ஹலோ with காம்கேர் – 323
November 18, 2020
கேள்வி: தவறு என்றால் என்ன… தவறு செய்பவர்கள் ஏன் தங்கள் தவறை உணர்வதே இல்லை?
தவறு என்பது கொலை செய்வதோ, திருடுவதோ, பொய் சொல்வதோ, பெண்களை வன்கொடுமை செய்வதோ, ஏமாற்றிப் பிழைப்பதோ மட்டுமல்ல. ஒருவருக்குப் பிடிக்காது என தெரிந்தும் அவரது உணர்வுகளை சீண்டி மகிழும் அற்பத்திலும் அற்ப குணமாகவும் இருக்கலாம்.
தவறு செய்பவர்கள் தாங்கள் செய்வது தவறு என்று உணராமலேயே இருப்பதுதான் அவர்களின் சாபம்.
எடுத்துச் சொல்வதற்கு ஆட்கள் இல்லாமல் இருந்திருக்கலாம்.
எடுத்துச் சொன்னாலும் கேட்பதற்கு மனம் இல்லமால் இருந்திருக்கலாம்.
நான் இப்படித்தான், ஏன் மாற வேண்டும் என்ற அகங்காரமாக இருக்கலாம்.
எல்லாவற்றையும்விட மிகவும் கொடுமை என்னவென்றால் தாங்கள் தவறு செய்துவிட்டு அந்தத் தவறை பிறர் மீது திசை திருப்பி குற்றவாளியாக்கும் மனோநிலை.
சுருங்கச் சொன்னால் எத்தனை முறை எடுத்துச் சொன்னாலும் தன் குணத்தில் இருந்து மாறாமல், ஒதுங்கியும் செல்லாமல் அப்படியே செயல்பட்டுக்கொண்டிருக்கும் மனோபாவம் ஒருவிதமான மனநோய். சிகிச்சை அவசியம்.
நிஜ உலகில் நேரடியாக சந்திப்பவர்களைவிட சமூக வலைதளங்களில் இதுபோன்ற சைக்கோக்கள் நிறைய பேர் உலா வருகிறார்கள். அவர்கள் பதிவுகள் எதுவும் எழுதுவதில்லை என்றாலும் பிறர் பதிவுகளில் பின்னூட்டங்களில் அவர்கள் வெளிப்படுத்தும் வார்த்தைகளில் அவர்களின் வன்மம் வெளிப்படும்.
இப்படி அசிங்கமாய், வன்மமாய், அறியாமையாய் எழுதுகிறோமே என்ற சிந்தனை ஒரு சதவிகிதம் கூட இல்லாமல், இந்த டிஜிட்டல் உலகமே தம்மை தன் எழுத்தின் மூலம் பார்த்துக்கொண்டிருக்கிறதே என்ற சிறு பிரக்ஞை (உள் உணர்வு) கூட இல்லாமல் எப்படி செயல்பட முடிகிறது என நான் நினைப்பதுண்டு.
யாருக்கும் எதைப் பற்றியும் கவலை இருப்பதில்லை. நினைத்ததை நினைத்தபடி நினைத்த நேரத்தில் வெளிப்படுத்துவோம் என்ற மனோபாவத்துடன் வளைய வரும் சைக்கோக்களிடம் கவனமாக இல்லை என்றால் ஆபத்துத்தான்.
நிஜ உலகில் மனநிலை சரியில்லாமல் தெருவில் சுற்றிக்கொண்டிருக்கும் நபர்கள் நம்மிடம் நெருங்கி வந்தால் நாம் என்ன செய்வோம்?
பயந்து ஒதுங்கிச் செல்லத்தானே நினைப்போம்.
அதுபோலதான் சமூக வலைதளங்களிலும் இருக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளோம்.
அறிவுரை சொல்லி திருத்துவது எல்லாம் சாத்தியமே இல்லாத ஒன்றாகி விட்டது. ஏனெனில் புரையோடிய நாற்றம் எடுக்கும் குணாதிசயங்களை உறு ஏற்றிக்கொண்டு வளைய வரும் நபர்களுக்கு எத்தனை மருத்துவம் பார்த்தாலும் பயனளிக்காது. அதுதான் நிதர்சனம்.
என் உறவினர் ஒருவருக்கு வயது 75. அண்மையில் அவரது மனைவி (70) இறந்துவிட்டார். ஆணாதிக்கம் அதிகம் உள்ள அவர் தன் மனைவியை சுடு சொற்களால் குத்திக் குதறிக்கொண்டே இருப்பார். நான் பார்த்த நாளாய் இப்படித்தான். அவர் மனைவியோ எதிர்த்து ஒரு வார்த்தை பேச மாட்டார். அவர் தன் மனைவி இறந்ததுக்கு துக்கம் கேட்டு வருபவர்களிடம் என்ன சொல்லி கண்ணீர் விடுகிறார் தெரியுமா?
‘நான் எப்படியெல்லாம் உள்ளங்கையில் வைத்துத் தாங்கினேன் தெரியுமா, ஒரு குறையும் இல்லாமல் வைத்திருந்தேன்… எப்படியெல்லாம் சந்தோஷமா வாழ்ந்தாள்…’
சில வருடங்களுக்கு முன்னர் ஒரு திருமண நிகழ்வின்போது (இறந்து போன) அந்த பெண்மணி தன் நெருங்கிய உறவினர்களிடம் சொல்லி வருத்தப்பட்ட விஷயம் நினைவுக்கு வந்தது.
‘அந்த மனுஷன் செத்த பிறகு நான் ஒரு வருஷமாவது நிம்மதியா வாழணும்… ஆனா, அவன் அத்தனை லேசுல சாகக் கூடாது… அணுஅணுவா சித்திரவதை அனுபவிச்சுட்டுதான் சாகணும்… அவன் பேசும் பேச்சுக்கெல்லாம் தண்டனை கிடைக்கணும்…’
இப்படி வாழ்நாளெல்லாம் தன் மனைவியின் உணர்வுகளை சுடு சொற்களால் சாகடித்து வாழ்ந்த ஒருவரால் எப்படி தான் தன் மனைவியை ஒருகுறையும் இல்லாமல் உள்ளங்கைகளில் வைத்துத் தாங்கினேன் என சொல்ல முடிகிறது என யோசித்தேன்.
இவரைப் போன்றவர்கள் தாங்களாகவும் திருந்துவதில்லை. எடுத்துச் சொல்லி திருத்தவும் ஆட்கள் முன்வருவதில்லை. அப்படியே எடுத்துச் சொன்னாலும் கேட்கும் மனோபாவமும் இருப்பதில்லை. ஏன் சம்மந்தப்பட்டவர்களே / பாதிக்கப்பட்டவர்களே எடுத்துச் சொன்னாலும் ஏற்பதில்லை.
நாம் ஒவ்வொருவரும் நம்மை உள்நோக்கி பார்க்கும் பக்குவத்தை வளர்த்துக்கொண்டால் நாம் சிறப்பாக செயல்பட முடியும். தவறுகளை கண்டறிய முடியும். அவற்றைத் திருத்திக்கொள்ள முடியும். நாமும் மகிழ்ந்து பிறரையும் மகிழ்வித்து உன்னத வாழ்க்கையை வாழ முடியும்.
முயற்சித்துத்தான் பார்ப்போமே!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software