ஹலோ with காம்கேர் – 291
October 17, 2020
கேள்வி: ‘கொரோனா’ உறவுமுறைகளை சிதைக்கிறதா?
கொரோனாவுக்கு முக்கிய பாதுகாப்பு பொதுவெளியில் சமூக இடைவெளி. தனிப்பட்ட முறையில் மாஸ்க் அணிதல், சானிடைசர் பயன்படுத்தி கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல். நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உணவுகள். தவிர வெளியில் சென்று விட்டு வீட்டுக்குத் திரும்பியவுடன் குளிப்பது. கடைகளில் இருந்து வாங்கிவரும் பொருட்கள், காய்கறிகளை சுத்தம் செய்து உள்ளே எடுத்து வருதல்.
இப்படியெல்லாம் இருந்தும் வீட்டில் ஒருவர் ஒத்துழைக்காவிட்டாலும் வீட்டில் உள்ள வயதில் பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் வெளியில் இருந்து எடுத்து வந்த நோயின் தாக்கம் பரவுவதை பல இடங்களில் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
— நிகழ்வு 1 —
எங்கள் குடும்ப நண்பர் வீட்டில் ஓர் இளைஞன் நண்பர்களுடன் பைக்கில் ஒன்றாக சுற்றிக்கொண்டு இருந்திருக்கிறார். வீட்டுக்கு வந்து குளிப்பதில்லை. கேட்டால் மாஸ்க் போட்டுக்கொண்டுதானே செல்கிறோம். இதோ பாருங்கள் கைகளில் சானிடைஸர் என்று காட்டுகிறார்.
விளைவு சிறிய அளவில் ஜூரம் வந்திருக்கிறது அவருக்கு. அவர் இளைஞனாக இருப்பதால் ஜூரத்துடன் அவரை விட்டிருக்கிறது. அவர் வீட்டில் உள்ள வயதான தாத்தாவுக்கு ஜூரம் பற்றிக்கொண்டு கொரோனாவாக தொற்றியுள்ளது. அவர் மருத்துவமனையில் ஒருவாரம் சிகிச்சை இன்றி இறந்துவிட்டார்.
அப்போதுகூட அந்த இளைஞர் குற்ற உணர்ச்சி ஏதுமின்றி ‘அவர் விதி முடிந்து விட்டது… அதற்கு நான் என்ன செய்ய முடியும்?’ என்று பேசுகிறாராம்.
— நிகழ்வு 2 —
என் உறவினர் வட சென்னையில் வசிக்கிறார். அவருக்கு வயது 70+. ஏற்கெனவே நுரையீரல் பிரச்சனை, சர்க்கரை என ஏராளமான உடல்நலப் பிரச்சனைகள் உள்ளன.
அவருடைய மகன் நாங்கள் இருக்கும் பகுதியில் குடும்பத்துடன் வசிக்கிறார். அவருக்கு கொரோனா வந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்.
எங்கள் உறவினர் மகனுக்காக எங்களிடம் ஒரு லட்சம் கடனாக கேட்டார். நெருங்கிய உறவினர் என்பதால் நாங்களும் கொடுப்பதாக சொல்லி இருந்தோம். ஆன்லைனில்தான் அனுப்ப முடியும் என்ற ஒரு நிபந்தனையுடன்.
ஆனால் அவரோ முதலில், ‘நான் நேரில் வந்து வாங்கிக்கொள்கிறேன்’ என்றார்.
‘வேண்டாம் மாமா, நீங்களும் வயதானவர், எங்கள் பெற்றோரும் வயதானவர்கள்… நீங்கள் பஸ்ஸிலோ அல்லது ஆட்டோவிலோ வரும்போது உங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் சிக்கலாகிவிடும்… ஆன்லைனில் அனுப்புகிறோம்…’ என சொன்னேன்.
அதற்கு அவர், ‘வீட்டு வாசலில் வைத்துவிடுங்கள், நான் எடுத்துக்கொண்டு சென்றுவிடுகிறேன்…’ என்றார்.
‘வீட்டு வாசல்வரை எதற்காக வர வேண்டும். ஏற்கெனவே எங்கள் எதில் வீட்டில் அனைவருக்கும் கொரோனா. தனிமைப்படுத்தலில்தான் இருக்கிறார்கள்… நீங்கள் வந்தால் நிச்சயம் உங்கள் உடல்நலனுக்கு நல்லதல்ல… ஆன்லைனில் அனுப்புகிறோம்…’ என்றேன்.
அதற்கு அவர் பிடிவாதமாக ‘எங்களுக்குத் தெரிந்த ஆட்டோ ஓட்டுனர் இருக்கிறார். அவரை அனுப்புகிறோம். அவரிடம் கொடுத்தனுப்புங்கள்’ என்றார்.
