ஹலோ With காம்கேர் -324: வருத்தி எடுக்கும் 2020! M.O.P. Vaishnav College Interview (Nov 19, 2020)

ஹலோ with காம்கேர் – 324
November 19, 2020

கேள்வி: வருத்தி எடுக்கும் 2020 என் கருத்து என்ன?

2020 – ல் அதிகம் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் என்னனென்ன என்று கேட்டால் யோசிக்காமலேயே பதில் சொல்லிவிட முடியும். கொரோனா, கோவிட், லாக் டவுன், வேலை இழப்பு, திடீர் மரணங்கள்.

நேற்று இந்த காலகட்டத்தைப் பற்றிய ஒரு நேர்காணலை தொலைபேசி வாயிலாக கொடுத்திருந்தேன். எம்.ஒ.பி. வைஷ்ணவா மகளிர் கல்லூரியில் பி.ஏ. ஜர்னலிசம் படிக்கும் மாணவி செல்வி. நித்யாஸ்ரீ தன் கல்லூரி ப்ராஜெக்ட்டுக்காக கேட்டிருந்தார். கிட்டத்தட்ட 20 நிமிடங்கள். போனிலேயே ரெகார்ட் செய்துகொண்டார்.

1.கொரோனா நோய் தொற்று குறித்தும், லாக் டவுன் காலகட்டம் குறித்தும் உங்கள் கருத்து என்ன?

உலகமே சற்றும் எதிர்பார்க்காத ஒரு கொடுமையான காலகட்டம் இது.

இயற்கையை நாம் சற்றும் மதிக்காமல் எல்லா வகையிலும் சீரழித்தோம். இன்று இயற்கை நமக்கு பாடம் புகட்டிகொண்டிருக்கிறது.

வானம், பூமி, காற்று, நீர், நெருப்பு என ஐம்பூதங்களையும் மாசுபடுத்தியதன் விளைவு இன்று நாம் நம்மை நாமே ஒடுக்கிக்கொண்டு வீட்டுக்குள் முடங்க வேண்டிய சூழல்.

2.கொரோனா காலகட்டத்தில் பணி நீக்கம் ஏன் நடைபெறுகிறது?

எல்லா வேலைகளையும் Work From Home செய்ய முடியாதல்லவா? ஒர்க் ஃப்ரம் ஹோம் செய்யக் கூடிய பணிகளில் வேலை நடந்துகொண்டிருக்கும்.

வியாபாரம் நடக்க வேண்டுமானால் வீட்டில் இருந்தே செய்யப்படும் பணிகள் மூலம் தயாராகும் தயாரிப்புகள் விற்பனைக்கு வர வேண்டுமல்லவா?

விற்பனைக்கு வந்தால் வாங்குவதற்கு மக்கள் வெளியில் நடமாட வேண்டுமல்லவா?

Production-Sales-Purchase இவை மூன்றும் ஒன்றுடன் ஒன்று சம்மந்தப்பட்டுள்ளதால் மூன்றும் ஒரே நேர்கோட்டில் நடைபெற்றால் மட்டுமே வர்த்தகம் சீராக இருக்கும்.

இப்படியாக வர்த்தகம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதில் பெருஞ்சிக்கல்.

அன்றாடம் நடக்கும் வியாபாரத்தைப் பொறுத்தும், அன்றன்றைக்கான கொடுக்கல் வாங்கல் சுழற்சியிலும்தான்  வியாபாரம் என்ற நிலையில் இருக்கும் நிறுவனங்களுக்கு வேறு வழியில்லை. மாதக் கணக்கில் வியாபாரம் இல்லாமல் சம்பளம் கொடுப்பது பெரும் கஷ்டம். பணி நீக்கம் ஒன்றே அவர்களின் தீர்வு.

குறிப்பாக ஹோட்டல்களையே எடுத்துக்கொள்ளலாமே. தினந்தோறும் நூற்றுக்கணக்கில் மக்கள் சாப்பிட வந்தால்தானே வியாபாரம் இருக்கும். லாக் டவுன் காலத்தில் இது சாத்தியம் இல்லாததால் பணியாளர்களுக்கு சம்பளம், இடத்துக்கான வாடகை என எல்லாமே அடி வாங்குவதால் ஆட்குறைப்பைத் தவிர வேறு வழியில்லையே.

சில நிறுவனங்களில் மொத்தமாக வேலையை விட்டு நீக்கிவிடாமல் பணியாளர்களைத் தக்க வைத்துக்கொள்ள சம்பளத்தை குறைத்திருக்கிறார்கள்.

பல நிறுவனங்களில் பணி நீக்கம் செய்து ஆட்களை குறைத்திருக்கிறார்கள்.

3.லாக் டவுன் காரணத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களின் மனநிலை என்ன?

வேலை (Job) – எத்தனை பெரிய ஒரு கம்பீரம். எத்தனை பெரிய ஊக்க சக்தி. எத்தனை பெரிய கர்வம். எத்தனை பெரிய கெளரவம்.

வேலை இழப்பு (Layoff) – எத்தனை பெரிய ரணம்?

வேலை என்பது வெறும் சம்பளம் பெறுவதற்கான கருவி மட்டும் அல்ல. வாழ்க்கையே அதுதான். நம் வீடு, வாசல், மனைவி, மக்கள், உறவுகள், சுற்றம், நட்புகள் என அத்தனையையும் கட்டிப்போடும் அஸ்திரமும் அதுதான்.

நம் உடலும் உள்ளமும் சரியாக இயங்குவதற்கான அடிநாதமே அதுதான். நாம் சந்தோஷமாக இருப்பதற்கும், செளகர்யமாக வாழ்வதற்கும், கெளரவமாக தலை நிமிர்ந்து நிற்பதற்கும் அதுவே ஆகச் சிறந்த விட்டமின்.

வேலை என்பது வேலை மட்டுமல்ல, நம் மன உறுதிக்கான மாமருந்து.

இது வெறும் ஊதியத்தினால் மட்டும் கிடைத்துவிடுவதல்ல. அப்படி சம்பளத்தினால் மட்டுமே எல்லா சந்தோஷங்களும் கிடைத்துவிடும் என்றால் ஓய்வூதியம் பெறுபவர்கள் சந்தோஷமாக இருக்கலாமே. ஓய்வு பெற்ற தினம் அன்றே மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனவர்களை பார்த்திருக்கிறோம். வேலையில் இருக்கும்வரை பம்பரமாக சுழன்றவர்கள் ஓய்வுக்குப் பிறகு நோயாளிகளாக மாறுவதையும் பார்க்கிறோம்.

கிட்டத்தட்ட அறுபது வயது வரை பணிபுரிந்து மாலை, மரியாதை, பரிசுகள், பாராட்டுக்கள் என கொண்டாட்டமாக கெளரவமாக வீடு வரை வந்து உபசரித்துவிட்டுச் செல்லும் வழக்கமான பாணியில் பணியில் இருந்து ஓய்வு பெறுபவர்களே என்னவோ எல்லாவற்றையும் இழந்து விட்டதைப் போல ஒரு விரக்தியான மனநிலையில் வாழத் தொடங்கும் போது  நன்றாக வாழ வேண்டிய வயதில், சுறுசுறுப்பாக துடிப்புடன் செயல்பட வேண்டிய காலத்தில் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும்போது காலை தட்டிவிட்டாற்போல ‘இனி இங்கு வேலை இல்லை’ என்று சொல்லும் ஒற்றை வரி எத்தனை பெரிய ரணம்.

4.மன அழுத்தத்தில் இருந்து வெளி வருவது எப்படி?

குறிப்பாக வேலை இழந்தவர்கள் வாழ்க்கையே போனதைப் போல வருத்தப்பட தேவையில்லை. இது ஒரு தற்காலிக சறுக்கல்தான்.

எல்லா காலகட்டங்களிலும் அவ்வப்பொழுது வேலை இழப்புகள் ஏற்படுவதுண்டு.

வேலை இழந்தவர்களுக்கு அவர்களுக்கு வேலை போய்விட்டதே என்ற கவலை. வேலையில் இருந்து நீக்கிய நிறுவனங்களுக்கு அவர்களின் தொழில் பிரச்சனை. அவர்களும் முழுமையான சந்தோஷத்துடன் யாரையும் வேலையில் இருந்து நீக்குவதில்லை. சம்பளம் கொடுக்க முடியாத இக்கட்டான சூழலில்தான் பணி நீக்கம் செய்கிறார்கள்.

