வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[19] : அவளுக்குப் பெயர் பெண் (நம் தோழி)

அவளுக்குப் பெயர் பெண்!

பெண் குழந்தைகளுக்கு அதிகமாக பாலியல் தொந்திரவுகள் ஏற்படுவது வீட்டுக்கு அடிக்கடி வந்துபோகும் நெருங்கிய உறவினர்களினாலும், நண்பர்களாலும்தான். எனவே குழந்தைகள் யாரையாவது பார்த்து பயந்தால் அவர்களை ஒதுக்கினால் அவர்களிடம் ‘என்ன மரியாதை கொடுக்க மாட்டேன் என்கிறாய். அங்கிளுக்கு ஹாய் சொல்லு… மாமாவுக்கு வணக்கம் சொல்லு… அண்ணாவுக்கு ஷேக்கன் கொடு…’ என வற்புறுத்தாதீர்கள். அவர்களுடன் பொறுமையாக அமர்ந்து அவர்களை மனம் விட்டு பேசச் செய்யும் பொறுப்பு பெற்றோர்களிடம்தான் உள்ளது.

அண்மையில் கோவை போத்தனூர் அருகே 66 வயது முதியவர் ‘எனக்கு உன்னை பிடித்திருக்கிறது உனக்கு ஓகேவா’ என்று 16 வயது சிறுமிக்கு காதல் கடிதம் கொடுத்த விவகாரம் அனைவருக்குமே தெரிந்திருக்கும்.

சில மாதங்களுக்கு முன்னர் இணையத்தில் ஒரு செய்தியைப் படித்தேன்.

‘இருபது ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த சம்பவம் இது. கோவை அருகே உள்ள சிறிய நகரம் ஒன்றில் ஓர் இலக்கிய விழா நடைபெற்றது. பெரும்பாலான இலக்கிய விழாக்களில் தென்படக்கூடிய ஒருவர், பணியிலிருந்து ஓய்வு பெற்ற முதியவர் பார்வையாளர்கள் வரிசையில் இருந்தார்.

விழாவில் பேசிய பெண் பேச்சாளர் ஒருவர், இப்போது மிகுந்த புகழுடன் இருப்பவர், சமீபத்தில் தனக்கு நடந்த திருமணம் பற்றி மேடையில் குறிப்பிட்டார். கூட்டம் முடிந்தவுடன் இன்னொரு பேச்சாளரை அந்த முதியவர் பரபரப்பாக அணுகினார். இந்தப் பெண் பேச்சாளருக்கு திருமணம் ஆன விஷயம் தனக்கு தெரியாது என்றும் அதற்கு முந்தைய வாரம் தான் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்தப் பெண்ணுக்குத் தான் கடிதம் எழுதியதாகவும் தெரிவித்தார். இப்போது என்ன செய்யலாம் என்று யோசனை கேட்டிருக்கிறார்.

அதே பெரியவர் அடுத்த சில வாரங்களிலேயே இன்னொரு கூட்டத்தில் பேசவந்த கல்லூரி மாணவி ஒருவரிடம் நேராகவே போய் அந்த பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் பெண்ணின் பெற்றோரிடம் பேச ஏற்பாடு செய்து தருமாறும் கேட்க அந்த இளம்பெண் அதிர்ந்துபோய் அங்கிருந்து வேகமாக நகர்ந்து விட்டார்.

விசாரித்ததில் அறுபத்தைந்து வயது கடந்த அந்த பெரியவர் தன் மனைவியை இழந்து ஓராண்டு காலம் ஆனது என்று தெரியவந்தது. ஆனால் இலக்கிய பேச்சாளர்களாக இவர் ஏன் குறி வைத்தார் என்பது இன்றுவரை புரியாத புதிர்தான். இது ஒருவகை மனநோயாகக்  கூட இருக்கலாம்.’

இதுதான் அந்த செய்தியின் சாராம்சம்.

இந்த நிகழ்விலாவது அந்த முதியவர் இளம் பெண்களிடம் நேரடியாக தான் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவதாக சொல்லி இருக்கிறார்.

எனக்குத் தெரிந்து நடுத்தர வயதில் இருக்கும் ஆண்களில் ஒரு சிலர் பிரபலமான / பிரபலமாகிக் கொண்டுவரும் பெண்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள் தன்னை திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டதாகவும் தான் மறுத்துவிட்டதாகவும் சொல்லிக்கொண்டு அல்ப / அற்ப சந்தோஷத்தில் வளைய வருகிறார்கள். இவர்களை என்னவென்று சொல்வது?

தினமும் தன் பத்து வயது பேத்தியுடன் வீட்டுக்கு விளையாட வரும் அவள் தோழியை பலவந்தப்படுத்தி வன்கொடுமை செய்த முதியோர் ஒருவரைப் பற்றிய செய்தி அண்மையில் வெளியானது. செய்தியில் வருவது இதுபோல ஒன்றிரண்டுதான். நித்தம் நம் கவனத்துக்கு வராமல் எத்தனை நிகழ்வுகள் நடந்தேறிக்கொண்டிருக்கின்றன.

இது எல்லாவற்றையும்விட மிக அதிர்ச்சியான நிகழ்வு ஒன்றை சமீபத்தில் கேள்விப்பட்டேன்.