இந்த முறை நான் சற்று உறுதியாகவே, ‘சாரி மாமா… முகம் தெரியாத நபர்களிடம் எல்லாம் லட்சக் கணக்கில் பணம் கொடுத்தனுப்புவது ரிஸ்க்… உங்களுக்குப் பணம் கொடுக்கிறோம். ஆனால் ஆன்லைனில் அனுப்புகிறோம்… அதுதான் அனைவருக்கும் பாதுகாப்பானது’ என்றேன்.
இப்போதுகூட அவர் புரிந்துகொள்ளாமல் ‘அப்போது நீங்கள் யாரும் வீட்டை விட்டு வெளியிலேயே செல்வதில்லையா, என்ன அதிசயமாக இருக்கிறது… பார்த்தாலே கொரோனா ஒட்டிக்கொண்டு விடுமா?’ என்று கோபமாக சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார்.
— நிகழ்வு 3 —
எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம். அவருடைய மகனுக்கு திருமணம் ஏற்பாடு செய்திருந்தார்கள். வெளிநாட்டில் மருத்துவராக இருக்கிறார். அவருக்கு பெண் பார்த்து நிச்சயம் செய்ய வேண்டிய தருணத்தில் ‘கொரோனா’ பிரச்சனை உலகையே ஆட்டிப் படைக்க ஆரம்பித்துவிட்டது.
ஏப்ரல், மே, ஜூன் என மாதங்கள் கடந்துகொண்டே செல்ல மணமகனும், மணமகளும் ஆன்லைனில் வீடியோகாலில் ஸ்கைபில் என பார்த்து பேசிக்கொண்டு நாட்களை கடத்தி இருக்கிறார்கள்.
ஒரு வழியாக ஆகஸ் மாதம் டிக்கெட் கிடைத்து டெல்லி வந்து ஒரு வாரம் தனிமைப்படுத்தலுக்குப் பிறகு சென்னைக்கு வந்திருக்கிறார். இத்தனைக்கும் அவருக்கு கொரோனா வரவில்லை. ஆனாலும் வெளிநாட்டில் இருந்து வந்ததால் தனிமைப்படுத்தல்.
இங்கு சென்னை வந்ததும் கொரோனா பாசிட்டிவ் என வர மருத்துவமனையில் சிகிச்சை. பின்னரும் வீட்டில் சிலநாட்கள் ஓய்வில்.
இப்படி அவரது திருமண நிச்சயதார்த்தம் நடக்குமா நடக்காதா என்ற கேள்விக்குறியுடனேயே நாட்கள் நகர்ந்துகொண்டிருந்தன.
ஒருவழியாக பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் சேர்ந்து முடிவெடுத்து நிச்சயதார்த்தத்துக்கு நாள் குறித்து ஒரு ஓட்டலில் ஹால் முன்பதிவு செய்திருக்கிறார்கள்.
கொரோனாவின் பாதிப்புக்காக எல்லோருக்கும் பாதுகாப்பு வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இருபக்கத்தில் இருந்தும் ஒருசில உறவினர்களை மட்டுமே அழைத்து நிச்சயதார்த்தம் செய்திருக்கிறார்கள்.
அப்போதுதான் ஆரம்பித்தது பிரச்சனை.
மணமகள் வீட்டில் ஒரு பெண்மணி ‘அது எப்படி எங்களை அழைக்காமல் நிச்சயம் செய்தீர்கள்… நாங்கள் எங்கள் வீட்டு விசேஷங்களுக்கு தவறாமல் அழைத்தோம் அல்லவா… எங்களுக்கு மரியாதை இவ்வளவுதானா?’ என்று பிரச்சனையை ஆரம்பிக்க அது போன் வழியாக ஒவ்வொருவராக கடத்தப்பட யாரையெல்லாம் அந்த நிச்சயதார்த்தத்துக்கு அழைக்கவில்லையோ அவர்கள் எல்லோரும் ஒரு குழுவாக ஒருங்கிணைந்துகொண்டு பெண் வீட்டாரை விரோதி போல நடத்த ஆரம்பித்துள்ளனர்.