அவரவர் வாழ்க்கை. அவரவர் சூழல். கடந்துதான் வர வேண்டும்.

வாழ்க்கை கடல் அலைபோல. ஆர்பரித்து உயர்ந்து அடுத்த நொடியில் அடங்கித் தாழ்ந்து கொண்டாட்டமாக கரையை நோக்கி அதிவேகமாக வரும். உயர எழும்பும் கடல் அலை என்றாவது தாழ்ந்துப் போக வேண்டிய இறக்கத்துக்கு பயந்து நின்றிருக்கிறதா? கடல் அலைக்கு அழகே உயர ஏறி ஏறித் தாழ இறங்குவதுதான்.

எப்போதுமே எல்லோருமே உயரத்திலேயே இருக்க முடியாது. வாழ்க்கையில் இறக்கமும் வரும். அதுவும் எதிர்பாராமல் வரத்தான் செய்யும். கடல் அலைபோல சோர்ந்துவிடாமல் இருக்க பக்குவம் பெற வேண்டும்.

இந்த உலகம் பெரியது. ஏராளமான வாசல்களைக் கொண்டது. ஒரு வாசல் மூடினால் அந்த வாசல் உங்களுக்கானதல்ல என்று உணர்ந்து உங்களுக்கான வாசலைக் கண்டறியுங்கள். நிச்சயம் நம் எல்லோருக்கும் உரிய அழகான வாசலும் உண்டு, அதை அடைய பேரழகான வழியும் உண்டு

5.பணி நீக்கம் ஆனவர்களின் மனஅழுத்தத்தை போக்குவதில் சமுதாயத்தின் பங்கு என்ன?

சமுதாயம் என்பது தனிமனிதர்களின் குழுமம்தானே. ஒவ்வொருவரும் வீட்டளவில் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு மினிமலிசம் (Minimalism) வாழ்க்கை வாழப் பழகிக்கொள்ளலாம்.

தானாகவே உங்களைச் சுற்றி உள்ளவர்களும் புரிந்துகொள்வார்கள். ஏனெனில் அவர்களும் உங்களைப் போலதானே கஷ்டங்களை அனுபவித்து வருகிறார்கள்.

மன அழுத்தம் மன அழுத்தம் என புலம்புகிறீர்களா?

ஒருநிமிடம் வீட்டில் பெண்களின் நிலையை எண்ணிப் பாருங்கள். இந்த கொரோனா காலகட்டத்தில் மும்மடங்கு வேலை. வீட்டிலேயே குழந்தைகளின் ஆன்லைன் கல்வி, கணவன் ஒர்க் ஃப்ரம் ஹோம், தன்னுடைய அலுவலகப் பணி என 24 மணி நேரமும் வீட்டிலேயே அடைந்து கிடப்பதால் சமையல் அறையே கதி என இருக்க வேண்டிய கட்டாயம்.

ஆளுக்கொரு சமையல், ஆளுக்கொரு நேரம் சாப்பாடு, இடை இடையே தின்பண்டங்கள் செய்ய வேண்டும், காபி டீ சப்ளை செய்ய வேண்டும் இப்படி தொடர்ச்சியாக சமையல் அறை பணி அழுத்துகிறது.

சமையல் என்றால் சமையல் மட்டுமா? காய்கறிகள் வாங்குவது, மளிகை சாமான் வாங்குவது என அது தொடர்பான வெளி வேலைகள். சமைத்தபின் சமையல் அறையை சுத்தம் செய்வது, பாத்திரம் தேய்ப்பது என பெண்களின் மன அழுத்தத்தை கவனித்துப் பாருங்கள். மற்ற மன அழுத்தம் எல்லாம் காணாமல் போய்விடும்.

வேலை இழப்பு என்பது தற்காலிகம். இன்று ஒரு வேலை இழந்தால் நாளை மற்றொரு வேலை கிடைத்துவிடும்.

ஆனால் பெண்களின் சுமை என்றுமே மாறுவதில்லை. அவர்களின் சுமைக்கு முன் மற்றதெல்லாம் தூசிக்கு சமம்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 7,176 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari