவது, சாப்பாடு ஊட்டுவது, உடலை சுத்தம் செய்வது, படுக்கையில் பாத்ரூம் சென்றால் அதை சுத்தம் செய்வது என அத்தனையையும் செய்திருக்கிறார்.
தனக்கு துரோகம் செய்த ஒரு ஆணை ஒதுக்கி வைத்து உயிருடன் சமாதி வைப்பதற்கு இணையாக கிட்டத்தட்ட 40 வருடங்கள் ஒட்டு உறவே இல்லாமல் தண்டனை கொடுக்கும் வல்லமை பெண்களுக்கு மட்டுமே சாத்தியம்.
கொள்ளுதாத்தா தான் செய்த பாவத்துக்கு தன் மனைவிக்கு முகம் சுளிக்காமல் சேவகம் செய்து பரிகாரம் தேடிக்கொண்டார் என்றே சொல்ல வேண்டும்.
கொள்ளுபாட்டியின் இந்த இயல்புக்குப் பெயர்தான் தன்னம்பிக்கை. அதுவே பெண் சுதந்திரம். தன்னம்பிக்கையும் இருந்தது, சுதந்திரமாகவும் செயல்பட்டார். இந்த குணம் இயல்பாக என் கொள்ளுபாட்டியிடம் இருந்தது.
யாரும் அவருடைய தன்னம்பிக்கையை வளர்த்துவிடவில்லை. யாருக்காகவும் தன் இயல்பை சுபாவத்தை மாற்றிக்கொள்ளவும் இல்லை.
என் கொள்ளுபாட்டியின் நேர்மையும், தன்னம்பிக்கையும், சுதந்திர மனோபாவமும் என்னை வியக்க வைக்கும்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software