அதுபோல பிள்ளை வீட்டில் வயதில் பெரியவர் ஒருவர், ‘என்னவோ பெரிய அமெரிக்க கலாச்சாரம். அங்கிருந்து இங்கு வந்ததும் இந்திய பாரம்பர்யமே விட்டுப் போச்சு. பையன் தானே அமெரிக்கா… அவன் அப்பா அம்மா குடும்பம் அத்தனையும் இந்தியா தானே… வீட்டில் ஒரு விசேஷம் என்றால் அழைப்பிதழ் கொடுத்து அழைக்க வேண்டாமா? இப்போதெல்லாம் தெருவுக்கு இரண்டு பேர் வெளிநாட்டில்தான் இருக்கிறார்கள். இவர்கள் வீட்டு பிள்ளை மட்டுமா அமெரிக்கா…’ என புரியாமல் பிரச்சனையை பூதாகரமாக்க ஆரம்பித்திருக்கிறார். ‘எதடா சாக்கு’ என காத்திருந்த அவரைபோல சிந்திக்கும் ஒரு சில உறவினர்கள் அவர் பக்கம் சாய, மணமகன் வீட்டைப் பற்றி குறை சொல்லி பேசுவதற்காகவே வாட்ஸ் அப் குழு ஒன்றை ஆரம்பித்து விவாதிக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
பெருந்தன்மையுடன் இருக்க வேண்டிய வயதில் பெரியவர்களே இப்படி நடந்துகொண்டால் மற்றவர்களை என்னவென்று சொல்வது?
— நிகழ்வு 4 —
உறவுகளாவது புரியாமல் இப்படி என்றால் உற்ற நண்பர்கள் கூட புரிந்துகொள்வதில்லை என்பதுதான் பெரும் சோகம்.
‘இப்போதெல்லாம் என்னிடம் பேசுவதில்லை. முன்போல பாசமாக இல்லை. ஒதுக்கி வைக்கிறாய்…’ அப்படி இப்படி என பட்டியல் பட்டியலாக குறைகள்.
‘அலுவலகம் இருக்கும் நாட்களில் அலுவலகத்தில் லஞ்ச் டைம், டீ டைம் என்றிருக்கும். அந்த கேப்பில் போன் செய்து பேசலாம். தேவைப்பட்டால் பர்மிஷன் எடுத்துக்கொண்டு நேரில் கூட சந்திக்கலாம்.
ஆனால் இப்போது வீடே ஆஃபீஸாக மாறிவிட்டதால் எந்நேரமும் வீட்டில் உள்ளவர்களுக்கு சாப்பாடு, தின்பண்டங்கள், காபி டீ தயார் செய்தல் என பெரும்பாலான நேரம் சமையல் அறையிலேயே இருப்பதைப் போல் உள்ளது. ஆஃபீஸ் வேலையும் வீட்டு வேலையும் நாள் முழுவதும் பிழிந்து எடுக்கிறது. இதில் எங்கிருந்து போன் செய்வது, நட்பாக பேசுவது?’ என்று புலம்பித் தள்ளிவிட்டார் எங்கள் அப்பார்ட்மெண்ட்டில் உள்ள ஒரு பெண்மணி.
கொரோனா வராமல் இருக்க சமூக இடைவெளி அவசியம்தான். ஆனால் நடப்பது என்னவோ உறவினர்களுக்குள் நிரந்தர இடைவெளி ஏற்படுவதுடன் ஒருசில இடங்களில் சிதைந்தே போக ஆரம்பித்துவிட்டதுதான் வருத்தம்.
— தீர்வுதான் என்ன? —
நண்பர்கள் தானே, உறவினர்கள் தானே, அடுத்த வீட்டுக்காரர் தானே, எதிர் வீட்டுக்காரர் தானே, தெரிந்த கடைக்காரர் தானே, அறிமுகம் உள்ள தூய்மைப் பணியாளர்கள் தானே என்று பார்த்துக்கொண்டா கொரோனா வரும்?
கூடுமானவரை தேவைப்பட்டாலே தவிர யாரும் யாரையும் சந்திக்காமல் தொழில்நுட்ப வசதிகள் மூலம் மட்டுமே தொடர்பில் இருந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுவகைகள், சமூக இடைவெளி, மாஸ்க், சானிடைசர் உதவுயுடன் நாம் பாதுகாப்பாக இருப்பதுடன் நம் வீட்டில் உள்ளவர்களையும் பாதுகாப்பாக வைத்திருப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.
‘என் பெயர் சோ & சோ… ஒரு நல்ல சமூகப் பிரஞையாக என்னுடைய கடமை எந்த ரூபத்திலும் கொரோனாவை என் வீட்டாருக்கோ, நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ கடத்த மாட்டேன் என உறுதி அளிக்கிறேன்’ என்று காலையில் எழுந்தவுடன் உறுதிமொழியை மனதுக்குள் எடுத்துக்கொண்டு நாளைத் தொடங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
அக்டோபர் 22, 2020 வியாழன்: சஞ்சிகை108 என்ற இணைய பத்திரிகையில் வெளியான கட்டுரை
https://sanjigai108.com/