எங்கள் குடும்ப நண்பர். பத்து வருடங்களுக்கு முன்னர் கணவன் இறந்துவிட்டதால் அவர் மட்டும் கிராமத்தில் ஒரு வீட்டில் வசித்து வருகிறார். வயது 79. செளகார் ஜானகி போல கம்பீரமாக இருப்பார். இப்போதும் நல்ல சுறுசுறுப்பு. பணி ஓய்வு பெற்று பென்ஷன் வாங்குகிறார். வீட்டின் மாடியில் ஒரு குடித்தனம். நாள் முழுவதும் கூடவே துணைக்காகவும் வீட்டு வேலைக்கும் தோட்ட வேலைக்கும் உதவியாக  ஒரு பணிப்பெண். வீட்டைச் சுற்றி தோட்டம். காய்கறிகளை காசு கொடுத்து வாங்குவதே இல்லை. வீட்டுக் காய்கறிகள்தான்.

ஆணும் பெண்ணுமாய் இரண்டு குழந்தைகள். வெளியூரில் மகன். இந்தியாவில் மகள். அவர்களும் நன்றாகவே கவனித்துக் கொள்கிறார்கள்.

சமீபத்தில் அவரது தூரத்து உறவினர் ஒருவரிடம் இருந்து பல வருடங்கள் கழித்து போன் வந்திருக்கிறது. அவர் மனைவியை இழந்தவர். அவருக்கும் கிட்டத்தட்ட இவருடைய வயதுதான்.

பொதுவாக நலன் விசாரித்துவிட்டு பேசிக்கொண்டிருந்தபோது ‘அவரும் போயிட்டார். பிள்ளைகளுக்கும் திருமணம் ஆகி பேரன் பேத்தி பார்த்தாயிற்று. பேத்திகளுக்குக் கூட வரன் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். எனக்குத்தான் தனியா இந்த வீட்டில் பொழுது போகவில்லை’ என்று வெகு இயல்பாக சாதாரணமாக சொல்லிக் கொண்டிருந்தபோது எதிர்முனையில் இருந்து வந்த பதிலில் ஆடிப் போய்விட்டார்.

‘நான் ஒண்ணு சொன்னால் தப்பா எடுத்த மாட்டீங்களே, எனக்கும் மனைவி இல்லை, உங்களுக்கும் கணவன் போய் சேர்ந்துட்டார். நான் உங்களுடன் வந்து தங்கிக்கொள்கிறேன். முதலில் மாதம் இரண்டு மூன்று நாட்கள். பின்னர் ஒரு வாரம். அதன் பின்னர் ஒரு மாதம். அப்புறம் நிரந்தரமா சேர்ந்தே இருக்கலாம். இப்படி செய்தால் பார்ப்பவர்களுக்கும் சந்தேகம் வராது….’ என்று சொல்ல வெலவெலத்துப் போய்விட்டார்.

அன்று அதிர்ச்சியில் அவருக்கு பதில் ஏதும் சொல்லாமல் போனை வைத்துவிட தொடர்ச்சியாக வாட்ஸ் அப்பிலும் எஸ்.எம்.எஸ்களிலும் இதையே கேட்டு தொந்திரவு செய்துள்ளார்.

மகனிடமும் மகளிடமும் இது குறித்து சொல்வதற்கு கூச்சமாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் சொல்ல வேண்டியதாகிவிட்டது.

அவரது பிள்ளைகள் இருவரும் அந்த உறவினருக்கு போன் செய்து  ‘எங்கள் அம்மாவை தொந்திரவு செய்யாதீர்கள்’ என்று கண்டிப்புடன் சொல்லி இருக்கிறார்கள். அதன் பின்னர் தொந்திரவு இல்லையாம்.

இதை எங்களிடம் பகிர்ந்துகொண்டவர், ‘79 வயதில் எனக்கு இதெல்லாம் தேவையா… வாய் வார்த்தைக்காகக்கூட மனதில் உள்ளதை சகஜமாக நம் உறவினர்களிடமே பேசமுடிவதில்லை… இப்போதெல்லாம் யாரிடமும் நலன் விசாரிப்புக்குப் பிறகு எதையுமே பேசுவதில்லை’ என்று மிகுந்த வேதனையுடன் சொன்னார்.

பெண் குழந்தைகளாக இருந்தால் பெற்றோர் அவர்கள் பிரச்சனைகளை பொறுமையாக பேச வேண்டும். வயதான அம்மாக்களாக இருந்தால் பிள்ளைகள் அவர்கள் பிரச்சனைகளை கனிவாக அணுக வேண்டும்.

ஒரு பெண்ணாகப் பிறந்துவிட்டால் மகள், சகோதரி, மனைவி, தோழி, அம்மா, பாட்டி, கொள்ளு பாட்டி என இப்படி எத்தனை அவதாரங்களை எடுத்தாலும் அவள் மீதான பார்வை ஒன்றுதான் – ‘அவள் ஒரு பெண்’.

சுமதி, சுந்தரி, சுமலதா என விதவிதமான பெயர்கள் பெண்களுக்கு இருந்தாலும் ‘அவள் ஒரு பெண்’ என்பதே பெண்களுக்கான பொதுப் பெயராக இருப்பது துயரமே!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
November  21, 2020

சக்தி மசாலா குழுமத்தில் இருந்து வெளிவரும்
‘நம் தோழி’  மாத பத்திரிகையில் (நவம்பர் 2020)
வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும் – 19

புத்தக வடிவிலேயே படிக்க… நம் தோழி நவம்பர் 2020

(Visited 64 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon